Published : 08 May 2016 09:37 AM
Last Updated : 08 May 2016 09:37 AM
காலம் ஒருவனின் காதலியாக மாறினால் என்ன நிகழும்? அதுதான் ‘24’
விஞ்ஞானி சேதுராமன் (சூர்யா) காலத்தினூடே பயணம் செய்ய உதவும் கைக்கடிகாரத்தைக் கண்டுபிடிக்கிறார். அதைக் கைப்பற்றத் துடிக்கும் ஆத்ரேயா (அண்ணன் சூர்யா), சேதுராமனையும் அவர் மனைவியையும் (நித்யா மேனன்) கொலை செய்கிறார். சேதுராமன் தன் குழந்தையையும் டைம் மிஷின் வாட்சையும் காப்பாற்றிவிடுகிறார்.
இது நடந்தது 26 ஆண்டுகளுக்கு முன்பு. கதை இப்போது நிகழ்காலத்துக்கு வருகிறது. சேதுராமனின் மகன் மணி (சூர்யா) வாட்ச் மெக்கானிக். அப்பா கண்டுபிடித்த டைம் மிஷின் வாட்ச் அவரிடம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் அதன் பயன் என்ன என்பது அவருக்குத் தெரியவருகிறது.
26 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தால் கோமாவில் படுத்துவிட்ட ஆத்ரேயா இப்போது விழித்து எழுகிறார். அந்த வாட்சைக் கைப்பற்றுவதில் அவரது வெறி இம்மியளவும் குறையவில்லை. ஆத்ரேயாவின் பணபலத்துக்கும் மிருக வெறிக்கும் இளம் சூர்யாவால் ஈடுகொடுக்க முடிந்ததா என்பதே கதை.
கால இயந்திரம் என்னும் சிக்கலான கருத்தை விறுவிறுப்பான சம்பவங்கள், திருப்பங்களுடன் சுவாரஸ்யமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் விக்ரம் கே. குமார். வாட்ச் இளம் சூர்யாவிடம் வந்ததும் படம் வேகமெடுக்க வேண்டும். ஆனால், காமெடி, காதல் பாதைக்குள் நுழைந்துவிடுகிறது. அதிலிருந்து வெளியேறி சீரியஸான பாதைக்குள் நுழைந்த பிறகு வேகமெடுக்கிறது.
ஆத்ரேயா - மணியின் காய் நகர்த்தல்கள் படத்தை விறுவிறுப்பாக்குகின்றன. யாரிடம் அசல் வாட்ச் இருக்கிறது என்பதை ஆத்ரேயா கண்டுபிடிக்கும் விதம், செக்கில் கையெழுத்து போடுவதால் வரும் சிக்கலிலிருந்து தப்பிக்கும் விதம், ஆத்ரேயாவின் நிஜ முகம் வெளிப்படும் இடம் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவை. கிளைமாக்ஸ் திருப்பம் ரசிக்கும்படி இருக்கிறது.
மழை, கிரிக்கெட் ஸ்டேடியம், துப்பாக்கி குண்டு துளைக்கும் திசை நோக்கி ஆத்ரேயாவைத் திருப்பிவிடுவது என்று காலத்தை உறையவைக்கும் காட்சிகள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. சூர்யாவின் ‘இமாஜினோ ரொமான்ஸ் ஃபீலியா’ குறும்பும் அதை சமந்தா எதிர்கொள்ளும் விதமும் ரசனையும் ரகளையுமாய் இருக்கின்றன. ஆனால் காதல் காட்சிகளில் தாராளமாகக் கத்திரி போட்டிருக்கலாம். குடும்ப சென்டிமெண்ட் காட்சிகளும் அப்படியே.
சூர்யாவுக்கு மின் அதிர்ச்சி ஏற்படுவது முக்கியமான திருப்புமுனை. அப்படி ஏற்படுவதற்கான காரணத்தை வலுவாக முன்வைத்துவிடுகிறார் இயக்குநர். வில்லன் சூர்யா இளம் சூர்யாவை ஏமாற்றும் விதத்திலும் தர்க்கம் கச்சிதமாக இருக்கிறது. ஆனால், வாட்சைத் திறக்கும் சாவி சூர்யா கையில் வருவதில் எந்தத் தர்க்கமும் இல்லை. சேப்பாக்கத்தில் இந்தியா இலங்கை கிரிக்கெட் போட்டி நடப்பதாகக் காட்டப்படுகிறது. கதை நடப்பது 2016-ல். இந்த ஆண்டில் இந்த அணிகளுக்கிடையே சேப்பாக்கத்தில் போட்டியே இல்லை.
இதையெல்லாம் விட்டுவிடலாம். ஆனால், ஆத்ரேயா இளம் சூர்யாவிடம் வாட்சைத் திரும்பக் கொண்டுபோய்ச் சேர்க்கும் காட்சியின் தர்க்கப் பிழை மிக முக்கியமனது. கையில் வாட்ச் வந்ததும் பின்னோக்கிப் பயணிக்கும் ஆத்ரேயா, அதற்கு முன் தினத்துக்குப் போகிறார். அந்த தினத்தில் அவர் கையில் வாட்ச் இருந்திருக்க வாய்பில்லை. முன் தினத்தில் இருக்கும் அவர், இளம் சூர்யாவைக் கொல்ல வேண்டாம் என்று மட்டும் முடிவெடுக்கவில்லை. விளம்பரம் கொடுத்து அவரை வரவழைக்க வேண்டாம் என்றும் முடிவெடுக்கிறார். ஆக, வாட்ச் ஆத்ரேயா கையில் வர வாய்ப்பே இல்லை. அப்படியானால் அவரால் சூர்யாவிடம் வாட்சை எப்படிச் சேர்ப்பிக்க முடியும்? சூர்யாவை வரவழைக்க வேறு யுக்தியை யோசித்திருக்கலாம்.
மூன்று கதாபாத்திரங்களுக்கும் நன்கு வித்தியாசம் காட்டியிருக்கிறார் சூர்யா. காதல், பாசம் ஆகிய இடங்களில் அவர் நடிப்பு அவரது முந்தைய படங்களை நினைவுபடுத்துகிறது. வில்லன் ஆத்ரேயா தனித்து நிற்கிறார். புஜபலம் கொண்ட வில்லனாகச் சீறும் காட்சிகளைவிடவும் சக்கர நாற்காலியில் கூனிக் குறுகி உட்கார்ந்திருக்கும் காட்சிகளில் சூர்யாவின் நடிப்பும் உடல் மொழியும் அபாரம்.
சிறிய வேடம் என்றாலும் அழுத்தமான தடம்பதிக்கிறார் நித்யா மேனன். சமந்தா வரும் இடங்கள் அழகு. கண் கலங்கும் இடங்களில் சரண்யா நெகிழ வைக்கிறார். கிரிஷ் கர்னாடை இயக்குநர் வீணடித்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை அற்புதம். பாடல்கள் கேட்கும்படி இருக்கின் றன. கலை இயக்குநர் அமித்ரா, சுப்ரதா சக்ரபோர்டி இருவரின் கைவண்ணத்தில் உருவான அறிவியல் ஆய்வுக்கூடம் ஆச்சரியப்படுத்துகிறது. மேகமலையின் அழகை அள்ளித்தரும் திருநாவுக்கரசுவின் கேமரா, சண்டைக் காட்சிகளுக்குத் தேவையான பரபரப்பையும் காட்டியிருக்கிறது.
ஒரு சில குறைகள், இழுவையான சில காட்சிகளை மீறிப் படத்தின் புதுமையும் விறுவிறுப்பான திருப்பங்களும் ஈர்க்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT