Published : 18 Feb 2022 11:08 AM
Last Updated : 18 Feb 2022 11:08 AM

அஜித் ஓர் ஆச்சரியம்! - ஹெச்.வினோத் சிறப்புப் பேட்டி

செ.ஏக்நாத்ராஜ்

கரோனா தடைகளைத் தாண்டி, வரும் 24-ம் தேதி வெளியாகிறது அஜித்குமார் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வலிமை’. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி-யில் தொடங்கி உள்ளூர் அரசியல்வாதிகள் வரை, பலரிடமும் ‘வலிமை’ அப்டேட் கேட்டு, அஜித் ரசிகர்கள் செய்த வகைதொகை ரகளைகள், வேற லெவல். அந்த வகையில் ‘வலிமை’ ஒரு படி மேல். ரிலீஸ் அவசரத்தில் இருக்கும் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத்திடம் பேசினோம்.

கரோனாவுக்கு முன்னால் தொடங்கப்பட்ட படம்...

ஆமா. முதல், இரண்டாவது, மூன்றாவது அலைகள்ல சிக்கி, தடைகளைத் தாண்டி இப்ப ரிலீஸுக்கு வந்திருக்கோம். அனைத்து ரசிகர்களோட ஆதரவும் ‘வலிமை’க்கு வேணும்னு எதிர்பார்க்கிறோம்.

‘வலிமை’ என்ன சொல்ல போகுது?

இதை ஆக் ஷன் படம்னு கேள்விபட்டிருப்பீங்க. ஆனா, குடும்ப படம். இன்னைக்கு குடும்பங்கள்ல என்ன பிரச்சினை பிரதானமா இருக்கு.. அந்தப் பிரச்சினைத் தொடர்ந்தா என்னென்ன சிக்கல்கள் வரும், அப்படிங்கறதுதான் கதை. ஆக் ஷனைத் தாண்டி குடும்பமும் அம்மா சென்டிமென்டும் முக்கியமானதா இருக்கும். இன்றைய சமூகத்துக்குத் தேவையான படம் இது. நிச்சயம் நிறைய விவாதங்களை ஏற்படுத்தும். படம் பார்க்கிற ஒவ்வொருத்தரும் அவங்க யோசிக்கிற நிலையிலயும் சரி, வாழ்க்கையிலயும் சரி, ஒரு படி பாசிட்டிவா மாறுவாங்கன்னு நம்பறேன்.

ஹெச். வினோத்

அஜித் போலீஸ் படங்கள் நிறைய பண்ணியிருக்கார். நீங்களும் ‘தீரன்’ல போலீஸ் கேரக்டரை காண்பிச்சிருக்கீங்க. இதுல எப்படி?

பொதுவா படங்கள்ல போலீஸ்னா, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டுன்னு காண்பிச்சிருப்பாங்க. இதுல, வழக்கமான சினிமா போலீஸா இல்லாம, நம்ம வீட்டுல அண்ணனோ, தம்பியோ போலீஸ்காரரா இருந்தா எப்படியிருக்கும்? அப்படி யதார்த்தமான கேரக்டர்ல அஜித் சார் வர்றார். ஜெயலலிதா முதலமைச்சரா இருந்தப்ப, ஒரு பைக் ரேஸரை நேரடியா போலீஸ் வேலையில நியமிச்சாங்க. அப்படி, இவர் நேரடி அப்பாயின்மென்ட்ல போலீஸா வர்ற கேரக்டர். அவர் என்ன பண்றார்ங்கறதுதான் படம்.

வெளிநாட்டு காட்சிகள், கரோனாவால நின்னு போச்சுன்னு சொன்னாங்களே?

படத்தோட கதை சென்னையிலதான் நடக்குது. பைக் ரேஸ்ல இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற பிரான்ஸ்காரர் ஒருத்தர், முதல்ல நடிக்கறதா இருந்தது. நாங்க மகிழ்ச்சியா விசாவுக்கு விண்ணப்பிச்சுட்டு ரெடியாகும்போதுதான் லாக்டவுன் அறிவிச்சாங்க. ஒரு கட்டத்துல, அந்த வெளிநாட்டு காட்சியே வேண்டாம்னு தயாரிப்பாளர்கிட்ட சொன்னேன். அவர், இல்ல அந்தக் காட்சிகளைக் கண்டிப்பாக எடுக்கணும்னு சொன்னார். பிறகு அதை ரஷ்யாவுல எடுத்தோம். ஆனா, அந்த பிரான்ஸ் சாம்பியன் நடிக்கலை. ரஷ்யாவை சேர்ந்த கொலக்ஸி அப்படிங்கற சாம்பியன் நடிச்சிருக்கார். அந்த ரேஸ் காட்சிகள் மிரட்டலா இருக்கும்.

நாயகி ஹூமா குரேஷியும் போலீஸ்தானா?

ஆமா. இந்தக் கதைக்கு வலிமையான, உடல்ரீதியா, மிகவும் பொருத்தமான ஒரு நடிகை தேவைப்பட்டாங்க. இரண்டு, மூணு நடிகைகளை தேர்வு பண்ணினோம். அதுல ஒருத்தர் ஹூமா குரேஷி. நல்ல நடிகை. இந்தக் கதைக்கு என்ன தேவையோ, அதை சரியா பண்ணியிருக்காங்க.

இந்தி ஹீரோக்கள், தமிழ்ல வில்லனா நடிச்சுட்டு இருக்கும்போது, தெலுங்கு ஹீரோவை வில்லனாக்கி இருக்கீங்களே?

இதுக்கு குறிப்பிட்ட காரணம்னு ஏதும் இல்லை. பொதுவா இன்னைக்கு எல்லா மொழிகள்லயும் படங்கள் ரிலீஸ் ஆகுது.. அதனால, மற்ற மொழி நடிகர்களை அழைச்சுட்டு வந்து நடிக்க வைக்கிறது வழக்கமாகி இருக்கு. அதனால கார்த்திகேயாவை நடிக்க வச்சோம். அதைத் தாண்டி, அஜித் சார் இமேஜுக்கும் உடல் அமைப்புக்கும் சவால் கொடுக்கிற ஆள் தேவை. சின்னப் பையனாகவும் இருக்கணும். அப்படித் தேடுனதுல சில பேர் லிஸ்ட்ல வந்தாங்க. அதுல சரியான சாய்ஸா, கார்த்திகேயா இருந்தார். அவர் தெலுங்கு நடிகர் மாதிரியே தெரியமாட்டார். சரியா தமிழ்க் கத்துக்கிட்டு பக்காவா பேசியிருக்கார்.

பைக் ரேஸ் காட்சிகள் டிரைலர்ல மிரட்டுதே?

அஜித் சாருக்கு பைக் ஓட்டறது ரொம்ப பிடிக்கும். நாள் பூரா சாப்பிடாம பைக் ஓட்டிட்டே இருக்கணும்னு சொன்னாலும் அதைச் செய்றவர் அவர். சின்ன வயசுல பைக் மெக்கானிக்கா வேலை பார்த்திருக்கார், ரேஸ்ல ஓட்டியிருக்கார். இந்தியா முழுவதும் பைக்ல சுத்தியிருக்கார். அதனால மற்ற நடிகர்களைவிட அவரால பைக்ல எக்ஸ்ட்ரா சாகசங்கள் பண்ண முடியுது. அதை இதுல பண்ணியிருக்கார்.

சில இயக்குநர்களோட மட்டும் அஜித் தொடர்ந்து படம் பண்றாரே... முதல்ல சரண், பிறகு விஷ்ணுவர்தன், சிவா, இப்ப நீங்க?

அது என்னன்னு எனக்கும் தெரியல. இப்ப கதை இல்ல சார்னு சொன்னாகூட, ‘உங்க மேல நம்பிக்கை இருக்கு, ரெடி பண்ணிட்டு வாங்க’ன்னு நம்பிக்கையா சொல்வார். முடிவெடுக்கிறதுல அஜித் சார் ஆச்சரியமானவர். சில விஷயங்கள்ல அவரைப் பார்த்து வியந்திருக்கேன். அவரைக் கணிக்கிறது ரொம்ப கஷ்டம். முதன் முதலா நான் அஜித் சாரை சந்திச்சு நான் சொன்ன கதை வேற. ‘சதுரங்க வேட்டை’யோட நவீன வடிவமா ஒரு கதையை சொன்னேன். அது கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டரா இருக்கும். ‘விஸ்வாசம்' நல்ல இமேஜ் தந்திருக்கு. அதனால, அந்த கதையை பிறகு பண்ணலாம். இப்ப ‘பிங்க்’ ரீமேக் பண்ணலாம்னு இருக்கேன், முடியுமான்னு கேட்டார். நான், ‘என் படத்துல பெண்களுக்கான கேரக்டரையே அழுத்தமா எழுதினதில்ல. ஒட்டுமொத்த படமுமே அழுத்தமா இருக்கே, முடியுமான்னு தெரியல’ன்னு சொன்னேன். அந்த மீட்டிங் சக்சஸ்புல்லா முடியல. பிறகு அந்தப் படம் திரும்ப எங்கிட்டயே வந்தது. மறுபடியும் சந்திச்சப்ப, உங்களால முடியும்னு நம்பிக்கையா சொன்னார். அந்தப் படம் நான் நினைச்சதைவிட சினிமாகாரங்க நினைச்சதைவிட, அஜித் சார் நினைச்ச மாதிரி நல்லா ஓடுச்சு. அந்த ஷூட்டிங்கில என்னோட வேலை பார்க்கிறது அவருக்கு சவுகரியமா இருந்ததால, வேற ஏதும் ஐடியா இருந்தா சொல்லுங்கன்னு சொன்னார். அப்ப சொன்னதுதான் ‘வலிமை’.

அடுத்தும் அஜித் படத்தை இயக்கறீங்க...

ஆமா. அது கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டர். அதாவது முதல்ல அவர்ட்ட நான் சொன்ன கதையின் ஒரு பகுதி. ஒரே ஐடியாவுல எங்கிட்ட இரண்டு, மூணு ஸ்கிரிப்ட் இருந்தது. அதை எல்லாம் ஒண்ணாக்கி இதை புதுசா பண்றேன். நிச்சயமா வேற மாதிரி இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x