Last Updated : 11 Mar, 2016 11:00 AM

 

Published : 11 Mar 2016 11:00 AM
Last Updated : 11 Mar 2016 11:00 AM

திரையில் மிளிரும் வரிகள் 5 - ஆசையெனும் தொட்டிலில் ஆடும் மனம்

ஆசையே இந்த உலகத்திலுள்ள துயர்கள் அனைத்துக்கும் காரணம் என்றார் புத்தர். “ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்; ஈசேனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்” என்கிறார் திருமூலர்.

“போதுமென்ற மனமே பொன்செயும் மருந்து” என்பது தமிழர் வாழ்வியல் சிந்தனையின் வெளிப்பாடு.

இருப்பினும் ஆசைகளற்ற சமூகம் அடுத்த படிக்கட்டை நோக்கி முன்னேறாது என்பதுதான் உண்மை. இருப்பதை வைத்துக்கொண்டு திருப்திப்பட வேண்டும் என்று மனித சமூகம் முடிவு கட்டியிருந்தால் எந்த வளர்ச்சியையும் எட்டிப் பிடித்திருக்க முடியாது. அறிவைப் பெருக்க வேண்டும் என்ற ஆசையை வேண்டாம் என்று யாராவது சொல்ல முடியுமா?

இராமாயணத்தைப் பாடுவதற்கு முற்பட்ட கம்பன் தன்னுடைய ஆசையை ‘ஒரு பூசை நக்குபு புக்கென ஆசைபற்றி அலையலுற்றேன்’ என்கிறான். பாற்கடலை உற்றுப் பார்த்த பூனை அதை நக்கி நக்கிக் குடிக்கப்பார்த்த நிலைதான் தன்னுடைய நிலையும் என்கிறது கம்பன் பாடல். கம்பனின் ஆசை மேலிட்டதால்தானே கம்பராமாயணம் தமிழர்களின் சொத்தானது. இருப்பினும் ஆசையும் துயரமும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாய் மனிதனை அலைக்கழிக்கின்றன.

‘அவன்தான் மனிதன்’ திரைப்படத்தில் “ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா; ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா” என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார். இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டு தெருவுக்கு வந்த கதாநாயகன் சிவாஜி கணேசன் பாடுவது போன்ற இப்பாடல் ஒரு தத்துவமாகவே அமைந்துவிட்டது. ஆசை ஆட்டி வைக்கிறது. அதனால் அதைத் தொட்டில் என்கிறார் கண்ணதாசன்.

எல்லாம் அவன் செயல்; நம் கையில் என்ன இருக்கிறது என்று நம்புபவர்கள் தங்களை ஆட்டி வைப்பது இறைவன்தான் என்கிறார்கள்.

அதனால்தான் திருநாவுக்கரசர்,

‘ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே

உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே

பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே

காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே

காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே’

என்று பாடினார்.

அவர் வழியொற்றியே அருட்பிரகாச வள்ளலாரும்,

‘பாட்டுவித்தால் பாடுகின்றேன்

பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்

கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்

குழைகின்றேன் குறித்த ஊணை

ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால்

உறங்குகின்றேன் உறங்கா தென்றும்

ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச்

சிறியேனால் ஆவ தென்னே’

என்று தன் செயல்கள் எல்லாவற்றுக்கும் இறைவனையே பொறுப்பாக்குகிறார்.

சைவ மரபில் வந்த இப்பாடல்கள் கண்ணதாசனிடம் வேறொரு வடிவம் பெறுகின்றன. கண்ணனைக் கைகாட்டி,

‘நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு.

என் நிழலில்கூட அனுபவத்தின் சோகம் உண்டு.

பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே.

ஆனால் நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே’

என்று அழுகிறார்.

சிவாஜி கணேசனின் பாத்திரம் மகாபாரத கர்ணனுக்கு நிகரானது. பாசத்தையும் நட்பையும் அறுக்க முடியாமல்தானே கர்ணன் வீழ்ந்தான். துரியோதன நட்பும் அவனை செஞ்சோற்றுக் கடனாளியாக்கியது.

‘பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்

அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்

நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்

இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்...

என்று போகிறது பாடல். கொடுத்தே பழக்கப்பட்டவன் கர்ணன். உடலோடு ஓட்டிப் பிறந்த கவசத்தையும் காதில் கிடந்த குண்டலத்தையும் குருதி சொட்டச் சொட்ட அறுத்து இந்திரனிடம் கொடுத்துவிட்டுத் துன்பத்தை அனுபவித்தவன். அவன் யாரிடம் சென்று யாசகம் கேட்க முடியும்? நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளத்தையே அவன் கேட்கிறான். அதனால்தானே கிருஷ்ணனே அவனிடம் சென்று யாசகம் கேட்டு அவனை உயர்த்துகிறான்.

எல்லாவற்றையும் இழந்தாலும் அந்த மனம் துயரப்படவில்லை. அந்த நிலையில்தான்,

‘கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்

அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்

உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா

அதை உணர்ந்துகொண்டேன் துன்பம்

எல்லாம் மறையும் கண்ணா’

என்று பாடுகிறான்.

மனமே மனித வாழ்வின் இன்ப துன்பங்களைத் தீர்மானிக்கிறது. தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுக்கொண்டு சஞ்சலம் கொள்கிறது. பெரிதாக ஆசைப்பட்டு ஏங்குகிறது.

அதைக் கட்டுப்படுத்திவிட்டால் துயரம் பறந்தோடுகிறது. சிவபெருமான் கையில் மானை வைத்திருப்பதன் தத்துவமே ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கும் மனதைக் கட்டுப்படுத்தி வைப்பதைக் காட்டுவதுதான். ஆசைக்கு அடிமைப்படும் மனம் அமைதிக்காகவும் அலைகிறது. ஆசையை அளவோடும் மனதைத் தன் கட்டிலும் வைத்திருக்கும் மனிதனே மாமனிதனாகிறான்.

தொடர்புக்கு: bagwathi@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x