Published : 29 Apr 2016 12:42 PM
Last Updated : 29 Apr 2016 12:42 PM
‘நில் பத்தி சன்னாட்டா’ என்பது எதற்குமே லாயக்கில்லாதவர்களைக் குறிப்பிடும் இந்திப் பழமொழி. விளிம்பு நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையைக் கல்வியால் மட்டுமே மாற்ற முடியும் என்பதைப் படத்தில் அழகாகப் பதிவுசெய்கிறார் அறிமுக இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி.
சந்தா (ஸ்வரா பாஸ்கார்), அவளுடைய மகள் அப்பு என்கிற அபேக்ஷா (ரியா ஷுக்லா) ஆகியோரின் கதையை இயல்பாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்கிறது படம் . சந்தா ஒரு வீட்டு வேலைக்காரி. அப்பு அரசுப் பள்ளியில் பத்தாவது படிக்கிறாள். அப்புவைப் படிக்கவைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற கனவில் சந்தா, டாக்டர் திவான் (ரத்னா பதக் ஷா) வீட்டில் காலையில் வேலைபார்க்கிறாள். பிறகு, ஷு ஃபேக்டரியிலும், மசாலா கிடங்கிலும், சலவைத் தொழிலாளியாகவும் வேலைபார்க்கிறாள்.
அப்பு, படிப்பில் ஆர்வமில்லாமல் பதின் பருவத்துக்கே உரிய குறும்புகளோடும் சேட்டைகளோடும் திரிகிறாள். அவளுக்குக் கணக்கு என்றாலே அலர்ஜி. அப்புவைப் படிக்க வைப்பதற்கு சந்தாவும் எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைகின்றன. “டாக்டரோட மகன் டாக்டராவான். இஞ்சினீயரோட மகன் இஞ்சீனியராவான். வேலைக்காரியோட மகள் வேலைக்காரிதானே” என்று திரும்பத் திரும்பச் சொல்லி சந்தாவைக் காயப்படுத்துகிறாள் அப்பு.
மகளை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று வேலைகளைப் பார்த்தபடி டாக்டர் திவானிடம் புலம்புகிறாள் சந்தா. டாக்டர், அப்புவைப் படிக்கவைக்க ஆலோசனைகள் சொல்கிறார். அதில் ஒரு யோசனையாகச் சந்தாவை அப்பு படிக்கும் பள்ளியிலேயே சேர்த்து பத்தாவது படிக்கச் சொல்கிறார். சொல்வதோடு மட்டுமல்லாமல் அப்புவின் பள்ளி முதல்வர் வஸ்தவா குப்தாஜியை (பங்கஜ் திரிபாதி) கிட்டத்தட்ட மிரட்டி, அதே பள்ளியில் சந்தாவுக்கு சீட்டும் வாங்கிக்கொடுத்துவிடுகிறார். இதனால் ஏற்படும் விளைவுகள்தான் ‘நில் பத்தி சன்னாட்டா’.
முதல் பாதி பிரமாதமாக நகர்கிறது. இது பெண்களின் பிரச்சினைகளை மையப்படுத்தும் கதையல்ல. ஆனால், முக்கியக் கதாபாத்திரங்கள் எல்லாமே பெண்கள். தன் மகள் தன்னைப்போல் வேலைக்காரியாக மாறிவிடக் கூடாது என்று போராடும் ஒரு பெண்ணின் மனோதிடத்தைப் படம் அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. பெண்கள் எல்லோரும் அன்போடும், நட்போடும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். கடினமாக உழைக்கிறார்கள். நடனமாடுகிறார்கள். வாழ்க்கையில் கஷ்டங்கள் இருந்தாலும் புலம்பாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்.
சந்தாவுக்கும், அப்புவுக்குமான காட்சிகளும், சந்தாவுக்கும், எஜமானியம்மாவுக்குமான காட்சிகளும் மாயாஜாலங்களை நிகழ்த்துகின்றன. அம்மாவுக்கும் பதின்பருவ மகளுக்குமான உறவு எந்த அளவு சிக்கலானது என்பதை இயக்குநர் அஷ்வினி துணிச்சலான காட்சிகளுடன் பதிவுசெய்கிறார். பதினைந்து வயது மகள் என்னென்ன கேள்விகள் கேட்பாள், எப்படியிருக்க விரும்புவாள் என்பதையெல்லாம் யதார்த்தமாகப் பதிவுசெய்கிறார்.
ஆனால், படத்தின் இரண்டாம் பாதி, இதை வழக்கமான பாலிவுட் படமாக எண்ணவைத்துவிடுகிறது. அப்புவிடம் ஏற்படும் திடீர் மாற்றம், இறுதிக் காட்சியில் சந்தாவைப் பற்றி வரும் குறிப்பு, கடவுளின் சிறந்த படைப்பான அம்மாவுக்குச் சமர்ப்பணம் என்று போடுவது ஆகியவை படத்தை முழுமையாக ரசிக்கவிடாமல் செய்துவிடுகிறது. சாந்தாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றம் அதுவரையிலான திரைக்கதையின் பயணத்துக்குப் பொருந்தவில்லை. மகள்கள் மட்டுமே அம்மாக்களின் கனவு இல்லை, அம்மாக்களுக்கும் தனியாக கனவு இருக்கலாம் என்பதை இந்தப் படம் வலியுறுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
சந்தாவின் பாத்திரத்தில் ஸ்வரா பாஸ்கர் அப்படியே பொருந்தியிருக்கிறார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இயல்பான நடிப்பால் மனதில் பதிகிறார். அப்புவாக நடித்திருக்கும் ரியா ஷுக்லாவுக்கு இதுதான் முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. அப்படியொரு தேர்ந்த நடிப்பு. பள்ளி முதல்வராகவும், கணக்கு வாத்தியாராகவும் நடித்திருக்கும் பங்கஜ் திரிபாதி வரும் காட்சிகளில் திரையரங்கம் சிரிப்பலையால் அதிர்கிறது.
இரண்டாம்பாதி திரைக்கதையில் சில போதாமைகள் இருந்தாலும், கல்வியாலும், கடின உழைப்பாலும் விளிம்புநிலை மக்களின் கனவுகளும் நனவாகும் என்ற நம்பிக்கையை விதைத்திருப்பதால் ‘நில் பத்தி சன்னாட்டா’வை நிச்சயம் வரவேற்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT