Published : 21 Oct 2016 10:18 AM
Last Updated : 21 Oct 2016 10:18 AM

இயக்குநரின் குரல்: ‘பாகுபலி’ உயரத்தில் பாதியைத் தாண்டுவோம்

‘‘எனது முந்தைய படங்களைவிடத் தொழில்நுட்ப ரீதியில் ‘காஷ்மோரா’ படத்துக்கு அதிகம் உழைத்திருக்கிறோம். ஆகவே இந்தப் படம் கண்டிப்பாகப் பேசப்படும்’’ என்று கிராஃஃபிக்ஸ் காட்சிகள் சரியாக வந்திருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டே பேசத் தொடங்கினார் ‘காஷ்மோரா’ இயக்குநர் கோகுல்.

‘காஷ்மோரா’ படத்தின் கதையைப் பற்றிச் சொல்லுங்கள்?

இக்கதையில் ஒரு பெரிய பயணம் இருக்கிறது. தற்காலத்திலிருந்து வரலாற்றுக் காலம், பேய், த்ரில்லர், ஃபேன்டஸி என இக்கதை பயணிக்கும். இது சீரியஸ் படமல்ல. காமெடி அதிகமாக இருக்கிறது. கார்த்திக்கு 3 கதாபாத்திரங்கள். அதில் காஷ்மோரா கதாபாத்திரத்துக்கு 3 பரிமாணங்கள். அவருடைய நடிப்பு கண்டிப்பாகப் பேசப்படும்.

பில்லி சூனியம், ஆவிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவியாக ஸ்ரீதிவ்யாவும், ஒரு ராஜ்ஜியத்தின் இளவரசியாக நயன்தாராவும் நடித்திருக்கிறார்கள். நயன்தாரா இந்த மாதிரியான கதாபாத்திரம் இதற்கு முன்பு செய்ததில்லை. இளவரசிக்கே உண்டான தோரணை, கர்வம் என சூப்பராக செட்டாகி இருக்கிறார். ஸ்ரீதிவ்யா இப்படத்தில் காமெடி நன்றாகச் செய்திருக்கிறார்.

ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்கி முடித்திருப்பதில் இயக்குநராக நீங்கள் சந்தித்த நெருக்கடிகள் என்ன?

எவ்வளவு பட்ஜெட் என்பதைக் கதைதான் தீர்மானிக்கும். நான் இதற்கு முன்பு இயக்கிய ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை ‘காஷ்மோரா’ படத்துக்கான பொருட்செலவில் எடுக்க வேண்டியதில்லை. பொருட்செலவுக்காகக் கதை கிடையாது, கதைக்காகத் தான் பொருட்செலவு. நெருக்கடிகளைச் சமாளிப்பது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. பெரிய முதலீடு படம் பண்ணப் போகிறோம் என்றவுடனே அனைத்தையும் முன்பே திட்டமிட்டு விட்டேன்.

‘காஷ்மோரா’வுக்காக எவ்வளவு மெனக்கெட்டீர்கள்?

கிராபிக்ஸ் காட்சிகள் அனிமேஷன் முறையில் எப்படி வர வேண்டும் என்பதைத் திட்டமிட்டு படப்பிடிப்புக்கு முன்பே செய்து பார்த்தோம். அதையேதான் படம்பிடித்திருக்கிறோம். பெரிய பள்ளத்தாக்கு, 10 அடி அகல இடத்தில் 50 குதிரைகள் செல்லும் போர்க் காட்சி இருக்கிறது. இதையெல்லாம் அதற்கான இடத்தில் போய்க் காட்சிப்படுத்த முடியாது. அந்த இடங்கள் அனைத்தையுமே நாங்கள் கிராஃபிக்ஸில் தயார் செய்து படப்பிடிப்பு செய்திருக்கிறோம். வரலாற்றுக் காலத்து உடைகளை முடிவு செய்ய 8 மாதங்கள் ஆனது.

நான் ஸ்டோரி போர்டு செய்து முடித்தவுடன்தான் கலை இயக்குநர் ராஜீவனிடமே சென்றேன். எதற்கு அரங்குகள் அமைக்கலாம், எதற்கு கிராபிக்ஸ் பயன்படுத்தலாம் என்பதை முதலிலேயே பேசி முடிவுசெய்தோம். படத்தில் அரை மணிநேரம்தான் வரலாற்றுக் காட்சிகள் என்றாலும், அதற்கான உழைப்பு ஒரு முழுப் படத்துக்கானது.

