Published : 22 Apr 2016 12:20 PM
Last Updated : 22 Apr 2016 12:20 PM
மனீஷ் ஷர்மா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘ஃபேன்’ திரைப்படம் வழக்கமான ஷாருக் கான் படமாக இல்லை. இந்த விஷயம், ரசிகர்கள், பாலிவுட் திரைப்பட விமர்சகர்கள் ஆகிய இரு தரப்பையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷாருக் கான் படத்தை ரசிக்கவைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே, ‘ரா ஒன்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘ஹேப்பி நியூ இயர்’, ‘தில்வாலே’என பொழுதுபோக்குப் படங்கள் மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்தார் ஷாருக். இதில், சில படங்கள் ஷாருக்கின் ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தையும் அளித்திருந்தன. அத்துடன், இந்தப் படங்களில் எல்லாம் ‘ஷாருக்’ என்ற நடிகர் மொத்தமாகத் தொலைந்துபோயிருந்தார். அந்தத் தொலைந்துபோன நடிகரை, ‘ஃபேன்’ படத்தின் மூலமாக மீட்டெடுத்திருக்கிறார் இயக்குநர் மனீஷ் ஷர்மா.
ஒரு தீவிர ரசிகனுக்கும் முன்னணி நடிகனுக்குமான உறவின் இன்னொரு பக்கத்தைப் பதிவுசெய்கிறது ‘ஃபேன்’. டெல்லியில் சைபர் கஃபே நடத்தும் கவுரவ் சாந்தனா (ஷாருக்), பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆர்யன் கன்னாவின் (ஷாருக்) தீவிரமான ரசிகன். ஆர்யனைப் போலவே மிமிக்ரி செய்து உள்ளூரில் நடக்கும் போட்டியில் ‘சிறந்த நடிகர்’ டிராஃபியை வெல்கிறான் கவுரவ். அதைத் தன் ஹீரோவிடம் காண்பிக்க வேண்டும் என்ற கனவில் மும்பைக்கு வருகிறான். நினைத்த மாதிரியே தன் ஹீரோவை சந்திக்கவும் செய்கிறான்.
ஆனால், அந்தச் சந்திப்பு அவன் எதிர்பார்க்காத முற்றிலும் மோசமான சூழ்நிலையில் நடக்கிறது. ஆர்யனின் நிஜ வாழ்க்கை பிம்பத்தைப் பார்த்துப் பெரிய ஏமாற்றமடைகிறான். ரசிகர்களிடம் கொஞ்சமாவது நன்றியுணர்வுடன் இருக்குமாறு கேட்கிறான். ஆனால், ஆர்யன் தன் நட்சத்திர அந்தஸ்தை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பெருந்தன்மையுடன் இல்லை. கவுரவ், 15 ஆண்டுகளாகச் செதுக்கிவைத்திருந்த ஆர்யனின் ‘ஹீரோ’ பிம்பம் ஒரே நாளில் உடைந்துபோகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவன், ஆர்யனைப் பழிவாங்கத் திட்டமிடுகிறான். அவன் எப்படிப் பழிவாங்குகிறான், இறுதியில், தவறை உணர்ந்துகொண்டு ஆர்யனால் அதைத் திருத்திக்கொள்ள முடிந்ததா என்பதுதான் ‘ஃபேன்’.
இந்தப் படத்தின் கதையில் பெரிதாக எந்தப் புதுமையும் தனித்துவமும் இல்லை. ஆனால், மனீஷ் ஷர்மாவின் இயக்கத்தாலும், ஹபீப் ஃபைசலின் திரைக்கதையாலும் படம் வசீகரமானதாக மாறியிருக்கிறது. கவுரவ், ஆர்யன் என இரண்டு கதாபாத்திரங்களின் கட்டமைப்பும் முழுமையானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில், பார்வையாளர்களுக்கு யார் சரி, யார் தவறு என்று யோசிக்கக்கூட வாய்ப்பளிக்காமல் நகர்கிறது திரைக்கதை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷாருக் கான் நடிப்பதைப் பார்ப்பது ஆறுதலாக இருந்தது. ஷாருக்கின் ‘டர்’, ‘பாஜிகர்’, ‘கபி ஹான் கபி நா’ நாட்களை இந்தப் படம் கண்முன் கொண்டுவருகிறது. கவுரவ் கதாபாத்திரத்துக்காக ஷாருக் பெரிய அளவில் மெனக்கெட்டிருந்தாலும், இறுதியில் ஆர்யன் கதாபாத்திரத்தின் நடிப்பே மனதில் நிற்கிறது. நட்சத்திர அந்தஸ்தைக் காப்பாற்றப் போராடிக்கொண்டிருக்கும் நடிகனின் பலவீனங்களை ஷாருக் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறார். குறிப்பாக, தன் சுருங்கிய தோலைக் கண்ணாடியில் பார்க்கும் காட்சியைச் சொல்லலாம். இந்தப் படத்தில் பாலிவுட்டின் வழக்கமான ‘ஹீரோ’ பிம்பத்தையெல்லாம் தன் நடிப்பால் உடைத்திருக்கிறார்.
படத்தில் பாடல்கள் இல்லாதது பெரிய பலம். அதேமாதிரி, ஷாருக்கை இருபத்தைந்து வயது கவுரவ் கதாபாத்திரமாக மாற்றிய ‘கவுண்ட்பஞ்ச் ஸ்டியோஸின் விஷுவல் எஃஃபெக்ட்ஸும், ஆஸ்கர் விருது பெற்ற ‘மேக்கப் கலைஞர்’ கிரேக் கான்னோமின் உழைப்பும் திரையில் தெரிகிறது. ஆனால், பின்பாதியின் நீளமான ‘சேஸிங்’ காட்சிகளும் யதார்த்தமின்மையும் நாடகத்தனமான கிளைமேக்ஸும் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அத்துடன், ஷிரியா பில்காவ்ங்கர், வலுஷ்சா டிசௌசா போன்றவர்களுக்குப் படத்தில் எந்த வேலையும் இல்லை.
ஒரு ரசிகனுக்கும் நடிகனுக்குமான உறவின் கறுப்புப் பக்கத்தைத் துணிச்சலுடன் பதிவுசெய்திருப்பதற்காக ‘ஃபேன்’படத்தைப் பாராட்டலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT