Published : 04 Mar 2022 08:00 AM
Last Updated : 04 Mar 2022 08:00 AM
அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டி.நாகராஜன் இயக்கத்தில் கடந்த 1997-ல் வெளியான படம் ‘அரவிந்தன்’. அதன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் சங்கர் ராஜா. தன்னுடைய திரையிசைப் பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் கொண்டாடும் விதமாக சமீபத்தில் ஊடகத்தினரைச் சந்தித்தார். அப்போது தனது வளர்ச்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி கூறிப் பேசிய யுவன், “நா.முத்துக்குமாருக்கு நான் கொடுத்த இடம் வேறு. அதை யாருக்கும் என்னால் தர முடியாது.
இந்த 25 வருடம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. தொடக்கத்தில் நான் இசையமைத்த பாடல் ஹிட்டாகிறதா என்றே தெரியாது. ஒருமுறை அம்மாவுடன் வெளியே சென்றிருந்தேன். அப்போது, பொதுமக்களில் சிலர், ‘அதோ பார்...! யுவனோட அம்மா போறாங்க’ என்றார்கள். அப்போதுதான் நம்மையும் இசையமைப்பாளராக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என எண்ணி மகிழ்ச்சியடைந்தேன். அம்மாவை ரொம்பவே மிஸ் செய்கிறேன். அவர் இல்லாத வெற்றிடத்தை என் மகள் நிறைவு செய்கிறாள், கடவுளுக்கு நன்றி.” என உணர்ச்சிபொங்க பேசினார்.
கதிரின் ‘இயல்வது கரவேல்’
‘பரியேறும் பெருமாள்’படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து கவர்ந்த கதிர், மீண்டும் கல்லூரியைக் கதைக்களமாகக் கொண்ட ‘இயல்வது கரவேல்’ என்கிற புதிய படத்தில் நடிக்கிறார். எஸ். எல். எஸ். ஹென்றி இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் டேனியல் கிறிஸ்டோபர்-தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கின்றனர். கல்லூரி நாட்களின் ஒரு காதலையும் மாணவர்களின் அரசியல் ஈடுபாட்டையும் கதைக்களமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த யுவலட்சுமி இதில் நாயகியாக அறிமுகமாகிறார். படத்துக்கு இசை ஜிப்ரான்.
ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்றுப் புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வ’னை அடிப்படையாகக் கொண்டு, அதே தலைப்பில் திரைப்படம் ஒன்றை இயக்கிவருகிறார் மணிரத்னம். லைகா - மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் இப்படம், இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. முதல் பாகம், வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அறிவிப்பையொட்டி, வல்லவராயன் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி, குந்தவையாக நடித்துள்ள த்ரிஷா, அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம்ரவி, நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் உள்ளிட்டவர்களின் முதல் தோற்றங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல் நேரம்!
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான பெப்சியில் பல சங்கங்கள் அங்கம் வகித்து வருகின்றன. அவற்றில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், சௌத் இந்தியன் சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் ஆகிய இரண்டு சங்கங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் தேர்தலில் ராதாரவி தலைமையில் போட்டியிட்ட 23 பேர் கொண்ட அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் இம்முறை போட்டி கடுமையாக இருந்தது. ஆர்.கே.செல்வமணி தலைமையிலான ஓர் அணியும் பாக்யராஜ் தலைமையிலான ஓர் அணியும் போட்டியிட்டன. இதில், ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணி வெற்றிவாகை சூடியது.
குருவின் வழியில்...
மக்கள் இயக்குநர், மறைந்த எஸ்.பி. ஜனநாதனிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் எஸ்.டி. புவி. அவர் எழுதி, இயக்கியிருக்கும் ‘விஜயன்’ என்கிற படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள், ‘தன்னுடைய குருவைப் போலவே மக்களின் சினிமாவைக் கொடுத்துள்ளார்’ எனப் பாராட்டியிருக்கிறார்கள். 39 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ள இப்படம், கூலி படைத் தலைவன் ஒருவனுடைய கதையைப் பேசுகிறது. முதல் முறையாக வி.எஸ்.டி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பின்னணி இசைக்கோப்பு, ஒலிக் கலவை பணிகள் செய்யப் பட்டுள்ள படமான இதை, ஓகே சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
களவுபோன கைபேசி!
விஜய் டிவி புகழ் அசார், யோகிபாபு, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் காதல் நகைச்சுவைப் படம், ‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’.“ ‘காதலித்து கல்யாணம் செய்துகொள்’ என்கிற அப்பா, தாத்தாவின் அறிவுறுத்தலால் தனது முயற்சியைத் தொடங்குகிறார் நாயகன். பல பெண்களின் நிராகரிப்புக்குப் பிறகு, பணியிடத்திலேயே தன்னுடைய தேவதையைக் கண்டறிந்துக் காதலைச் சொல்கிறார்.
நாயகியோ இரவு 12 மணிக்கு ‘மெசேஜ்' மூலம் போனில் பதில் சொல்வதாக கூறுகிறார். பதற்றத்துடன் காத்திருக்கும் நாயகனின் போன் தொலைந்துபோய்விடுகிறது. நாயகியின் பதில் வருவதற்குள் தொலைத்த போனைக் கண்டுபிடித்தாரா.. இல்லையா.. காதல் கைகூடியதா இல்லையா என்பதை இன்றைய செல்போன் யுகத்தின் காமெடிகளால் நிரப்பி காதல் கதை சொல்லியிருக்கிறேன்” என்கிறார் இப்படத்தின் மூலம் இயக்குநராகும் பா. ஆனந்த ராஜன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT