Last Updated : 30 Sep, 2016 12:48 PM

 

Published : 30 Sep 2016 12:48 PM
Last Updated : 30 Sep 2016 12:48 PM

மொழி கடந்த ரசனை 3: புரியவைக்க முடியாத உயிர் மூச்சு

காலத்தால் அழிக்க முடியாத சில சரித்திர நிகழ்வுகள் திரைப்படங்களாகும் போது அதன் பாடல்களும் இசையும் மிகச் சிறப்பாக அமைய வேண்டும். அப்படி அமையும்போது அந்த வரலாற்றுச் சம்பவங்கள் மட்டுமின்றி அதன் தொடர்புடைய திரைப் பாடல் வரிகளும் இசையும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று அமரத்துவம் அடைகின்றன.

பேரரசர் அக்பரின் மகன் சலீம் சாமானியப் பெண் அனார்கலி மீது தீராத காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். மத வேறுபாடு பார்க்காமல் தன் குடிமக்களை ஆட்சி செய்த மன்னன் அக்பர் இந்தக் காதலை ஏற்கவில்லை. ராஜேந்திர கிஷன் எழுதிய பாடல் வரிகளும் சி. ராமச்சந்திராவின் இசையுமே இந்தச் சோகக் கதையைச் சிறந்த திரைப்படமாக ஆக்கின.

இப்படத்துக்காக ராஜேந்திர கிஷன் எழுதிய மூன்று பாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.

“யே ஜிந்தகி உஸ்ஸீ கீ ஹை ஜோ கிஸ்ஸீ கீ ஹோகயா பியார் மே ஹீ கோகயா” என்று தொடங்கும் லதா மங்கேஷ்கர் பாடிய இனிமையான பாடல், மிகவும் ஆழமான பொருள் உடைய எளிய பாடல். தான் பாடியுள்ள பல ஆயிரக்கணக்கான பாடல்களில் அவருக்கு மிகவும் பிடித்த 50 பாடல்களில் ஒன்றாக அவரே குறிப்பிட்ட இப்பாடலின் பொருள் இப்படிப் போகிறது:

இந்த வாழ்க்கை இவர்களுடைதாகவே (இவர்களுக்கு மட்டுமே சொந்தமானது) ஆகிவிட்டது

எவர் யாருடைவராக ஆகிவிட்டாரோ (சொந்தமாகிவிட்டாரோ)

காதலில் விழுந்து தொலைந்துவிட்டாரோ

‘ஹோகயா’, ‘கோகயா’ ஆகியவை எதுகை மோனைச் சொற்கள். ‘ஹோகயா’ என்றால் ‘ஆயிற்று’ ‘ நடந்தது’ எனப்பொருள். ‘கோகயா’ என்றால் ‘தொலைந்துவிட்டது’ என்று பொருள். இச்சொற்களை இந்திப் பாடல்களில் அதிகம் கேட்கலாம்.

கீஸ்ஸிக்கி ஆர்ஜூ மே அப்னா தில் பேக்ரார் கர்

யே ஜிந்தகி ஹை பேவஃபா, லூட் பியார் கா மஜா

எவருடைய (மற்றவரின்) வேண்டுகோளின்படியோ காதல் நம்முடைய உள்ளத்தை அமைதியில்லாமல் ஆக்கிக்கொள்(கிறது)

இந்த (காதல்) வாழ்க்கை நம்பிக்கையில்லாதது.

(விரைவாக) காதலின் மகிழ்ச்சியைக் கொள்ளை அடித்துக்கொள்(ள வேண்டும்).

‘பேவஃபா’ என்பதும் மீண்டும் மீண்டும் நாம் இந்திப் படப் பாடல்களில் கேட்கும் சொல். இது பாரசீக மொழியிலிருந்து உருது மொழிக்குள் வந்து, இந்திப் படக் காதல் பாடல்களில் தவறாது இடம்பெறும் சொல்லாகிவிட்டது. வஃபா என்றால் நம்பிக்கை, விசுவாசம். அது இல்லாத நிலை ‘பேவஃபா’. பாரசீக- உருது மொழிகளில் ஒரு வார்த்தையின் முன் ‘பே’ என்ற முன்னொட்டு சேர்ந்தால் அது அந்தச் சொல்லின் எதிர்ப்பதமாக அமையும் (கரார் = அமைதி; பேகரார் = அமைதியின்மை. நியாயம் - அநியாயம் என்பதுபோலத்தான் இதுவும்). மெட்டுக்கு இசைவாகவும் பாடுவதற்கு எளிதாகவும் உள்ளதால், இந்தச் சொற்பிரயோகம் இன்றுவரை தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது

உருது மொழிப் பின்னணியிருந்து வந்த ராஜேந்திர கிஷன் முகலாய மன்னன் அக்பர் தொடர்புடைய ‘அனார்கலி’ திரைப்படத்துக்கு எழுதிய மற்ற பாடல்களையும் உருது மொழிக் கவி வடிவத்தில் எழுதியது பொருத்தமாகவும் போற்றத்தக்கதாகவும் அமைந்துள்ளது.

காதலைப் பற்றி ‘அனார்கலி’ படத்தின் நாயகி பீனாராய் பாடுவதாக ராஜேந்திர கிஷன் எழுதிய ‘முகபத் ஐஸீ தட்கன் ஹை, ஜோ சம்ஜா நஹீன் ஜாத்தா ஹை’ என்று தொடங்கும் ஒரு பாடல் உள்ளது. ‘காதல் இப்படிப்பட்ட உணர்வு, புரியவைக்க முடியாத உயிர் மூச்சு எப்படிப்பட்டதோ அப்படி,’ ‘உள்ளத்தின் தடுமாற்றம் வாய்மொழியில் கொண்டுவரப்பட முடியாதது’ `எவருடைய விருப்பமோ அது சொல்ல முடியாததாக உள்ளது’ என்றெல்லாம் அந்தப் பாடலில் வரும்.

‘அனார்கலி’ படத்துக்காக ராஜேந்திர கிஷன் எழுதிய ‘ஜாக் ஜாக் தர்தே இஷ்க்’ (விழித்தெழு விழித்தெழு காதலே) என்ற மற்றுமொரு பாடல் பின்னர் தெலுங்கு மொழியிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ‘அனார்கலி’ படப் பாடலுக்கு மூலப் பாடலாக அமைந்தது. ஹேமந்த் குமார் லதா மங்கேஷ்கருடன் பாடிய இப்பாடல் இந்துஸ்தானி இசையின் பாகேஸ்வரி ராகத்தில் அமைந்துள்ளது.

காதலின் வீச்சை, தாபத்தை தனக்கே உரிய வசீகரக் குரலில் எழுச்சியுடன் ஹேமந்த் குமார் வெளிப்படுத்தினார். ஹேமந்த் குமார் போன்றே தனித்துவமான குரல் வளம் கொண்ட கண்டசாலா ஜிக்கியுடன் இணைந்து ‘அனார்கலி’யில் பாடினார். ‘ராஜசேகரா என் மேல் மோடி (வசியம்) செய்யலாகுமா’ என்ற கர்னாடக இசையின் இந்தோள ராகத்தின் அப்பாடல் ராஜேந்திர கிஷன் கவி வரிகளுக்கு இணையாக தஞ்சை ராமய்யாதாஸ் எழுதிய புகழ் பெற்ற பாடல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x