Last Updated : 27 May, 2016 11:58 AM

 

Published : 27 May 2016 11:58 AM
Last Updated : 27 May 2016 11:58 AM

திரைக்குப் பின்னால் - வானில் பறக்க வைத்தார் மாதவன்!

களவாணி’ படத்தின் மூலம் ‘டப்பிங்’ கலைஞராக அறிமுக மானவர் உமா. கதாநாயகிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களாக நடித்தால் அவர்களுக்குக் குரல்கொடுக்க இவரைக் கூப்பிடு என்கிறார்கள் கோடாம்பாக்கத்தில். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ‘இறுதிச் சுற்று’ படத்தில் முரட்டு மீனவப் பெண்ணாக நடித்த ரித்திகா சிங்கின் கதாபாத்திரத்துக்குக் குரல்கொடுத்த பிறகு மேலும் பிஸியாகியிருக்கிறார் உமா. அவரைச் சந்தித்தபோது…

பின்னணிக் குரல் கலைஞர் ஆக வேண்டும் என்ற ஆர்வம் எப்படி?

நான் பள்ளியில் படிக்கும்போது விளம்பரங்களுக்கு டப்பிங் பேசும் வாய்ப்பு எதிர்பாராமல் அமைந்தது. அப்போது எனக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுத்த ஒலிப்பொறியாளர் எனது குரல் வளம் நன்றாக இருக்கிறது தொடர்ந்து முயற்சி பண்ணுங்கள் என்றார். ஆனால், வேறு எந்த முயற்சியும் நான் செய்யவில்லை. திடீரென்று 2010-ல் ‘களவாணி’ படத்தில் ஓவியாவுக்குக் குரல் கொடுக்க என்னைக் குரல் தேர்வுக்குக் கூப்பிட்டார்கள். முதலில் சில காட்சிகளுக்குப் பேசவைத்துப் பார்த்த இயக்குநர் பிறகு நன்றாகப் பொருந்துகிறது என்று கூறி எல்லாக் காட்சிகளுக்கும் என்னைப் பேச வைத்து ஓகே பண்ணினார். ‘களவாணி’ படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தற்போது முழுநேர டப்பிங் கலைஞராக மாறிவிட்டேன்.

முதல் படம் வெற்றின்னாலும் ‘இறுதிச் சுற்று’ படம்தான் உங்களுக்கு பிரேக் கொடுத்திருக்கிறது இல்லையா?

இதற்கு முன்பே பல படங்களுக்கு நான் பேசியிருந்தாலும் ‘இறுதிச் சுற்று’ படத்தில் ரித்திகா சிங்க்குக்காக என் குரலை முழுமையாக மாற்றிப் பேசியிருந்தேன். அது அனைவரையும் என்னைக் கவனிக்கும்படி செய்துவிட்டது. இதுவரை ஆண் தன்மை கொண்ட குரலில் முயற்சி செய்தது இல்லை. மிகவும் மென்மையான கீச்சுக்குரல் கொண்ட கதாநாயகிகளுக்கு மட்டுமே இதுவரை பேசியதால் ‘இறுதிச் சுற்று’ படத்தில் ரித்திகாவுக்கு ஆண் தன்மை கலந்த குரலில் பேசியது நான்தான் என்று யாரும் நம்பவில்லை.

ரித்திகா சிங்குக்குக் குரல்கொடுக்க என்ன மாதிரியான முன்தயாரிப்பில் ஈடுபட்டீர்கள்?

நல்லா சாப்பிட்டேன். அதுதான் என் மிகப் பெரிய சீக்ரெட். காலை 7 மணிக்கு டப்பிங் இருக்கும். குரல் மாறுவதற்காகக் கத்திக்கொண்டே இருப்பேன். குரல் மாறியதும் பேசுவேன். பேசும்போது கொஞ்சம் குரல் மாற்றம் அடைந்தாலும் என் அருகிலேயே அமர்ந்திருக்கும் இயக்குநர் “ உன் குரல் ரொம்ப அழகா மென்மையா இருக்கு. ஆனா எனக்கு இந்தக் குரல் வேண்டாம்” என்று சொல்லிவிடுவார். அதனால் திரும்பவும் கத்திக் கத்தி ஆண்தன்மை கலந்த குரலை வரவழைப் பேன். இப்படித் தொடந்து 15 நாட்கள் பேசினேன். “உனக்கு இன்னா வேணும்? நாக்அவுட். அவ்வளவுதானே?” இந்தச் சின்ன வசனத்துக்கு இயக்குநர் 30 டேக்குகள் எடுத்தார்.

மறக்க முடியாத அனுபவம் அல்லது பாராட்டு?

‘வாகை சூட வா’ படத்தில் கதாநாயகிக்கு நான் குரல் கொடுத்திருந்ததைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாலா பாராட்டினார். அது நான் எதிர்பார்க்காத ஒன்று. ‘இறுதிச் சுற்று’ படத்தில் மாதவன் என் குரல் மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது என்று மனம் விட்டுப் பாராட்டினார். மாதவன் என்னோட ஃபேவரைட் ஹீரோ. அவரே கூப்பிட்டு சொன்னப்போ வானத்தில் பறந்தமாதிரி உணர்ந்தேன். இயக்குநர் சுதா நெருக்கமான தோழி போன்றவர். அவருடன் பணிபுரிந்த அனுபவம் ஒரு சினிமா பள்ளியில் படித்த மாதிரி இருந்தது. இளையராஜா சார் பாராட்டியதையும் மறக்கவே முடியாது.

சென்னை வட்டாரப் பேச்சு மொழியில் பேசப் பயிற்சி எடுத்தீர்களா?

ஆமாம். பல மீன் மார்க்கெட்களுக்குச் சென்று பெண்கள் எப்படி வியாபாரம் செய்கிறார்கள் என்று பார்த்தேன். வீட்டு வேலை செய்யும் பெண்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்று கவனித்துக் கத்துக்கிட்டேன். நான் சொதப்பினாலும் பக்காவாக எனக்குச் சொல்லிக்கொடுத்தார் இயக்குநர் சுதா.

நீங்கப் பார்த்து வியந்த டப்பிங் கலைஞர் யார்?

எனக்கு ரோகிணி ரொம்பப் பிடிக்கும். ‘கீதாஞ்சலி’ (‘இதயத்தைத் திருடாதே’ படத்தின் தெலுங்கு மூலம்), ‘இதயத்தைத் திருடாதே’ போன்ற படங்களில் அவங்க குரலை நான் கேட்டு ரொம்ப ரசிச்சிருக்கேன். இப்போது நிறைய பேர் என் குரலில் ரோகிணியின் சாயல் இருக்கு என்று சொல்லும்போது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது

நடிகர்களைப் பாராட்டும் ரசிகர்கள் ஏன் உங்களைப் போன்ற டப்பிங் கலைஞர்களைக் கண்டுகொள்வதில்லை?

இப்போல்லாம் அப்படிச் சொல்ல முடியாது. ‘இறுதிச்சுற்று’க்குப் பிறகு யார் குரல் கொடுத்தது என்று எல்லோரும் கேட்டார்கள் இல்லையா? அதுமாதிரி சரியான வாய்ப்பு அமைய வேண்டும். தங்கள் சொந்தக் குரலில் பேசி நடிக்க முடியாத கலைஞர்களின் நடிப்புக்கு உயிர் கொடுப்பதே என்னைப் போன்ற டப்பிங் கலைஞர்கள்தான். சிறந்த நடிப்புக்கு விருது கொடுப்பதுபோல் சிறந்த குரல் நடிப்புக்கும் விருது கொடுக்க வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு முழு அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகச் சொல்வேன். அதுவரை எங்கள் முகம் அவ்வளவாக வெளியே தெரிய வாய்ப்பில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x