Published : 27 Mar 2016 09:27 AM
Last Updated : 27 Mar 2016 09:27 AM
அஸ்வினும்
ஷிவதாவும் காதல் திருமணம் செய்துகொள் கின்றனர். ஷிவதாவுக்குப் பெற்றோர் இல்லை. அஸ்வினின் அப்பாவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அப்பா வின் எதிர்ப்பை மீறிக் காதல் தம்பதி யர் வாழ்கையைத் தொடங்கு கின்றனர்.
இனிய கனவுபோலத் தொடங்கும் அவர்களது வாழ்க்கை விரைவிலேயே பயங்கரக் கனவாக மாறுகிறது. கார ணம், ஷிவதாவுக்கு வரும் கனவுகள். ஷிவதாவின் கனவில் வரும் அவரு டைய அம்மா, தான் வசிக்கும் மாய உலகத்துக்கு மகளை அழைத்துச் செல்கிறார். இரு உலகங்களுக்கிடை யில் ஊசலாடும் ஷிவதாவுக்கு, காது களில் இரைச்சல் கேட்கும் ஆடிட்டரி ஹாலுசினேஷன், கண் எதிரே பாம்பு வருவதுபோன்ற விஷுவல் ஹாலு சினேஷன் என்று உளவியல் கோளாறு களும் சேர்ந்து கொள்கின்றன.
ஷிவதாவின் பிரச்சினை என்ன, அஸ்வின் இதை எப்படிச் சமா ளிக்கிறார் என்பதையெல்லாம் சொல் லும் இயக்குநர் ஷிவ் மோஹாவின் ‘ஜீரோ’, உலகம் உருவான காலம் வரை பின்னோக்கிப் பயணிக் கிறது. குறிப்பிட்ட நாளின் நள்ளிர வில் நடக்கவிருக்கும் பயங்கர மான அனுபவத்தை நோக்கிப் பார்வையாளர்களைப் பயணிக்க வைக்கிறது. சாத்தானுக்கும் தெய்வத் துக்கும் இடையே நடக்கும் யுத்தத்தின் முடிவில், அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் என்ன நடக்கிறது?
முற்பாதியில் உளவியல் கோளாறு களை முன்னிறுத்தி வேகமாக நகரும் கதை, பிற்பாதியில் ஹாலிவுட் அனுமாஷ்யங்கள், விட்டலாச்சாரியார் வித்தைகள் என்று இன்னொரு பரிமாணம் எடுக்கிறது. ஆதாம், ஏவாள், சாத்தான், லிலித் என்னும் தீய சக்தி என்றெல்லாம் இயக்குநர் தன் கற் பனையை விரித்துக்கொண்டு போனா லும் அனுமாஷ்ய அம்சங்களைக் காட்சிப்படுத்துவதில் சொதப்பிவிட் டார். பேய்ப் படம் என்று முடிவான பின்பு பார்வையாளர்களை மிரட்டி யிருக்க வேண்டாமா? அந்த வெள்ளைப் பாம்பு விளையாட்டு பொம்மைபோல இருக்கிறது. காட்சிகளில் சுவாரஸ் யமும் கூடவில்லை.
சில நிமிடங்கள் உலகம் ஸ்தம்பித்து நிற்பது, கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக் கிடப்பது, தன்னை அழிப்பதற்காக திடீரென வரும் வெள்ளைக்கார ஸ்பெஷல் டீமை லிலித் போட்டுத் தள்ளுவது போன்ற காட்சிகளில் நம்பகத் தன்மை இல்லை.
ஒரு காட்சியில் ஷிவதா கத்தியை அஸ்வினின் வயிற்றில் குத்துகிறார். அடுத்த காட்சியில் அஸ்வின் நெஞ்சில் கத்திக்குத்துடன் விழுந்து கிடக்கிறார். கார் விபத்துக்குப் பின்பு படுகாயங் களுடன் காட்டப்படும் அவரது மேக்-அப் காட்சிக்குக் காட்சி மாறுகிறது. இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாமா?
மாய உலகத்துக்கும் யதார்த்த உல குக்கும் இடையே ஷிவதா ஊசலாடும் காட்சிகள் நன்கு காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. மனநல மருத்துவரின் அறையின் சுவரில் தொங்கும் பிங்க் நிற பல்பை எடுப்பதற்காகச் சுவரில் ஷிவ்தா தலைகீழாக ஏறும் காட்சி ரசிக்கும்படி இருக்கிறது.
நடிப்பதற்குக் கிடைக்கும் கணிச மான வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன் படுத்திக்கொண்டிருக்கிறார் ஷிவதா. காதுகளில் இரைச்சல் கேட்டு நடுங்கி ஒடுங்கிப்போகும் காட்சிகளிலும், பாம்பு கண் முன்பு தோன்றும்போது வேர்வை பொங்க பயத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் ஈர்க்கிறார்.
காதலில் உருகுவது, மனைவியின் கோளாறுகள் உச்சத்தில் இருக்கும் போது வேதனையில் மருகுவது ஆகிய காட்சிகளில் அஸ்வின் நன்கு நடித்திருக் கிறார். அனுமாஷ்ய உலகினருடன் பேசுபவராக வரும் ஜே.டி.சக்ரவர்த்தி நடிப்பில் கெத்து காட்டுகிறார்.
படத்தின் பலம் பின்னணி இசை. உளவியல் சிக்கல்களால் தவிக்கும் காட்சிகளில் இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா மிரட்டியிருக்கிறார். ஆனால், பாடல்கள் ஈர்க்கவில்லை. பாபு குமாரின் ஒளிப்பதிவு பரவாயில்லை. படத்தொகுப்பாளர் சுதர்சன் மேலும் கறாராகச் செயல்பட்டிருக்கலாம். பல காட்சிகள் முடிந்த பின்பும் தேவையில்லாமல் நீள்கின்றன.
உளவியல் கோளாறுகள், ஆதாம், ஏவாள், லிலித், சாத்தான் என்று ஹாலி வுட் பாணியிலான அருமையான கதையை உருவாக்கிய இயக்குநர், சிக்கல்களை விடுவிக்கும் விதத்தில் போதிய கவனம் செலுத்தத் தவறிவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT