Published : 22 Jun 2014 01:01 PM
Last Updated : 22 Jun 2014 01:01 PM
“வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்”
என்னை நிழலாய் தொடர்ந்த அப்பாவுக்கு நான் என்ன செய்திருக்கிறேன்?
நான் சினிமாவுக்கு போறேன் என்று சொன்னபோது, அப்பா வால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இயக்குநர் ஆவ தென்பது ஏதோ ஆளில்லாத தீவை நோக்கிய பயணம் போலத்தான் அவருக்கு தோன்றியது. இருந் தும் வீம்பாகத்தான் கிளம்பி சென் னைக்கு வந்தேன் இங்கு வந்த பிறகு, எதார்த்தம் முகத்தில் அறைந் தது. “நமக்கு சினிமாவெல்லாம் வேண் டாம், நீ ஊரோட வந்து அண்ணனோட சைக் கிள் கடையில உதவியா இரு” என எப்போது ஊருக்கு போனாலும் சொல்வார். இதை தவிர்க்க ஊருக்குப் போவதையே தவிர்த்தேன்.
என் அப்பாவின் ஆசைகள் ரொம்ப எளிமை யானவை. எனக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும், இரண்டாவது மருமகள் கையால் ஒரு வேளை சாப்பிடணும், பேரன் பேத்தி களை கொஞ்சணும், நேரம் வந்ததும் கண்ணை மூட ணும், அவ்வளவுதான். இது எதையும், என்னால் செய்யவே முடியவில்லை. எப்போது ஊருக்குப் போனாலும் என்னிடம், “மணி பார்க்கணும்யா, ஒரு வாட்ச்சு வாங்கிக் கொடுப்பா” என்பார். அதேபோல அவருக்கு செய்திகள் மற்றும் பழைய பாடல்கள் கேட்பதும் மிகவும் பிடிக்கும். அதனால், “ஒரு ரேடியோ வாங்கி கொடுப்பா... பழசு ஓட மாட்டேங்குது” என்று கேட்டுக்கொண்டே இருந் தார். எனது அன்றைய சூழலில், நமக்கு அதுவும் கஷ்டம். ‘வாங்கித் தரேன், வாங்கித் தரேன்’ என்று சொல்லி சொல்லி காலம் தாழ்த்தி வந்தேன். எங்க போயிடப் போறாரு, பெருசா பண்ணலாம்னு ஒரு நினைப்பு. இனி, நான் என்ன நினைத்தாலும் வாங்கிக் கொடுக்க முடியாது. அதை வாங்கிக்கொள்ள, என் தந்தைதான் இல்லையே!
ஒரு தந்தைக்கு மகன் என்னவெல்லாம் செய்யலாம். அவர்களின் தேவைகளை பார்த்து பார்த்து கவனிக்கலாம். வயதான காலத்தில் தாய் தந்தையர் விரும்பும் இடங்களுக்கு அழைத்து செல்லலாம், அவர்களின் நிறைவேறாத ஆசை களை கேட்டு கேட்டு நிறைவேற்றலாம். ஆனால், எனக்கு கிடைத்த வாய்ப்பு வித்தியாசமானது.
என்னால், என் தந்தைக்கு செய்ய முடிந்த ஒரே ஒரு விஷயம், ஊரே மெச்சும் படி, அவரின் இறுதி ஊர்வலத்தை நடத்தியதுதான். கிராமங்களை பொறுத்தவரை, ஒருவர் வாழ்ந்த வாழ்வின் குறியீடாகத்தான் இறுதி ஊர்வலத்தை பார்ப்பார்கள். அந்த வகையில், எனது தந்தையின் இறுதி ஊர்வலத்தை ஊரே மெச்சியது. ஆம், எனது சொந்த ஊரான விராச்சிலை மற்றும் அத னைச் சுற்றி உள்ள கிராமங்களில்தான் ‘பசங்க’ படத்தை முழுவதும் படமாக்கினேன். ஊரே வந்து நின்று வேடிக்கை பார்க்கிறது. ஆனால் என் அப்பா மட்டும் வீட்டில் முடங்கி கிடக் கிறார். அவர் எழுந்து வந்து என்னுடைய ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கமாட்டாரா என்ற ஏக்கத்தோடுதான் என் ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கும் தொடங்கும். ‘பசங்க’ படத்தின் இன்டர்வெல் காட்சியை ஷூட்டிங் செய்து கொண்டி ருக்கிறேன். முதல்நாள் பாதி காட்சி முடிந்து விட்டது. மறுநாள் மீதி உள்ள பகுதியை படமாக்க கிளம்பிக்கொண்டிருக்கிறேன். என் அக்காவிடம் இருந்து போன் வருகிறது, எடுத்தால் மறுமுனையில் அக்கா பயங்கரமாய் அழுகிறது. ‘என்னாச்சு அக்கா’ என பதறுகிறேன். ஒன்றுமே சொல்லாமல் அழுது கொண்டே இருக்கிறது. எனக்கு புரிந்துவிட்டது, என் தந்தையின் உயிர் பிரிந்து விட்டது. கடைசி வரை தன் மகன் என்ன ஆனான், என தெரிந்து கொள்ளாமலே என் அப்பா என்னைவிட்டு போய்விட்டார். ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வீட்டுக்கு ஓடுகிறேன். எனது தந்தையின் தலைமாட்டில் உறவினர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள். எனது வாழ்வின் முதல் தோழன், தன் உயிரில் இருந்து என் உயிரை கொடுத்த, என் அப்பாவை மௌனமாய், சடலமாய் பார்த்த அந்த நொடியில் கண்ணீர் உடைத்துக்கொண்டு வருகிறது.
எங்களை காப்பாற்ற, பங்காளியிடம் சென்று கூலி வேலை பார்த்து, அவர் திட்டிய சொல்லை தாங்க முடியாமல் மறுநாளே கள்ளு விற்க கிளம்பி, பாசத்தையும் ரோசத்தையும் கலந்து எங்களை வளர்த்த தகப்பனுக்கு, இனி அவர் ஆசை தீர நாங்கள் ஒன்றுமே செய்து பார்க்கவே முடியாதா?
ஷூட்டிங்கில் இருந்த ஒவ்வொரு யூனியன் ஆட்களும், கையில் ஆளுயர மாலைகளுடன் திரளத் தொடங்கினர். அத்தனை பேரும் கையில் மாலைகளோடு வர மாலை மலையென குவிகிறது, எனது தந்தையின் உடலே ஒரு கட்டத்தில் மலர் மாலைகளுக்குள் புதைந்து விட்டது. இருநூறு மாலைக்கு மேல் இருக்கும். இன்னொரு பக்கம், வேட்டு சத்தம் காதை பிளக்க கப்பல் தேர் போன்று வடிவமைக்கப்பட்ட பாடையில் என் தந்தையை கிடத்த இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தின், முன் சசிகுமார் சார், சமுத்திரக்கனி அண்ணன், ஒளிப்பதிவாளர் கதிர், நடிகர்கள் விமல், வேகா, ஜே.பி.சார் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட யூனியன் ஆட்கள் அணிவகுக்க, பின்புறம் அவ்வளவு கார்களோடு, ஒரு எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. போன்றவர்களின் மரண ஊர்வலம் போல இருந்தது அது. ‘நம்ம சின்னையாவுக்கு இப்படி ஒரு சாவா? ஒரு ஊரேலயா திரண்டிருக்கு... இவ்வளவு விமரிசையா செஞ்சிட்டாங்களே’ என ஊரே அசந்து பேசியது. ஒரு மகனாக என் தந்தை கேட்காமலே என்னால் செய்ய முடிந்தது அது மட்டும்தான். அதுவும் கூட அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்காகவே இன்றளவும் சசிகுமார் சாருக்கு மனதளவில் நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்!
என் சிறுவயது முதல் சினிமா வயது வரை, அப்பாவிடம் அதிகம் திட்டுதான் வாங்கியிருக் கிறேன். அவருக்கு என் மேல் நம்பிக்கை இல்லாத காலகட்டம்தான் அதிகம். அப்போதெல்லாம் அவர் மேல் எனக்கு கோபம் கூட வந்திருக்கிறது. ஆனால், இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தகப்பன் ஆன பிறகுதான் தெரிகிறது, அவர் என் மேல் காட்டியது கோபம் அல்ல, அக்கறை என்று. எதைப் பற்றியும் கவலையில்லாமல் ஓட்டமாய் ஓடி கோடம்பாக்கத்தில் நமது பெயரிலும் ஒரு வெற்றியை பதிவு செய்துவிட்டு திரும்பி பார்க்கும் போது, யாரை சந்தோஷப்படுத்த ஓடினோமோ, யாரை நன்றாக வைத்து பார்க்க ஓடினோமோ, யாரிடம் நம் வெற்றியை பகிர்ந்துகொள்ள ஓடினோமோ அவர்களே இல்லை, எனும்போது வரும் வெறுமை கொடுமையானது. அது ஆளில்லா ஆரவாரமற்ற மைதானத்தில், முதல் சதம் அடிப்பது போன்றது!
‘பசங்க’ படத்திற்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளை வாங்க டெல்லிக்கு செல்கிறேன். எனது ஊரில் இருந்து, முதல் முதலில் சினிமாவுக்கு வந்து, முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்து, அதை வாங்க டெல்லி மண்ணை மிதிக்கப் போகிறேன். எனது மாமனார் சொல்கிறார், “உங்க வீட்டை டெல்லி பாண்டி வீடு, டெல்லி பாண்டி வீடுன்னு எல்லோரும் சொன்னது இனி அடுத்த தலைமுறைக்கும் தொடரப் போகுதுப்பா.. உன் தாத்தாதான் முதல்ல நம்ம ஊருல இருந்து டெல்லிக்கு போனவரு... இப்போ நீ முதல் ஆளா டெல்லிக்கு விருது வாங்கப்போற” என்ற போது சிலிர்த்துவிட்டது. இன்றும் என் முதல் படத்திலேயே நான் டெல்லிக்கு போய் தேசிய விருது வாங்கியதை, எனது தந்தையின் ஆசீர்வாதமாகவே உணர்கிறேன்.
“உன் உயிரணுவில் வரும் என் உயிர் அல்லவா, மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா, நமக்கெனவே வந்த நண்பன் தந்தை”
- நா.முத்துக்குமார்
தொடர்புக்கு: pandirajfb@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT