Published : 08 Apr 2016 11:04 AM
Last Updated : 08 Apr 2016 11:04 AM

மறக்கப்பட்ட நடிகர்கள் 4: இருபெரும் நடிகர்களின் ஒரே தேர்வு! - ஓ.ஏ.கே. தேவர் 2

மேற்கத்திய கௌபாய் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பால், தமிழ் சினிமாவில் கௌபாய் ஜுரம் பரவிய 70-களின் காலகட்டம். கௌபாய் கதாநாயகனுக்கான இடத்தை மொத்தக் குத்தகை எடுத்துக்கொண்டவர் ‘தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட்’ எனப் புகழப்பட்ட ஜெய்சங்கர். கௌபாய் கதாநாயகனுக்கு சரியான சவாலாக அமையும் வில்லன் கிடைக்காவிட்டால், இந்த வகைப் படங்களுக்கே மவுசு கிடைத்திருக்காது. அந்தச் சவாலான இடத்தை நிரப்பியவர் ஓ.ஏ.கே. தேவர். ஜெய்சங்கரின் ‘கங்கா’ படத்தில் கொள்ளைக் கூட்டத் தலைவர்களில் ஒருவராக வந்து “அந்தக் கடவுளுக்கே நாங்க பயப்பட மாட்டோம்” என்று பகுத்தறிவு வசனம் பேசி நடித்தவர், கலைவாணர் மீது கொண்ட ஈடுபாட்டால் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கௌபாய் படங்களில் ஜெய்சங்கருக்கு உச்சமாக அமைந்த படம் ‘சி.ஐ.டி சங்கர்’. படம் தொடங்கியதும் வில்லனின் நிழல் உருவத்தையும் அந்த மிரட்டலான குரலையும் கண்டு மிரள ஆரம்பித்த ரசிகர்கள், யாரந்த வில்லன் என்று முகத்தைத் தேட ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்த காட்சிகளில் பார்த்துவிடலாம் என்று காத்துக்கொண்டிருந்தவர்களை அந்தக் குரல் மட்டுமே மிரட்டிக்கொண்டிருக்கும். படத்தின் இறுதிக் கட்டக் காட்சியில் வில்லனாகத் தோன்றினார் ஓ.ஏ.கே.தேவர். மிகவும் பிரபலமான தனது குரலை ரசிகர்கள் அடையாளம் கண்டுவிட முடியாத அளவுக்கு மாற்றிப் பேசிக் கதிகலங்க வைத்தார்.

அப்படிப்பட்டவர் ‘பூக்காரி’, ‘பட்டத்து ராணி’, ‘கங்கா கௌரி’ ‘நீயும் நானும்’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ உட்பட பல படங்களில் வில்லன் அல்லாத மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து, தன் மீது படிந்த வில்லன் பிம்பத்தை மறக்கச்செய்தார். ‘சாது மிரண்டால்’ படத்தின் முதல் பாதி முழுவதும் ஆறு தோற்றங்களில் வரும் தேவர், இரண்டாம் பாதி முழுவதும் உறைந்த விழிகளோடு பிணமாக நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.

சமூகப் படங்களில் சாதனைகள் படைத்த கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் எல்லாப் படங்களிலும் இவர் தவறாமல் இடம்பெற்றுவிடுவார். கே.எஸ்.ஜி.யின் ‘குறத்தி மகன்’ படத்தில் கருத்து சொல்லும் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு அல்ல; தேவருக்குத்தான். ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் விபீஷணனாக நடித்துக் கண் கலங்கவைத்தவர், அதே ஆண்டில் வெளியான ‘விக்கிரமாதித்தியன்’ படத்தில் கதிகலங்க வைக்கும் மந்திரவாதியாக நடித்திருப்பார். எல்லா ஒப்பனைகளும் ஆடைகளும் பொருந்தக்கூடிய தோற்றம் கொண்ட கலைஞராக ஓ.ஏ.கே. தேவர் விளங்கினார்.

சிவாஜிக்கே சவால்

வீரசிவாஜி, வீரபாண்டிய கட்டப்பொம்மன் உட்பட சிவாஜி மன்றம் நடத்திவந்த புகழ்பெற்ற நாடகங்களில் சிவாஜி கணேசனுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்துவந்தவர் ஓ.ஏ.கே. தேவர். சிவாஜியுடன் நாடகங்களில் நடிக்கும்போது அடுத்த காட்சிக்கான ஆடையை மாற்ற மேடைக்குப் பின்புறமிருக்கும் ஒப்பனை அறைக்குச் செல்ல மாட்டாராம் சிவாஜி. மேடையின் பக்கவாட்டில் இருக்கும் மறைவான இடத்தில் நின்று தேவரின் நடிப்பைக் கவனித்துக்கொண்டே இருப்பாராம். “ஓ.ஏ.கே. கிட்ட கவனமா இருக்கனும்; எக்ஸ்ட்ரா டயாலாக் போட்டுக் கைதட்டல் வாங்கிடுவான். அடுத்த சீன்ல அதைவிட அதிகமா க்ளைப்ஸ் வாங்கணும்” என்று சிவாஜி பதற்றமடைவர் என குறிப்பிட்டுக்காட்டியிருக்கிறார் வானொலியாளர் கூத்தபிரான்.

தலைமுறைகளைக் கடந்து இன்றும் கொண்டாடப்படும் ‘கர்ணன்’ படத்தில், கனக மகாராஜாவாக நடித்திருப்பார் ஓ.ஏ.கே. தேவர். தனது மருமகனான கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் என்று தெரிந்ததும் கோபம் தலைக்கேறி, கர்ணனைக் கேலி செய்து புறக்கணிக்கும் காட்சியில் சிவாஜியுடன் போட்டிபோட்டு நடித்திருப்பார். சிவாஜியைத் திட்டுவதுபோல் உள்ள கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று சிவாஜியிடமே கேட்டிருக்கிறார் இயக்குநர் பி.ஆர். பந்துலு. “ஓ.ஏ.கே தேவரைத் தவிர அந்த வேடத்தில் வேறு யாரைப் போட்டாலும் எடுபடாது” என சிவாஜி சொல்லியிருக்கிறார்.

விட்டுக்கொடுத்த எஸ்.எஸ்.ஆர்.

ஓ.ஏ.கே. தேவர் தனது குரு சக்தி வி. கிருஷ்ணசாமி எழுதிய ‘வீரபாண்டிய கட்டப்போம்மன் நாடகத்தில் சிவாஜியைப் போலவே வீரபாண்டிய கட்டப்பொம்மன், வெள்ளையத் தேவன், உமைத்துரை ஆகிய எல்லா முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படமாகத் தயாரானபோது அதில் தேவருக்கு வேடம் இல்லை. உமைத்துரை வேடத்தை எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு ஒதுக்கியிருந்தனர். அவரும் ஏற்றுக்கொண்டார். படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று எஸ்.எஸ்.ஆர். கேட்க, அதில் ஓ.ஏ.கே. தேவருக்கு இடமில்லை என்றதும் கோபமாகிவிட்டார். “என் கேரக்டரை அவருக்கு கொடுங்க. அவர் இல்லாமல் வீரபாண்டிய கட்டப் பொம்மனா?” என்று தனது கதாபாத்திரத்தை அவருக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்.

இளையராஜாவுக்கு நாடக வாய்ப்பு

எதிர்பாராமல் சிவாஜியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிவாஜி நாடக மன்றத்திலிருந்து பிரிந்து ‘தேவர் நாடக மன்ற’த்தை தொடங்கினார் ஓ.ஏ.கே. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘அன்பு வழி’ ‘சந்தனச் சிலை’ ‘காட்டு வழி’ உட்பட பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்தினார். சென்னையில் தனது சகோதரர்களுடன் தங்கி, திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார் இளையராஜா.

ஆனால் வாய்ப்பு அத்தனை சீக்கிரம் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஓ.ஏ.கே. தேவர் தனது நாடக மன்றத்தின் புதிய தயாரிப்பன ‘மாசற்ற மனம்' நாடகத்தைத் திருச்சியில் அரங்கேற்ற ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்துக்கு இசை அமைக்க தேவரிடம் ராசய்யாவை அறிமுகப்படுத்தினார் தேவர் நாடக மன்றத்தில் இருந்த சங்கிலி முருகன். பாவலர் சகோதர்களின் இசையை கம்யூனிஸ்ட் மேடைகளில் கேட்டிருந்த தேவர், உடனே சம்மதம் தெரிவித்தார். பாவலர் சகோதரர்களின் இசையுடன் அரங்கேறிய அந்த நாடகத்தின் பாடல்கள் பாராட்டுப் பெற்றன.

இந்த நாடகத்தில்தான் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்கள். பிற்காலத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களாகவும் ஆனார்கள்.

எம்.ஜி.ஆர். கண்ட ஆதித்த கரிகாலன்

எம்.ஜி. ஆருடன் ‘பறக்கும் பாவை’, ‘விக்ரமாதித்தியன்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘கண்ணன் என் காதலன்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தாய்க்குப் பின் தாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் தேவர். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆரே தயாரித்து, நடித்து, இயக்குவதாகத் திட்டமிடப்பட்டபோது வந்தியத்தேவன் கதாபாத்திரத்தைத் தானே ஏற்க விரும்பியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதேபோல் குந்தவையாக வைஜெயந்திமாலா, அருண்மொழி வர்மனாக ஜெமினி கணேசன், வானதியாக பத்மினி என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஆட்களைத் தேர்வு செய்தவர் ஆதித்திய கரிகாலன் கதாபாத்திரத்துக்குத் தன்னைத் தேர்வு செய்திருந்ததை ஓ. ஏ. கே. தேவர் தன் நண்பர்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டிருக்கிறார்.

மார்டன் தியேட்டரில் பணியாற்றும்போதே கலைஞர் மு.கருணாநிதி மீது தோழமை கொண்ட தேவர், கலைவாணரின் மறைவுக்குப் பிறகு அவருடன் மேலும் நெருக்கமானார். கலைஞர் கதை, வசனம் எழுதி வெற்றிபெற்ற ‘குறவஞ்சி’, ‘பூம்புகார்’ உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் ஓ.ஏ.கே. தேவர் நடித்தார். 1972 ல் தனது 48-வது வயதில் மறைந்த ஓ.ஏ.கே. தேவர், கடைசி வரை திமுகவின் மேடைகளில் பிரச்சார நட்சத்திரமாகவும் விளங்கினார். எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி கண்டாலும் எம்.ஜி.ஆர். மீது வைத்திருந்த நட்பை மாற்றிக்கொள்ளவில்லை. தேவர் இறந்தபோது அஞ்சலி செலுத்த முதலில் வந்தவர் எம்.ஜி.ஆர்.

தேவர் கடைசியாக நடித்த படங்கள் ‘வாழையடி வாழை’, ‘சிசுபாலன்’. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பாக்தாத் பேரழகி’. தந்தையின் வழியில் நின்று திரை நடிப்பைத் தொடர்ந்துவருகிறார் அவரது மகன்களில் ஒருவரான ஓ.ஏ.கே. சுந்தர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x