Published : 15 Apr 2016 12:21 PM
Last Updated : 15 Apr 2016 12:21 PM
சென்னையில் உள்ள பாஃப்டா (BOFTA) திரைப்படக் கல்லூரியில் மாதந்தோறும் ஒரு திரைப்பட வல்லுநர் மாணவர்களோடு கலந்துரையாடுவது வழக்கம். அவ்வாறு மாணவர்களோடு கலந்துரையாடச் சென்னை வந்திருந்தார் 'நான் ஈ', 'பாகுபலி' உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத். இவர் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநர் ராஜமெளலியின் தந்தை. அவருடன் உரையாடியதிலிருந்து…
நீங்கள் எழுதிய 'பாகுபலி' படத்திற்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. எப்படி உணர்கிறீர்கள்?
‘பாகுபலி' படத்தைப் பொறுத்தவரை எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால் இது மாநில, தேச மொழி எல்லைகளைக் கடந்திருக்கிறது. இதனால் பல இந்தியப் படங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும். அக்கதையை நான் எழுதும்போது வெற்றி பெறும் எனத் தெரியும். ஆனால், உலக அளவில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. நான் என்னவெல்லாம் நினைத்து எழுதினேனோ அதைவிட மேலாக ராஜமெளலி மிகப் பிரமாதமாகப் பண்ணியிருந்தார்.
பாகுபலி கதை எப்படி உருவானது?
பிரபாஸ் நாயகனாக நடிக்கிறார், நான் இயக்குகிறேன், ஒரு சரித்திரக் கதை எனக் கேட்டார் ராஜமெளலி. அப்போது குழந்தையைத் தூக்கிக் கொண்டு தண்ணீரில் வரும் தாய் உள்ளிட்ட 3 காட்சிகளைச் சொன்னேன். நன்றாக இருக்கிறது என்றார். முழுக்கதையாகத் தயார் பண்ணிக் கொடுத்தேன். கதை எழுதும் போதே 2 பாகங்களாகத் தான் எழுதினேன். அடுத்த பாகங்கள் எல்லாம் வாய்ப்பில்லை.
நீங்கள் எழுதிய ‘பஜிரங்கி பாய்ஜான்' படத்துக்குச் சிறந்த கதைக்கான தேசிய விருது கிடைத்திருப்பது பற்றி..
சந்தோஷமாக இருக்கிறது. ‘பஜிரங்கி பைஜான்' கதை ‘பூவிழி வாசலிலே' படத்தின் கதைக்களம்தான். ஒரு நல்ல மனிதன், ஒரு வாய் பேச முடியாத பையன் இருவருக்குள் நடக்கும் கதைதான் அது. இதை வைத்து நாம் ஏன் ஒரு கதை பண்ணக் கூடாது எனத் தோன்றியது. திரைக்கதை எழுதும்போது என்னுடைய உதவியாளர், இந்தியா - பாகிஸ்தானை வைத்து எழுதலாம் என்றார். நல்ல ஐடியாவாக இருக்கிறதே என்று எழுதினேன். ஒரு கட்டத்தில் சண்டைக் காட்சிகள் எல்லாம் வைத்து எழுதியது ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.
5 வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பாகிஸ்தான் குடும்பத்தின் பேட்டி ஒன்றைப் பார்த்தேன். தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துவிட்டு பணம் வாங்க மறுத்துவிட்டார்கள், இந்தியர்கள் மிகவும் நல்லவர்கள் எனப் பேசினார்கள். அப்போது இக்கதையை மனிதாபிமானத்தை வைத்து ஏன் எழுதக் கூடாது எனத் தோன்றியது. கதையை சண்டைக் காட்சிகள் எல்லாம் இல்லாமல் எழுதினேன். கேரளாவுக்குப் போனபோது இயக்குநர் பாசில் என்னிடம், 'பஜிரங்கி பாய்ஜான்' அற்புதமாக இருந்தது என்றார். அது உங்களுடைய ‘பூவிழி வாசலிலே'தான் என்றேன். சிரித்தார்.
சல்மான் கானிடம் கதையைக் கூறியவுடன் என்ன சொன்னார்?
எனக்குக் கதை சொல்லத் தெரியாது. முதலில் ஆமீர் கானிடம்தான் சொன்னேன். அந்தப் பாத்திரம் எனக்குச் சரியாக இருக்காது என்று கூறிவிட்டார். சல்மான் கானிடம் 10 நிமிடங்களில் முழுக்கதையைச் சொன்னவுடன் ஒப்புக்கொண்டார். அடுத்ததாக நிறைய தயாரிப்பாளர்கள் வந்து கதை என்ன விலை எனக் கேட்டார்கள். 2 கோடி என்றவுடன் மலைத்தார்கள். ஆனால், நான் என் கதையின் மீது இருந்த நம்பிக்கையால் 2 கோடி என்றேன். இறுதியில் 2கோடி கொடுத்துத்தான் அக்கதையை வாங்கிப் படமாக்கினார்கள்.
சல்மான் கான் நடிப்பது உறுதியான உடன் கதையில் 2 சண்டைக் காட்சிகள் வைக்கலாம் சார் என்றேன். சண்டைக் காட்சிகள் எல்லாம் வைத்தால் நன்றாக இருக்காது, இப்படியே இருக்கட்டும் என்றார் சல்மான். அது இக்கதையின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டியது.
சமூக வலைத் தளங்களின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சமூக வலைத் தளங்களின் தாக்கத்தினால் திரையுலகம் தற்போது வளர்ந்திருக்கிறது. ‘பாகுபலி' படம் வெளியாவதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் விளம்பரமே கொடுத்தோம். அது வரை ராஜமெளலி சமூக வலை தளங்கள் மூலமாக மட்டுமே விளம்பரப்படுத்தினார். மக்கள் அதிகமாகப் பேச ஆரம்பித்ததால் தொலைக்காட்சி நிறுவனங்கள் ‘பாகுபலி' பற்றிய செய்திகளை ஒளிபரப்ப ஆரம்பித்தன.
முன்பு எல்லாம் தமிழ் சினிமா ரசிகர்கள், தமிழ் சினிமா மட்டும்தான் பார்த்தார்கள். இன்று அப்படியில்லை. எல்லோருமே அனைத்து மொழிப் படங்களையும் பார்க்கிறோம். வெவ்வேறு மொழிப் படங்களை ரசிகர்கள் பார்ப்பதால், நான் கதை எழுதும்போது இத்தகைய ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்றே எழுதத் தோன்றுகிறது.
சரித்திர நாவல்களைப் படமாக்கும் முயற்சியில் தற்போதுள்ள இயக்குநர்கள் ஈடுபடுவதில்லையே..
‘பொன்னியின் செல்வன்', ‘மகாபாரதம்' போன்ற கதைகளை ஏன் படமாக்கவில்லை என்பதை நீங்கள் இயக்குநர்களிடம்தான் கேட்க வேண்டும். நம்முடைய சரித்திரங்களை வரும் சந்ததியினருக்குச் சொல்ல வேண்டும். அது மிகவும் முக்கியம். ‘மகாபாரதம்' கதையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதை 3 முதல் 4 பாகங்களாக எடுக்கலாம்.
தற்போது பாரதிராஜா சார் ‘குற்றப் பரம்பரை' என்னும் படத்தை, ஒரு சரித்திர நிகழ்வை மையப்படுத்தி எடுக்கிறார் என்றார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
ஷங்கரோடு ராஜமெளலியை ஒப்பிடுகிறார்கள். ராஜமெளலி ஷங்கரை மிஞ்சிவிட்டார் என்றும் சொல்கிறார்களே..
ஷங்கர் சார்தான் ராஜமெளலிக்கு உத்வேகம் அளித்தவர். எப்போதுமே அவரை மாதிரி பண்ண வேண்டும் என்று சொல்லுவார். எப்படி நீங்கள் குருவோடு சிஷ்யரை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? குரு எப்போதுமே குருதான். சிஷ்யன் எப்போதுமே சிஷ்யன்தான். ஷங்கரை ராஜமெளலி மிஞ்சிவிட்டார் என்று சொல்லுவது தவறு.
தமிழ்ப் படங்களைப் பார்க்கிறீர்களா? அவற்றைப் பற்றி உங்களுடைய கருத்து..
புதிதாக வரும் தமிழ் சினிமா இயக்குநர்களின் கதைக்களம் என்னை வியக்க வைக்கிறது. குறிப்பாக ‘பீட்சா', ‘காக்கா முட்டை', ‘கோலி சோடா' உள்ளிட்ட படங்களை எல்லாம் வியந்திருக்கிறேன். இந்த மாதிரி கதை எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் படங்கள் என்னை அந்த அளவுக்கு ஈர்க்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT