Published : 22 Apr 2016 11:34 AM
Last Updated : 22 Apr 2016 11:34 AM
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான ‘தெறி ' திரைப்படம் செங்கல்பட்டு விநியோகப் பகுதியில் உள்ள பல முக்கியத் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு முதல் நாள் வசூலில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரச்சினையின் பின்னணி என்ன?
‘தெறி' படத்தைத் திரையிட அதன் தயாரிப்பாளர் தாணு முன்பணம் அதிகமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஏன் கொடுக்கவில்லை என்று திரையரங்க உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது “ ‘எந்திரன்’படத்துக்குத்தான் கடைசியாக நாங்கள் முன்பணம் கொடுத்துத் திரையிட்டோம். அதற்குப் பிறகு செங்கல்பட்டு விநியோக ஏரியாவில் திரையரங்குகள் அதிகரித்துவிட்டன. தற்போது திரையரங்குக்கு வரும் மக்கள் பிரிந்துவிட்டார்கள். இதனால் நாங்கள் முன்பணம் கொடுத்துத் திரையிடுவதை நிறுத்துவிட்டோம்” என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் தாணுவோ, “கோடிகளைக் கொட்டி படம் எடுக்கும்போது, நான் ஏன் முன்பணம் வாங்காமல் படத்தைக் கொடுக்க வேண்டும்?” என்று கூறியிருக்கிறார்.
தயாரிப்புச் செலவும் சம்பளமும்
10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த படங்களின் தயாரிப்புச் செலவுடன் ஒப்பிட்டால் முன்னணி நடிகர்களின் படங்களுக்குத் தற்போது 60% செலவு அதிகரித்துவிட்டது. நடிகர், நடிகை, இயக்குநர் ஆகியோரின் சம்பளம் தற்போது கோடிகளில்தான் தொடங்குகிறது. படத் தயாரிப்புச் செலவில் இந்தச் சம்பளமே மூன்றில் இரண்டு பங்காக ஆகிவிடுகிறது. ஒவ்வொரு முறை இப்பிரச்சினை எழும்போதும் நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று திரையுலகினர் பேசுவதோடு குரல்கள் அடங்கிவிடும்.
விஜய் நடித்த ‘போக்கிரி’திரைப்படம் முதல் பிரதி அடிப்படையில் ரூ.14 கோடியில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல ரஜினி நடித்த ‘சந்திரமுகி’முதல் பிரதி ரூ.28 கோடியில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது இதே பொருட்செலவில்தான் ரஜினி, அஜித், விஜய் படங்கள் தயாரிக்கப்படுகின்றவா என்றால் இல்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் தரப்பில்.
தற்போது ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரின் சம்பளம் ரூ.25 கோடியைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இப்படிக் கோடிகளில் சம்பளம் வாங்குவதால்தான் படத்தின் செலவு இரட்டிப்பாக அதிகரிக்கிறது என்கிறார்கள். நடிகர்களின் தாறுமாறான சம்பள உயர்வால் படத்தின் செலவு அதிகரிக்கும்போது தயாரிப்பாளர் எப்படியாவது முதலீடு செய்திருக்கும் பணத்தை அடைந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் வியாபாரத்தைத் தொடங்குகிறார் என்கிறார்கள். ஆக இப்பிரச்சினைக்கான தீர்வு நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்பதில்தான் அடங்கியிருக்கிறது என்பது வெளிப்படை.
வியாபாரத் தந்திரம்
மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம்', ‘ப்ரேமம்' ஆகிய படங்கள் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றன. அப்படங்களில் நடித்த நடிகர்களுக்குப் படத்தின் வியாபாரத்துக்கு ஏற்ப சம்பளத்தை நிர்ணயம் செய்கிறார்கள். தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களும் தங்களது படங்களின் வியாபாரம் என்ன, நஷ்டம் எவ்வளவு என்பதைப் பொறுத்தே அடுத்த படத்தின் சம்பளத்தை நிர்ணயம் செய்கிறார்கள்.
ஆனால், தமிழ்த் திரையுலகில் இப்படி நடப்பதில்லை. படத்தின் தலையெழுத்து எப்படி இருந்தாலும் முன்னணி நடிகர்களின் சம்பளம் குறைவதே இல்லை. கடும் சம்பள உயர்வால் புதிய தயாரிப்பாளர்கள் என்றாலும் பழைய தயாரிப்பாளர்கள் என்றாலும் முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரிக்கத் தயங்குகிறார்கள் என்று முகம் காட்ட விரும்பாமல் கருத்து சொல்கிறார் ஒரு தயாரிப்பாளர்.
கமல்ஹாசன் படத்தைப் பெரும்பாலும் அவருடைய நிறுவனமே தயாரிக்கிறது. சூர்யா படத்தையும் அவருடைய நிறுவனமே தயாரிக்கிறது. மேலும் பல நடிகர்கள் சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனங்களைத் தொடங்கி நடித்துவருகிறார்கள். முன்புபோல, ஒரு தயாரிப்பாளர் முன்னணி நடிகரை ஒப்பந்தம் செய்து தயாரிக்கும் போக்கு குறைந்துவருகிறது. நடிகர்களின் சம்பள உயர்வு இதே நிலையில் நீடித்தால் இன்னும் விரைவிலேயே தமிழ்த் திரையுலகில் ஒரு தேக்க நிலைதான் ஏற்படும் என்று தோன்றுகிறது.
என்னதான் தீர்வு?
“திரையுலகில் திருட்டு விசிடி, க்யூப் கட்டணம் உட்பட பல முக்கிய பிரச்சினைகள் இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவை நடிகர்களின் சம்பளப் பிரச்சினையிலிருந்து வெளியே எடுப்பதே நல்ல தீர்வாக இருக்கும். இதற்கு நடிகர்களுக்கு அவர்களின் படத்தின் வியாபாரம் எப்படி நடைபெறுகிறது, தயாரிப்பாளர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் ஆகியவற்றை விளக்க வேண்டும். அதுமட்டுமன்றி நடிகர்களுக்குச் சம்பளத்தை அள்ளிக் கொடுப்பதைத் தயாரிப்பாளர்கள் முதலில் நிறுத்த வேண்டும்” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத மற்றொரு தயாரிப்பாளர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண தமிழ்த் திரையுலகம் ஒன்றுகூடுமா என்பதுதான் தற்போதைய மதிப்புமிக்க கேள்வி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT