Published : 14 Jun 2014 12:38 PM
Last Updated : 14 Jun 2014 12:38 PM
அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்றாக இருக்கும் 'ஃப்ரெண்ட்ஸில்’ முக்கியப் பாத்திரத்தில் நடித்தவர் ஜான் ஃபேவ்ரோ. மனிதர் சிறந்த இயக்குநரும் கூட. 'அயர்ன் மேன்', 'கவ்பாய்ஸ் அண்ட் ஏலியன்ஸ்' போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் படைப்பான 'தி அவெஞ்சர்ஸ்' படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரும் கூட. பிரம்மாண்டப் படங்களுக்குப் புகழ்பெற்ற இவர் இயக்கி நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'செஃப்' (Chef).
மியாமியைச் சேர்ந்த சமையல் கலைஞர் கார்ல் கேஸ்பர் (ஜான் ஃபேவ்ரோ). புகழ்பெற்ற செஃப் ஆகவேண்டும் என்ற கனவுடன் லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள உணவகத்தில் பணிக்குச் சேர்கிறார். அந்த உணவகத்தைப் பற்றிய விமர்சனக் கட்டுரை எழுத ஒரு உணவு விமர்சகர் வரவிருக்கும் தகவல் கிடைத்தவுடன் பரபரப்பாகும் கார்ல், புதியவகை உணவுகளைச் சமைத்து அசத்திவிட வேண்டும் என்று திட்டமிடுகிறார். ஒரு மனிதன் ஆசைப்படும் அத்தனையும் சுலபத்தில் நடந்துவிடுமா என்ன? புதிய வகை உணவு வேண்டாம்; பாரம்பரியமான உணவு வகைகளைத் தயார் செய் என்கிறார் உணவகத்தின் முதலாளி. அந்த உணவு தனக்குப் பிடிக்காமல் போகவே, விமர்சகர் தன் கட்டுரையில் உணவகத்தை விளாசிவிடுகிறார்.
கோபமடையும் ஜான், விமர்சகரை ட்விட்டரில் பதம் பார்த்துவிடுகிறார். அவரது குமுறல் இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அத்துடன் வேலையை உதறிவிட்டுச் சொந்த ஊருக்குச் செல்கிறார். தனது முன்னாள் மனைவி மற்றும் மகனுடன் நல்லுறவை வளர்க்க முயல்கிறார். பின்னர், சமூக வலைத்தளத்தில் முன்பு பெற்ற எதிர்மறையான புகழ் மறைந்து அவரது புதிய நடமாடும் உணவகத்தின் புகழ் பரவுகிறது. அதற்கு அவரது மகன் உதவுகிறான்.
வரும் 20-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் ராபர்ட் டெளனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜொஹன்ஸன் போன்ற பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். எந்த வயதிலும் தன்னம்பிக்கை நம்மை கைவிடாது என்பதை சொல்லும் ஃபீல்குட் படமாக செஃப் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT