Last Updated : 15 Apr, 2016 12:06 PM

 

Published : 15 Apr 2016 12:06 PM
Last Updated : 15 Apr 2016 12:06 PM

வில்லனின் கையில் விவசாயம்..!- இயக்குநர் குரல் சிவசக்தி பேட்டி

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் தம்பியான திலீபன் ‘வத்திக்குச்சி’ படத்தின் மூலம் ஆக்‌ஷன் நாயகனாக அறிமுகமானார். தற்போது மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ‘குத்தூசி’ படத்தின் மூலம் தனது கதாநாயகப் பயணத்தைத் தொடர வந்திருக்கிறார். இவருக்கு ஜோடி புதுமுக நாயகி அமலா. இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளரான சிவசக்திக்கும் இயக்குநராக இது முதல் படம். படம் குறித்து அவரிடம் பேசியதிலிருந்து…

திலீபனது அறிமுகப் படத்தின் தலைப்பு ‘வத்திக்குச்சி’. அந்தத் தலைப்பின் சாயலுடன் ‘குத்தூசி’ தலைப்பும் இருக்கிறதே?

இது எதிர்பாராமல் அமைந்த சாயல்தான். “ என்னடா சதா குத்திகிட்டே இருக்க?” என்று ஒரு விஷயத்தைக் குத்திக் காட்டிச் சொல்லும் நபரைக் குத்தூசி என்று சொல்றது நம்ம மக்களோட வழக்கம். இன்றைக்கு இருக்குற சமூகத்துல மனிதர்கள் இயற்கையை விட்டுத் தள்ளிப் போறதுனால அவங்களுக்கு ஏற்படுற பாதிப்பு பற்றியும் விவசாயத்தை விட்டு விலகிப் போயிட்டதால வரும் ஆபத்து பற்றியும் நச் நச்சுன்னு குத்திக்காட்ற படம்தான் குத்தூசி. சமூகத்துக்குக் கருத்து சொல்லும் படம்தான் என்றாலும் அதை நேரடியாகச் சொல்லாமல் கதாநாயகன் வாழ்கையில நடக்கும் சம்பவங்களின் பின்னணியில் சொல்லக்கூடிய படமாக யதார்த்தம் மிஸ் ஆகாமல் சொல்லியிருக்கிறோம். குத்தூசி தலைப்புக்குப் பின்னாடி இருக்கிற காரணம் இதுதான்.

படத்தோட கதைய இன்னும் கொஞ்சம் விரிவா சொல்ல முடியுமா?

இது பக்கா கமர்ஷியல் படம். அதேநேரம் சமுதாயத்துக்கான கருத்தும் உண்டு. கதைய முழுசா சொல்லிட்டா சுவாரஸ்யம் போயிடும். கதைய ஒரே வரியில சொல்லனும்னா விவசாயத்தைப் பற்றி எல்லாம் தெரிஞ்சவன் வில்லன்; எதுவுமே தெரியாதவன்தான் கதாநாயகன். ஒரு கெட்டவன் கிட்ட விவசாயத்தைக் கட்டுப்படுத்துற அதிகாரம் கிடைக்கும்போது அதோட விளைவு சமுதாயத்துல எப்படி இருக்கும் என்பதையும் அதேபோல விவசாயத்தோட அருமை பத்தி நல்லவனுக்குக் கொஞ்ச கொஞ்சமா தெரியவரும்போது அவனுக்கும் வில்லனுக்கும் நடுவுல ஏற்படுற போராட்டமும்தான் குத்தூசியின் கதை. இது கற்பனையில்ல. இன்னைக்கு நடைமுறை. ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்குப் படத்துக்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் உள்ள வச்சுத்தான் இந்த வில்லன், ஹீரோ மோதலை நாம சுவாரஸ்யப்படுத்த வேண்டியிருக்கு.

திலீபனை எதுக்காக இந்தப் படத்துக்கு நாயகனா தேர்வு செஞ்சீங்க?

நம்ப ஊரு பையன் மாதிரி தெரியணும். ஆளும் விவசாயி மாதிரி வாட்டசாட்டமாக இருக்கனும். கதையை எழுதி முடிச்சதுமே யார் சரியா இருப்பான்னு யோசிச்சப்போ ‘வத்திக்குச்சி’ திலீபன் பளிச்சுன்னு என்னோட மனத்திரையில வந்து நின்னார். அந்த நிமிஷமே வேற சாய்ஸ் பத்தி நான் யோசிக்கல. திலீபனும் கதையைக் கேட்டுட்டுத்தான் நடிக்கிறார்.

கதாநாயகியை கேரளாவில் இருந்து அழைச்சிட்டு வந்திருக்கோம். பேர் அமலா. இவர் நடிப்பை முறையாப் படிச்சுட்டு நடிக்க வந்திருக்கார். இந்தப் படத்தில் காமெடி ஆக்டராக யோகிபாபு நடிச்சிருக்கிறார். கதைய மீறி வெளிய போகாத காமெடி. இந்த மூணுபேரைவிட முக்கியமான ஆளு வில்லன். இத்தாலியில் இருந்து புதுமுக வில்லனை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இது மிகவும் வலுவான கதாபாத்திரம். இவர் ஒரு குத்துச்சண்டை வீரர். ஆடுகளம் ஜெயபாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கார். அந்தக் கதாபாத்திரம் சமூகமே தூக்கிக் கொண்டாடக்கூடிய கதாபாத்திரமாக இருக்கும் என நம்புகிறேன்.

நம்மாழ்வாரைப் பிரதிபலிக்கிற கதாபாத்திரமா?

அது மட்டும் சஸ்பென்ஸா இருக்கட்டுமே..

படப்பிடிப்பு எங்க நடந்தது? கொஞ்சம் ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் சொல்லுங்க...

மொத்தம் 54 நாட்கள் நடந்தது. சென்னை, கள்ளக்குறிச்சி, கள்வராயன் மலைப்பகுதியில படமாக்கினோம். வேலை பார்த்த எல்லாரும் மனமார அவங்க அவங்க வேலையைப் பார்த்ததால படம் ரொம்பவே அற்புதமா வந்துருக்கு. ரிலீஸுக்கு பிறகு மக்கள், விமர்சகர்கள் பாராட்டக்கூடிய படமா இருக்கும். அதுதான் எங்க டீமுக்குக் கிடைக்கப்போற நல்ல அனுபவமா எதிர்பார்த்துட்டு இருக்கோம். மத்தபடி ஸ்பாட்ல ஒரு குடும்பம் மாதிரி, கிராம மக்களோட மக்களா 50 நாட்கள் வாழ்துட்டு வந்தோம்.

உங்கள் குருநாதர் சீனுராமசாமியிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள்? அதை இந்தப் படத்தில் எதிர்பார்க்கலாமா?

அவருகிட்ட கத்துக்கிட்ட விஷயம்னா, ஒவ்வொரு சீனையும் உணர்ந்து பண்ணுவார். அவரோட படத்துல யதார்த்தம், கவித்துவம் இரண்டுமே இருக்கும். எந்தக் கதையை எடுத்துக்கிட்டாலும் அழகியல் இருக்கும். அந்த அழகியலை அவரிடமிருந்து எடுத்துக்கொண்டு வந்துட்டேன். மறைமுகமா கருத்து சொல்ற கமர்ஷியல் படங்களை ரசனையான அழகியலோட உருவாக்கணும்னு நினைக்கிறேன். என்னுடைய சினிமா நான் உணர்ந்த பார்த்த விஷயங்களிலிருந்து உருவாகணும்ன்னு விரும்புறேன். அதுல கற்பனை இருக்கும். ஆனா எல்லாமே கற்பனையா இருக்காது. எல்லாம் கற்பனையா இருந்தா அதுல வாழ்க்கை இருக்காது.

இசைக்குக் கண்டிப்பா இந்தக் கதையில் இடமிருக்கும்; ஆனா சண்டைக் காட்சிகளுக்கு வாய்ப்பிருக்கா?

படத்துல மொத்தம் நான்கு பாடல்கள். ஒவ்வொரு பாடலும் அற்புதமா வந்துருக்கு. கவிஞர் அண்ணாமலை பாடல் எழுதியிருக்கிறார் கண்ணன் இசையமைத்திருக்கிறார். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி இது கமர்ஷியல் படம். அதனால ஹீரோவுக்கு ஒரு வித்தியாசமான அறிமுகப் பாடலை ட்ரை பண்ணியிருக்கோம். இளம் ரசிகர்களுக்காக இதமான காதல் பாடலும் படத்துல இருக்கு. படத்தில மையப் பாடல் ‘உலகமே போற்றும் உலகை நீ போற்று’. இந்தப் பாடலைக் கேட்டாலே எல்லாரும் இயற்கையை நேசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. வெளிநாட்டுலேர்ந்து வில்லனைக் கூட்டியாந்துட்டு ஆக்‌ஷன் இல்லேன்னா எப்படி? சண்டைக் காட்சிகளுக்கும் அதிகமாவே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கு. படத்தில் மொத்தம் மூன்று சண்டைக் காட்சிகள். எதுவும் திணிப்பா இருக்காது.

இந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?

எந்த நிலையில இருந்தாலும் ஒவ்வொருவரும் விவசாயம் செய்ய முன்வரணும். பாரதி சொன்ன மாதிரி காணி நிலமாவது விவசாயம் செய்யன்னு நாம வாங்கணும். அதுல பாரம்பரிய விவசாயம் செய்யணும் அப்படிச் செய்தால் இந்த உலகம் நோய் நொடி இல்லாமல் வாழும். அதற்கு படித்த இளைஞர்கள் முன்வரணும். படிக்காதவன் மட்டுமே விவசாயம் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி படித்தவர்களும் விவசாயம் செய்யதால் அனைவரும் ஆரோகியமாகவும் நல்ல சமூதாயத்தை உருவாக்க முடியும். இதை நாங்க எப்படிச் சொல்லியிருக்கிறோம்னு படம் பார்த்துட்டு மக்கள் சொல்லணும்ன்னு விரும்புறோம்.

சிவசக்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x