Published : 20 May 2016 02:50 PM
Last Updated : 20 May 2016 02:50 PM

மறக்கப்பட்ட நடிகர்கள்: 5 - தமிழ்த் திரையின் வண்ணக்கிளி - பி.எஸ்.சரோஜா

தமிழ் சினிமாவின் தந்தை என்றும் ‘தேசாபிமான இயக்குநர்’என்றும் கொண்டாடப்பட்ட கே.சுப்ரமணியம் பல புகழ்பெற்ற நட்சத்திரங்களை உருவாக்கியவர். அவரது ஆஸ்தான கதாநாயகியருள் ஒருவராக வளர்ந்தவர் பி.எஸ். சரோஜா. 1941-ல் வெளியான ‘மதன காமராஜன்’படத்தின் மூலம் நடன மங்கையாகத் திரையில் தோன்றிய சரோஜா, தொடர்ந்து பத்துக்கும் அதிகமான படங்களில் நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தார். ஜுபிடர் நிறுவனம் தயாரித்த ‘மகா மாயா’ படத்தில் நடனமாடும்போது அந்தப் படத்தின் நடன இயக்குநர் பண்டிட் போலோ நாத்துடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாய் கனிந்து திருமணத்தில் முடிந்தது. சரோஜா இல்லத் தலைவியாய் மாறியிருந்த நிலையில்தான் இயக்குநர் கே.சுப்ரமணியம் முதல் கதாநாயகி வாய்ப்பினைத் தனது ‘விகட யோகி’படத்தில் சரோஜாவுக்கு வழங்கினார்.

சரோஜாவின் திறமை, வசீகரம் ஆகியவற்றை நன்குணர்ந்த சுப்ரமணியம், தனது ‘விசித்திர வனிதா' படத்தில் முக்கியக் கதாபாத்திரம் அளித்தார். அடுத்து 1949-ல் வெளியாகிப் பெரும்புகழ் பெற்ற ‘கீத காந்தி' படத்தில் பி.எஸ்.சரோஜாவை மீண்டும் கதாநாயகியாக்கினார். படத்தின் நாயகன் டி.ஆர். ராமச்சந்திரன். இந்தப் படத்தில் சரோஜா தனது கணவர் போலேநாத் ஷர்மாவுடன் இணைந்து ஆடிய நடனம் புகழ்பெற்றது. மனமொத்த தம்பதிகளாக வலம் வந்த இவர்களது வாழ்வில் விதி விளையாடியது. படப்பிடிப்புக்காக சேலம் நகருக்குக் கணவருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது சேலம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் சரோஜாவின் கணவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். காயங்களுடன் உயிர்பிழைத்தார் சரோஜா. இந்த நேரத்தில் அவர் சிகிச்சைபெற்று வந்த மருத்துவமனைக்குச் சென்று அவரை அடிக்கடி நலம் விசாரித்து வந்தார்கள் டி.ஆர். ராஜகுமாரியும் அவரது சகோதரர் டி.ஆர். ராமண்ணாவும். கே. சுப்ரமணியத்தின் படங்களில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த டி.ஆர். ராமண்ணா, சரோஜா போலோநாத் தம்பதியுடன் தொடக்கம் முதலே நட்பு பாராட்டிவந்தவர்.

துணிவும் மனமாற்றமும்

பி.எஸ். சரோஜா சிறு வயதுமுதலே துடுக்கும் துணிச்சலும் நிறைந்த பெண்ணாக வளர்ந்தார். எதற்கும் யாருக்கும் அஞ்சாத குணம் அவரிடம் இருந்தது. ஆனால் கணவரை திடீரென்று இழந்து நின்றபோது இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்தார். சரோஜாவின் முடிவை அறிந்த ராமண்ணா, “திரையுலகில் நட்சத்திரமாகப் புகழ்பெறும் பாக்கியத்தைக் கடவுள் எல்லோருக்கும் தருவதில்லை” என்று எடுத்துக் கூறி சரோஜாவின் மனமாற்றத்துக்குக் காரணமாக அமைந்தார்.

விபத்திலிருந்து மீண்டு வந்து நடிப்பதை நிறுத்தியிருந்த சரோஜா, ராமண்ணாவின் அறிவுரையை ஏற்று மலையாளத் திரையுலகின் முதல் வெள்ளிவிழாக் காவியமாக அமைந்த ‘ஜீவித நவுகா’ திரைப்படத்தில் நடித்தார். மலையாளப் படவுலகின் முதல் சூப்பர் ஸ்டார் திக்குறிச்சி சுகுமாரன் நாயருடன் இந்தப் படத்தில் நடித்தார். தமிழ்ப் பாடல்கள் இடம்பெற்ற இந்த மலையாளப் படம், தமிழில் ‘பிச்சைக்காரி’ என்ற பெயரில் வெளியானது. நிஜ வாழ்வில் ஏற்பட்ட இழப்பின் வலி நீங்காத காலகட்டத்தில் இந்தப் படத்தில் சிறப்பான சோக நடிப்பைத் தந்து, தமிழ், மலையாள ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றுக்கொண்டார். பிறகு தன் மீது பரிவுகாட்டிய திரையுலக நண்பர் டி.ஆர். ராமண்ணாவை மறுமணம் செய்துகொண்டார் சரோஜா.

பேரறிஞர் அண்ணாவின் கதை, வசனத்தில் கே.ஆர். ராமசாமி உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் ஏ.வி.எம். தயாரித்த ‘ஓர் இரவு' படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்றுநடித்தார் சரோஜா. இந்த நேரத்தில் ‘லட்சுமி காந்தன்’ கொலை வழக்கில் சிக்கிச் சிறையில் வாடிய ஏழிசை வேந்தர் எம்.கே.டி. அந்த வழக்கிலிருந்து விடுதலையாகி வெளியே வந்ததும் படங்களைத் தயாரித்து நடித்துவந்தார். ஆனால் சிறை மீண்ட பிறகு அவர் நடித்த படங்கள் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை. அது மட்டுமல்ல, பாகவதருடன் நடிக்க அந்நாளின் கதாநாயகிகள் பலரும் அஞ்சினர். ஆனால் பி.எஸ். சரோஜா அஞ்சவில்லை.

எம்.கே.டி. நடிப்பில் 1952-ல் வெளியான ‘அமரகவி' என்ற படத்தில் அவருடன் துணிந்து நடித்தார் பி.எஸ்.சரோஜா. அந்தப் படத்தில் பாகவதர் பாடிய “யானைத் தந்தம்போலே பிறைநிலா வானிலே ஜோதியாய் வீசுதே” என்ற புகழ்பெற்ற பாடல்காட்சியில் அவருடன் தோன்றினார்.

இரு திலகங்களுடன் இணைந்து

டி.ஆர். மகாலிங்கம், திக்குறிச்சி, எம்.கே.டி என அந்நாளின் சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடியாக மிளிர்ந்த சரோஜா அவர்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துக்கொண்ட எம்.ஜி.ஆர்., சிவாஜி என்கிற இரு பெரும் நடிகர்களோடும் நடித்தார்.எஸ்.எஸ்.ஆர். ஏ.பி.நாகராஜன், பிரேம்நசீர் எனத் திலங்களுக்கு இணையான புகழ்பெற்ற நடிகர்களுடன் நடிக்கவும் தவறவில்லை. எம்.ஜி.ஆருடன் ‘ஜெனோவா’ படத்தில் முதலில் ஜோடி சேர்ந்த சரோஜா அடுத்து ‘கூண்டுக்கிளி’ படத்தில் எம்.ஜி.ஆரின் மனைவியாகவும், சிவாஜியின் காதலியாகவும் நடித்தார். இருபெரும் திலகங்கள் இணைந்து நடித்த ஒரே படத்தின் நாயகி என்ற பெருமை சரோஜாவுக்குக் கிடைத்தது.

அந்தப் படத்தை இயக்கியவர் சரோஜாவின் கணவரான டி.ஆர். ராமண்ணா. கலைஞரின் கதை, வசனத்தில் கணவரின் இயக்கத்தில்,1957-ல் எம்.ஜி.ஆர் நடித்த படம் ‘புதுமைப்பித்தன்’. மூன்றாவது முறையாக எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்த சரோஜா, இந்தப் படத்துக்காக தனது கணவரின் அறிவுரையை ஏற்று வாள் சண்டை பயிற்சிபெற்று எம்.ஜி.ஆருடன் மோதும் காட்சியில் நன்றாக நடித்து அசத்தினார்.

தயாரிப்பு நிர்வாகி

கணவருடன் இணைந்து மூன்று தயாரிப்பு நிறுவனங்களைத் துணிவுடன் தொடங்கிய சரோஜா, அவற்றின் மூலம் ‘வாழப் பிறந்தவள்’, பெரிய இடத்துக்குப் பெண்’, ‘குலேபகாவலி’, ‘பாசம்’, `காத்தவராயன்’, ` கூண்டுக்கிளி’, ‘தங்கச் சுரங்கம்’ ‘புதுமைப் பெண்’ ‘அருணகிரிநாதர்’ என பல வெற்றிப் படங்களைத் தயாரித்தார். ‘அருணகிரிநாதர்’ படத்தில் அருணகிரியாராக வேடமேற்ற டி.எம்.சௌந்தரராஜனின் தங்கையாக நடித்து அசத்தினார்.

தாம் தயாரிக்கும் படங்களின் பண நிர்வாகத்தையும் பொறுப்புடன் கவனித்துக்கொண்ட இவர், தனது தயாரிப்பில் நடித்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, சரோஜாதேவி, ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களுக்கு வீடு தேடிச் சென்று அவர்களது ஊதியத்தை வழங்கிவருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

பி.எஸ்.வீரப்பா, நம்பியார், டி.எஸ். பாலையா, எம்.ஆர்.ராதா என்று அந்நாளின் புகழ்பெற்ற வில்லன் நடிகர்களுடன் நடித்திருக்கிறார் சரோஜா. நாடகவேந்தன் ஆர்.எஸ்.மனோகருக்கு ஜோடியாக நடித்த ‘வண்ணக்கிளி’ மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. முரடனான கணவனிடம் பெல்டால் அடிவாங்கி வன்கொடுமைக்கு ஆளாகும் கிராமத்துப் பெண்ணாக நடித்து பெரும்புகழ் பெற்றார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அடிக்கிற கை தான் அணைக்கும்', ‘சின்ன பாப்பா எங்கள் செல்ல பாப்பா’ ஆகிய இரண்டு பாடல் காட்சிகளில் அவரது நடிப்பை அனைத்துப் பத்திரிகைகளும் பாராட்டித் தள்ளின.

டி.ஆர். ராமண்ணாவுடன் மனமொத்த வாழ்வை வாழ்ந்த பி.எஸ். சரோஜாவுக்கு கலாராணி, சாந்தி ஆகிய இரண்டு மகள்களும் கணேஷ் என்ற மகனும் உள்ளனர். திரை நடிப்பு தவிர இவர் நேசித்துவந்த மற்றொன்று தோட்டக் கலை. தாம்பரம் அருகே 18 ஏக்கர் நிலத்தை வாங்கிய சரோஜா அதில், பழங்கள், காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றைப் பயிர்செய்வதில் அதிக ஆர்வம் செலுத்தினார். தோட்டகலைக்காகப் பல பரிசுகளையும் பெற்றார். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பல வண்ணங்களில் கதாபாத்திரங்களை ஏற்று முத்திரை பதித்த இவர், காலம் மறந்துவிட்ட வெற்றிக் கதாநாயகி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x