Published : 18 Mar 2016 11:14 AM
Last Updated : 18 Mar 2016 11:14 AM
நடப்பு அரசியலை விமர்சிக்கும் கதைகளில் நடிக்கத் தயங்குவது நமது ஹீரோக்கள் சிலரின் வெளியே தெரியாத ஹீரோயிசம். ‘வம்பை விலைகொடுத்து வாங்க விரும்பவில்லை’ என்று கதை கேட்டவர்கள் விலகிக்கொள்ள, அப்படியொரு அதிரடி அரசியல் கதையில் நடித்திருக்கிறார் ஜெய். இசை, கார் ரேஸ் என்று நடிப்புக்கு வெளியிலும் ஆர்வம் காட்டும் அவருடன் உரையாடியதிலிருந்து…
மீடியாவை விட்டுக் கொஞ்சம் விலகியே இருக்கிறீர்களே என்ன காரணம்?
என்னைத் தொடர்புகொள்ளும் பத்திரிகைச் சகோதரர்களிடம் நான் எப்போதும் பொறுப்போடு நடந்துகொண்டிருக்கிறேன். ஆனால், ஒரு சிலர் வதந்திகளை வைத்து என்னிடம் ஏடாகூடமாகக் கேட்கும்போது நான் இல்லை என்று மறுத்தாலும் அதையும் செய்தியாக்குவது என்னைக் காயப்படுத்தியது. தவிர பேட்டிகளில் நான் சொல்லாத விஷயங்களைக்கூட சேர்த்துக்கொள்ளும்போது, அப்படிப் பேசுவதற்கான பக்குவம் நமக்கு வரவில்லையே என்று கொஞ்சம் கூச்சப்பட்டிருக்கிறேன்.
பக்குவமும் அனுபவமும் கிடைக்கும்வரை வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்போம் என்றுதான் நான் கொஞ்சம் ஒதுங்கியிருந்தேன். இனி அதற்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்குக் கைகொடுத்தது ட்விட்டரும் ஃபேஸ்புக்கும்தான். எனது அன்றாட நடவடிக்கைளை சோஷியல் மீடியா வழியே பகிர்ந்துகொள்கிறேன். ரசிகர்களிடம் நேரடியாகப் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், பத்திரிகை மூலம்தான் எல்லோரையும் போய்ச்சேர முடியும். அதை நன்றாகவே உணர்ந்தும் இருக்கிறேன்.
‘புகழ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்?
‘சுப்ரமண்யபுரம்’ தொடங்கி, சாமானிய இளைஞன் என்ற இமேஜுக்குள்ளிருந்து கதையுடன் இணைந்த ஆக்ஷன் காட்சிகளில் நடித்துவந்திருக்கிறேன். ஆனால் முழுநீள ஆக்ஷன் படத்தில் இதுவரை நான் நடிக்கவில்லை. அது இந்தப் படத்தில் நிறைவேறுகிறது. அப்பாவி இளைஞன் என்ற தோற்றத்தை உடைத்து, எனது கதாபாத்திரமே துணிச்சலும் முரட்டுத்தனமும் கொண்டதாக இருக்கிறது. ராணிப்பேட்டைதான் கதை நிகழும் இடம்.
இது தேர்தல் நேரம். தேர்தல் களத்தில் நிற்கிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அத்தனை பேரும் ஆக்ஷன் ஹீரோக்களாக முறுக்கிக்கொண்டு திரிகிற சூடான நேரம் இது. இந்தப் படம் வெளியாவதற்கு இதைவிடப் பொருத்தமான ஒரு தருணம் வாய்க்காது. காரணம், இந்தப் படத்தின் கதை அரசியலை மையமாகக் கொண்டது.
அரசியலில் இளைஞர்களின் பங்கு என்ன என்பதை மசாலா கலந்து கூறியிருக்கிறார் இயக்குநர். மசாலா என்றால் யதார்த்தம் இல்லை என்று நினைத்துவிட வேண்டாம். காதல், இளம் வயதுக்கேயுரிய கொண்டாட்டம், விளையாட்டுத்தனம், போட்டி மனப்பான்மை என்று யதார்த்தத்தைத் துளிக்கூட மீறாத மசாலா என்று சொல்வேன். இதுவொரு உண்மைக் கதை. 2008-லேயே இயக்குநர் வெற்றி மாறன் சார் எனக்கு இந்தக் கதையைக் கூறினார். இந்தப் படத்துக்காக உழைத்திருக்கிறேன் என்று சொல்வதைவிடக் கதையை மீறாத ஆக்ஷன் காட்சிகளுக்காக நிறைய காயம் பட்டிருக்கிறேன் என்று சொல்வேன். இந்தப் படத்துக்குப் பிறகு அப்பாவி இளைஞன் பாத்திரங்கள் என்னைத் தேடி வராது.
மணிமாறனின் முதல் படமான ‘உதயம் என்.எச். 4’ படத்தின் திரைக்கதையில் இருந்த வேகத்தை இதிலும் எதிர்பார்க்கலாமா?
அதைவிட இரண்டு மடங்கு வேகம் இருக்கிறது. இது வலிந்து திணிக்கப்பட்ட வேகமல்ல; கதையே எடுத்துக்கொண்ட வேகம். அரசியல்ரீதியான அச்சுறுத்தல் இளைஞர்களின் மகிழ்ச்சியை எப்படிக் கெடுக்கும் என்பதுதான் திரைக்கதையின் வேகத்துக்குக் காரணமாக இருக்கும். அதேபோல மாற்றத்தை ஏற்படுத்தும்வரை இளைஞர்கள் ஓய்ந்துபோய் ஓடிவிடுகிறவர்கள் அல்ல என்பதும் இந்தப் படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் படத்தில் இடம்பெறும் விளையாட்டு மைதானம். கதையை வேகமாக நகர்த்துவதில் அதற்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.
விளையாட்டு மைதானம் என்றதும் ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகம் நினைவுக்கு வருகிறது. அந்தப் படத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்தானே?
கண்டிப்பாக. முதல் பாகத்துக்குக் கிடைத்த வெற்றியையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற மாதிரியான ஒரு கதையை யோசித்திருக்கிறார் வெங்கட் பிரபு அண்ணன். முழுக் கதையும் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
நீங்கள் ஒரு கீபோர்ட் பிளேயர் என்று தெரியும், பாடல்கள் கம்போஸ் செய்யும் திறமையுண்டா?
சிறு வயதிலேயே கீபோர்ட் கற்றுக்கொண்டேன். நடிப்பில் பிஸியாகும் வரை இசையமைப்பாளர்கள் காந்த் தேவா, போபோ சசி இருவருக்கும் தொடர்ந்து கீபோர்ட் வாசித்திருக்கிறேன். லண்டன் ட்ரினிட்டி கல்லூரியின் தேர்வுகளையும் ஊதித் தள்ளியிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியதும் குறைந்தது ஒரு மணி நேரமாவது கீபோர்ட் வாசித்துவிட்டுத்தான் தூங்கச் செல்வேன். இதற்காகவே வீட்டில் ஒரு ஸ்டூடியோவை அமைத்திருக்கிறேன். இதுவரை ஐநூறுக்கும் அதிகமான மெட்டுகளை உருவாக்கி வைத்திருக்கிறேன். இசைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்துக்காவது இசையமைத்துவிட வேண்டும் என்ற தாகம் இருக்கிறது.
உங்களது இசையார்வத்துக்கு அப்படியே நேரெதிராக இருக்கிறதே உங்களது ஃபார்முலா கார் பந்தயம். எப்படி அதில் ஆர்வம் வந்தது?
சிறு வயதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கார் பந்தயம் தெரிந்தால் அதை விடாமல் பார்த்துக்கொண்டிருப்பேன். பிறகு கார் பந்தய வீடியோ கேம்கள் மீது பைத்தியமாக இருந்தேன். இவ்வளவு ஆர்வம் இருந்தாலும் இதுவரை சாலையில் நான் ரேஷ் டிரைவ் பண்ணியதில்லை. ஒரு முறை இருங்காட்டுக்கோட்டைக்கு இந்திய அளவிலான ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் பந்தயத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கே கார்களில் ‘எஃப்.ஐ.ஏ’ கார் பாதுகாப்பு அம்சங்கள் பற்றித் தெரிந்துகொண்டபோது ஆச்சரியமாக இருந்தது.
அந்த நிமிடத்தில் கார் ரேஸில் கலந்துகொள்வது என்று முடிவெடுத்தேன். 2014-ல் 16 போட்டியாளர்களுடன் சிங்கிள் சீட்டர் போட்டியில் கலந்துகொண்டு முதல் போட்டியிலேயே 6-வது இடத்துக்கு வந்தேன். கார் பந்தயத்தில் கலந்துகொண்டு திரும்பிய பிறகு எனக்குள் அது ஏற்படுத்தியிருக்கும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் விலைமதிப்பற்றது. பெரிய செலவு பிடிக்கக்கூடிய விளையாட்டுதான். இந்த இடத்தில் எனது ஸ்பான்ஸர் படத் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கு என் நன்றியை நான் கூறியே ஆக வேண்டும்.
தற்போது நடித்துவரும் படங்கள்?
திரு இயக்கத்தில் இன்னும் தலைப்பு வைக்காத படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்து முதல்முறையாக ஒரு பேய்ப் படத்தில் நடிக்கிறேன். ஃபினிஷ் என்ற புதிய இயக்குநர் கதை சொல்ல வந்தார். அவர் பேய்க் கதை என்றதுமே ‘சாரிங்க இண்ட்ரெஸ்ட் இல்ல... கோவிச்சுக்காம போயிட்டுவாங்க’ன்னு சூடாகச் சொல்லிவிட்டேன். ‘கதையக் கேட்காம எப்படி நீங்க இப்படிச் சொல்லலா’மென்று அவரும் சூடாக முறைத்தார். என்ன இவ்வளவு உஷ்ணத்தோடு சொல்கிறாரே என்று கேட்க உட்கார்ந்த நான் பயந்து, மிரண்டு, சிரித்து, செம ரகளையாக அனுபவித்த தரமான பேய்க் கதை.
‘அஞ்சல’, ‘வில் அம்பு’ படங்களின் தயாரிப்பாளர்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். அடுத்து, தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிப்பில் ’முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கத்தில் முதல்முறையா காக்கிச் சட்டை போடுகிறேன். இதில் ஆக்ஷனும் இருக்கும்; நகைச்சுவையும் இருக்கும். இதற்கு அடுத்து ‘சென்னை 28’ இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT