Published : 20 Jun 2014 12:14 PM
Last Updated : 20 Jun 2014 12:14 PM
கண்ணதாசன் பிறந்த நாள் : ஜூன் 24
பதினைந்து ஆண்டுகள். இரண்டாயிரம் பாடல்கள். கோலிவுட்டின் சளைக்காத பாடலாசிரியர் நா.முத்துகுமார். கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்களை எழுதிவரும் கவிஞராகவும் தொடர் முத்திரையை பதித்து வருகிறார். தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடலுக்காக தேசிய விருது பெற்றிருக்கும் இவர், இயக்குநர்கள் விரும்பும் எல்லா வகைப்பாடல்களையும் எழுதிக் குவிக்கிறார். என்றாலும் கண்ணதாசனைப் போலத் தத்துவப் பாடல்களில் தனி அடையாளம் பெற வேண்டும் என்பது இவரது முனைப்பு. கண்ணதாசனைப் பற்றிக் கேட்டதும் ஒரு நொடிகூட யோசிக்காமல் பேச ஆரம்பித்துவிட்டார்...
கண்ணதாசன் பற்றி எந்த வயதில் அறிந்துகொண்டீர்கள்?
பத்து வயதே நிரம்பிய பள்ளி நாட்களில் கண்ணதாசன் தெரிந்துவிட்டார். கவிதை மாதிரி ஒன்றை எழுதும் யாரையும் “இவர் பெரிய கண்ணதாசன்!” என்று கிண்டல் செய்வது கிராமப்புறங்களில் இன்றும் வழக்கமாக இருக்கிறது. அந்த அளவுக்குக் கடைக்கோடித் தமிழனின் மனதிலும் கல்வெட்டாகப் பதிந்துவிட்டது அவரது பெயர். கண்ணதாசன் பாடல்களைத் திரையில் பார்க்கும்போது முதலில் நடிகர்கள் தெரிந்தார்கள். இப்போது நட்சத்திரங்கள் கூடவே என் மனத்திரையில் கண்ணதாசனின் புன்னகை ஒளிரும் முகம் தெரிகிறது.
கண்ணதாசனின் திரைப்பாடல்களில் பளிச்சென்று தெரியும் சிறப்பு என்று எதைச் சொல்வீர்கள்?
எந்த மொழியில் எழுதினாலும் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் படைப்பாளிகளுக்கு மாபெரும் சவாலாக இருப்பது எளிமை. ஜென் மனநிலையைத் தனதாக்கிக்கொண்டால் மட்டுமே ஒரு படைப்பாளி எளிமையைச் சென்று அடைய முடியும். போட்டி, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, அழுக்காறு, அகந்தை போன்ற குணங்களைத் தூக்கி எறியும்போது நீங்கள் ஜென் மனநிலையை அடைய முடியும். இதைத்தான் “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” என பாரதி சொல்லிச் சென்றார். கண்ணதாசன் உள்ளத்தில் உண்மை கம்பீரமாகக் கொலுவீற்றிருந்தது. அதனால் அவரது வாக்கினில் ஒளி பிறந்தது. அதனால்தான் அவரால் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா” என்று எழுத, எளிமை அவரிடம் தலைவணங்கி நின்றது. இப்படி கண்ணதாசனுடைய எந்தப் பாடலை எடுத்துக் கொண்டாலும் எளிமைதான் அவரது சிறப்பு. எளிமையின் வாயிலாகப் படைத்தவனுக்கும் படிப்பவனுக்கும் இடையில் நேரடியான அனுபவப் பங்கீடு நிகழ வேண்டும். இந்தச் செயல்முறையைச் சாத்தியப்படுத்தும் எளிமையோடு கண்ணதாசனின் எல்லாப் பாடல்களும் இருக்கின்றன. அதேநேரம் பனித்துளிக்குள் ஒரு கடல் என்பதைப்போல அவரது எளிமையில் இருக்கும் ஆழம் நமக்குத் தரும் கலையனுபவம் விலைமதிக்க முடியாதது.
