Published : 20 May 2016 03:04 PM
Last Updated : 20 May 2016 03:04 PM
பாலா, பாலாஜி சக்திவேல் சீனு.ராமசாமி என யதார்த்த சினிமாவுக்காக இயங்கிவரும் இயக்குநர்களோடு பணியாற்றிவரும் செழியன், திறமையான இளம் இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதிலும் ஆர்வம் காட்டிவருபவர். எழுத்து, இசை, ஒளிப்பதிவு என்று தான் கடந்து வந்த படைப்புப் பாதையைக் குறித்து கடந்த வாரம் உரையாடினார். நேர்காணலின் இந்த நிறைவுப் பகுதியில் ஒளிப்பதிவின் நுட்பங்களை எளிமையாகப் பகிர்ந்துகொள்கிறார்…
பி.சி. ஸ்ரீராமிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
முதலில் தைரியமும் நம்பிக்கையும். பிறகு ஒழுங்கும், அர்ப்பணிப்பும், நேர்த்தியும்… பிறகுதான் சினிமாவும் ஒளிப்பதிவும். “இது கருவிகள் சார்ந்த தொழில்நுட்பம். கருவிகள் மாறிக்கொண்டே இருக்கும். ஒருபோதும் அஞ்சாதே. இது ஒரு விஞ்ஞானம். தினமும் மாறிக்கொண்டே இருக்கும். பின்தங்கிவிடாதே. கற்றுக்கொண்டே இரு” இதுதான் அடிப்படை. முதல் நாள் படப்பிடிப்பின் உணவு இடைவேளையின்போது, என்னை அழைத்து அடுத்து எடுக்கப்போகிற ஷாட்டைச் சொல்லி, கேமரா வைங்க. வச்சிட்டு என்னையக் கூப்பிடுங்க என்று சொன்னார். அவர் விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று என்றுதான் நினைத்தேன். ஆனால் “போங்க” என்று அழுத்தமாகச் சொல்லவும், போனேன். ஏற்கெனவே போட்டோகிராபியில் பயிற்சி இருந்ததால் அந்தச் சிறிய அறையில் கேமரா வைத்தால், அவர் சொன்ன `வைட்’ காட்சியை எடுக்க முடியாது என்று புரிந்தது. அந்த அறையில் பூட்டிய ஒரு கதவு இருந்தது. அதைத் திறந்து கேமராவை உள்ளே வைத்ததும் சரியாக இருந்தது. வந்து சொன்னேன். முதுகில் செல்லமாக ஒரு தட்டு. அவ்வளவுதான். அடுத்து அவர் சொன்ன மாதிரி ஒரு காட்சியும் எடுக்கப்படவில்லை. எனக்கு அது ஒரு பரீட்சை. அதன் மூலம் பூட்டிய கதவைத் திறக்க வைத்ததுதான் அவர் செய்தது. இது ஒரு சிறிய உதாரணம். இதைத்தான் கற்றுத்தந்தார் என்று சொல்லி முடிக்க முடியாது. அவருடன் இருந்த நாட்களைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அதை நூலாக எழுதும் திட்டம் இருக்கிறது.
கல்லூரி, பரதேசி, தாரை தப்பட்டை போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் வேலை செய்யும் அதேநேரம், பெரிய நட்சத்திரங்கள் இல்லாத புதிய இயக்குநர்களின் சிறுபடங்களிலேயே தொடர்ந்து பணியாற்றி வருவது ஏன்?
பெரிய படம், சிறிய படம் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. பிடித்த படங்களில் பணிபுரிகிறேன். `கல்லூரி’ திரைப்படத்தின்போது தமன்னா புதுமுகம். `தென்மேற்கு பருவக்காற்று’ எடுக்கும்போது விஜய் சேதுபதி புதுமுகம். பெரிது, சிறிது என்பது நம் ஈகோவிற்குத்தான். உண்மையில் அப்படி ஒன்றுமில்லை என்று நான் நம்புகிறேன். ஒளிப்பதிவில் அழகு என்பது ஆன்ம அழகுதான். கதை சொல்கிற உணர்வும் உயிர்ப்பும்தான் முக்கியம். எனவே உயிர்ப்பான படங்களே எனக்குப் பிடிக்கின்றன. இந்த மாதிரிப் படங்கள்தான் செய்ய வேண்டும் என்று ஒரு வரையறையும் எனக்கு இல்லை. பிடிக்க வேண்டும். அது வேலையாக மட்டும் இல்லாமல் மனம் லயித்துச் செய்கிற ஒன்றாகவும் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பிறகு ஒளிப்பதிவாளருக்கான சவால்கள் என்ன?
பிலிம் இருந்தபோது அதில் எப்படிப் பதிவாகிறது என்பதைப் பார்ப்பதில் ஒரு த்ரில் இருக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமான பிறகு அந்த சிலிர்ப்புணர்வை இழந்துவிட்டோம். ஆனால், ஒரு காட்சியை உயிர்ப்புடன் எடுக்க வேண்டுமென்று நினைக்கும்போது, அது பிலிமாக இருந்தாலும் டிஜிட்டலாக இருந்தாலும் அதன் பின்னால் இருக்கிற கலைஞனின் அழகுணர்வு என்பது இன்னமும் இருக்கவே செய்கிறது. பழையதுதான் சிறந்தது என்று புதியதை ஒதுக்குவதும் தேவையில்லை. தொழில்நுட்பம்தான் மாறியிருக்கிறதே தவிர, கேமராவுக்குப் பின்னால் இருக்கிற நபரின் நோக்கமோ, வேலையோ மாறியதாக நான் நினைக்கவில்லை.
ஒளிக்கும் காட்சிக்குமான தொடர்பு என்ன?
ஒரு காட்சியைப் பார்த்தவுடன் அது சோகமானதா, சந்தோஷமானதா என்பதை அதன் ஒளியே சொல்ல முடியும், சொல்ல வேண்டும். ஒரு ப்ரேமில் இருக்கும் இரண்டு கதாபாத்திரங்களுக்குள் இருப்பது இணக்கமா, முரண்பாடா என்பதை ஒளியே சொல்லிவிட முடியும். ஒளியைப் புரிந்துகொள்வதற்கும், ஒளியைக் கையாள்வதற்கும், ஒளி உருவங்களோடு எப்படி விளையாடி உணர்வுகளை உருவாக்குகிறது என்பதையும் ஒளிப்பதிவாளன் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறான். மொத்தத்தில் ஒளியை நான் புரிந்துகொள்வதற்கான முயற்சிதான் எனது திரைப்படங்கள்.
ஒளியுடனான தொடர்ந்த தேடலில் அதன் மொழி இப்போது எனக்குப் புரிகிறது. அதன் தன்மையும் விளையாட்டும் புரிகிறது. சினிமா போன்ற கூட்டுக்கலை வடிவத்தில் சரியான ஒளிக்காகக் காத்திருப்பதும் பதிவுசெய்வதும் எல்லா நேரத்திலும் சாத்தியமில்லை. என்றாலும், சில சமயங்களில் ஒளி நம்மிடம் கைகுலுக்கும் அனுபவம் நிகழ்கிறது.
ஒரு ஓவியன் கித்தானில் தீற்றிக்கொண்டே இருக்கிறான். எந்தக் கணத்தில் அவன் ப்ரஷ்ஷை தூர எடுக்கிறான்? எப்போது எது அவனைப் போதும் என்று நிறுத்தச் சொல்கிறது. அதுபோலத்தான் ஒரு ப்ரேமில் ஒளி, உருவம், வெளி என்று எல்லாம் சேர்ந்து உருவாகும்போது ஒரு கட்டத்தில் போதும் நிறுத்து என்று அதுவே சொல்லும். படப்பிடிப்பின் சத்தங்களுக்கு நடுவில் அதைக் கேட்பதற்கான அமைதி நம்மிடம் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
ஒரு நல்ல ஒளிப்பதிவாளராக அடிப்படையாக என்னென்ன திறன்கள் தேவை?
ஒளியைப் படிப்பதுதான் ஒளிப்பதிவாளரின் அடிப்படை. அதைக் கற்றுக்கொள்ள ஓவியங்களைப் பார்க்க வேண்டும். சிறந்த புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்களைப் பார்க்க வேண்டும். சினிமா ஒளிப்பதிவைப் பொறுத்தவரை, அசைவுகள் மிகவும் முக்கியம். ஒரு உருவம் நகரும்போது எப்படி அதற்கு ஒளியூட்டப் போகிறோம் என்பதைத் திரைப்படங்களைப் பார்ப்பது வழியாகவே கற்க முடியும். நிஜ வாழ்க்கையிலும் கற்கலாம். இது எல்லாம் தொழில்நுட்பம். இதைத் தாண்டிச் சுற்றியுள்ள வாழ்க்கையை அவதானிக்க வேண்டும். கதைகள், கவிதைகளைப் படிக்க வேண்டும். தொழில்நுட்பமும், சுயமான கற்பனையும் தான் செய்கிற வேலையில் முழுமையான அர்ப்பணிப்புணர்வும் சேரும்போதுதான் தனித்துவமான ஒளிப்பதிவாளன் உருவாக முடியும் என்று நான் நம்புகிறேன்.
இந்திய அளவில் ஒளிப்பதிவு சார்ந்து சாதனையாளர்கள் என்று யாரையெல்லாம் கருதுகிறீர்கள்?
வி.கே.மூர்த்தி, சுபர்த்தோ மித்ரா, வின்சென்ட் மாஸ்டர், அசோக் குமார், பாலு மகேந்திரா, பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன்... உடனே நினைவுக்கு வரும் பெயர்கள் இவை வங்காளம், கேரளம், தற்போதைய இந்தி சினிமாவில் சொல்வதற்கு இன்னும் சில பெயர்கள் இருக்கின்றன.
படம் இயக்குவதில் ஆர்வம் இருக்கிறதா?
ஒரு மொழி எப்படிக் காட்சியாக மாறும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான பயிற்சியாகத்தான் நான் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதிப் பார்த்தேன். இன்றுவரை அதன் வழியே நான் ஒளிப்பதிவைக் கற்றுக்கொண்டு வருகிறேன். என்னிடமும் சொல்வதற்குச் சில கதைகள் இருக்கின்றன. அதை எனக்குப் பிடித்த விதத்தில் சொல்ல வேண்டும். சொல்லுவேன். படங்களை இயக்கினாலும் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்வேன். ஏனெனில் ஒளிப்பதிவின் வழியேதான் சினிமாவின் மொழியைக் கற்றுக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.
அது பிலிமாக இருந்தாலும் டிஜிட்டலாக இருந்தாலும் அதன் பின்னால் இருக்கிற கலைஞனின் அழகுணர்வு என்பது இன்னமும் இருக்கவே செய்கிறது. பழையதுதான் சிறந்தது என்று புதியதை ஒதுக்குவதும் தேவையில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT