Published : 18 Mar 2022 07:58 AM
Last Updated : 18 Mar 2022 07:58 AM

கோலிவுட் ஜங்ஷன் | ரோபாட் வெளியிட்ட ட்ரைலர்!

கமல் நடித்த ‘தெனாலி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆனவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தயாரித்துள்ள படம் ‘கூகுள் குட்டப்பா’. மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’ படத்தின் மறுஆக்கம். இதில் கே.எஸ். ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரமாக ரோபாட் ஒன்றும் நடித்துள்ளது. ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு இசை ஜிப்ரான். படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி, ஆர் வி உதயகுமார், பேரரசு, தங்கர் பச்சான், தயாரிப்பாளர் டி சிவா உள்பட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். ட்ரைலரை, தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் சமீபத்தில் வெற்றிவாகை சூடியிருந்த விக்ரமன், ஆர்கே செல்வமணி, ஆர் வி. உதயகுமார் பேரரசு ஆகியோர் வெளியிட, படத்தில் இடம்பெற்றிருக்கும் ரோபாட் மேடையில் தோன்றி பெற்றுக்கொண்டது.

பரத்தின் 50-வது படம்!

கடந்த ஆண்டு பரத் நடிப்பில் வெளியான ‘நடுவன்’, ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. தற்போது மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்துவரும் பரத்தின் 50-வது தமிழ்ப் படம் சென்னையில் பூஜையுடன் நேற்று தொடங்கியது. கலைப்புலி தாணு கலந்துகொண்டு படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். ஆர்.பி.பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் மூலம், ‘லூசிஃபர்’, ‘மரைக்காயர்’, ‘குருப்’ உள்பட பல மொழிமாற்றுப் படங்களுக்குத் தமிழில் உரையாடல் எழுதிய ஆர்.பி.பாலா இயக்குநராக அறிமுகமாகிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, மோகன்லாலின் ‘மரைக்காயர்’ பட இசையமைப்பாளர் ரான்னி ரபேல் இசையமைக்கிறார். விவேக் பிரசன்னா, டேனி உட்பட பலர் நடிக்கும் இப்படத்தில் பரத்துக்கு ஜோடி வாணி போஜன்.

ஐஸ்வர்யாவின் ஆல்பம்!

‘3’, ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு ‘சினிமா வீரன்’ என்கிற ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அது திரைப்படச் சண்டைப் பயிற்சிக் கலைஞர்களைப் பற்றியது. தற்போது தனியிசை ஆல்பம் ஒன்றை இயக்கி வெளியிட்டிருக்கிறார். அது இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியிருக்கிறது. இதற்கிடையில் ராகவா லாரன்ஸை அவர் சந்தித்துள்ளது பற்றி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் 'சுவாரஸ்யமான படைப்பு ஒன்று உருவாகிறது. வேலையைத் தொடங்கிவிட்டேன். எப்போழுது வேண்டுமானலும் அது பற்றி அறிவிப்பேன்’ என்று தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் நேற்று ‘பயணி’ என்கிற தலைப்பில் வெளியாகியிருக்கும் தமிழ் பதிப்பின் இசைக் காணொலியை, தனுஷ் வாழ்த்திப் பதிவிட்டிருக்கிறார்.

விஜித் பச்சான் அறிமுகம்!

தங்கர் பச்சான் இயக்கத்தில் அவருடைய மகன் விஜித் பச்சான் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்'. அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், முன்னணி மற்றும் மூத்த இயக்குநர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. விழாவில் தங்கர் பச்சான் பேசும்போது ” எத்தனையோ பேரை வளர்த்தெடுத்த தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி 412 ஏக்கரில் பரந்து விரிந்திருந்தது. இன்று 12 ஏக்கராக சுருங்கிவிட்டது வருத்தமளிக்கிறது. டக்கு முக்கு டிக்கு தாளம் என்பது மாறிக் கொண்டே இருக்கும். அதுதான் இப்படம். ஒருவனிடம் பணம் நிறைய இருக்கிறது. ஆனால், அவனிடம் நிம்மதி இல்லை. இன்னொருவன் கையில் பணம் இல்லை. ஆனால் அவனிடம் கொண்டாட்டம் இருக்கிறது. அவர்கள் என்னவாகிறார்கள் என்பதே இப்படத்தின் ஒருவரி கதை. தரண் இசையமைத்திருக்கிறார். என் மகன் விஜித், என்னுடைய இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். அவருக்குப் பல பயிற்சிகளை அளித்து நடிகனாக்கியிருக்கிறேன். இது உழைப்பில் மட்டுமே வந்த பணத்தை வைத்து எடுத்த படம். என் மகனை வளர்த்தது என் மனைவி தான். அவருக்கு நன்றி” என்றார்.

கதாநாயகனுக்குக் கண்டனம்!

பெண் எழுத்தாளர் சந்திரா இயக்கத்தில் இயக்குநர் கரு. பழனியப்பன் நாயகனாக நடித்துள்ள படம் ‘கள்ளன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் ராஜுமுருகன், சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ராஜுமுருகன் பேசும்போது, ” தயாரிப்பாளர் இதை சிறிய படம் என்று சொன்னார். வெளியான பிறகு இது பெரிய படமாக மாறும். சினிமா மீது சந்திராவுக்கு பெரிய கனவு உள்ளது. பெண் இயக்குநர்களைப் பொது புத்தியில் இருந்துப் பார்க்கிறார்கள். பெரியார், அம்பேத்கர் வந்தாலும் இன்றும் அந்த பார்வை இருக்கிறது. இதைப் படைப்புதான் மாற்றும்” எனத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, “இந்தப் படத்தின் கதாநாயகன் இயக்குநர் கரு.பழனியப்பன் விழாவுக்கு வந்திருக்கலாம். இயக்குநருடன் முரண்பாடுகள், பிரச்சினை இருந்தாலும் வந்திருக்க வேண்டும். படம் தொடங்கியபோது அவர் அரசியலில் இல்லை. இப்போது பெரிய கட்சியில் இருக்கிறார். உதயநிதியைக் கூப்பிட்டிருக்கலாம். அப்போது கரு.பழனியப்பன் வந்திருப்பார்.” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x