கண்ணதாசனின் பாடல்களில் காலம் கடந்தும் அப்படியே இருக்கும் அம்சம் எது?
கவிதையில் ‘எமோஷனல் பொயட்ரி’ என்றொரு வகை உண்டு. உணர்வுபூர்வமான கவிதை மொழிக்கு ஈடு இணை எதுவுமில்லை. காலம் கடந்து கண்ணதாசன் பாடல்கள் அப்படியே உயிர்ப்புடன் இருப்பதற்கு இந்த உணர்வுபூர்வமான கவிதை மொழி தான் காரணம். உணர்வுபூர்வமாக மொழியில் எழுதப்பட்ட கவிதைகள், பாடல்கள் என எந்த இலக்கியமாக இருந்தாலும் கற்பனையைவிட உண்மையின் ஆட்சியே அதில் கம்பீரமாக இருக்கும். இப்படிப் படைப்பில் உண்மை இருக்கும் பட்சத்தில், அது கண்ணாடி போன்றது. எப்போதோ எழுதப்பட்ட படைப்பாக இருந்தாலும் எல்லாக் காலத்திலும் வாழும் மனிதர்களுக்கு வாழ்க்கையின் பிடிபடாத பக்கங்களைக் காலம்தோறும் புதிதாய்ப் புரிய வைக்கும். சங்கத் தமிழ் இலக்கியத்திலிருந்து இதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும்.
“குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்ற குறளை நான் பள்ளியின் பேச்சுப் போட்டிக்காக மனப்பாடம் செய்தபோது அதன் அர்த்தத்தின் உணர்ச்சியை உணர முடியவில்லை. ஆனால் எனக்கு மகன் பிறந்து அவன் பேச ஆரம்பித்தபோது அதன் அர்த்தத்தை உணர்ந்து கிளர்ந்தேன். இதே கவிதை என் முதுமையில் எனக்கு வேறு உணர்வைத் தந்துவிடலாம். ஆனால் அப்போதும் அது உண்மையாகவே இருக்கும். கண்ணதாசனின் பாடல்களும் அப்படித்தான். வயதுக்கேற்ற வாழ்வனுபத்தின் வழியாக அனுபவப் பங்கீட்டைத் தந்துகொண்டே இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள்.
ஒரு சில பாடல்களை உதாரணமாகக் காட்டி விளக்க முடியுமா?
“நேரமிது நேரமிது நெஞ்சிலொரு பாட்டெழுத....” என்ற ரிஷிமூலம் படப் பாடலை நான் பள்ளி, கல்லூரி நாட்களில் எந்தச் சலனமுமின்றிக் கடந்து வந்திருக்கிறேன். ஆனால் அதே பாடல் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தந்தையான பிறகு எனக்களித்த அனுபவப் பங்கீடு வேறு.. அந்தப் பாடலின் சரணத்தில் வரும் ஒரு வரியில்.. நாயகி நாயகனைப் பார்த்து “திங்கள் ஒளி திங்களைப் போல், உங்கள் பிள்ளை உங்களைப்போல் உங்களைத்தான் நாடுகிறான் என்னிடம் ஆசையில்லை” என்று பாடுகிறார். அதற்கு நாயகன் “நீ பெற்ற பிள்ளையின் வேகமும் கோபமும் உன்னைப் போலத் தோன்றுதே!” என்கிறார். இது ஒவ்வொரு மனிதனும் உணரக்கூடிய வாழ்வின் உன்னதமான பரிமாணம். அதே பாடலில் வரும் “ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டால் என்ன.. பிள்ளைகூட இன்பமே” என்ற வரியின் ஆழத்தை வாழ்ந்து பார்த்தவர்கள்தான் முழுமையாக உணர முடியும்.
கொண்டாட்டத்துக்கு எத்தனையோ பாடல்கள் வந்துவிட்டாலும் இன்றைக்கும் “எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம்...” பாடாத பப்பே இல்லை. ஒரு ஒப்பாரி என்றால் “வீடுவரை மனைவி, வீதிவரை உறவு.. காடுவரை.. பிள்ளை.. கடைசிவரை யாரோ”தான். பாசம் என்றால் “மலர்ந்தும் மலராத பாதி மலர்போல” பாடல்தான். கண்ணதாசனின் முன்மாதிரிகளுக்கு இப்போதைக்கும் மாற்றில்லை. காரணம் அவரது இடம் யாராலும் நிரப்ப முடியாதது.
கண்ணதாசன் காலத்திலேயே வாலியின் சாதனைகளும் தொடங்கிவிட்டன. வாலியுடன் மிகுந்த நட்பாய் இருந்தவர் நீங்கள். கண்ணதாசன் பற்றி அவர் உங்களிடம் பகிர்ந்துகொண்டதுண்டா?
நிறைய. கண்ணதாசனுக்கும் வாலிக்கும் ஒரு பெரிய ஒற்றுமையுண்டு. நான் நல்ல பாடல்களை எழுதும்போதெல்லாம், “என்னைய்யா... இத்தனை அருமையா எழுதிட்டே!” என்று பாராட்டுவார் வாலி. என்ன சார் இவ்வளவு மனம் திறந்து பாராட்டுறீங்க என்று நான் கேட்பேன். “நான் போன்லதான்யா பாராட்றேன். கண்ணதாசன் வீடு தேடி வந்து என்னை எத்தனை முறை பாராட்டியிருக்கார் தெரியுமா?” என்று என்னிடம் நெகிழ்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.
கண்ணதாசன் பற்றி அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட இன்னொரு முக்கியமான நிகழ்வு இருக்கிறது. பட்டுக்கோட்டையார் பிரபலமாகிவிட்டிருந்த நேரம் அது. கண்ணதாசனைப் பாட்டெழுத அழைத்திருக்கிறது ஒரு முன்னணி பட நிறுவனம். “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று ஒரு கவிஞர் வந்திருக்கிறாரே, அவரைப் போல இந்தப் பாடலை எழுதித்தர வேண்டும்” என்று இயக்குநர் வாயை விட்டுவிட்டார். சரி என்று சொன்னவர் “இப்ப வந்துடுறேன்” என்று கிளம்பிப் போயிருக்கிறார். அடுத்த ஒரு மணிநேரத்தில் பட்டுக்கோட்டையாரை அழைத்துக்கொண்டுவந்து “நீங்கள் தேடிக்கொண்டிருந்த கவிஞர் இவர்தான். இந்தப் பாடலை இவர் எழுதுவதுதான் சரி” என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அதுதான் கண்ணதாசன்.
கண்ணதாசனின் திரைப்பாடல்களைத் தவிர்த்து அவரது எழுத்துகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கண்ணதாசன் என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது அவரது அர்த்தமுள்ள இந்துமதம்தான். தமிழ்ப் பதிப்பகச் சூழலில் நூற்றுக்கணக்கான பதிப்புகளைக் கடந்து மூன்றாம் தலைமுறைத் தமிழர்களால் வாசிக்கப்படும் மிகச் சிறந்த நூலாக அது இருக்கிறது. அதேநேரம் மதங்கள் வேண்டுமானால் வேறுவேறாக இருக்கலாம், ஆனால் இறைவனை நினைத்து உருகும் ஆன்மிகம் என்பது ஒன்றுதான் என்பதை அவர் படைத்த ‘இயேசு காவியம்’ படிக்கும் எவரும் உணர முடியும். அடுத்து அவருடைய ‘வனவாசம் மனவாசம்’. இவ்வளவு நேர்மையாக ஒருவர் தனது சுயசரிதையை ரத்தமும் சதையுமாக ஒளிவு மறைவின்றி எடுத்து வைக்க முடியுமா என்று வியந்துபோயிருக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT