Published : 27 May 2016 12:16 PM
Last Updated : 27 May 2016 12:16 PM
தன்னைச் சுற்றி எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் எப்போதுமே அதனை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார் சிம்பு. எந்தச் சூழ்நிலையிலும் சினேகமாகவும் யதார்த்தமாகவும் பேசும் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
சண்டை, நாயகனுக்கான அறிமுகப் பாடல் எதுவுமே இல்லாமல் ‘இது நம்ம ஆளு’ படத்தை எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?
இது உண்மையில் சிம்பு படம், பாண்டிராஜ் படம் மாதிரியே கிடையாது. இந்தப் படம் ஒப்புக்கொண்டதில் எனக்கு ஆபத்து இருப்பது உண்மைதான். இந்தக் கதையை நான் கேட்கும்போது, யாரோ இரண்டு பேர் நடித்தாலும் இப்படம் வெற்றிதான் என்று தோன்றியது. நானும் நயனும் நடித்தால் சூப்பர் ஹிட்டாகும் என்று ஒப்புக்கொண்டேன். ‘சுப்பிரமணியபுரம்’ வெற்றிதான். ஆனால் அதே படத்தில் சசிகுமார் - ஜெய் வேடங்களில் அஜித் - சிம்பு இருவரும் நடித்திருந்தால் அப்படத்துக்குக் கிடைத்திருக்கக்கூடிய வெற்றியை எண்ணிப் பாருங்கள். அதுதான் இந்தப் படம்.
திருமணமாவதற்கு முன்பு புருஷன் - பொண்டாட்டி இருவருக்கும் ஒரு மொபைல் போன் காதல் இருக்கும். அதுதான் இந்தப் படம். இதில் சிம்பு - நயன் இருவரும் தெரிய மாட்டார்கள். இருவருமே பாத்திரங்களாகத்தான் தெரிவோம்.
பாண்டிராஜ், கெளதம் மேனன் இருவருமே “சிம்பு. தாமதமாக வருவது மட்டுமே அவரிடம் இருக்கும் பிரச்சினை” என்று கூறுகிறார்களே.
ரஹ்மான் சார் கிட்ட நீங்க காலையில் பாட்டு கொடுத்தால் நீங்கள் இருக்க வேண்டிய இடமே வேற என்பதுபோல் இருக்கிறது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி வேலை செய்வார்கள். நான் தாமதமாகப் போக வேண்டும் என்ற எண்ணத்தோடு போவதில்லை. தாமதமாக வருவதைப் பற்றிப் பேசுபவர்கள், தாமதமாக வந்தாலும் வேலையைச் சரியாக முடித்துக் கொடுக்கிறேனே, அதைப் பற்றிப் பேசுவதில்லையே. தவறைப் பற்றி மட்டுமே பேசுவார்கள், நல்லதைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். அவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகத் தவறைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தால், என்னுடைய நல்ல விஷயங்கள் காணாமல் போய்விடும். நான் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.
எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் எதற்கும் கவலையே படாமல் இருக்கிறீர்களே…
அதை எல்லாம் தாண்டி வந்துவிட்டேன். கடவுளிடம் என்னை ஒப்படைத்துவிட்டேன். நடிப்பது மட்டும்தான் நான். என்னை இயக்குவது கடவுள். நான் அடைந்திருக்கும் இடம் ஒரே நாளில் எனக்குக் கிடைத்ததல்ல. கொஞ்சம் கொஞ்சமாக இந்த அளவுக்கு வந்திருக்கிறேன். அதனால் நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஒருவேளை நாளை என்னை வைத்து யாருமே படம் இயக்க முன்வரவில்லை என்றாலும்கூட சிலம்பரசனே இயக்குவார். நம்ம விட்ட இடத்தைப் பிடிக்க என்ன பண்ண வேண்டும் என்று எனக்குத் தெரியும். அதனால் நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. உள்ளுக்குள் நான் யார், எந்த இடத்தில் இருக்கிறோம் என்று தெரியும். தாமதம் என்கிற விஷயம் எல்லாம் என்னைப் பாதித்தது இல்லை.
ஹிட் கொடுத்தால் மதிப்பார்கள், ப்ளாப் கொடுத்தால் மிதிப்பார்கள். ஆனால், நான் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறேன். அது மட்டுமே என்னைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. மாறுபவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. 4 வருஷம் படம் வரவில்லை என்றாலும், தொடர்ச்சியா 4 வருஷம் ஹிட் கொடுத்தாலும் சிம்பு ஒரே மாதிரி இருப்பான். அது என்றைக்குமே மாறாது.
இனிமேல் படங்கள் வெளியீட்டில் தாமதம் இருக்குமா, இருக்காதா?
இனிமே வேற மாதிரி இருக்கும். நான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இப்போது இல்லை. நிரூபித்தே ஆக வேண்டும் என்ற பயம் எல்லாம் எப்போதோ போய்விட்டது. அப்படி இருந்தால்தானே கவலைப்பட வேண்டும். இப்போது ரசிகர்களிடம் என்னை ஒப்படைத்துவிட்டேன். என்னை அவர்கள் வழிநடத்துவார்கள். 3 படங்கள் தொடர்ச்சியாக ப்ளாப், இனிமேல் சிம்பு படமே வேண்டாம் என்றால்கூட ஜாலியாகக் கிளம்பி ஊருக்குப் போவேன்.
‘அச்சம் என்பது மடமையடா’ நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்துவருகிறதே..
‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘வேட்டையாடு விளையாடு’ என அனைத்து பாணியிலும் ஹிட் கொடுத்திருக்கிறார் கெளதம் மேனன். இவை அனைத்தும் கலந்த படம்தான் ‘அச்சம் என்பது மடமையடா’. முதல் பாதி முழுக்க ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ என்றால் இரண்டாம் பாதி முழுக்க ‘வேட்டையாடு விளையாடு’ என்று புதுமையாக இருக்கும். கமர்ஷியலாக ஒரு சில விஷயங்கள் பண்ணியிருக்கார். ரசிகர்களுக்கு புதுசாக இருக்கும்.
நடிகர் சங்கத்தை விட்டு விலகப் போகிறேன் என்றீர்களே...
அந்த எண்ணம் இருந்தது உண்மைதான். தற்போது நடிகர் சங்கத்தை விட்டு விலகவில்லை. இதுவரை நான் கடிதம் கொடுக்கவில்லை. அப்பா, நாசர் சார் எல்லாம் பேசியதால் நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக நீடிக்கிறேன்.
தேர்தல் வாக்குப் பதிவு அன்று “மாற்றம் ஏன்?” என்று கேட்டீர்கள். அதிமுக மீது உங்களுக்கு அவ்வளவு பிரியமா?
மாற்றம் வேண்டுமா என்று கேட்டார்கள். சரி நமக்கு என்ன தோணுதோ சொல்லலாம் என்று “இந்த ஆட்சியே நல்லாதானே இருக்கு. ஏன் மாற்றம்” என்று சொன்னேன். ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்பதால் மாற்றம் வேண்டாம் என்று சொன்னேன். உடனே அதிமுகவுக்கு ஆதரவு என்று தெரிவித்துவிட்டார்கள். உண்மையில் திமுகவில்தான் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதிமுகவில் எனக்கு யாரையுமே தெரியாது. பீப் பாடல் பிரச்சினையின்போதுகூட நான் யாரிடமும் பேசவில்லை. திமுக ஆட்சியில் இருந்தால் என்னால் கருணாநிதி ஐயாவிடம் பேச முடியும். அரசியல்வாதியாக நான் எதுவும் சொல்லவில்லை, ஒரு குடிமகனாக எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். அவ்வளவுதான்.
உங்களைப் பற்றி தவறாக வரும் செய்திகளுக்குக்கூட அமைதியாக இருக்கிறீர்களே… வருத்தமே இல்லையா?
நான் பண்ணாததைச் சொல்லும்போது கொஞ்சம் வருத்தப்படுவேன். மற்றபடி கிசுகிசு உள்ளிட்ட செய்திகளுக்கு எல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை. பீப் பாடலே நான் வெளியிடவில்லை. ஒரு தாயின் வயிற்றுக்குள் இருக்கும் கருவை 4 மாதத்திலேயே புடுங்கி, கை சரியில்லை, கால் சரியில்லை என்று சொன்னபோதுதான் நான் வருத்தப்பட்டேன். குழந்தை பிறந்தவுடன் எப்படியிருக்கு என்று சொல்லுங்கள் என்பதுதான் என் கேள்வி. நான் என் வீட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் பண்ணுவேன்.
எப்போதுதான் திருமணம் செய்துகொள்வதாக எண்ணம்?
நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் ‘இது நம்ம ஆளு’ வெளியானவுடன் ஒரு பிரச்சினை இருக்கும் என நினைக்கிறேன். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துக்கு பிறகு கார்த்திக் மாதிரி ஒரு பையன் வேண்டும் என்று பெண்கள் சொன்னார்கள். அதே போல ‘இது நம்ம ஆளு’க்கு பிறகு சிவா மாதிரி ஒரு பையன் வேண்டும் என்று தாலியுடன் பெண்கள் சுற்றுவார்கள். அதனால்தான் நமக்கு கல்யாணம் ஆயிடுமோ என்று பயம் வந்திருக்கிறது. ஏனென்றால் நான் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் படம் ‘சூப்பர்’ என்று தோன்றவில்லை, இப்படம் வெளியானவுடன் நமக்குக் கல்யாணம் ஆயிடுமோ என்று பயம்தான் வந்தது. எனக்கு இன்னொரு 3 மாதத்தில் கல்யாணம் ஆனாலும் ஆயிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT