Published : 10 Dec 2021 03:06 AM
Last Updated : 10 Dec 2021 03:06 AM
‘‘மனித குலத்தின் மிக வீரியமான கலை வடிவம் சினிமாதான். இந்தக் கலை மூலம் நல்ல கதைகளை மனிதத்தன்மையுடன் வெளிப்படுத்த முயல்கிறேன். அதற்கான கற்றல் அனுபவமாகவே இப்பயணத்தை மேற்கொள்கிறேன்'' என்று சொல்லிப் புன்னகைக்கிறார் ஜெயச்சந்திர ஹாஷ்மி.
சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்தில் துணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். மௌன மொழி, களவு, அறம், டூ லெட் குறும்படங்கள் மூலம் சுயாதீன இயக்குநராகத் தடம்பதித்து சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவுக்கு இவரது ‘ஸ்வீட் பிரியாணி’ குறும்படம் தேர்வாகி, திரையிடப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றது.
மணிப்பூர் சினிமாவின் ஐம்பதாம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டிசம்பர் 11-ல் இருந்து 15 வரை நடைபெறும் ஐந்து நாள் திரைப்பட விழாவிலும் ‘கூழாங்கல்’, ‘அசுரன்’ திரைப்படங்களுடன் ‘ஸ்வீட் பிரியாணி’ குறும்படமும் திரையிடப்படுகிறது. இது குறித்து ஜெயச்சந்திர ஹாஷ்மியிடம் பேசினோம்.
கோவா சர்வதேச திரைப்பட விழாவும், ஸ்வீட் பிரியாணி திரையிடலும் கொடுத்த அனுபவம் எத்தகையது?
அட்டகாசமான அனுபவம். ரெட் கார்பெட், பெரிய திரையிடல், பத்திரிகையாளர் சந்திப்பு என உற்சாகமான பல தருணங்கள் நிகழ்ந்தன. நல்ல கலையை, நல்ல சினிமாவைக் கொண்டாடுகிற, அங்கீகரிக்கிற விதமாக இதை நான் பார்க்கிறேன். நாம் நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறோம் என்கிற நம்பிக்கையையும், இன்னும் நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்கிற உந்துதலையும், வேட்கையையும் ஏற்படுத்தியுள்ளது கோவா திரைப்பட விழா.
நம் ஊரில் நம் கதையைப் பார்வையாளர்கள் தொடர்பு படுத்திக்கொள்வது எளிது. வேறொரு ஊரில், வேறு மக்கள், வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் படத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு காட்சி, வசனத்தை நுட்பமாகக் குறிப்பிட்டுப் பாராட்டியது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சி தருவதாகவும் இருந்தது. விழாவில் கலந்துகொண்ட வேறு திரைப்பட விழாக்களின் பொறுப்பாளர்கள், தங்கள் மாநிலத்தில் நடக்கும் திரைப்பட விழாவுக்கும் படத்தை அனுப்பச் சொல்லி அழைப்புவிடுத்ததில் எல்லையற்ற ஆனந்தம்.
குறும்படங்கள் சினிமாவுக்கான விசிட்டிங் கார்டு மட்டுமே என்கிற அவலம், தமிழ் சினிமா சூழலில் இருக்கிறதே? மாற்று சினிமாவுக்கான கலை வடிவம் குறும்படம் என்கிற பிம்பம் கலைந்துபோய்விட்டதா?
குறும்படங்கள் சினிமாவுக்கான விசிட்டிங் கார்டு கிடையாது. குறும்படம் எனும் கலை வடிவத்தை நாமே குறைத்து மதிப்பிடுகிற, அவமானப்படுத்துகிற செயலாகத்தான் இதைப் பார்க்கிறேன். குறும்படம் என்பது தன்னியல்பாக, முழுமையான ஒரு கலை வடிவம். சினிமாவுக்குப் போகிற பாதையாக, விசிட்டிங் கார்டாக அதைப் பயன்படுத்தக் கூடாது. குறும்பட வடிவம் மூலமாக ஒரு கதையை, கருத்தை சினிமாவைவிட வீரியமாகச் சொல்ல முடியும். வலிமையான வடிவம் அது.
பெரிய படங்களில் உள்ள வணிகக் கூறுகளான நாயக பிம்பம், சமரச அம்சங்களுக்கு மாற்றாக இருப்பதுதான் மாற்று சினிமா. அசலான சில விஷயங்களை எளிமையாக, வலிமையாகச் சொல்ல முடிவதுதான் மாற்று சினிமா என்றால், அது குறும்படங்களில்தான் சாத்தியமாகிறது. சினிமாவின் இலக்கியப் பிரதி குறும்படங்கள்தான். இங்கே கதை, கருவே நாயகன், ஆன்மா. ஒரு படைப்பாளிக்கான முழு மரியாதை கிடைக்கிற இடம் குறும்படம் என்பது 100 சதவீத உண்மை. சுதந்திரத்தோடு உருவாகும் திரைப்படங்கள்தான் சிறந்தவையாகக் கொண்டாடப்படுகின்றன. இதுபோன்ற விழாக்களில் அந்த உண்மை நிரூபிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
ஆனால், குறும்படங்கள் ஆரோக்கியமாகத்தான் அணுகப்படுகின்றனவா? நிறைய மசாலா குறும்படங்களும் வருகின்றனவே?
குறும்படங்களுக்கு கமர்ஷியலான பிம்பம் வந்துவிட்டதையும் மறுக்க முடியாது. சினிமாவுக்குப் போவதற்கான டிக்கெட்டாகவோ, யூடியூபில் பதிவேற்றி லைக்ஸ், பார்வைகளை அள்ளுவதற்காகவோ, சென்சேஷனலான விஷயங்கள் / பெண்களை மையமாகக் கொண்டு குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்லப்போனால் மசாலா படங்களைப் போலவே மசாலா குறும்படங்களும் வந்துவிட்டன. அதே நேரம், குறும்படங்களுக்கான தளத்தில் எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை என்பதை கோவா போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் உணர முடிகிறது.
பல வருடங்களுக்கு முன்பே பீ. லெனின் சார் குறும்படம் இயக்கி தேசிய விருது பெற்றார். எனவே, பயன்படுத்துபவர்களின் கைகளில்தான் அது உள்ளது. அந்த விதத்தில் குறும்படங்கள் எப்போதும் ஆரோக்கியமானவைதான்.
குறும்பட இயக்குநர்கள் சர்வதேச திரைப்பட விழாக்களைப் பயன்படுத்திக் கொள்வது எப்படி? திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்கான வழிகள் என்ன?
இப்போது திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக்கொடுக்க, வழிகாட்ட நிறைய இணையதளங்கள் உள்ளன. தேடல் இருந்தால் எளிதில் கண்டடையலாம். பணம் இல்லாவிட்டாலும், இலவசமாகவே குறும்படங்களை அனுப்பும் வசதி கொண்ட பல விழாக்கள் உள்ளன.
என்னுடைய டூ லெட் குறும்படத்தை ஜெர்மனி, இத்தாலி, தென்கொரியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் திரைப்பட விழாக்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லாமல்தான் அனுப்பி விருதுகளை வென்றேன். உலக அளவிலான திரைப்பட விழாக்களில் திரையிடக் குறும்படம் தேர்வாகிவிட்டால், அந்த அனுபவங்கள் பெரும் திறப்பினை ஏற்படுத்தும். அங்கே குறும்படம், சினிமா என்கிற பேதம் பார்க்கப்படுவதில்லை. படைப்பின் தன்மையை அறிந்து கொண்டாடுகிறார்கள். பெரிய அளவில் அங்கீகாரம், ரெஸ்பான்ஸ், மரியாதை கிடைக்கும். கலை மேல் பெரும் காதலையும் ஒரு படைப்பாளியாக நமக்கே பெரும் நம்பிக்கையையும் அவ்விழாக்கள் தந்தனுப்பும்.
மொழிக்குள், நிலத்துக்குள் சினிமாவைச் சுருக்க முடியாது. அது எல்லா மக்களிடமும் உரையாடுகிற பலம் பொருந்திய வடிவம். திரைமொழியும் உணர்வுகளும் திறம்படக் கையாளப்பட்டால் எல்லைகளையும், பாகுபாடுகளையும் கடந்து உலகத்தின் எந்த மூலைக்கும் சென்று நம் படங்கள் உரையாடும்.
குறும்படம் - சினிமா இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும் மனோபாவம்தானே இங்கே உள்ளது? குறும்படத்தையே இழுத்துஇழுத்து சினிமாவாக ரெண்டு மணி நேரம் நீட்டிப்பதும் நடக்கிறதே?
‘சிறுகதை நல்லா இருக்கு, நாவல் எப்போ எழுதுவீங்க?’ என்று பெரும்பாலும் கேட்க மாட்டோம். ஆனால், குறும்படம் எடுத்துவிட்டால், ‘எப்போ சினிமா பண்ணப் போறீங்க?’ என்று கேட்கிறோம். இந்தக் கேள்வி ஒழிய வேண்டும். சிறுகதை, நாவல் மாதிரி குறும்படமும் திரைப்படமும் வெவ்வேறு கலை வடிவங்கள். ஒன்றின் நீட்சி அல்ல மற்றொன்று.
சினிமாவைப் பார்த்து இப்போது குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதுதான் பிரச்சினை. நாயகன், நாயகி அறிமுகம், சந்திப்பு, காதல் காட்சிகள் என்று சினிமாவின் சுருக்கப்பட்ட வடிவமாகக் குறும்படத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். குறும்பட வடிவத்தின் தன்மை, வீரியம், பலம் வேறு. அதை உணர்ந்தால்தான் புதிய எல்லைகளைத் தொடமுடியும். வாழ்வில் இருந்து கதைகள் உருவாக வேண்டும். சிறுகதை, நாவல் மாதிரி கதையின் தன்மைதான் வடிவத்தைத் தீர்மானிக்க வேண்டும். அதில் சமரசம் கூடாது.
ஓடிடியில் குறும்படங்களை ரிலீஸ் செய்தால் வரவேற்பு கிடைக்குமா? தனி பிளாட்ஃபார்மாக குறும்படங்கள் வளராதது ஏன்?
யூடியூப் சேனல்களில் குறும்படங்கள் பெரும்பாலும் இலவசமாகக் கிடைப்பதால் தனியாகக் காசு கொடுத்துப் பார்க்க விரும்பமாட்டார்கள். ஆனாலும், தரமான குறும்படங்களை அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட பெரிய ஓடிடி தளங்களில் வெளியிடும்போது பெரிய விஷயமாக மாறும். நல்ல ரீச் கிடைக்கும். வெப் சீரிஸ் போன்றவடிவங்களின் வரவும் எழுத்திற்கான, மாற்று வடிவங்களுக்கான சாத்தியங்களை அதிகப்படுத்தியுள்ளன.
குறும்பட வியாபாரம், வணிக சந்தைக்கான வாய்ப்புகள் என்ன?
அரசு சார்பிலோ, ஆர்வலர்கள், அமைப்புகள் மூலமாகவோ சிறு திரையரங்குகள் அமைத்து 50 ரூபாய்க்கு ஒரு குறும்படமோ, 100 ரூபாயில் 2 அல்லது 3 குறும்படங்களையோ வெளியிடலாம். யூடியூபில் பணம் செலுத்தி குறும்படம் பார்க்கும் வசதியை உருவாக்கலாம். கேரளா, கோவா, ஜெய்ப்பூரில் குறும்பட விழாக்களை நடத்துவது போல் தமிழக அளவில் நிறைய விழாக்களை நடத்தலாம். குறும்படங்களுக்கு வணிக மதிப்பு வந்துவிட்டால் குறும்படக் கலைஞர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.
உங்களுடைய அடுத்த கட்டப் பயணம்? சினிமா முயற்சிகளுக்கு இடையில் குறும்படம் இயக்குவது தொடருமா?
ஒரு நல்ல தயாரிப்பாளரிடம் திரைப்படத்திற்கான கதை கூறப்பட்டு, ஓகே ஆகியுள்ளது. அடுத்தகட்ட நகர்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. 2022-ல் இயக்கிவிடுவேன். திரைப்படங்களில் செய்ய முடியாத பல விஷயங்களைக் குறும்படங்களில் செய்ய முடியும். குறும்படங்களுக்கான எல்லைகள் அசாத்தியமானவை. அதனால், திரைப்படம் எடுக்க ஆரம்பித்தாலும் குறும்படங்கள் இயக்குவதும் நிச்சயம் தொடரும். அதை நிறுத்தமாட்டேன். ஏனென்றால், கிரியேட்டிவிட்டி, தனித்துவத்தைத் தக்கவைக்க, ஒரு படைப்பாளி தனக்குத்தானே புத்துணர்வூட்டிக் கொள்ள குறும்படங்களைவிடச் சிறந்த வடிவம் எதுவும் இல்லை.
தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT