Published : 18 Mar 2016 10:29 AM
Last Updated : 18 Mar 2016 10:29 AM
‘சொல்லாமலே’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘டிஷ்யூம்’ படங்களின் கமர்ஷியலான வெற்றிக்குப் பிறகு, சிறந்த கதைத் தேர்வுக்காக ‘பூ’ படத்தின் மூலமாகப் பரவலான பாராட்டைப் பெற்றவர் இயக்குநர் சசி. ‘ஐந்து ஐந்து ஐந்து’ படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் தந்த வெற்றியின் பூரிப்போடு இருந்தவரை ‘தி இந்து’வுக்காகச் சந்தித்து உரையாடியதிலிருந்து:
இடைவெளி எடுத்துக்கொள்ள என்ன காரணம்?
நடிகர்களின் தேதி கிடைத்துவிட்டது, தயாரிப்பாளர்கள் முன்பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காகப் படம் பண்ணுகிறவன் நானில்லை. கதை மனதுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அதைப் படமாக்கும் முயற்சியில் இறங்குவேன். என் மனசாட்சிக்கு ஒத்துவராத எதையும் நான் செய்ய மாட்டேன். ‘ஐந்து ஐந்து ஐந்து’க்குப்பிறகு இரண்டு கதைகளை நான் தயார் செய்தேன். ஒன்று, பெண்ணை முதன்மைப்படுத்திய கதை. மற்றொன்று, ‘பிச்சைக்காரன்’ கதை. விஜய் ஆண்டணிக்கு இந்தக் கதை பிடித்திருந்ததால் இதை முதலில் படமாக்கினேன். நல்ல தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் போனதே இந்த இடைவெளிக்குக் காரணம்.
‘பிச்சைக்காரன்’ படத்தின் வசனங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதே…
‘பிச்சைக்காரன்’ன்னு படத்தோட பேரைப் பார்த்திட்டு, படம் பார்க்க வருகிற ரசிகரை வேறொரு கோணத்தில் பார்க்க வைக்கணும்னு நினைச்சேன். வெறும் வறுமை, துன்பம், சோகம் அப்படின்னு சொல்லிவிட்டுப் போகாமல், வசதியான ஒருவன் பிச்சை எடுத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்ற மையப்பிரச்சினையோடு, பிச்சைக்காரர்களின் இயல்பான வாழ்க்கைப் போக்கையும் இணைத்து சொல்ல நினைத்தேன்.
அதற்காகப் பிச்சைக்காரர்களின் அன்றாட நடவடிக்கை, அவர்களது உரையாடல் என அனைத்தையும் பதிவு செய்தோம். ‘அடுத்து யாரு ஆட்சிக்கு வரப்போறாங்க?’ன்னு இன்றைய அரசியல் போக்கைப் பற்றி அவர்களும் பேசுகிறார்கள். சிரிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். அவர்களது வாழ்வின் உண்மைத்தன்மையிலிருந்து வெளிப்படுகிற கற்பனையைத்தான் வசனங்களாக்கினேன். அவ்வளவுதான்.
ஹீரோயிஸத்தை முன்னிறுத்தியே தமிழ் சினிமாவின் கதைகள் உருவாக்கப்படுகின்றனவே, இது சரியான போக்குதானா?
பத்திரிகையாளர் நண்பர் ஒருவரோடு இது குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, “ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஒரு ஹீரோயிஸம் இருக்கு. அந்த ஹீரோயிஸத்தை வளர்த்தெடுக்கிறது தப்பில்லே. ஆனா, எது ஹீரோயிசம்னு நாம முதல்ல புரிஞ்சிக்கணும். ரிச்சர்ட் அட்டன்பரோவுக்கு காந்திதான் ஹீரோவா இருந்தாரு. இந்த ஹீரோயிஸம் மூலமா நாம என்ன சொல்ல வர்றோம், எதை முதன்மைப்படுத்துறோம்ங்கிறதுதான் ரொம்ப முக்கியம்’ அப்படின்னு சொன்னார். இந்தப் புரிதல் எனக்கும் இருக்கிறது. அதனால், ஹீரோயிஸத்தோட ஹீரோவை வைத்துப் படம் செய்வது தப்பில்லை; அதன் மூலமாக நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதையே என்னளவில் முக்கியமானதாகப் பார்க்கிறேன்.
ஒரு சிறுகதையை ‘பூ’ திரைப்படமாகத் தந்தீர்கள். நீங்கள் தேர்ந்த வாசகர் என்று தெரியும். நீங்களே உருவாக்கிய கதையைப் படமாக்குவது, வாசித்த ஒரு கதையைப் படமாக்குவது, இரண்டில் எது எளிதானது?
ஒரு நாவலிலிருந்தும், ஒரு படைப்பிலிருந்தும் எடுத்துப் படமாக்குவதுதான் உண்மையில் எளிமையானது. படத்தின் முழுக் கட்டமைப்புக்கும் நான் என்ன உணர்வைக் கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறேனோ அதை எழுதப்பட்ட ஒரு படைப்பு அப்படியே சொல்லிவிடுகிறது. அதற்கான திரை வடிவம் கொடுக்கும் வேலையை மட்டுமே நான் செய்ய வேண்டியுள்ளது. ‘வெயிலோடு போய்’ சிறுகதையின் அந்த ஒவ்வொரு வரியையும் காட்சியாக்குவது மட்டுமே எனது வேலையாக இருந்தது. எளிமையாகவும் இருந்தது. என்னைப் பொறுத்தவரை அதுதான் சரியானது என்றே நினைக்கிறேன்.
தற்போதும் படமாக்கும் எண்ணத்தில் சில கதைகளும், இரண்டு நாவல்களும் உள்ளன. பூமணியின் ‘வெக்கை’ நாவலைப் படமாக்கும் எண்ணம் ரொம்ப காலமாகவே உள்ளது.
‘பிச்சைக்காரன்’ படத்துக்குக் கிடைத்த பாராட்டுகளில் உங்களை மிகவும் நெகிழ வைத்த பாராட்டு எது?
என்னுடைய மானசீக குருவாக நினைக்கிற இயக்குநர் மகேந்திரன் சாரும், என்னுடைய நேரடி குருவான வசந்த் சாரும் என்னைப் பாராட்டியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தாலும், ஒரு படைப்பாளனாக என்னை மிகவும் நெகிழ வைத்த பாராட்டு ஒன்றுண்டு. ‘பிச்சைக்காரன்’ படத்தைப் பார்த்துவிட்டு, தினமும் எங்கள் வீட்டுக்கு பேப்பர் பையன் ‘தி இந்து’தமிழ் நாளிதழின் முதல் பக்கத்தில், தனக்குத் தெரிந்த தமிழில் எழுத்துப் பிழைகளோடு படத்தைப் பாராட்டி எழுதிய வரிகள் என்னை வெகுவாய் நெகிழ வைத்தன.
பேப்பர் பையனின் பாராட்டு
அடுத்து என்ன படம்?
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, நான் எதிர்பார்க்காத நிறுவனங்களெல்லாம் என்னைப் படம் செய்யக் கேட்டுள்ளனர். எனக்குப் பிடித்தமான, நானே எழுதிய கதையொன்றோடு விரைவில் அடுத்த படத்தின் அறிவிப்பு வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT