Published : 11 Mar 2022 10:53 AM
Last Updated : 11 Mar 2022 10:53 AM
‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ வெளியாகி 60 ஆண்டுகள் கடந்தோடிவிட்டன. ‘வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது.. உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா... ஏற்றம் இரைத்தாயா...நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா.. நாற்று நட்டாயா.. களை பறித்தாயா.. கழனி வாழ் உழவருக்குக் கஞ்சிக் கலயம் சுமந்தாயா.. அங்குக் கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா?’ - ஜாக்சன் துரையின் முன்னால் நின்று, கட்டபொம்மன் அனல் பறக்கப் பேசும் இந்த வசனங்களை இன்றைக்குக் கேட்டாலும் ரத்தம் சூடேறும்! நாட்டுப்பற்று நரம்புகளில் புடைத்தெழும்! நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குச் சிறந்த நடிகருக்கான விருதை கெய்ரோவில் பெற்றுக் கொடுத்த அந்த வசனங்களை எழுதியவர் ‘சக்தி’ கிருஷ்ணசாமி.
இளங்கோவன், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, திருவாரூர் கே.தங்கராசு, எஸ்.டி.சுந்தரம், ஏ.பி.நாகராஜன் எனத் திரைத் தமிழ் வளர்த்தவர்களின் வரிசையில் இடம்பிடித்த ‘சக்தி’ டி.கே. கிருஷ்ணசாமி, மகத்தான கதை, வசனகர்த்தா மட்டுமல்ல; மறக்கப்பட்ட ஆளுமையும்தான். இத்தனைக்கும் சிவாஜி, எம்.ஜி.ஆர் என இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு எழுதியவர். எழுத்தாளர்களின் பொற்காலமாக விளங்கிய 60 மற்றும் 70களில் 20-க்கும் அதிகமான சமூகப் படங்களுக்கு எழுதி, தமிழ் சினிமா வசனத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியவர்.
சமூக நாடகத்தில் பிரம்மாண்டம்!
தஞ்சாவூர் கலியபெருமாள் பிள்ளை - வேதவல்லி தம்பதியின் மகனாக 1913-ல் பிறந்தவர் கிருஷ்ணசாமி. நாடக உலகில் கொடிகட்டிப் பறந்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையில் உறவினர். தஞ்சாவூர் வீரராகவா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியும் பின்னர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப் புலவருக்கான பட்டப் படிப்பையும் முடித்துவிட்டிருந்த 21 வயது கிருஷ்ணசாமியை, நவாப் ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட்டார் அப்பா. அங்கே வி.சி.கணேசனாக இருந்த நடிகர் திலகம், வி.கே.ராமசாமி, எம்.என்.நம்பியார் ஆகியோரின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமானார். வி.சி.கணேசனையும் வி.கே.கிருஷ்ணசாமியையும் ஒரே ஊர்க்காரர்கள் என்கிற பாசம் இன்னும் நெருக்கமாகப் பிணைத்தது. நவாப் ராஜமாணிக்கம் குழுவில், 12 ஆண்டுகள் இருந்து புராண நாடகங்களில் நடிக்கவும் அவற்றுக்கு எழுதவும் கற்றிருந்த கிருஷ்ணசாமி, நாடகக் குழுவொன்றை நஷ்டமில்லாமல் எப்படி நடத்துவது என்கிற வித்தையையும் கற்றிருந்தார். பின்னர், நவாப் ராஜமாணிக்கம் ஆசியுடன் அக்குழுவிலிருந்து விலகி, 1945-ல் ‘சக்தி’ நாடக சபாவைத் தொடங்கினார். அப்போது, வி.சி. கணேசன், எம்.என். நம்பியார், வி.கே.ராமசாமி ஆகியோர் கிருஷ்ணசாமியுடன் வந்துவிட்டார்கள்.
குழுவின் முதல் முயற்சி முற்றிலும் புதிய நாடக அனுபவத்தைப் பார்வையாளர் களுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்பிய கிருஷ்ணசாமி, நவாப் ராஜமாணிக்கம் குழுவிலிருந்து தன்னை நம்பி வந்த கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான எஸ்.டி.சுந்தரம் 9 மாதம் சிறையில் இருந்தபோது எழுதியிருந்த ‘கவியின் கனவு’ நாடகத்தை மேடையேற்ற விரும்பி, அதற்கு ஒத்திகை பார்த்தார். ஒரே நாடக மேடையில் மூன்று செட்களை அமைத்தார். ஒரு காட்சி ஒரு செட்டில் முடிந்த அடுத்த நொடியிலேயே, அடுத்த செட்டில் அடுத்த காட்சி தொடங்கிவிடும் புதுமையைப் புகுத்தினார். நாகப்பட்டினம் பேபி தியேட்டரில் ‘கவியின் கனவு’ நாடகம் அரங்கேறியது. திரைப்படம் பார்க்கும் உணர்வை நாடக மேடையில் பிரம்மாண்டமாகக் கொண்டுவந்துவிட்டதாக பத்திரிகைகள் பாராட்ட, போட்டி நாடகக் குழுக்களைச் சேர்ந்த கலைஞர்களும், திரையுலகப் பிரபலங்களும் ‘கவியின் கனவு’ நாடகத்தைப் பார்க்க நாகப் பட்டினத்துக்குப் படையெடுத்தனர்.
‘சக்தி’ ஸ்பெஷலும் மூன்று ஸ்டார்களும்
தென்னிந்திய ரயில்வே, நாடகக் கலா ரசிகர்களை ஏற்றிச் செல்லும் விதமாக, திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக நாகப்பட்டினம் செல்லும் ரயிலில் ‘சக்தி ஸ்பெஷல்’ சிறப்பு ரயில் பெட்டிகள் இரண்டை இணைத்தது. ‘அவ்வை’ டி.கே.சண்முகம் குழுவிலிருந்து விலகி வந்து சக்தி நாடக சபையில் இணைந்துவிட்டிருந்த எஸ்.வி.சுப்பையாவுக்கு புரட்சிகவி வேடம். எம்.என். நம்பியாருக்கு சர்வாதிகாரி வேடம். ‘கவியின் கனவு’ நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து டி.கே.கிருஷ்ணசாமி ‘சக்தி’ கிருஷ்ணசாமியாகப் புகழ்பெற்றார்.
அடுத்து சக்தி கிருஷ்ணசாமியே எழுதிய ‘விதி’ நாடகத்தில் ‘நடிகர் திலக’த்துக்கு வில்லன் வேடம். சென்னையில் நடந்த நாடகத்தைப் பார்க்க வந்திருந்த பெருமாள் முதலியார், சிவாஜியின் நடிப்பைப் பார்த்து மிரண்டுபோனார். அடுத்து, சக்தி நாடக சபா அரங்கேற்றி ‘நூர்ஜஹான்’ நாடகத்தில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்து ‘பராசக்தி’ படத்துக்குக் கதாநாயகன் கிடைத்துவிட்டார் என சக்தி கிருஷ்ணசாமியிடம் சொன்னார். சொன்னபடியே அவரை ‘சக்சஸ்’ என வசனம் பேசவைத்து நாயகன் ஆக்கினார். சக்தி நாடக சபா நாடகங்கள் வழியாகப் புகழ்பெற்று திரையுலகில் சிவாஜி கணேசன், எஸ்.வி.சுப்பையா, எம்.என்.நம்பியார் ஆகிய மூவரும் வெற்றிகரமான நட்சத்திரங்களாக உயர்ந்தபோது கிருஷ்ணசாமியும் திரைப்படங்களுக்கு எழுதத் தொடங்கினார். அதேநேரம், இந்த ஆளுமைகள் தங்களுடைய தாய் வீடான நாடகத்தை மறக்காமல் சினிமாவில் நடித்துக்கொண்டே சக்தி நாடக சபாவின் நாடகங்களிலும் நடித்தார்கள்.
சினிமாவில் கிடைத்தது மேடைக்கு...!
சக்தி கிருஷ்ணசாமி எழுதிய ‘ஜீவன்’, 'ஜஹாங்கிர்', ‘பயங்கரி’ போன்ற நாடகங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்த சமயத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும் பதிப்பகச் செம்மலும் எழுத்தாளருமாக விளங்கிய சின்ன அண்ணாமலை, தன்னுடைய தமிழ்ப் பண்ணை வெளியீடாக, தமிழரசுக் கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானம், கள ஆய்வு செய்து எழுதியிருந்த வீரபாண்டியக் கட்டப்பொம்மன் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டிருந்தார். சிவாஜி, தமிழ்ப் பண்ணைப் புத்தகக் கடைக்கு வந்தபோது, சின்ன அண்ணாமலை அப்புத்தகத்தை அவருக்குப் பரிசளித்தார். அப்போது சிவாஜிக்கு மெய்சிலிர்த்தது சிறு வயதில் ‘கம்பளத்தார் கூத்து’ ஆக கட்டப்பொம்மன் வரலாற்றைப் பார்த்து தாக்கம் பெற்று, ‘தாமொரு நாடக நடிகன்’ ஆகவேண்டும் என்று லட்சியம் கொண்டிருந்தார். சின்ன அண்ணாமலை கொடுத்த புத்தகம் அவரது நினைவுகளைக் கிளறினாலும் பின்னர், அது பற்றி மறந்துபோனார் சிவாஜி கணேசன்.
பின்னர் ஒருமுறை கயத்தாறு வழியாகத் திருநெல்வேலியில் நாடகம் நடத்தி போர் நிதி திரட்ட சக்தி கிருஷ்ணசாமியுடன் பயணித்தபோது, வீரபாண்டிய கட்டப்பொம்மனின் நினைவு சிவாஜியை தாக்கியது. உடனே சக்தி கிருஷ்ணசாமியிம் ம.பொ.சி.எழுதிய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டு, அதையொட்டி கட்டப்பொம்மன் நாடகத்தை எழுதும்படிக் கேட்டுக்கொண்டார் சிவாஜி.
மேடையிலும் திரையிலும் ஒரு சாதனை
சிவாஜியின் விருப்பத்தை நிறை வேற்ற 30 நாட்களில் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகத்தை எழுதி முடித்தார் சக்தி கிருஷ்ணசாமி. திரையில் தனக்குக் கிடைத்த ஊதியத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயை கிருஷ்ணசாமியிடம் கொடுத்து பிரம்மாண்ட செட்களுக்கும் உடைகளுக்கும் செலவு செய்யும்படி சொன்னார் சிவாஜி. 1957, ஆகஸ்ட் 29-ஆம் தேதி சேலத்தில் பிரம்மாண்டமாக அரங்கேறியது ‘வீரபாண்டிய கட்டப் பொம்மன்’ நாடகம். அரங்கேற்றதுக்கு சின்ன அண்ணாமலையும் சிலம்புச் செல்வர் ம.பொ.சியும் அழைக்கப்பட்டார்கள். சக்தி கிருஷ்ணசாமியின் அனல் வசனங்களைக் கேட்டு ம.பொ.சி.மனதாரப் பாராட்டினார்.
பகல் முழுதும் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவில் கேமரா முன்னால் நடித்துவிட்டு, இரவில் கட்டப்பொம்மன் நாடகத்தில் நடித்தார் நடிகர் திலகம். சேலத்தில் 100 முறை மேடையேறிய கட்டப்பொம்மன் நாடகம், பின்னர் சென்னை அண்ணாமலை மன்றத்தில் நடத்தப்பட்டது. கட்டப்பொம்மன் நாடகத்துக்கு அண்ணா, கலைஞர் உள்ளிட்ட அரசியல், கலையுலக ஆளுமைகள் தலைமை தாங்கிப் பாராட்டினார்கள். தன்னுடைய நண்பரான பி.ஆர்.பந்துலுவை ‘கட்டப்பொம்மன்’ நாடகம் பார்க்க அழைத்துச் சென்றார் சின்ன அண்ணாமலை. நாடகம் பார்த்து முடித்ததுமே அதைத் திரைப்படமாக்கும் உரிமையைக் கேட்டார் பந்துலு. தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் சாதனை படைத்த ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ திரைப்படம் வெளிவந்தபிறகும் 12 முறை மேடையேறியது. நாடக வசூலின் மூலம் கிடைத்த முப்பத்து இரண்டு லட்ச ரூபாயைப் பள்ளி, கல்லூரிகளில் நூலகம் அமைக்க நன்கொடையாக வழங்கினார் சிவாஜி. வீரபாண்டிய கட்டப்பொம்மன் டிஜிட்டல் மீள் பதிவு செய்யப்பட்டு இன்றைய தலை முறையையும் வந்தடைந்திருக்கிறது. ‘சக்தி கிருஷ்ணசாமியைப்போல் யாராலும் சிறந்த வசனங்களை எழுத முடியாது' என தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் சிவாஜி கணேசன். எழுத்தால் உயர்ந்த கிருஷ்ணசாமி ஒரு காந்தியர். சென்னை, சைதாபேட்டையில் காந்தியின் பெயரால் பொது நூலகம் அமைத்தார். அவருடைய வசனங்கள் வழியாக அவரை நினைவில் நிறுத்துவோம்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT