Published : 07 Oct 2016 08:33 AM
Last Updated : 07 Oct 2016 08:33 AM
ஹேமந்தா என்று வங்காளத்திலும் ஹேமந்த் குமார் என்று இந்தியா முழுவதும் அழைக்கப்பட்ட ஹேமந்தா முகர்ஜி பன்முகம் கொண்ட திரை வித்தகர். ‘ரவீந்திர சங்கீதம்’ என்ற வங்காள இசை முறைக்கு திரைப்படங்கள் வாயிலாகவும் மெல்லிசை மூலமாகவும் புத்துயிரூட்டியவர், வங்காள, இந்தி மொழிப் படங்களின் சிறந்த பின்னணிப் பாடகர், இசை அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர். மராட்டி குஜராத்தி போன்ற படங்களுக்கும் இசை அமைத்தவர்.
மராட்டிய மீனவ மக்கள் பாடும் கோலி இசையில் ‘டோல்காரா டோல்காரா தர்யாச்சி’ என்ற பாடல் தினமும் மும்பையில் பாடப்படுவதை இன்றும் கேட்க முடியும். ஆங்கிலப் படத்திற்கு (சித்தார்த்) இசை அமைக்க அழைக்கப்பட்ட முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற புகழுக்குரியவர். இசைச் சேவைக்காக அமெரிக்க அரசு குடியுரிமை வழங்கிச் சிறப்பித்த முதல் இந்தியர். பாரத ரத்னா, பதம விபூஷண் விருதுகளை அடக்கத்துடன் மறுத்தவர்.
இத்தனை சிறப்புக்கள் பெற்றிருந்த ஹேமந்த் குமாரின் இசையமைப்பிலும் குரலிலும் இந்தித் திரைப்படப் பாடலாசிரியர் ராஜேந்திர கிஷன் எழுதிய சில பாடல்கள் இன்றுவரை ரசிக்கப்படுக்கின்றன. அத்தகைய படங்களில் முதலாவதும் முதன்மையானதுமான படம் ‘நாகின்’ (1954) என்ற சூப்பர் ஹிட் படம். பிரதீப் குமார், வைஜெயந்திமாலா, ஜீவன் நடித்துள்ள இது, நடனத்தையும் இசையையும் அடிப்படையாகக் கொண்ட படம். எதிரிகளாக இருக்கும் இரண்டு மலைவாசிக் குழுக்களைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காதலைச் சொல்லும் படம்.
இப்படத்திற்காக ராஜேந்திர கிஷன் எழுதிய 12 பாடல்களும் மிகச் சிறப்பானவை. ‘மன் டோலே, மேரே தன் டோலே. தில் கா கயா கரார் ரே, யே கோன் பஜாயே பாசுரிய்யா’ என்று தொடங்கும் பாடல் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. வெளிவந்து 62 வருடங்களுக்குப் பிறகும் வட இந்தியத் திருமண ஊர்வலங்களில் தவறாது இசைக்கப்படும் பாடல் இது. லதா மங்கேஷ்கர் பாடிய அப்பாடலுக்கு வைஜந்திமாலா ஆடிய பாம்பு நடனத்திற்கு இணையான நளினத்தை அதற்கு முன்போ பின்போ இந்தியப் படங்களில் இடம்பெற்ற எந்தக் கிராமிய நடனத்திலும் காண இயலாது.
அமரத்துவம் பெற்றுவிட்ட இந்தப் பாடலின் பொருள் இதுதான்:
மனம் கிளர்கிறது, என் உடல் கிளர்கிறது. மன அமைதி போய் விட்டது. (அப்படிப்பட்ட) இந்தக் குழல் இசையை யார் வாசிக்கிறார்?’
வசீகரமான ராகத்தின் இனிமையான கனவுகளை (அந்த இசையில்) காண்கிறேன். நாணம் என்ற முக்காட்டை விலக்கிவிட்டு நான் எங்கு தனியாக (அந்த இசையை நோக்கி) செல்கிறேன்?
ஒவ்வொரு அடியிலும் இத்தகு பொன்னெழில் இசை (கம்பளத்தை) விரித்தது யார்? நாகங்களையே வசப்படுத்திய அந்த மகுடிக்காரன் யார்? எனக்குத் தெரியவில்லையே, அவன் யார்?
‘பீன்’ இசை(Been Music) என்று ஆங்கிலத்திலும் ‘புங்க்ரி சங்கீத்’என்று இந்தியிலும் அறியப்படும் ‘மகுடி இசை’ஏறக்குறைய இந்தியா முழுவதும் ஒரே விதமாக இசைக்கப்படும் தொன்மையான கிராமிய இசை வடிவம். “ஆடு பாம்பே நீ ஆடு பாம்பே” என்ற மெட்டில் தமிழகப் பாம்பாட்டிகள் ஊதும் இசையைப் போலவே இந்தியா முழுவதும் இந்த மகுடி இசை ஒலிக்கப்பட்டுவருகிறது.
ஜனரஞ்சகமான இந்த மெட்டை அடிப்படையாகக் கொண்டு ஹேமந்த் குமார் அமைத்த இப்பாடல், லதா மங்கேஷ்கர் மேற்கொண்ட இசைப் பயணத்தின் ஒரு திருப்பமாகவும் விளங்கியது. அப்போது பிரபலமாக இருந்த ஷம்ஷாத் பேகம் பாடுவது போன்று பாடிவந்த லதா மங்கேஷ்கர், தனக்கென்று ஒரு தனிப் பாணியை ஏற்படுத்திக் கொள்ள இப்பாடல் அடிகோலியது.
ராஜேந்திர கிஷன் இப்படத்திற்காக எழுதிய இன்னமொரு பாடலின் மெட்டைக் கேட்காத தமிழ் இசை ரசிகர்கள் இருப்பது அபூர்வம். ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ’ என்று தொடங்கும் ‘கண்கண்ட தெய்வம்’ படத்தின் அப்பாடல் கின்னஸ் சாதனைக்கு பி.சுசிலாவை இட்டுச் சென்ற பாடல்களில் ஒன்று. ஆதி நாரயண ராவ் இசையில் லலிதா ஆடி நடித்த அப்பாடல், இந்தியில் வைஜெயந்திமாலா நாட்டியமாடிய ‘ஊச்சி ஊச்சி, துனியா கீ திவாரே சய்யான் தோடுக்கே’ என்ற பாடலின் மெட்டில் உருவாக்கப்பட்டது.
உயர்ந்த உயர்ந்த மதில்களை உடைத்துக் கொண்டு ஒடி வந்தேன்
அன்பே உனக்காக, ஓடி வந்தேன் உனக்காக உலகத்தையெல்லாம் உதறிக்கொண்டு...
துணை கிட்டியது, அன்பான இணை கிட்டியது, எனக்குப் புதிய வாழ்க்கை கிட்டியது.
இதை நழுவவிட மாட்டேன்,
இந்த இரவு புதிது, இந்த விஷயம் புதிது, அதன் நட்சத்திரங்களின் ஊர்வலம் புதிது,
இவற்றை நழுவவிட மாட்டேன்
என்ற பொருளில் அமைந்த இப்பாடல் வரிகள் பின்னர் பலரால் எழுதப்பட்ட ஏராளமான பாடல்களில் எடுத்தாளப்பட்டன.
ரசிப்போம்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT