Last Updated : 11 Mar, 2016 09:26 AM

 

Published : 11 Mar 2016 09:26 AM
Last Updated : 11 Mar 2016 09:26 AM

திரைப் பார்வை: இதுவும் தனிமனித உரிமைதான்! - அலிகர்

ஹன்சல் மேத்தா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘அலிகர்’ திரைப்படம், தனிமனிதப் பாலியல் உரிமைக்கான குரலை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது. ‘சிட்டி லைட்ஸ்’, ‘ஷாஹித்’ படங்களைத் தொடர்ந்து ஹன்சல் மேத்தாவின் மற்றுமொரு முக்கியமான படம் ‘அலிகர்’.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீநிவாஸ் ராமச்சந்திர சிரஸ், தன்பாலின உறவாளர் (Homosexual) என்ற காரணத்துக்காகப் பல்கலைக்கழகத்திலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். நீதிமன்றம் பணியிடை நீக்கத்தை ரத்துசெய்து தீர்ப்பளித்த ஒரே வாரத்தில் மர்மமான முறையில் சிரஸ் இறந்துவிடுகிறார்.

பிப்ரவரி 8 முதல் ஏப்ரல் 7, 2010 வரையிலான டாக்டர் சிரஸின் வாழ்க்கையைக் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, திரையில் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர். முற்றிலும் எதிர்ப்பான சமூகச் சூழலில் வாழும், அறுபதுகளில் இருக்கும் ஒரு மனிதனின் தனிமையையும், அந்நியமாதலின் மனநிலையையும் வலியுடன் உணரவைக்கிறது இந்தப் படம்.

அவமானங்களையும் துரோகங்களையும் கண்ணியத்துடன் தாங்கிக்கொள்ளும் பேராசிரியர் சிரஸ் கதாபாத்திரத்தில் மனோஜ் பாஜ்பேயி நடித்திருக்கிறார். சிரஸின் உண்மையான கதையை வெளியுலகுக்குத் தெரியப்படுத்திய பத்திரிகையாளர் தீபு செபாஸ்டியன் கதாபாத்திரத்தை ராஜ்குமார் ராவ் ஏற்றிருக்கிறார்.

64 வயது சிரஸின் உலகம், கவிதைகளாலும், லதா மங்கேஷ்கர் பாடல்களாலும் நிரம்பியிருக்கிறது. அவர் எல்லாவற்றுக்கும் அடையாளங்கள் கொடுப்பதை வெறுக்கிறார். ‘கே’ (Gay) என்ற சொல்லால் தன்னையும் தன் உணர்வுகளையும் விவரிக்க முடியாது என்கிறார். தன்னுடன் வேலைபார்ப்பவர்களே பொறாமையால் அநீதி இழைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தும் அதை எதிர்த்துப் போராடத் தயங்குகிறார். சமூகச் செயல்பாட்டாளர்கள் அவருக்கு ஊக்கம் கொடுத்த பிறகு, பல்கலைக்கழகத்தை எதிர்த்து வழக்குப் போடச் சம்மதிக்கிறார். மீண்டும் பணியில் சேர்ந்து கண்ணியத்துடன் வாழ விரும்புகிறார். வழக்கில் வெற்றியும் பெறுகிறார். ஆனால், பணியில் சேர்வதற்கு ஒரு நாள் முன்பு மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடக்கிறார்.

மனோஜ் பாஜ்பேயி இந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான தேர்வு. அவரது நடிப்பு ஆழமான பாதிப்பைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்துகிறது. பேராசிரியர் சிரஸுக்கும், பத்திரிகையாளர் தீபுக்குமான நட்பும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவருடைய உரையாடல் காட்சிகளும் அர்த்தமுள்ளதாகத் திரையில் விரிகின்றன. ‘வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது எனக்கு போரடித்தது.

அப்போது, உனக்காக இந்தக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்’, என்றும் ‘ஓய்வுபெற்ற பிறகு, அமெரிக்காவுக்குச் சென்றுவிடலாம் என்று இருக்கிறேன். அங்கே என்னைப் போன்றவர்கள் மரியாதையுடன் வாழலாம்’ என்றும் மனோஜ் பாஜ்பேயி சொல்லும் காட்சிகளை உதாரணங்களாகச் சொல்லலாம். வழக்கறிஞர்களாக வரும் ஆஷிஷ் வித்தியார்த்தியும், கவுரி பாலாஜியும் தங்கள் நடிப்பால் நீதிமன்றக் காட்சிகளை அழுத்தமும் அர்த்தமும் உள்ளவையாக ஆக்கியுள்ளனர்.

சிரஸ் கதாபாத்திரத்தை நேர்த்தியாக அமைத்திருக்கும் திரைக்கதையாசிரியர் அபூர்வா அஸ்ரானி, ‘இர்ஃபான்’ கதாபாத்திரத்தைத் தெளிவாக முன்வைக்கத் தவறிவிட்டார். படத்தின் ‘நியூஸ் ரூம்’ காட்சிகளும் பாலிவுட்டுக்கே உரிய மிகையம்சத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சி உணர்வுபூர்வமாக ஒட்ட மறுக்கிறது. ராஜ்குமாரின் நடிப்பு கிளைமாக்ஸில் எடுபடவில்லை.

பேராசிரியர் சிரஸின் முடிவு ஒருவிதத்தில் டிஜிட்டல் கணினி அறிவியலின் முன்னோடி விஞ்ஞானி ஆலன் டூரிங் வாழ்க்கையை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஹிட்லர் படைகளின் சங்கேத மொழியை ஆலன் டூரிங் அபாரமாக அவிழ்த்ததால்தான் இரண்டாம் உலகப் போர் சீக்கிரமாக முடிவுக்கு வந்தது. ஆனால், அவர் தன்பாலின உறவாளர் என்ற காரணத்துக்காக பிரிட்டன் அரசாங்கத்தால் தண்டிக்கப்பட்டு ஹார்மோன் சிகிச்சைக் கொடுமையால் சிதைக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த உலகம் எல்லோருக்குமானது என்பதை இந்தச் சமூகம் புரிந்துகொள்வதற்கு இன்னும் எத்தனை காலமாகும் என்று தெரியவில்லை. அதுவரை எத்தனை ஆலன் டூரிங்குகள், டாக்டர் சிரஸ்சுகள் பலி கொடுக்கப்படுவார்களோ!

‘தன்பாலின’ உறவு எனும் அம்சம் இதுவரை பாலிவுட் படங்களில் கிண்டலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்தது. முதல்முறையாக அதை இயல்பான ஒன்றாகவும், அதை மறுப்பதை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவும் இந்தப் படம் முன்வைக்கிறது. சமூகத்தின் நாகரிக வளர்ச்சியைச் செறிவூட்டக்கூடிய இத்தகைய சித்தரிப்புக்காக ‘அலிகர்’ படக்குழு பாராட்டுக்குரியது. இந்தப் படம் தன்பாலின உறவை நியாயப்படுத்துகிறது என்று சொல்வதைவிட, அதைத் தனிமனித உரிமையாகப் பார்க்கவும் மதிக்கவும் கோருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இந்தியாவில் தன்பாலின உறவு குற்றமாக இருக்கும் இந்த நேரத்தில், தனிமனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ‘அலிகர்’ போன்ற படங்கள் நிச்சயம் தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x