Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM
சிறுவயது முதலே அம்மாவின் செல்லப்பிள்ளையாக வளர்கிறார் முஹம்மது அலி என்கிற குஞ்சாலி மரைக்காயர். அவருக்குத் திருமணம் நடப்பதற்கு முதல் நாள், மணப்பெண் உட்பட ஒட்டுமொத்த மரைக்காயர் குடும்பத்தையும் போர்த்துகீசிய படைகளின் உதவியுடன் எதிரிகள் கொல்கின்றனர். அந்த தாக்குதலில் தனது சித்தப்பாவுடன் தப்பித்து ஒரு நாடோடியைப் போல் வாழ்கிறார் நாயகன்.
யார் கண்ணிலும் படாமல், ஏழைகளின் காவலனாக இருந்து, ஆள்பவர்களை ஆட்டுவிக்கிறார். போர்த்துகீசியப் படைகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் சாமுத்ரி அரசர், மரைக்காயரோடு கைகோர்க்கிறார். எதிரிகளின் கடற்படைகளை வீழ்த்தி, சாமுத்ரி அரசவையில் கடற்படைத் தளபதியாகவும் மரைக்காயர் பொறுப்பேற்கிறார். இதற்கிடையில் மரைக்காயருக்கும் சாமுத்ரி அரசவைக்கும் விரிசல் ஏற்பட ஒரு காதல் காரணமாகிறது. இதன் பின்னர் என்னவானது என்பதே ‘மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்’ படத்தின் கதை.
வரலாற்றுச் சம்பவங்களை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தில் பிரம்மாண்டங்களைக் காட்சிகளுக்குள் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் ப்ரியதர்ஷன்.
குஞ்சாலி மரைக்காயராக, ஒட்டுமொத்த படத்தையும் ஒற்றை ஆளாகத் தாங்கிப் பிடிக்கிறார் மோகன்லால். சின்னச் சின்ன மேனரிசங்களிலும்கூட, நாம் அறிந்திராத குஞ்சாலி மரைக்காயர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று நம்ப வைத்து அசத்துகிறார். இவருடன் நெடுமுடி வேணு, சுனில் ஷெட்டி, அர்ஜுன், அசோக் செல்வன், பிரபு, கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், ஹரீஷ் பேரடி என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள். அனைவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் கனமறிந்து நிறைவாகச் செய்துள்ளனர்.
இளவயது மரைக்காயராக வரும் ப்ரணவ் மோகன்லாலுக்கு இது பேர் சொல்லும் படமாக இருக்கும். குறைந்த நேரமே படத்தில் வந்தாலும் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார்.
மிரட்டும் நட்சத்திரத் தேர்வு, அசரடிக்கும் கலை இயக்கம் ஆகிவற்றுடன் அட்டகாசமாக போட்டிப்போட்டுள்ளது விஷுவல் எபெஃக்ட்ஸ், கிராஃபிக்ஸ் பங்களிப்பு. ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ போன்ற ஹாலிவுட் படங்களுக்கு இணையாகப் போர்க்கள காட்சிகளை பிரம்மாண்டமாகவும் உயிரோட்டத்துடனும் உருவாக்கியதில் கிராஃபிக்ஸ் குழுவினரின் உழைப்பு வியக்கவைக்கிறது. கலை இயக்குநர் சாபு சிரில், ஒளிப்பதிவாளர் திரு ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள். படத்துக்கு இசை - ரோனி நபேல். பின்னணி இசை - ராகுல் ராஜ் , அன்கித் சூரி ,லில் இவான்ஸ் ரோடர் என மூன்று பேர் கூட்டுப் பங்களிப்பு செய்துள்ளனர். கதைக் களத்தின் காலகட்டம், பிரம்மாண்டம் ஆகியவற்றை உணர்ந்து அதைப் பின்னணி இசையில் உயிர்பெறச் செய்துள்ளனர்.
மெய்சிலிர்க்க வைக்க வைக்கும் போர்க்களக் காட்சிகளும் வரலாற்றின் கதை மாந்தர்களும் நம்மை அக்காலகட்டத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். படத்தின் நீளத்தைச் சற்று குறைந்திருந்தால் இன்னும் சிறந்த திரை அனுபவம் சாத்தியப்பட்டிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT