Published : 26 Nov 2021 03:06 AM
Last Updated : 26 Nov 2021 03:06 AM

ரிக்‌ஷாக்காரன் 50: மனங்களை வென்ற ஜாலக்காரன்!

எஸ்.வினோத்

எம்.ஜி.ஆருடைய ரசிகர்களுக்கு 1972, பல விதங்களில் மகிழ்ச்சியான ஆண்டு. அந்த ஆண்டுதான், அதிமுக என்கிற தனிக் கட்சியைத் தொடங்கி, ‘புரட்சி நடிகர்’ என்கிற நிலையிலிருந்து தன்னுடைய ரசிகர்களால் ‘புரட்சித் தலைவர்’ எனக் கொண்டாடப்பட்டார். அதே ஆண்டில் அவருக்கு இன்னொரு சிறப்பும் கிடைத்தது. 1971-ம் ஆண்டுக்கான, தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதுக்கு மத்திய அரசால் எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்கிற சிறப்பை எம்.ஜி.ஆருக்குப் பெற்றுத் தந்த படம் ‘ரிக் ஷாக்காரன்’.

இந்த ஆண்டு தனது பொன்விழாவை நிறைவுசெய்துள்ள ‘ரிக் ஷாக்காரன்’, 1971-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி வெளியாகி, தமிழ்நாட்டையே கலக்கியது. கறுப்பு வெள்ளைப் படங்கள் அதிகம் வெளியாகிவந்த அக்காலகட்டத்தில், பெரிய பட நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் முதல் வண்ணப்படத்தை எம்.ஜி.ஆரை வைத்து எடுக்க விரும்பின. அந்த வரிசையில் சத்யா மூவிஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’.

ஏழைப் பங்காளன்

பெரிய மனிதர் என்கிற போர்வைக்குள் இருந்துகொண்டு பெண்களை வெளிநாடுகளுக்குக் கடத்தும் மாபியா மனிதர் கைலாசம் (அசோகன்). அவரைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து அதிர்ச்சியடையும் மாணிக்கம் என்கிற ரிக் ஷாக்காரர், கைலாசத்தைப் பற்றி போலீஸில் புகார் தெரிவிக்கச் செல்கிறார். அவரை வழிமறித்து சுட்டுக்கொல்கிறார் கைலாசம். சக ரிக் ஷா தொழிலாளியின் படுகொலையைக் கண்டு வெகுண்டெழுகிறார் ரிக் ஷா ஓட்டும் தொழிலாளியான செல்வம் (எம்.ஜி.ஆர்). இந்தக் கொலை வழக்கு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே, உமா (மஞ்சுளா) என்கிற இளம்பெண்ணை வெளிநாட்டுக்குக் கடத்த கைலாசம் திட்டமிடுகிறார். போலீஸாரின் உதவியுடன் அவரது திட்டங்களை முறியடித்து சட்டத்தின் முன் குற்றவாளியை நிறுத்தி நீதியை நிலைநாட்டி கதாநாயகன் வெற்றி பெறுவதுதான் படத்தின் கதை. இந்தக் கதையில் எதிர்பாராத பல திருப்பங்களை அடுக்கி விறுவிறுப்பான படமாக ‘ரிக் ஷாக்கார’னைப் படைத்திருந்தார்கள்.

வெற்றி இசை

மஞ்சுளா இந்தப் படத்தில்தான் முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமானார். பத்மினி, ஜி. சகுந்தலா, அசோகன், மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், சோ, ராமதாஸ், தேங்காய் சீனிவாசன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமும் அவர்களுடைய கதாபாத்திர வார்ப்புகளும் அதில் நடித்திருந்தவர்களின் ஈடுபாடும் படத்துக்கு மெருகூட்டின.

வசனகர்த்தா ஆர்.கே.சண்முகத்தின் வசனங்கள் கூர்மையும் நகைச்சுவையும் தோய்ந்து மிளிர்ந்தன. படத்தின் தொடக்கக் காட்சியில் எம்.ஜி.ஆர். கலந்துகொள்ளும் ரிக் ஷா பந்தயம் சென்னை அண்ணாநகரில் கட்டப்பட்டிருந்த அண்ணா டவர் அருகே படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் தொடங்கி, ராமமூர்த்தியின் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாக இருக்கும். அடுத்து, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் இசை. படத்தின் டைட்டில் இசையிலேயே மிரட்டி இருப்பார். ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்..’, ‘கடலோரம் வாங்கிய காத்து..’, ‘அழகிய தமிழ் மகள் இவள்..’, ‘பம்பை உடுக்கை கொட்டி’ என எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட் ரகம்!

கதாபாத்திரத்துக்கான உழைப்பு

‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆருக்கு இதுபோன்ற கதாபாத்திரங்கள் திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது மாதிரி. ரிக் ஷா ஓட்டுவது சாதாரண விஷயம் அல்ல. ரிக் ஷாவில் ஏறி பெடலை மிதித்தால் வண்டியின் கனம் காரணமாக அது ஒருபக்கம் போகும்.ரிக் ஷா ஓட்ட ஓரளவு பயிற்சியும் உடலில் வலுவும் தேவை. இதற்காக, எம்.ஜி.ஆர். ரிக் ஷா ஓட்டி பயிற்சி எடுத்துக்கொண்டார். படத்தில் இரண்டு விஷயங்கள் ‘ஹைலைட்’! ரிக் ஷா ஓட்டியபடியே வில்லனின் அடியாட்களுடன் எம்.ஜி.ஆர். போடும் சிலம்ப சண்டை. அவரது கால்கள் ரிக் ஷா பெடலை மிதித்து வண்டியை வட்டமாக ஓட்டிக்கொண்டிருக்க, அதே நேரம் கையில் சிலம்பம் சுழன்றாடும். கிளைமாக்ஸ் சண்டையில் சுருள் பட்டா வீசுவார். பொறி பறக்கும் இந்தச் சண்டைக் காட்சிக்காகவும் எம்.ஜி.ஆர். பயிற்சி மேற்கொண்டார்.

சண்டைக் காட்சிகள் மட்டுமின்றி, நடிப்பிலும் எம்.ஜி.ஆர். எந்தக் குறையையும் வைக்கவில்லை. வில்லனின் ஆட்களை அடித்ததாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அப்போது எம்.ஜி.ஆரை, அரசு வழக்கறிஞர் மடக்கி மடக்கி கேள்விகள் கேட்பார். அதற்கு தன் பக்க நியாயத்தை தர்க்கரீதியாகவும் நகைச்சுவையாகவும் விளக்கும் எம்.ஜி.ஆர். நீதிபதியைப் பார்த்து, “நடந்ததை நான் சொல்லிட்டேன். நடக்காததை வக்கீலய்யா சொல்லிட்டாரு. நடக்க வேண்டியதை நீங்கதான் சொல்லணும்” என்று கூறும் காட்சியில் வெகு இயல்பாக நடித்திருப்பார்.

‘கடலோரம் வாங்கிய காத்து’ பாடல் காட்சி

வசூல் சக்கரவர்த்தி

‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துகொண்டிருந்த போது, ஆஸ்திரேலியாவின் பிரபல திரைப்பட இயக்குநர் ஜான் மெக்கலம் இந்தியா வந்திருந்தார். அப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ‘ரிக் ஷாக்காரன்’ படத்தைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆரையும் சந்தித்துப் பாராட்டினார். பத்திரிகைகளுக்கு அவர் பேட்டியளித்தபோது, “இயற்கையாக நடிக்கும் இந்திய நடிகராக எம்.ஜி.ஆர். என் மனதில் இடம்பெற்றார்” என்று பாராட்டினார். அதை உறுதிப்படுத்துவதுபோல் எம்.ஜி.ஆருக்கு நாட்டின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது கிடைத்தது.

‘ரிக் ஷாக்காரன்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. சென்னை தேவி பாரடைஸ் திரையரங்கில் முதன்முதலாக 163 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது. அதிகபட்சமாக மதுரை நியூசினிமா அரங்கில் 161 நாட்கள் ஓடியது. அதுவரை இல்லாத சாதனையாக தமிழகம் முழுவதும் 51 நாளில் 50 லட்சம் ரூபாய் வசூலித்து எம்.ஜி.ஆரை ‘வசூல் சக்கரவர்த்தி’ என்று நிரூபித்தது. இன்றைய மதிப்பில் அந்தத் தொகை பல கோடி ரூபாய்களுக்கு சமம். திரையுலகில் எம்.ஜி.ஆர். இருந்தவரை தகர்க்க முடியாத வசூல் சாதனைப் படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’தான் ‘ரிக் ஷாக்கார’னை வசூலில் விஞ்சியது. 50 ஆண்டுகளைக் கடந்தாலும் இன்றும் இளமையான ‘ரிக் ஷாக்காரன் மக்களின் மனங்களை வென்ற ‘ஜாலக்காரன்"!

தொடர்புக்கு: vsubramaniam55@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x