Published : 13 Jun 2014 11:59 AM
Last Updated : 13 Jun 2014 11:59 AM

திரை முற்றம்: திரும்புகின்ற பக்கமெல்லாம் திகில்!

புதிய தலைமுறை இயக்குநர்கள் உருக்கிய ‘யாவரும் நலம்’, ‘ஈரம்’ ஆகிய படங்கள், பேய்ப் படங்கள் மீதான ரசனையை முற்றிலும் மாற்றியமைத்தன. அதன் பிறகு 2 கோடியில் தயாரான பீட்சாவின் வசூல் வெற்றி, தற்போது கோலிவுட்டில் திரும்புகின்ற திக்கெல்லாம் திகில் படம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. ஜனவரியில் தொடங்கி இதுவரை 17 பேய்ப் படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. இவற்றில் கடந்த மாதம் வெளியான ‘யாமிருக்க பயமே’ பீட்சாவின் வசூல் சாதனையை நெருங்கிவிட்டது. ஆனால் கடந்த வாரம் வெளியான ‘கல்பனா ஹவுஸ்’ என்ற படம் தோல்வியைத் தழுவியிருக்கிறது. என்ன காரணம் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் விசாரித்தால், “பேய்ப் படங்கள் என்றாலே ஒரு வீட்டில் மொத்தப் படத்தையும் முடித்துவிடலாம். கதை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். அப்படி நினைத்தால் தோல்விதான். ஆனால் ஒரே வீட்டில் நடக்கிற கதையாக இருந்தாலும், வேகமான திரைக்கதை, தரமான கிராபிக்ஸ் மற்றும் பின்னணி இசை. போதிய அளவு பொழுதுபோக்கும் இருந்தால் அந்தப் படம் வெற்றியடைகிறது” என்று பதில் கிடைக்கிறது.

தற்போது கோலிவுட்டில் விறுவிறுப்பாகத் தயாராகிவரும் பேய்ப் படங்களில் ‘அம்புலி 3டி’ படத்தின் மூலம் கவர்ந்த படக் குழுவினர் இயக்கும் இரண்டாவது படமான ‘ஆ’ வுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து வெவ்வேறு இடங்களில் கதை நடக்கிறது. படம் பற்றி இயக்குநர் ஹரி ஷங்கர், ஹரேஷ் நாராயணன் ஆகியோரிடம் கேட்டபோது, ஜப்பான் தலைநகர் டோக்யோ, துபாய், ஆந்திரா மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலை, வங்கக் கடல் நடுவே ஒரு படகில், தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். அறை ஆகிய என ஐந்து வித்தியாசமான இடங்களில் நடக்கும் சம்பவங்கள் ஒரு விஷயத்தில் ஒரே புள்ளியில் இணைகின்றன. இந்த ஐந்து வெவ்வேறு சம்பவங்களுக்கு இடையே இருக்கும் தொடர்பை நிரூபித்துக் காட்டுவதற்காக மூன்று நண்பர்கள் இந்த ஐந்து இடங்களுக்கும் பயணிக்கிறார்கள். எதை அவர்கள் நிரூபிக்கக் கிளம்பினார்கள், அதனால் நன்மையா தீமையா எனப் படம் நகரும். இதற்கு எந்த ஆங்கிலப் படத்தின் பாதிப்பும் கிடையாது. எங்கள் ஆராய்ச்சியில் உருவான கதை. ஜப்பானில் எடுத்த காட்சிகளுக்கு ஜப்பான் நடிகர்களை நடிக்க வைத்துள்ளோம்” என்கிறார்கள். இந்தப் படத்தை ஆரோ 3டி ஒலியில் உருவாக்கிவருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x