Published : 27 May 2016 12:08 PM
Last Updated : 27 May 2016 12:08 PM
உலகப் போர் உருவாக்கிய கடுமையான பொருளாதார நெருக்கடியில், ஒரு சாதாரண சைக்கிள் திருடப்பட்டதால் ஒரு மனிதனின் வாழ்க்கையில், அவனுடைய குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற கிளாசிக் ‘பைசைக்கிள் தீவ்ஸ்’. 1948-லிருந்து பல்வேறு திரைப்படங்களுக்கு உத்வேகமாக இருந்துவந்துள்ளது இந்தப் படம்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் பார்த்த ஈரான் திரைப்படத்தின் (‘ஸ்டோரி ஆஃப் மை ஃபாதர்ஸ் பைக் அண்ட் மீ’) தலைப்பைப் பார்த்தவுடன், இதுவும் ‘பைசைக்கிள் தீவ்’ஸைப் போன்ற கதைதான் போலிருக்கிறது என்றே தோன்றியது.
ஈரான் திரைப்படங்களின் பக்கம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த ‘சில்ரன் ஆஃப் தி ஹெவன்’ படத்தையும் சில வகைகளில் இந்தப் படம் நினைவுப்படுத்துகிறது.
அதில் வருவதைப் போன்றதொரு வீடு; துணிகள் காயும் முற்றத்தில் தங்க மீன்கள் நீந்தும் ஒரு சிமெண்ட் தண்ணீர்த் தொட்டி; படத்தின் கிளைமாக்ஸில் போட்டியில் வெல்வதற்காக விரைந்து செல்லும் அண்ணன் - இப்படி சிற்சில ஒற்றுமைகள்.
ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி கூரையிடுக்கில் கசிந்து வரும் சூரிய ஒளிக்கற்றையைப்போல இந்தப் படமும் வெளிச்சக் கீற்றுகளைப் பாய்ச்சுகிறது. ஒரு ஓட்டை சைக்கிள், அதனுடன் அல்லாடும் 13 வயதுச் சிறுவனை வைத்துக்கொண்டு இதைச் சாத்தியப்படுத்தியுள்ளார் படத்தின் இயக்குநர் ஃபயஸ் மொசாவி.
காப்பாற்றும் தையல் வேலை
புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் ஒருவரின் கவிதையை பள்ளி வகுப்பறையில் கதைநாயகனான ஹமீத் சொல்வதுடன் ஆரம்பிக்கிறது படம். அவனுக்கு அப்பா கிடையாது. துணிகளைத் தைத்துக் கொடுப்பதன் மூலம் அவனுடைய அம்மா ஈட்டும் வருமானத்தை வைத்துத்தான் தங்கையையும் சேர்த்த குடும்பத்தின் வண்டி நகர வேண்டும்.
கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகத்தில் அவனுடைய அம்மா வீட்டில் வைத்துத் தைத்துக் கொடுக்கும் துணிகளுக்கான ஹெம்மிங் பணிகளை வெளியே ஓரிடத்தில் முடித்து, குறிப்பிட்ட நேரத்தில் கடையில் கொண்டுபோய்ச் சேர்ப்பது ஹமீதின் வேலை. ஹெம்மிங் பணிகளைச் செய்வதற்கான நவீன தையல் இயந்திரம் அவன் வீட்டில் இல்லை. அந்த வேலையை முடித்துக் கொடுக்கவில்லை என்றால் கடைக்காரர்கள் தைக்கக் கொடுக்க மாட்டார்கள். துணி தைக்கும் வேலையும் இல்லையென்றால், வீட்டில் அடுப்பெரியாது.
பள்ளி செல்ல, துணியை வெளியில் ஹெம்மிங் செய்யக் கொடுக்க, கடைக்குக் கொண்டுசெல்ல என்று எந்த வேலையானாலும் வெளியே செல்ல அவனிடம் இருக்கும் ஒரே வாகனம் அவன் அப்பாவின் பழைய சைக்கிள். கிட்டத்தட்ட எல்லா பாகங்களும் பழுதடைந்து தடதடத்து ஓடும் ‘பேரீச்சம் பழத்துக்கான வண்டி’ அது. எதற்கும் லாயக்கில்லாத அந்த வண்டியை மாற்ற முடியாது. புதிது வாங்கக் காசு வேண்டுமே.
சைக்கிள் பரிசு
அந்த ஓட்டை சைக்கிளால் தினமும் பள்ளிக்குத் தாமதமாகவே செல்கிறான் ஹமீத். ஆசிரியர்கள் திட்டுகிறார்கள்; சக மாணவர்கள் கேலி செய்கிறார்கள். அதனால் வகுப்பு மாணவர்களுடன் அவன் சண்டை பிடிக்கிறான். பல நேரம் வேலைகளைக் கவிழ்த்துவிடும் ஓட்டை சைக்கிள் ஒருபுறம், மாணவர்களின் கேலி மறுபுறம் என அந்த சைக்கிளைக் கண்டாலே அவனுக்கு வெறுப்பு மண்டுகிறது. புது சைக்கிள் வேண்டுமென அம்மாவிடம் அடிக்கடி அலுத்துக்கொள்கிறான்.
இறந்துபோன அவனுடைய அப்பா ஒரு நெசவாளி, அவர் உருவாக்க ஆரம்பித்து நிறைவடையாத ஓர் அரிய டிசைனை விற்றால், நல்ல காசு கிடைக்கும். அதன் மூலம் புதிய சைக்கிள் வாங்கலாம். ஆனால், அந்த டிசைனை விற்க அவனுடைய அம்மா ஒப்புக்கொள்வதில்லை. என்றாவது ஒரு நாள் அந்த அரிய டிசைனுக்குப் பெரிய பணம் கிடைக்கும், அதுவரை பொறுத்திருப்போம் என்ற கனவுடன் அவர் இருக்கிறார்.
இதற்கிடையில் அவனுடைய ஓட்டை சைக்கிளுக்கு விடிவு கிடைப்பதுபோல, கல்வித் துறை அமைச்சகம் ஒரு சைக்கிள் பந்தயத்தை அறிவிக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான அந்தப் போட்டியில் ஜெயித்தால் புது சைக்கிள் பரிசாகக் கிடைக்கும். ஆனால், போட்டியில் எந்த சைக்கிளை வைத்துக்கொண்டு பங்கேற்பது?
சைக்கிள் தேடல்
நண்பனின் புது சைக்கிளை இரவல் வாங்கிக்கொண்டு பயிற்சி செய்யச் செல்கிறான் ஹமீத். ஆனால், புது சைக்கிளை ஹமீதுக்குக் கொடுக்க நண்பனின் அப்பா ஒப்புக்கொள்வதில்லை. அதனால் நண்பனையும் கூடவே அழைத்துக்கொண்டு சைக்கிளை எடுத்துச் செல்கிறான். இடையிலேயே அந்த சைக்கிள் காணாமல் போய், முதலுக்கு மோசமாக முடிந்துவிடுகிறது. அவர்கள் பயிற்சி செய்யச் சென்ற ஊரில் சைக்கிள் திருடுபோவதற்கு வாய்ப்பே இல்லை; திருடப்பட்ட சைக்கிளை விற்கும் கள்ளச்சந்தையே அங்கே கிடையாது என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.
சிறுவனின் உருமாற்றம்
கடைசியாக ஹமீத் ஓர் உபாயம் செய்கிறான், அவனுடைய அப்பாவின் பழைய முதலாளியிடம் செல்கிறான். ஒரு சைக்கிளுக்கான பணத்தைக் கடனாகத் தருமாறு கேட்டு, புதிய சைக்கிளை வாங்கச் செல்கிறான். ஆனால், பெரியவர்கள் வராமல் சைக்கிள் தர முடியாது என்று கடைக்காரர் சொல்கிறார். இந்த இடைவெளியில் ஹமீதிடம் பணத்தைக் கொடுத்துவிட்டதால், அதைச் சொல்லி அவனுடைய அப்பாவின் நிறைவடையாத நெசவு டிசைனைப் பெறுவதற்கு வீட்டுக்கு வந்து செல்கிறார் அந்த முதலாளி. தங்கை மூலமாக இது ஹமீதுக்குத் தெரியவருகிறது.
இதற்கிடையில் சைக்கிள் தொலைந்துபோன அவனுடைய நண்பன் இவன் வீட்டுக்கு வருவதேயில்லை. முதலாளியிடம் சென்று சைக்கிளுக்காகத் தான் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டு, ‘நான் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு எல்லாம் வராதீர்கள்’ என்று ஒரு பெரிய மனிதனுக்கான கம்பீரத்துடன் அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டு ஹமீத் வெளியேறுகிறான். அவனுடைய குடும்பத்துக்குப் புதிய அப்பா கிடைத்துவிட்டதை இந்தக் காட்சி நமக்குக் கடத்துகிறது.
இறுதி தருணங்கள்
சைக்கிள் போட்டி நடக்கும் நாளும் வந்தேவிடுகிறது. சைக்கிள் தொலைந்துபோன நண்பனும் கிடைத்த சைக்கிளுடன் போட்டி நடக்கும் இடத்துக்குப் போகிறான். சில குழப்பங்களால் தன் பழைய சைக்கிளுடனே போட்டியில் பங்கேற்கிறான் ஹமீத். எப்போதும் அவனைக் கழுத்தறுத்த அந்த ஓட்டை சைக்கிள் அன்று அவனுக்கு என்ன தந்தது? அவன் தோற்றானா, ஜெயித்தானா? அவ்வளவு காலமும் ஓட்டை சைக்கிளுக்காக அவனைக் கேலி செய்து, போட்டியிலும் முந்திவந்த சக வகுப்பு மாணவன் என்னவானான்?
இந்த கேள்விகள் அனைத்துக்கும் ஒரே பதிலால் வாயடைக்க வைக்கிறது கிளைமேக்ஸ். அதற்குப் பிறகும், ஓ.ஹென்றியின் புகழ்பெற்ற ‘தி கிஃப்ட் ஆஃப் மேகி’ கதையில் வருவதைப் போன்றதொரு, அழகான தருணமும் படத்தில் உண்டு.
மிகைப்படுத்தலுக்கும் சினிமாத் தனங்களுக்கும் நேர்மாறாக மனிதர்கள் இடையேயான உணர்வுப் பரிமாற்றங்கள், உறவுப் பிடிப்புகளுக்காக அறியப்பட்டவையாக இருக்கின்றன ஈரான் படங்கள். இந்தப் படமும் அந்த ஆதாரத்தின் மேலேதான் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்தக் கதை ஈரானில் நடப்பதாக இருந்தாலும், நம்மூர் குடிசைப் பகுதிகளில் அன்றாடம் நிகழும் கதைதான். நம்மூர் ஓட்டை சைக்கிள்களின் கதை திரைப்படமாகவில்லை என்பதுதான் வேறுபாடு. இயக்குநர் ஃபயஸ் மொசாவி பரவலாக அறியப்பட்ட ஒருவராகத் தெரியவில்லை. எனினும், இந்த ஒரு படம் போதும், அவருடைய பெயரைச் சொல்வதற்கு.
ஃபயஸ் மொசாவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT