Published : 13 Jun 2014 11:48 AM
Last Updated : 13 Jun 2014 11:48 AM
‘உஸ்தாத் ஹோட்டல்’ மலையாளத் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதிய அஞ்சலி மேனன் எழுதி - இயக்கியிருக்கும் படம் ‘பெங்களூர் டேஸ்’. சகோதர, சகோதரிகளின் பிள்ளைகளுக்கிடையே உள்ள அண்ணன், தங்கை, அத்தான் போன்ற உறவுகளால் கிடைக்கும் மகிழ்ச்சியை அவ்வுறவுகளால் அமையும் சேட்டையை, தோழமையை, பிரிவினையை ‘பெங்களூர் டேஸ்’ அழகாகப் பதிவு செய்துள்ளது.
முதல் காட்சியில் நஸ்ரியாவிற்கு பஹாத்துடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பெங்களூரில் வேலைபார்க்கும் எம்.பி.ஏ. படித்த அழகான மாப் பிள்ளை என்பதால் மேற்படிப்பு ஆசையைய விட்டுவிட்டு மணமுடிக்கச் சம்மதிக்கிறார். சொந்த கிராமத்தில் விவசாயம் பார்க்க வேண்டும் என விழையும் நிவீனுக்கும் பெங்களூரில் கிடைக்கும் ஐ.டி. வேலை, மாடர்ன் நாடோடியாகக் கொட்டம் அடிக்கும் துல்கருக்கும் பெங்களூர் நகரத்தின் மீது அளவு கடந்த மோகம். இப்படி வெவ்வேறு காரணங்களால் இந்த உறவுவழி சகோதர/சகோதரிகள் பெங்களூருக்கு வருகின்றனர். பெங்களூரில் செலவழிக்கும் நாட்கள் இவர்கள் வாழ்க்கையின் பொன்னான தருணங்களாய் அமைந்து வாழ்க்கைத் தடத்தை எப்படி மாற்றி அமைத்தன என்பதுதான் பெங்களூர் டேஸ் படத்தின் ஒருவரிக்கதை.
பஹாத் பாசில், நஸ்ரியா நஸீம், துல்கர் சல்மான், நிவீன் பாலி, பார்வதி, இஷா தல்வார், நித்யா மேனன் என மலையாளத் திரையுலகைக் கலக்கிக்கொண்டிருக்கும் இளமைப் பட்டாளம் அனைவரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
கால்களை இழந்த வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பார்வதி, தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சால் மனதை உரமடையச் செய்பவர். இவர்மீது துல்கர் கொள்ளும் காதல் ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் பார்வையற்ற வானொலித் தொகுப்பாளராக வரும் பசுபதி மீது கஜாலா கொண்ட காதலை நினைவுபடுத்துகிறது. பஹாத்திற்கும் நஸ்ரியா வுக்கும் இடையேயான உறவு ‘ராஜா ராணி’ படத்தில் ஆர்யா, நயன்தாரா உறவினை நினைவுபடுத்துகிறது. இதெல்லாம் தற்செயலான ஒற்றுமைகள் என்று கூறலாம். ஆனால் நேர்த்தியான திரைக்கதையாலும் எழுத்தி னாலும், இளம் நடிகர்களின் முதிர்ச்சியான நடிப்பினாலும் பெங்களூர் டேஸ் வணிக அம்சங்கள் தேவைப்படாத ஃபீல் குட் மூவியாகக் கவர்கிறது.
படம் முழுதும் வலம் வரும் நஸ்ரியாவைக் காட்டிலும் பாப்கட் செய்யப்பட்ட முடியுடன், விழியோரம் கொஞ்சம் நீர்த் துளியும் இதழோரம் இழையோடும் புன்னகையும் சுமந்து வரும் பார்வதி நடிப்பில் கவர்கிறார். படிந்த தலையும், வெள்ளந்தித்தனம் நிறைந்த வசன உச்சரிப்பும் நிவீன் பாலியைத் தனித்து காட்டுகின்றன.
நல்ல கதைகளை வைத்துக்கொண்டு ஓரு வீடு, சில தென்னை மரங்கள் இவற்றுடன் திரைப்படங்களை உருவாக்குபவர்கள் மலையாள சினிமாக்காரர்கள் என்ற பிம்பத்தை ‘பெங்களூர் டேஸ்’ போன்ற மளையாளப் படங்கள் தற்போது மாற்றி வருகின்றன.
‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தை இயக்கிய அன்வர் ரஷீத் இப்படத்தின் தயாரிப்பாளர், சமீபகால புதியதலைமுறை மலையாளப் படங்களில் கவனிக்கவைக்கும் சமீர் தாஹீர்தான் இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவாளர்.
ஒரு ஜனரஞ்சக சினிமா வுக்குத் தேவைப்படுகிற பகட்டுத்தனங்கள் இப்படத்திலும் உள்ளன. ஆனால், சினிமாவுக்கே உரித்தான அந்தப் பகட்டுத் தனங்கள் உறுத்தலும் சினிமாத்தனமும் குறைவானதாக இருக்கின்றன.
‘பெங்களூர் டேஸ்’, வழக்க மாகக் கடந்து போகும் நாட்களில் தனித்து நிற்கும் நிறைவான தருணங்களின் ஆல்பம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT