Published : 18 Mar 2016 11:09 AM
Last Updated : 18 Mar 2016 11:09 AM
திரைப்பட உலகில் நிலவும் முக்கியமான கருத்தாக்கமான ‘ஆட்டெர் கோட்பாடு’ (Auteur theory) பற்றி இந்த வாரம் கவனிப்போம். ‘இயக்குநரே ஒரு திரைப்படத்தின் ஆசிரியர்’ என்று பொருள்படும் பிரெஞ்சு வார்த்தைதான் ஆட்டெர்.
பிரெஞ்சு இயக்குநர் ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (Franqois Truffaut), 1954-ல் உருவாக்கியதுதான் ‘ஆட்டெர் கோட்பாடு’. இதன்படி, திரைக்கதை ஒன்று படமாகும்போது அதன் இயக்குநர் அவரது பாணியில் அதனை உருவாக்குவார். ஒரு திரைக்கதையைப் படிக்கும்போது ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை அது வழங்கலாம். படமாகும்போது அந்த இயக்குநரின் அனுபவங்கள் அந்தத் திரைக்கதையை அவரது கலைப்படைப்பாக மாற்றிவிடும்.
இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸேஸியை இதற்குக் கச்சிதமான உதாரணமாகச் சொல்லலாம். அவருடைய கருத்துகள், ஸ்கார்ஸேஸியின் ஆரம்ப காலப் படங்களில் அட்டகாசமாகப் பிரதிபலிக்கும். ‘டாக்ஸி டிரைவர்', ‘ரேஜிங் புல்', ‘த லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் ஜீசஸ் கிறைஸ்ட்' ஆகிய படங்கள் உதாரணங்கள். இவரது கதாபாத்திரங்கள் (இயேசு உட்பட) தனியானவர்கள். சமூகத்திலிருந்து தனித்தே இருப்பவர்கள்.
சமூகத்தின் மீது ஒருவித கோபமோ பரிவோ கொண்டிருப்பவர்கள். அந்த எண்ணம் எப்படி வெளிப்படுகிறது என்று கவனித்தால், அது ட்ராவிஸ் பிக்கிள் போல சமுதாயத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணமாக இருக்கலாம் (டாக்ஸி டிரைவர்). அல்லது, கடவுளாக இல்லாமல் ஒரு மனிதனாக வாழ நினைக்கும் இயேசுவின் மனதில் எழும் வருத்தம் கலந்த இரக்கமாகவும் இருக்கலாம் (த லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் ஜீசஸ் கிரைஸ்ட்). ஆக, ஸ்கார்ஸேஸி எப்படிச் சமுதாயத்தைப் பார்க்கிறாரோ அதேபோன்ற பார்வைகள்தான் அவரது கதாபாத்திரங்களுக்கும் இருக்கும்.
எப்படியிருக்கும் இவர்களின் படங்கள்?
இப்படி, ஒரு இயக்குநராகத் தனது பாணியை அழுத்தமாக வெளிப்படுத்திய ஸ்கார்ஸேஸி, டாரண்டினோ, ஹிட்ச்காக், கிறிஸ்டோஃபர் நோலன், கிம் கி டுக், ஜான் லுக் கொதார் (Jean Luc Godard), ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ போன்றவர்கள்தான் ‘ஆட்டெர்’கள்.
இவர்களது படங்கள், தொழில்நுட்பரீதியில் மட்டும் சிறந்த படங்களாக இருக்காது. எடுத்துக்கொண்ட கதையில் இவர்களின் மனதில் இருக்கும் எண்ணங்கள் கலந்து, சமூகத்தை, உலகத்தை நோக்கிய இவர்களின் பார்வையும் சேர்ந்தே வரும். இதுதான் ஒரு ஆட்டெரின் விளக்கம்.
ஒரு எழுத்தாளர் பேனாவை உபயோகப்படுத்துவதைப் போலத் தொழில்நுட்ப அம்சங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, அவற்றை மீறித் தனது முத்திரையைப் பதித்து, படமெடுக்கக் கிடைத்த பல்வேறு உபகரணங்களையும் வைத்துக்கொண்டு தனது மனதில் இருக்கும் பார்வையையும் ஆன்மாவையும் திரைப்படமாக மாற்றும் இயக்குநரே ஆட்டெர்.
தமிழ் சினிமாவில் சில ஆட்டெர்கள்
தமிழில் மிஷ்கினை இப்படிச் சொல்ல முடியும். அவரது படங்களில் எந்தக் காட்சியை எடுத்துக்கொண்டாலும் ‘இது ஒரு மிஷ்கின் படம்’ என்று சொல்ல முடியும் அல்லவா? அது போலவே அவரது படங்களில் இடம்பெறும் கதைகள், கதாபாத்திரங்கள், சம்பவங்கள் முதலியன, அவரது மனதில் ஓடும் எண்ணங்களின் நீட்சிதானே? இதேபோல் செல்வராகவனும் இப்படிப்பட்டவரே.
‘ஆட்டெர்’ என்பதற்கு ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ கொடுக்கும் முக்கியமான விளக்கம் ஒரு கலைஞனின் மாபெரும் தோல்வியையும், ஒரு டெக்னீஷியனின் மிகப் பெரிய வெற்றியையும் ஒப்பிட்டால், கலைஞன் தோல்வியடைந்த படம்தான் ஒரு ஆட்டெரின் படைப்பு என்று கொண்டாடப்படும் என்கிறார். உதாரணமாக, டாரண்டினோ, ஸ்கார்ஸேஸி, கிம் கி டுக், தகாஷி கிடானோ முதலியவர்களின் படங்கள் படுதோல்வி அடைந்தாலுமே, வெறும் கமர்ஷியல் இயக்குநர்களான மைக்கேல் பே, ரோலாண்ட் எம்மரிச் முதலியவர்களின் பல மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் படங்கள் அவற்றுக்கு அருகில்கூட வர இயலாது. ஏனெனில் இவர்கள் ஆட்டெர்கள் இல்லை. இந்த கமர்ஷியல் இயக்குநர்களின் படங்களில் ஆன்மா இல்லை.
எத்தகைய இலக்கியப் படைப்பாக இருந்தாலும் அதனை இந்த ஆட்டெர்கள் உருமாற்றித் தங்களது பாணியில் வெளியிடுவார்கள். இது ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ சொன்னது. ஆனால், பின்னாட்களில் அது சர்ச்சைக்குள்ளானது. காரணம், திரைப்படத்தின் முதுகெலும்பு என்பது திரைக்கதை. அப்படியென்றால் அந்தத் திரைக்கதையை எழுதும் நபர்தானே ஒரு படத்துக்கு முக்கியம்? திரைக்கதை நன்றாக இருந்துவிட்டால் யார் வேண்டுமானாலும் அதை இயக்கிவிடலாமே?
விஷ்ணுபுரம் நாவலை ஸ்கார்ஸேஸி இயக்கினால்?
என்ன யோசித்தாலும், இயக்குநர்களில் ‘ஆட்டெர்’கள் இருப்பதுபோல் திரைக்கதையில் இல்லை. காரணம், த்ரூஃபோ அப்போது இருந்த இயக்குநர்களை இரண்டாகப் பிரித்தார். ஒன்று தங்களது கருத்துகளையும் பாணிகளையும் திரைப்படங்களில் இடம்பெற வைத்து ஒரு மோசமான கலைப் படைப்பையும் அட்டகாசமாகத் திரையில் காட்டக்கூடிய ‘ஆட்டெர்’கள். இன்னொன்று, ‘ஆட்டெர்’ அல்லாத-தங்கள் முத்திரையைப் பதிக்காத இயக்குநர்கள். எத்தகைய திரைக்கதை எழுத்தாளரையும் மீறி இந்த ‘ஆட்டெர்’களால் தனித்துத் தெரிய முடியும் என்பது த்ரூஃபோவின் கருத்து. அப்படித்தான் இதுவரை நடந்திருக்கிறது.
உதாரணமாக, ஸ்கார்ஸேஸியிடம் ‘விஷ்ணுபுரம்’ நாவலைக் கொடுத்தால், அதையும் ‘ஒரு ஸ்கார்ஸேஸி படம்’ என்று நிரூபிக்கும் வகையில்தான் எடுப்பார். அதில் ஜெயமோகன் துளிகூட மிளிர முடியாது
இத்தகைய பாணி, ஸ்கார்ஸேஸிக்கு இயற்கையிலேயே இருந்தது. அவரைப் போன்றவர்கள் மிகவும் சொற்பம். உலகில் பெரும்பாலான இயக்குநர்கள், ஆட்டெர் அல்லாதவர்களே. எனவே, இந்த இயக்குநர்கள் ஒரே போன்ற விஷயங்களைத் திரும்பத் திரும்பக் காட்டிக்கொண்டிருப்பது ரசிகர்களுக்கு அலுப்பேற்படுத்தும். இதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு படத்தையும் புதிய பாணியில் எடுக்க வேண்டும். இதற்குத் தமிழில் சிறந்த உதாரணம் மணிவண்ணன். கமர்ஷியல் படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்து வைத்திருந்தவர் மணிவண்ணன். அவரது எந்த இரண்டு படங்களையும் எடுத்து ஒப்பிட்டால், எதுவுமே முந்தைய படம் போல இருக்காது. அதுதான் நல்ல இயக்குநருக்கு அடையாளம்.
நமது பாணி ஒரே போன்று இருப்பதை நாம் மாற்ற வேண்டும்.சமூகத்தைப் பற்றிய நமது விமர்சனங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் படங்களில் இயல்பாக வெளிப்படுத்த வேண்டும். ‘சூது கவ்வும்’ அப்படிப்பட்ட ஒரு படம்தான். அதில் சமுதாயத்தைப் பற்றிய எத்தனை விமர்சனங்கள் இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள். இவையெல்லாம் வலிந்து திணிக்கப்படாமல், இயல்பாக வெளிப்பட வேண்டும் என்பது முக்கியம்.
ஒரு ‘ஆட்டெர்’ ஆக நாம் இருக்கிறோமா? செக்குமாடு போல அரசுக்கு ஜால்ரா அடித்தே வாழாமல், ஆரோக்கியமான விமர்சனங்களை நம்மால் வைக்க முடிகிறதா? நம்மை மாற்றிய புத்தகங்கள்/ படங்கள் எவை? இவையெல்லாமே மிக முக்கியம். இவைதான் நம்மை ஒரு கலைஞராகவோ, சாதாரண நபராகவோ மாற்றுகின்றன.
தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT