Published : 01 Apr 2016 12:15 PM
Last Updated : 01 Apr 2016 12:15 PM
பாரதியாரின் பாடல்கள் திரைப்படங்களில் காலங்காலமாக இடம் பெற்றுவந்தாலும் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடலுக்கு இணையான புகழை வேறு எந்தப் பாடலும் பெற்றுவிடவில்லை எனலாம். இசையறிவு இல்லாதவர்கள்கூட அப்பாடலின் மெட்டைச் சட்டென அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
இப்பாடலைப் பொறுத்தவரை பாரதியார் பைரவி ராகத்தில்தான் மெட்டமைத்துள்ளதாக பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் தெரிவிக்கிறார். ஆனால், இன்று வழக்கத்தில் இருக்கும் ராகமாலிகை மெட்டை அமைத்தவர் திரைப்பட இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பாராமன். ‘மணமகள்’ படத்தில் இப்பாடல் இடம் பெற்றது. கண்ணனைக் குழந்தையாக்கிக் கொஞ்சும் தொனியில் அமைந்த இப்பாடலின் கடைசி சரணத்தைக் காதலை வெளிப்படுத்தும் வகையில் சுப்பாராமன் அமைத்திருந்தார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தயாரித்த இப்படத்துக்கு திமுக தலைவர் கருணாநிதிதான் வசனம்.
பாடல் காட்சியில் பத்மினியும் லலிதாவும் டி.எஸ். பாலையாவும் நடித்திருக்கிறார்கள். அதன் பிறகு இப்பாடல் காதல் கீதமாகவே மாறிவிட்டது. “கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி” என்னும் வரிகளை மனதுக்குள் பாடிப் பார்க்காத காதலர்கள் யார் இருக்கிறார்கள்?
இது போலத்தான் பாரதிதாசன் எழுதிய ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்ற தேஷ் ராகப் பாடலும் குழந்தைக்காக எழுதப் பட்டு ‘ஓர் இரவு’ திரைப்படத்தில் காதல் பாடலாக மாறிவிட்டது.
‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ காபி ராகத்தில் தொடங்கி, ‘ஓடி வருகையிலே கண்ணம்மா’வில் மாண்டுக்கு மாறுகிறது. ‘உச்சிதனை முகர்ந்தால்’ வசந்தாவில் ஒலிக்கிறது. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வரிகள் திலங்குக்கு மாறுகின்றன. ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ வரிகள் உருக்கத்தை வெளிப்படுத்தும் நீலமணியில் ஒலிக்கின்றன. திரைப்படத்திலும் பின்னர் கச்சேரி மேடைகளிலும் பாடிப் பிரபலப் படுத்தியவர் எம்.எல். வசந்தகுமாரி. கடைசி சரணத்தை ஆண் குரலில் வி.என். சுந்தரம் பாடினார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் “வெற்றிவடிவேலனே சக்தி உமைபாலனே” என்ற தொகையறாவைப் பாடியவர் சுந்தரம். இப்பாடலை நாகசுரக் கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம் வாசித்ததும் அதற்கு இன்னொரு பரிமாணம் கிடைத்தது.
‘தில்லானா மோகனாம்பாள்’ படம் உருவானபோது தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் சண்முகசுந்தரமும் மோகனாவும் சந்திக்கும் காட்சியில் “சண்முசுந்தரம் மோகனாவை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து ஒப்படைக்க வேண்டிய இடத்தில் ஒப்படைத்துவிட்டேன்” என்று பரேதசியாக நடிக்கும் எஸ்.வி.சகஸ்ரநாமம் சொல்கிறார். மோகனாவின் கையைப் பிடித்துப் பெட்டியில் ஏற்றுகையில் பின்னணியில் ‘சின்னஞ்சிறு கிளியே’ கண்ணம்மாவே ஒலிக்கிறது. ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டி எழுதினாலும் சொல்ல முடியாத உணர்வுகளை அந்த மெட்டு வெளிப்படுத்துகிறது.
சென்னையின் திரைப்படத் துறை குறித்து பிரெஞ்சு மொழியில் உருவாகியுள்ள ஆவணப்படத்தில் ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் உருவாக்கப்பட்ட காட்சியும் இடம்பெற்றுள்ளது. திருவாரூரில் மோகனாம்பாளின் வீட்டுக்கு வெளியே அமர்ந்து சண்முகசுந்தரமும் குழுவினரும் வாசிப்பது போன்ற காட்சி. வாசிக்கும் பாட்டு ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’தான். ‘என் கண்ணில் பாவையன்றோ’ என்ற வரிகளை முதலில் சிவாஜி கணேசன் வாசிப்பது போன்ற காட்சி.
பின்னர் திரைப்பட இயக்குநரான ஏ.பி. நாகராஜன் “அங்கே பார்த்திட்டிருந்தீங்க. மோகனாவை” என்று சொல்லிவிட்டு, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வரிகளைப் பாடிக் காட்டுகிறார்.
1980-களில் எம்,எஸ். விஸ்வநாதன் இசையில் ‘நீதிக்குத் தண்டனை’ திரைப்படத்தில் வேறொரு மெட்டில் இப்பாடல் இடம் பெற்றது. கே.ஜே. யேசுதாசும் ஸ்வர்ணலதாவும் அற்புதமாகப் பாடியிருந்தாலும் தமிழர்களின் மண்டைக்குள் ‘சின்னஞ்சிறு கிளியே’ என்றாலே சி.ஆர். சுப்பாராமனின் மெட்டு மட்டுமே ஒலிக்கிறது.
சமீபத்தில் ‘குற்றம் கடிதல்’ படத்தில் சேர்ந்திசையில் பியானோ ஒலிக்க, வரிக்கு வரி இப்பாடலைக் கச்சிதமாகப் படமாக்கியிருக்கிறார்கள். ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ வரிகள் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு ஏற்படும் நெருக்கடியின்போது சற்றும் எரிச்சலடையாமல், நிதானம் இழக்காமல், விட்டுக்கொடுக்காமல் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் கணவன் மணிகண்டனைப் போல் கணவனைப் பெற்றிருக்கும் பெண்கள் பாக்கியவதிகள்தான்.
தொடர்புக்கு: bagwathi@gmail.com
படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT