Published : 20 May 2016 03:19 PM
Last Updated : 20 May 2016 03:19 PM

அய்யோ... சிம்புவுக்கு சண்டை இல்லையா? - இது நம்ம ஆளு சிறப்பு முன்னோட்டம்

சிம்பு நயன்தாரா காதல் பிரிவுக்குப் பிறகு அவர்கள் இருவரும் நடித்திருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இதனால் எத்தனை தாமதமாக வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் படமாக இருக்கிறது. இந்தப் படத்தில் என்ன சுவாரசியம் என்று படக் குழுவிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் திரை முன்னோட்டமாக…

ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்கள் எல்லாம் அதிகமான சம்பளம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால் அவர்களுடைய வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் வலியையும் வேதனையும் இப்படத்தில் கூறியிருக்கிறார் பாண்டிராஜ்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது ‘லவ்ன்னா லவ்… அப்படி ஒரு லவ்’ என்று தலைப்பு வைத்துத்தான் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், நயன்தாரா நாயகியாக ஒப்பந்தமானவுடன் ‘இது நம்ம ஆளு’ என மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

சிம்பு நடித்த படங்களில் சண்டைக் காட்சியே இல்லாத படமாக இது இருக்கும் என்று இயக்குநர் சொன்னவுடன், சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் “அய்யோ.. சிம்புவுக்கு சண்டை இல்லயா?” என்று முறைக்க, “இதில் சண்டை வைக்கணும்னா சிம்பு - நயன் இருவருக்கும்தான் வைக்கணும்” என்று சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ்.

சிம்பு - நயன்தாரா முதல் பாதியில் இணைந்திருப்பார்கள். சிம்பு - நயன் இருவருக்கும் சண்டை வரும் காட்சிதான் இடைவேளை, இடைவேளைக்குப் பிறகு பிரிந்தவர்கள் எப்படி இணைந்தார்கள் என்பதுதான் படம்.

இப்படத்தில் சிம்புவுக்கு மொத்தம் மூன்று காதல்கள் இருக்கின்றன. சிம்பு - ஆன்ட்ரியா காதலைக் கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறாராம் பாண்டிராஜ். சிம்பு - நயன்தாரா காதலை யதார்த்தமாகக் காட்டியிருக்கிறாராம். மூன்றாவது காதல் பற்றி ரகசியம் காக்கிறது படக் குழு.

சூரிதான் காமெடி என்றவுடன், சிம்புவோ சந்தானம் நல்லாயிருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சூரி மட்டுமே சரியாக இருக்கும் என்று விடாப்பிடியாக இருந்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். சிம்பு - சூரி சம்பந்தப்பட்ட முதல் காட்சி படமானவுடன் “ஜி... சூப்பர்ஜி. ப்ரஷ்ஷாக இருக்கிறது. அப்ளாஸ் அள்ளும்” என்று பாண்டிராஜிடம் தெரிவித்திருக்கிறார் சிம்பு.

சிம்புவுக்கு நாயகி என்றவுடன் முழுக் கதையையும் கேட்டுவிட்டு ஒப்பந்தமாகியிருக்கிறார் நயன்தாரா. அப்போது ‘வல்லவன்’ மாதிரி பாடல் எல்லாம் இருக்குமா என்று கேட்டிருக்கிறார். இல்லை என்றவுடன்தான் கையெழுத்திட்டு இருக்கிறார். முழுக்க சுடிதார், சேலை மட்டுமே அணிந்து நடித்திருக்கிறார்.

சிம்பு - நயன்தாரா இருவரும் காதல் பிரிவுக்குப் பிறகு நடித்த முதல் காட்சியை நீங்கள் திரையில் பார்க்கும்போது பிரிவு, வெட்கம் அனைத்தையுமே உணர முடியும் என்கிறார்கள். அதுதான் இருவரும் சந்தித்துக்கொள்ளும் முதல் காட்சியாகப் படத்தில் வருகிறது.

சிம்பு குறித்து பாண்டிராஜிடம் கேட்டால் “நல்ல மனிதர். ரொம்ப கூலாக இருப்பார். எதற்கும் டென்ஷனாகி அவரைப் பார்க்க முடியாது. அதுதான் அவருடைய மிகப்பெரிய ப்ளஸ். படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவதை மட்டும் அவர் சரிசெய்துகொண்டால், சிம்பு பெரிய இடத்துக்குப் போவதை யாராலும் தடுக்க முடியாது” என்கிறார்.

பாண்டிராஜ் படங்களிலேயே அதிகப்படியான இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் ‘இது நம்ம ஆளு’ தான். சுமார் 20 காபி ஷாப்களில் சிம்பு - நயன், சிம்பு - ஆண்ட்ரியா சந்திக்கும் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.

கிராமம் சார்ந்த கதைக்களங்களை விடுத்து முழுக்க நகரம் சார்ந்த ஒரு காதல் கதையைப் படமாக்கியிருக்கிறார் பாண்டிராஜ். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பாணியில் பாண்டிராஜ் - சிம்பு உருவாக்கியிருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.

மூன்றரை வருடம் படமாக்கி இருக்கிறார்கள் என்பதால் ‘பாகுபலி’ என்று நினைத்து வர வேண்டாம், 5 மாதத்தில் படமாக்கப்பட்ட படம்தான் ‘இது நம்ம ஆளு’. 3 வருடம் கழித்து வந்தாலும், படத்தின் கதைக் களம் அவ்வளவு அப்டேட்டாக இருக்கிறதாம்.

இது நம்ம ஆளு’ படம் முடிந்தவுடன் சுமார் 3 நிமிடங்கள் சிரிப்பதற்காக ப்ளூப்பர்ஸ் காட்சிகள் வைத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அதனைத் தொடர்ந்து வரும் பாண்டிராஜின் வசனம் அப்ளாஸ் அள்ளுவது உறுதி என்கிறது படக்குழு.

நிஜ வாழ்க்கையில் சிம்பு கடந்து வந்த காதல் வாழ்க்கையை இப்படத்தில் அப்படியே காணலாம். மேலும் அதற்கு “நீங்க நிறுத்துங்க... நாங்க நிறுத்துறோம்” என்று சிம்பு பாணியிலே காதலிகளுக்குப் பதில் சொல்வது போல வசனம் எழுதியிருக்கிறார் பாண்டிராஜ்.

இடைவேளைக் காட்சியில், சிம்பு - நயன்தாரா இருவரும் போனில் சண்டை போடுவது போலத்தான் முதலில் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். அக்காட்சி படமானவுடன் “ஜி... இக்காட்சி நேரில் சண்டை போடுவது போல எடுத்தால் இன்னும் டச்சிங்கா இருக்கும்” என்று கேட்டவுடன் இருவரும் நேரில் சண்டையிடுவது போலக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

இது நம்ம ஆளு’ 2-ம் பாகம் குறித்து கேட்டால் “அது படத்தோட வெற்றியைப் பொறுத்து இருக்கும்” என்று சிரிக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x