‘பாகுபலி’ - ‘காஷ்மோரா’ ஓப்பீடால் பயம் வருகிறதா?

‘பாகுபலி’யோடு ஒப்பிடுவது சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அதே வேளை பயத்தையும் கொடுக்கிறது. அது முழுக்க வரலாற்றுப் படம். அப்படத்தின் செலவில் கால் பங்குதான் இப்படத்துக்குச் செய்திருக்கிறோம். ‘காஷ்மோரா’வில் ஒரு சிறு பகுதி மட்டுமே வரலாற்றுக் காட்சிகள். ‘பாகுபலி’ படத்தை இந்தியத் திரையுலகில் ஒரு பெரிய இடத்துக்கு எடுத்து சென்றிருக்கிறார் ராஜமெளலி. அந்த உயரத்தில் பாதியையாவது தாண்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

இசை வெளியீட்டு விழாவில், உதவி இயக்குநர்கள்தான் இப்படத்தின் முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்கள் என்றீர்கள். ஏன்?

படத்தின் கதை விவாதத்தில் தொடங்கி, அனைத்துத் திரையரங்குகளிலும் படம் சரியாகத் திரையிடப்படுகிறதா என்பதுவரை உதவி இயக்குநர்களின் பணி இருக்கிறது. மற்றவர்கள் அனைவருமே எத்தனை மணிக்குப் படப்பிடிப்பு தொடங்குமோ அப்போது வருவார்கள், முடிந்தவுடன் சென்றுவிடுவார்கள். ஆனால், உதவி இயக்குநர்களுக்கு நேரமே கிடையாது. படத்தை இந்த அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறோம் என்றால் அதற்கு முழுக்க உதவி இயக்குநர்களின் உழைப்பு மட்டுமே காரணம். இப்படத்தின் அனைத்துத் துறைகளிலும் உதவி இயக்குநர்களின் பணி முக்கியமானது.

ஆக்‌ஷன், காமெடி தற்போது வரலாற்றுக் களத்தில் ஒரு திரைப்படம். உங்களை எப்படிப்பட்ட இயக்குநராக அடையாளப்படுத்த ஆசை?

யாருமே ஊகிக்க முடியாத இயக்குநராக வலம் வரத்தான் ஆசைப்படுகிறேன். நான் எந்த மாதிரி இயக்குநர் என்பதை என் படங்கள் சொல்லட்டும். ‘ரெளத்திரம்’ - ஆக்‌ஷன், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ - காமெடி. தற்போது ‘காஷ்மோரா’வில் 3 ஜானர்களையும் தொட்டிருக்கிறேன். ஒரு கதை எழுதினால் முதலில் எனக்கு ‘சூப்பரா இருக்கே’ என்று தோன்ற வேண்டும். அப்படித் தோன்றினால் மட்டுமே மக்களுக்கும் பிடிக்கும். என்னால் முடிந்த அளவுக்கு எனது படங்களில் புதுமையாகச் செய்ய முயற்சி செய்வேன்.

ஒரு படம் வெளியானவுடன், உலக சினிமாக்களின் பெயரைக் குறிப்பிட்டு இப்படத்தின் காப்பி என்று செய்திகள் வெளியாகின்றன. இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?

என்னுடைய மிகப் பெரிய பலமே, எனது முந்தைய இரண்டு படங்களிலும் எந்தவொரு காட்சியும் காப்பியடித்தது கிடையாது. அதே போல்தான் இந்தப் படமும். எதுவாக இருந்தாலும் அது எனதாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் வெற்றி. அதைத் தொடர்ந்து அதே சாயலில் ஒரு கதை எழுதி 6 மாதத்தில் படப்பிடிப்புக்கு என்னால் சென்றிருக்க முடியும். ஆனால், நான் அதைப் பண்ணவில்லையே... எந்தவொரு படத்தின் ஒரு காட்சிகூட என் படத்தில் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்வேன். நான் என்னுடைய அடையாளத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களுடைய அடையாளம் எனக்குத் தேவையில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x