Published : 13 Mar 2016 11:09 AM
Last Updated : 13 Mar 2016 11:09 AM
தூய்மையான நட்பில் துரோ கத்துக்கு இடமில்லை என்பது தான் ‘நட்பதிகாரம் 79’.
பொறியியல் பட்டதாரியான ஜீவா (ராஜ் பரத்) ஒரு துடிப்பான இளைஞன். பூஜா (தேஜஸ்வி) மீது இவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். இவர்களைப் போலவே அரவிந்த் (அம்ஜத்கான்), மகா (ரேஷ்மி) இருவரும் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார்கள். ஒரு டிஸ்கோத்தே கிளப்பில் சந்தித்துக் கொள்ளும் இந்த நால்வரும் நண்பர்கள் ஆகிறார்கள். நட்பும் காதலுமாய் வாழ்வைக் கொண்டாட நினைக்கும் இவர்களது வாழ்க் கையில் எதிர்பாராத திடீர் சிக்கல். அவர்களது காதலையும் நட்பையும் சோதிக்கும் இந்தச் சிக்கலிலிருந்து நட்பும் காதலும் பிழைத்ததா என்பதே கதை.
நட்புக்கும் காதலுக்கும் இடையில் வரும் முரண்கள் பல படங்களில் கையாளப்பட்டிருக்கின்றன. அந்தப் பிரச்சினையை ஜோடி மாறாட்டம் வரை கொண்டுசெல்வதுதான் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் புதுமை. ஜோடிகளுக்கிடையில் ஏற் படும் குழப்பம் திரைக்கதையில் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. பிரிவு ஏற்பட்ட பிறகு, கடைசியில் என்னதான் ஆகும் என்னும் ஆவலைத் தூண்டு மளவு திரைக்கதை அமைக்கப்பட்டுள் ளது. ஆனால் குழப்பம் ஏற்படுவதற்கான காரணமும் அந்தச் சிக்கல் தீரும் விதமும் பலவீனமாக இருப்பதுதான் ஏமாற்றமளிக்கிறது.
முதன்மைக் கதாபாத்திரங்கள் நால்வரும் கைக்குலுக்கலில் தொடங் கும் நட்பை, ஆழப்படுத்திக் கொள் ளும் காட்சிகள் ஒன்றிரண்டு இருந்தாலும் அவை ஏனோதானோ வென்றே இருக்கின்றன. காதலர்கள் இருவரும் தங்கள் காதலியரின் நம்பிக்கையை இழக்கும் முக்கியமான கட்டத்தில் அதற்கான காரணமும் மிகப் பழைய நாடகமாகவே இருக்கிறது. இதனால், அழகும் இயல்பும் பொருந்திய இளம் நட்சத்திரத் தேர்வு இருந்தும் பார்வையாளர்களுடன் ஒன்ற முடியாத பரிதாப நிலையை எட்டிவிடுகிறது படம்.
காதல், பிரிவு, அகியவற்றோடு குடும்ப உறவுகளையும் திரைக்கதையில் பின்ன நினைத்திருக்கிறார் இயக்குநர். ஒரு இளைஞனும் யுவதியும் பழகினால் அது நிச்சயம் காதலாகத்தான் இருக்க முடியும் என்ற பார்வையை, தலைமுறை இடைவெளியின் விளைவாகச் சித் தரித்த விதம் நம்பும்படி இருக்கிறது. ஆனால் பெரியவர்களால் ஏற்பட்ட குழப்பத்தைப் புரிந்துகொள்வதில் இளைய தலைமுறை சறுக்கும் விதம், அழுத்தமாகவும் சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கப்படவில்லை.
ராஜ் பரத், அம்ஜத்கான், தேஜஸ்வி, ரேஷ்மி ஆகிய நால்வரும் தங்கள் கதாபாத்திரங்களில் இயல்பாக வந்துபோகிறார்கள். காதல், நட்பு ஆகியவற்றால் மட்டுமில்லாமல் அப்பாவின் மீதான பாசத்தாலும் தவிக்கும் வேதனையை ரேஷ்மி நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு படத்துக்கு கனம் சேர்க்கிறது.
தீபக் நிலம்பூரின் பின்னணி இசை யில் சிறப்பாக எதுவுமில்லை. தோழா பாடல் வசீகரிக்கிறது. பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதம் நன்றாக உள்ளது. ஒளிப்பதிவாளர் குருதேவ் தன் வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார்.
உணர்ச்சிகளைக் கையாண்டுள்ள விதத்தில் ‘நட்பதிகாரம் 79’ கவர்ந்தாலும் முக்கியமான திருப்பங்களில் சறுக்கி யிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT