Published : 15 Apr 2016 12:44 PM
Last Updated : 15 Apr 2016 12:44 PM
அரை நூற்றாண்டுக்குப் பிறகு, மீண்டும் ருட்யார்ட் கிப்ளிங்கின் ‘தி ஜங்கிள் புக்’ கதைத் தொகுப்பைத் திரைக்குக் கொண்டுவந்திருக்கிறது டிஸ்னி. இந்த முறை, இன்னும் பிரம்மாண்டமான சாகசங்களோடும், காட்சியியல் அதிசயங்களோடும், எல்லைகளற்ற அன்பின் கவித்துவமான பிரதிபலிப்புகளோடும் இப்படம் வெளிவந்திருக்கிறது. மத்திய இந்தியாவைப் பின்னணியாகக் கொண்ட கதை என்பதால், அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே இந்தப் படம் இந்தியாவில் வெளியாகிவிட்டது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் லாஸ் ஏஞ்சலீஸில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் 90-களில் பிறந்த, வளர்ந்த குழந்தைகள் அனைவரும் டிஸ்னியின் இந்தப் புதிய ‘தி ஜங்கிள் புக்’ பதிப்பு வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள். காரணம், தூர்தர்ஷனில் 1993-ல் வெளியான ‘ஜங்கிள் புக்’ சீரியல். படம் வெளியாகி நான்கு நாட்களுக்குப் பிறகும், பேஸ்புக்கில் ‘தி ஜங்கிள் புக்’ டிரண்டிங் ஆகிக்கொண்டிருப்பதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ள முடியும். இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லாத் தரப்பினருடைய எதிர்பார்ப்புகளையும் தாண்டிய, ஆச்சரியமான, மறக்க முடியாத திரை அனுபவம் ‘ஜங்கிள் புக்’.
இயக்குநர் ஜோன் ஃபவ்ரே, திரைக்கதை எழுத்தாளர் ஜஸ்டின் மார்க்ஸ் இருவருமே உலகம் முழுவதும் இருக்கும் ‘ஐங்கிள் புக்’ ரசிகர்களின் கற்பனைக்குத் திரையில் உயிர்கொடுத்திருக்கிறார்கள். கிப்ளிங் ‘மோக்லி’ கதாபாத்திரத்தை உருவாக்கி 121 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்றளவும் இந்தக் கதாபாத்திரத்துக்குத் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
‘மோக்லி’ (நீல் சேத்) காட்டில் ஓநாய் கூட்டத்தால் வளர்க்கப்படும் சிறுவன். அவனுடைய குடும்பத்தில் தந்தை அகேளாவும் (ஜியான்கார்லோ எஸ்போசிட்டோ), ரக்ஷாவும் (லுப்பிட்டா) காட்டின் விதிகள் தெரிந்த ஓநாயாக அவனைப் பாசத்துடன் வளர்க்கிறார்கள். அவனுடைய வழிகாட்டியாகவும் தோழனாகவும் கருஞ்சிறுத்தை பகீரா (பென் கிங்ஸ்லி). இவர்களுடைய அழகான காட்டு வாழ்க்கையை விளக்கும் காட்சிகளுடன் படம் தொடங்குகிறது. ஆனால், குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குலைக்கும் விதத்தில் புலி ஷேர் கான் (இட்ரிஸ் எல்பா) அவர்களுடைய வாழ்க்கையில் நுழைகிறது. மனிதர்களுக்குக் காட்டில் இருக்க அனுமதி இல்லை என்ற காட்டின் விதியை நினைவூட்டி மோக்லியை அழிக்க நினைக்கிறது.
படத்தில் ஷேர் கானின் அறிமுகக் காட்சி மிகவும் முக்கியமானது. அது மட்டுமல்லாமல் ஷேர் கான் வரும் காட்சிகள் அனைத்துமே திகிலுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஷேர் கான், ஒரு கதாபாத்திரத்தை வேட்டையாடும் காட்சியைச் சொல்லலாம். இந்தக் காட்சி பயமேற்படுத்தும்படி வலிமையுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. இட்ரிஸ் எல்பாவின் குரலும், ஷேர் கானின் ‘சிஜிஐ’யும் (கணினியில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்) இந்தத் திரை மிரட்சிக்குக் காரணம். ‘லைஃப் ஆஃப் பை’ புலியைவிட ‘ஷேர் கான்’ தரத்தில் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.
ஷேர் கானைப் போலவே, திரையில் திகிலை உருவாக்கும் இன்னொரு கதாபாத்திரம் மலைப்பாம்பு கா (ஸ்கேர்லெட் ஜோஹான்சன்). மோக்லிக்குக் கதை சொல்லி இறுக்கும் காட்சியும் துல்லியமான நுட்பங்களுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. மோக்லியைக் காவிடம் இருந்து காப்பாற்றுகிறது கரடி பாலு (பில் முர்ரே). இருவரும் நல்ல நண்பர்களாகிவிடுகிறார்கள். பாலுவும், மோக்லியும் ஆற்றில் பாடும் ‘பேர் நெசஸிட்டிஸ்’ (Bare Necessasities) பாடல் படமாக்கம் கவித்துவம். ஷேர் கானிடமிருந்து மோக்லியைக் காப்பாற்றும் திட்டத்தில் பகீராவுடன் பாலுவும் இணைகிறது. மோக்லியை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்ற பகுதியுடன் படம் முடிவடைகிறது.
படத்தில் ஜைகாண்ட்டோப் பித்திக்கஸ் (கதையில் வரும் ஒராங்குட்டானைவிட பத்து மடங்கு பெரியது) அரசன் லூயி (கிறிஸ்டோபர் வாக்கன்) கதாபாத்திரமும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் பெரிய பலமாகக் குரல் தேர்வைச் சொல்லலாம். படத்தில் நீல் சேதியைத் தவிர மனிதர்களே இல்லை. ஆனால், படத்தில் வரும் எல்லா விலங்குகளும் நம்மிடையே இரண்டு மணிநேரம் வாழ்வதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதற்குக் காரணம் விலங்குகளுக்குக் குரல் கொடுத்திருக்கும் நடிகர்கள். பென் கிங்ஸ்லி, பில் முர்ரே இருவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்குப் பெரிய நம்பகத்தன்மையைத் தங்கள் குரல் மூலம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அத்துடன், பத்து வயது நீல் சேதியின் அப்பாவித்தனமான முகமும், தேர்ந்த நடிப்பும் படத்துக்கு இன்னொரு பெரிய பலம். படத்தில் திரையில்வரும் ஒரே மனித கதாபாத்திரம் என்பதின் வலிமையை உணர்ந்து பிரமாதமாக நடித்திருக்கிறார் சேதி.
ஹாலிவுட்டின் ‘சிஜிஐ’ தொழில்நுட்பம் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டதை இந்தப் படம் உறுதிசெய்கிறது. 3டியில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது நாம் அனைவரும் மத்தியப் பிரதேசக் காட்டின் கோடைக் காலம், மழைக் காலம் என எல்லாவற்றையும் உண்மையாகவே உணர முடிகிறது.
‘ஜங்கிள் புக்’கை குழந்தைகளுக்காகத்தான் கிப்ளிங் எழுதினார். ஆனால், டிஸ்னி இந்தப் படத்தைக் குழந்தைகளுக்காக மட்டும் எடுக்கவில்லை. எல்லோருக்குமான படமாகவே எடுத்திருக்கிறது. படம் முடிந்து ஓடும் நீண்ட கிரடிட்ஸ் பாடல் முடியும்வரை பார்வையாளர்களை இருக்கையில் கட்டிப்போட்டிருக்கிறது இந்த ‘ஜங்கிள் புக்’.
ஒரு நல்ல படம் இரண்டு மணிநேரப் பொழுதுபோக்கைக் கொடுக்கும். ஒரு சிறந்த படம் உங்களை வேறொரு உலகத்துக்கே அழைத்துச்சென்றுவிடும். இயக்குநர் ஜோன் ஃபவ்ரே ஒரு சிறந்த படத்தைக் கொடுத்திருக்கிறார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT