Last Updated : 14 Oct, 2016 10:30 AM

 

Published : 14 Oct 2016 10:30 AM
Last Updated : 14 Oct 2016 10:30 AM

திரைப்பார்வை: காதலில் இப்படியும் நடப்பதுண்டு! - மிர்ஜ்யா (இந்தி)

ராகேஷ் ஓம்பிரகாஷின் இயக்கம், குல்ஸாரின் திரைக்கதை, ஹர்ஷவர்த்தன் கபூரின் அறிமுகம், பஞ்சாபி நாட்டுப்புறக் காதல் காவியம் எனப் பல காரணங்களால் ‘மிர்ஜ்யா’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானது.

‘மிர்ஜ்யா - சாஹிபான்’ என்ற இரண்டு காதலர்களின் கதை பஞ்சாபின் பிரபலமான துயரக் காதல் காவியங்களுள் ஒன்று. இந்த நாட்டுப்புறக் காதல் கதையைப் பின்னணியாக வைத்து ‘மிர்ஜ்யா’வை ஒரு நவீன கதைப் பாடல் வடிவத்தில் இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா.

‘மிர்ஜ்யா’ மூன்று காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளின் வழியாகப் பயணம் செய்கிறது. ஒன்று, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடக்கும் மிர்ஜா - சாஹிபான் கதையைச் சொல்கிறது. இரண்டாவது, சில ஆண்டுகளுக்குமுன் ஜோத்பூரில் பள்ளி செல்லும் முனிஷ் - சுசித்ராவின் கதையை விவரிக்கிறது. மூன்றாவது, ராஜஸ்தானின் அரண்மனையில் தற்போது நடந்துகொண்டிருப்பதைப் பதிவுசெய்கிறது. இந்த மூன்று காலகட்டங்களையும் பாடல்கள், நடனங்கள், கதைசொல்லி போன்ற அம்சங்களால் இணைத்திருக்கிறார் இயக்குநர்.

கிட்டத்தட்ட ‘ரங் கே பசந்தி’, ‘பாக் மில்கா பாக்’ படங்களில் கதை சொல்வதற்குப் பயன்படுத்தியிருந்த அதே உத்தியை ‘மிர்ஜ்யா’விலும் கையாண்டிருக்கிறார். முனிஷ் (ஹர்ஷவர்தன் கபூர்), சுசித்ரா (சையாமி கேர்) இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்தே ஒருவரையொருவர் விரும்புகின்றனர். ஒரு நாள், பள்ளியில் ஆசிரியர் சுசித்ராவை அடித்துவிடுகிறார். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத முனிஷ், காவல்துறை அதிகாரியான சுசித்ராவின் தந்தையின் (ஆர்ட் மாலிக்) துப்பாக்கியை எடுத்து ஆசிரியரைச் சுட்டுக் கொன்றுவிடுகிறான். அதனால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறான். சுசித்ரா படிப்ப தற்காக வெளிநாடு சென்றுவிடுகிறாள்.

சில ஆண்டுகளுக்குப் பின், சுசித்ரா தன்னுடைய அப்பா தேர்ந்தெடுத்திருக்கும் மாப்பிள்ளையான இளவரசன் கரணை (அனுஜ் சவுத்ரி) திருமணம் செய்துகொள்வதற்காக மகிழ்ச்சியாக ராஜஸ்தான் வருகிறாள். அங்கே வந்தவுடன் தன்னுடைய தோழன் முனிஷ் அரண்மனை குதிரை லாயத்தில் பணியாற்றுவதைக் கண்டுபிடித்துவிடுகிறாள். மீண்டுமொரு முறை ‘மிர்ஜ்யா – சாஹிபா’னின் காதல் காவியம் அரங்கேறுகிறது.

குல்ஸாரின் திரைக்கதையும், இலக்கியத் தன்மை மிளிரும் பாடல் வரிகளும் முனிஷ் - சுசித்ரா காதல் கதையை ‘மிர்ஜ்யா –சாஹிபான்’ காவியமாக மாற்றுவதற்கு முயற்சி செய்திருக்கின்றன. இந்த முழுத் திரைப்படமும் ‘இஷ்க் மே, அக்சர் ஹோதா ஹை!’ (காதலில் இப்படி அடிக்கடி நடப்பதுண்டு) என்ற குல்ஸாரின் வரிகளைப் பின்னணியாக வைத்துத்தான் நகர்கிறது.

சங்கர் - எஹ்சான் - லாயின் இசையும், லடாக், ஜெய்சால்மர், மண்டாவா, உதய்பூர் எனப் பயணித்திருக்கும் பவெல் டைலஸின் கேமராவும் ‘மிர்ஜ்யா’வை ஒரு வண்ணமயமான இசை நாடகமாகத் திரையில் விரியச் செய்திருக்கின்றன.

ஆனால், துயரம் ததும்பும் காதல் காவியத்தின் வலியை ‘மிர்ஜ்யா’ பார்வையாளர்களிடம் வலுவான முறையில் கடத்தத் தவறியிருக்கிறது. கதையின் ஆதாரமான உணர்வு ஒரு திரைப்பட அனுபவமாக உருமாறவில்லை. அழகியல் அம்சங்களுக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை மற்ற அம்சங்களுக்குக் கொடுக்கத் தவறியிருக்கிறார் இயக்குநர். எனவே, ‘மிர்ஜ்யா’வுடன் பார்வையாளர்களால் உணர்வுபூர்வமாக ஒன்ற முடியவில்லை.

ஹர்ஷவர்த்தன் கபூர், சையாமி கேர் என இரண்டு அறிமுகங்களின் நடிப்பும் படத்தில் எந்தத் தாக்கத்தையும் உருவாக்கவில்லை. ‘மிர்ஜ்யா -சாஹிபான்’ கதையில் மட்டும் இருவரின் நடிப்புத் திறனும் சற்று வெளிப்பட்டிருக்கிறது. முனிஷ் - சுசி கதாபாத்திரங்களில் இருவரின் திரையிருப்பையும் எந்தக் கட்டத்திலும் உணர முடியவில்லை. முக்கியக் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் படத்தில் வரும் துணைக் கதாபாத்திரங்களான அனுஜ், ஆர்ட் மாலிக், அஞ்சலி பாட்டில், ஓம் புரி என யாருடைய கதாபாத்திரத்துக்கும் போதுமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

சாஹிபானும் சுசித்ராவும் குடும்பத்தினர்மீது வைத்திருக்கும் பாசத்தால் காதலைத் துறக்கத் துணிகிறார்கள். காலங்காலமாகப் பெண்களின் காதல் இப்படித்தான் குடும்பத்தின் பெயரால் பலிகொடுக்கப்பட்டுவருகின்றன என்பதை இந்தக் கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன. ஆனால், இவர்களது கதாபாத்திரங்களை இன்னும் தெளிவாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம். ‘மிர்ஜ்யா’ திரைப்படத்தில் முழுமையின்மையை உணர்வதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

மெஹ்ரா ‘மிர்ஜ்யா - சாஹிபான்’ கதையை நவீனமாகச் சொல்லும்போது, அம்பு மட்டுமே துப்பாக்கியாக மாறியிருக்கிறது. பஞ்சாபின் துயரக் காதல் காவியங்களான ‘ஹீர் - ராஞ்சா’, ‘சோஹ்ணி - மஹிவால்’ வரிசையில் ‘மிர்ஜ்யா-சாஹிபான்’ கதையும் முக்கியமானது. ஆனால், அதை உணர்வுபூர்வமாகத் திரையில் வெளிப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x