Last Updated : 19 Nov, 2021 03:08 AM

7  

Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM

பூர்ணம் விஸ்வநாதன் 100: குறையொன்றுமில்லை!

எஸ்.வி. ரங்கா ராவ், எஸ்.வி.சுப்பையாவுக்குப் பிறகு உருக்கமான நடிப்பை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துகொண்டவர் ‘பூர்ணம்' விஸ்வநாதன். பார்த்ததுமே பிடித்துப் போகும் மரியாதையான தோற்றம். வட்டமான முகத்தில், அழவும் சிரிக்கவும் எந்தக் கணத்திலும் தயாராக இருக்கும் அழகான பெரிய கண்கள். அவற்றுக்கு நிகராகப் பேசும் புருவங்கள், பிழைகள் ஏதுமற்ற வசன உச்சரிப்பு என நிறைகளின் கலைஞராக தமிழ் ரசிகர்களின் மனதில் நிறைந்தவர். திரையில் அவர் ஏற்ற பெரும்பாலான கதாபாத்திரங்களில் எளிமையும் அசட்டுத்தனமும் கரைபுரண்டோடும்.

‘ஆசை’ படத்தில் நாயகி சுவலட்சுமியைப் பார்த்து, ‘ஒரு கிலோ சாந்தம்.. அரைக் கிலோ அசடு, கால் கிலோ சிரிப்பு.. இதானே நீயும் உங்க அப்பாவும்’ என்று நாயகன் அஜித் ஒரு வசனம் பேசுவார். அந்தப் படத்தின் இயக்குநர் வசந்த் சாய், பூர்ணம் விஸ்வநாதனின் நிஜமான குணத்தையே இப்படி வசனமாக எழுதியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படத்தில் வக்கிரமான வில்லனாக வரும் பிரகாஷ் ராஜை, படத்தின் நாயகன் என்கிற முறையில் அஜித்தே சூரசம்ஹாரம் செய்துவிடுவதுபோல் இயக்குநர் காட்சியை அமைத்திருக்கலாம்.

ஆனால், மகள்களை, மனிதத் தன்மையற்று துன்புறுத்திய மருமகனை உயிரோடு எரித்துவிடும் அப்பாவாக அவரைப் படைத்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியை இப்படி அமைத்திருப்பதை பூர்ணம் விஸ்வநாதனிடம் இயக்குநர் வசந்த் சாய் சொன்னபோது, ‘அப்படியா...? என்னப்பா சொல்றே..!? ’ என்று மிரண்டுபோய்தான் கேட்டார். தனக்கு எந்தக் குறையுமில்லை என்று சொல்கிற, சட்டென்று மன்னித்துவிடுகிற, யாரைப் பற்றிய குறையோ, புகாரோ இல்லாமல் தன்னுடையக் கலை வாழ்க்கையை வாழ்ந்து சென்றுள்ள நூற்றாண்டு நாயகர் பூர்ணம் விஸ்வநாதனுக்கு, நடிப்புக் கலையின் மீது 15 வயதில் நாட்டம் ஏற்பட்டிருக்கிறது.

நெல்லையிலிருந்து டெல்லி

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள முன்னீர்பள்ளம் என்கிற கிராமத்தில் பிறந்தவர். இந்த ஊரில் ‘பரிபூரண கிருபேஸ்வர’ராக கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானின் பெயரை ஆண் பிள்ளைகளுக்குச் சூட்டுவது இன்றும் வழக்கமாகத் தொடர்கிறது. அப்படித்தான் பூர்ணம் விஸ்வநாதனின் அப்பாவுக்கும் பூர்ண கிருபேஸ்வரன் என்று பெற்றோரால் பெயர் சூட்டப்பட்டது. தமிழ் மொழியின் தொன்மையை உலகறியச் செய்தவர்களில் ஒருவரான மு.சி. பூரணலிங்கம் பிள்ளை (1866 - 1947) பிறந்து வளர்ந்ததும் இந்த ஊரில்தான்.

பள்ளிக் கல்வியின் ஒருபகுதியை தென்காசியிலும் பின்னர் புதுக்கோட்டையில் சித்தப்பாவின் வீட்டில் தங்கி, இண்டர்மீடியேட் கல்வியையும் பயின்றவர். புதுக்கோட்டையில் படித்தபோது பள்ளி நாடகத்தில் பூர்ணம் விஸ்வநாதன் ஏற்ற முதல் வேடம் ராமானுஜர். இவருடைய மூத்த அண்ணன் பூர்ணம் ராமச்சந்திரன் (எழுத்தாளர் உமா சந்திரன்) அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

அண்ணன் காட்டிய வழியில், தன்னுடைய 24-வது வயதில் அகில இந்திய வானொலியின் டெல்லி நிலையத்தில், செய்திப் பிரிவில் செய்தி வாசிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து விஸ்வநாதனின் இரு தங்கைகளில் ஒருவரான லட்சுமி பூர்ணம் அங்கே நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியில் சேர்ந்தார். காந்தி தங்கியிருந்த இடத்தைக் கடந்தே தினசரி வானொலி நிலையத்துக்குச் சென்று வந்த விஸ்வநாதன், காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களில் பலமுறைக் கலந்துகொண்டு அவரது அறிவுரைகளால் தாக்கம் பெற்றிருக்கிறார்.

நாடக வாழ்க்கை

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில், டெல்லியிலிருந்து ஒலிப்பரப்பாகி வந்த அதிகாலை 5.30 மணி தமிழ்ச் செய்தியில் ‘ஆல் இண்டியா ரேடியோ...செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்.. இன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது!’ என்று தேச வரலாற்றின் முக்கியத் திருப்பத்தைச் செய்தியாக ஆனந்தக் கண்ணீர் பனிக்க வாசித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். பின்னர் இந்திய சுதந்திரத்தின் பொன் விழாவைக் கொண்டாடியபோது, பூர்ணம் விஸ்வநாதனுக்கு இதற்காக கௌரவம் செய்து விழா எடுத்தது சென்னை வானொலி நிலையம். செய்தி வாசிப்பாளராகவும் வானொலி நாடகங்களில் நடித்ததன் மூலமும் பூர்ணம் விஸ்வநாதனின் குரல், தெற்காசியா முழுவதும் வாழும் தமிழர்களிடம் பிரபலமடைந்திருந்தது.

டெல்லியில் செய்திப் பணியுடன் ‘சௌத் இண்டியா கிளப்’ நடத்தி வந்த நாடகக் குழுவிலும் இணைந்து பல நாடகங்களில் நடித்து மேடையிலும் புகழ்பெற்றார். டெல்லியில் 20 வருட வாழ்க்கை ஓடிப்போயிருந்தது. அப்போது நாடக விழா ஒன்றுக்காக டெல்லிக்கு வந்திருந்த எழுத்தாளர் சுஜாதாவை, பூர்ணம் விஸ்வநாதனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் நாடகக் கலைஞர் பாரதி மணி. அப்போது, ‘ஒரு கொலை.. ஒரு பிரயாணம்’ என்கிற தன்னுடைய நாடகத்தை பூர்ணம் விஸ்வநாதனிடம் கொடுத்து, ‘இதைப் படித்துப் பார்த்து.. உங்களுக்குப் பிடித்தால் அரங்கேற்றம் செய்யுங்கள். உங்களைப் போன்ற ஒருவர் டெல்லியில் இருந்துகொண்டு என்ன செய்கிறீர்கள்..? நீங்கள் இருக்க வேண்டியது சென்னையில் அல்லவா?’ என்று கேட்டார் சுஜாதா.

சென்னை வாழ்க்கை

அவர் கொடுத்த நாடகத்தைப் படித்து வியந்த விஸ்வநாதன், இது சபா நாடகங்களின் போக்கையே திசை திருப்பிவிடும் என்று நினைத்தார். அந்த வருடமே பணி மாறுதல் வாங்கிக்கொண்டு 1965-ல்சென்னையில் குடியேறினார். சென்னையில் ஏற்கெனவே பழக்கமாகி யிருந்த திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் (பின்னர் கலா நிலையம் என ஆனது) குழுவினருடன் தன்னை இணைத்துகொண்ட விஸ்வநாதன், ‘ஒரு கொலை.. ஒரு பிரயாணம்’ நாடகத்தைச் சென்னையில் அரங்கேற்றுவதில் பெரும்பங்கு வகித்தார்.

‘நாடகம் என்பது நடிகனின் கலை’ என்பதை மெய்ப்பிக்கும் விதமாக தன்னுடைய நாடகத்துக்கு பூர்ணம் விஸ்வநாதன் உயிர்கொடுத்தைக் கண்டு வியந்தார் சுஜாதா. அடுத்து ‘அடிமைகள்’ என்கிற நாடகத்தை அவருக்கு எழுதிக்கொடுத்தார். அதுவும் வெற்றிபெற, பின்னர், சென்னையில் ’ பூர்ணம் நியூ தியேட்டர்’ என்கிற குழுவைத் தொடங்கிய விஸ்வநாதன், சுஜாதாவின் ‘அடிமைகள்’ நாடகத்தை அரங்கேற்றினார். அதன்பின்னர், ‘கடவுள் வந்திருந்தார்’, ‘டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’, ‘ஊஞ்சல்’, தொடங்கி பத்துக்கும் அதிகமான நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதனுக்காக சுஜாதா எழுத அவை வெற்றி நாடகங்களாகின.

இவற்றில் பல நாடகங்களை தினசரி 3 காட்சிகள் நடத்தினார் விஸ்வநாதன். ‘ஊஞ்சல்’ நாடகத்தில் பூர்ணம் விஸ்வநாதனின் நடிப்பைப் பார்த்து அரங்கமே அழுத காலம் ஒன்று உண்டு. உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களை பயன்படுத்தும் கலை நாடகம் என்கிற புரிதல் விஸ்வநாதனிடம் இருந்தது. குரலும் பாவனையும் இணையும்போது பூர்ணம் விஸ்வநாதனின் அரங்க நடிப்பில் வெளிப்பட்ட நுண்ணிய நளினங்களை நினைவுகூர இன்றைக்கும் அவருடைய ஆயிரக்கணக்கான நாடக ரசிகர்கள் இந்திய நகரங்களில் இருக்கிறார்கள்.

நாடக உலகில் செய்த சாதனைகள் அளவுக்கு இல்லாவிட்டாலும் திரையுலகில் தனித் தடம் பதித்தார். இன்று பூர்ணம் உருவாக்கிய குழுவை, அவரால் சிறந்த நாடகக் கலைஞர்களாக உருவாக்கப்பட்ட அவருடைய மாணவர்கள் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார்கள். சலனமற்ற நிர்மலமான மனதைக் கொண்டவர்கள், ஒரு கட்டத்துக்குப் பிறகு வயதே ஆகாமல் அப்படியே ஒரே தோற்றத்தில் நிலைபெற்று விடுவார்கள். பூர்ணம் விஸ்வநாதனும் அப்படித்தான். அவருடைய கலையுலக வெற்றியில் பின்னிருந்து ஆதரவு தந்தவர் அவருடைய மனைவி சுசீலா. பூர்ணம் விஸ்வநாதன் சுசீலா தம்பதிக்கு. உமா மோகன், பத்மஜா ராமச்சந்திரன், சித்தார்த்தன் என மூன்று வாரிசுகள்.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x