Published : 06 Jun 2014 05:26 PM
Last Updated : 06 Jun 2014 05:26 PM
‘பூவிழி வாசலிலே திரைப்படம் பேபி சுஜிதாவை முக்கியப் பாத்திரமாகக் கொண்டு 1987 ஜனவரியில் வெளியானது. தமிழில் அதுவரை வெளியான படங்களிலிருந்து மாறுபட்டதாக அது இருந்தது. இப்படத்தில் இடம்பெறும் கொலைக் குற்றம் ஒன்றை கேட்கும் திறனற்ற, பேச இயலாத சிறுவன் ஒருவன் பார்த்துவிடுவான். கொலைகாரர்கள் அவனைத் தேடி வரும்போது அவனது தாயும் கொல்லப்படுவாள். இரண்டு குற்றங்களுக்கும் அந்தச் சிறுவன் மட்டுமே ஐ விட்னஸ். அவனை வைத்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தரும் திரைக்கதையை சுவாரசிய மான த்ரில்லராகப் படமாக்கித் தந்திருந்தார் பாஸில்.
தற்போது வெளியாகியிருக்கும் பூவரசம் பீப்பீ திரைப்படத்திலும் இதைப் போன்றே கிராமம் ஒன்றில் நிகழும் குற்றம் ஒன்றைச் சிறுவர்கள் மூவர் பார்த்துவிடுகிறார்கள். இங்கே சலவைத் தொழிலாளி ஒருத்தி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிப் பலியாகிறாள். குற்றமிழைத்த வர்களுக்கு எப்படிச் சிறுவர்கள் தண்டனை பெற்றுத் தருகிறார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை. இரண்டு படங்களுக்கும் இடையே சரியாக இருபத்தியேழு ஆண்டுகள் வித்தியாசம். அதுதான் பூவரசம் பீப்பீ திரைப்படத்தை இயக்கிய ஹலிதா ஷமீமின் வயது என்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் ஜெயதேவி, ஜானகி விஸ்வநாதன், ஸ்ரீப்ரியா, காயத்ரி புஷ்கர் போன்ற பெண் இயக்குநர்கள் சிலர் படங்களைத் தந்துள்ளார்கள். இவர்கள் செல்லும் வழியில் வந்துள்ள ஷமீம் தனது பாதையில் அழுத்தமான தடத்தைப் பதித்துள்ளார். குழந்தைகளின் கோடைகாலச் சாகசம் என்று வருணிக்கப்படும் இப்படம் காட்சிகளின் வடிவமைப்பு காரணமாக வழக்கமான குழந்தைப் படங்களிலிருந்து வித்தியாசப் படுகிறது. இது மிகச் சிறந்த படமல்ல. ஆனால் தன்னைத் தனித்த அடையாளத்துடன் காட்டத் தீவிரமாக முயன்றுள்ள படம் என்பதை நிரூபிக்கும் வகையில் தனது குழுவினரின் ஒத்துழைப்புடன் இதை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.
இயக்குநர் கே. பாக்யராஜ் தனது படங்களில் அதிகமாகக் குழந்தைப் பாத்திரங்களைக் கையாண்டுள்ளார். அவரது டார்லிங் டார்லிங் டார்லிங் திரைப்படத்தில் காதல் என்பது தொடங்கும் சமயம் பால்ய பருவம். அந்த ஏழு நாட்களில் வளரிளம் பருவச் சிறுவன் காதலுக்குத் தூதாகவும் துணையாகவும் இருப்பான். முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நாயகியுடன் அலைந்து பாலியல் வசனங்கள் பேசித் திரிபவர்கள் வளரிளம் பருவத்துக் குழந்தைகள். பாக்யராஜின் திரைக்கதையை அடியொற்றிப் பயணப்படும் மணி ரத்னத்தின் அஞ்சலி திரைப்படம் நகரத்து அபார்ட்மெண்ட் குழந்தைகளை மையப்படுத்தியிருந்தது. வயசுக்கு மீறிப் பேசும் குழந்தைக் கதாபாத்திரங்களைக் கொண்ட படம் என்னும் குற்றச்சாட்டுக்கு இது ஆளானது.
இப்படியான குழந்தைகள் படங்களில் ஓரளவு மாறுபட்டதாக வெளியானது பாண்டிராஜின் பசங்க. குழந்தைகள் படமென்றாலும் அதில் பெரியவர்களின் அசட்டுத் தனங்களைக் குழந்தைகள் மூலம் சுட்டிக்காட்டியிருப்பார் அவர். முழுக்க முழுக்கக் குழந்தைகளுக்காக என வெளியான இயக்குநர் ராசி அழகப்பனின் வண்ணத்துப்பூச்சி வந்ததும் மறைந்ததும் சுவடின்றி நடந்தது. ஷாமிலி என்ற குழந்தையை வைத்து ராம.நாராயணனும் பல பக்திப் படங்களை எடுத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான கோலிசோடா வளரிளம் பருவத்துக் குழந்தைகளைக் கிட்டத்தட்ட கதாநாயகர்களாகப் பிரதியெடுத்தது. தமிழில் வெளியான இத்தகைய குழந்தைகள் படங்கள் பெரும்பாலானவற்றில் குழந்தைக் கதாபாத்திரங்கள் பிஞ்சிலேயே பழுத்து வெம்பியிருக்கும். இந்த நெடும் பயணத்தின் சுவடைப் பார்த்தோ பயந்தோ அதன் பக்கவாட்டில் தனக்கொரு பாதையைப் போட்டுக்கொண்ட படமெனப் பூவரசம் பீப்பியைச் சொல்லலாம்.
பெரியவர்களின் உலகத்தின் தரம்கெட்ட செயல்கள் குழந்தைகள் மனத்தில் என்ன விதமான தாக்கங்களை ஏற்படுத்தும், அவர்களின் இனிமையான பால்யத்தில் எப்படிக் கழிவு நீர் கலக்கிறது போன்றவற்றைப் பாவனையின்றி, உணர்ச்சிவசப்படல் இன்றிச் சொல்ல முயன்றிருக்கிறார் ஷமீம். இப்படத்தின் வேணு கண்ணனோ, ஹரீஸோ, கபில் தேவோ வயதுக்கு மீறிப் பேசவில்லை ஆனால் வயது கடந்த ஞானம் கொண்டவர்களாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றைக் குறித்தும் பேசுகிறார்கள்; விவாதிக்கிறார்கள்; ஒரு முடிவுக்கு வருகிறார்கள், ஆனால் அவர்கள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். புரிந்துகொள்ள முடியாத இந்த மாயமே பார்வையாளரைக் குழப்பும் அம்சமாகியுள்ளது.
படைப்புத் திறனை ஊக்கப்படுத்தாத மொண்ணையான கல்வியை இயக்குநர் கிண்டலடிக்கிறார். நமது வீட்டிற்குள் ஊடுருவி நமது பாக்கெட்டைக் காலியாக்கும் விளம்பரங்கள்மீதும் தொலைக்காட்சிகள் மீதும் அவருக்கு விமர்சனம் இருக்கிறது. மதத்தின் பெயரால் பெருகி ஓடும் ரத்தம் அவருக்கு வாதை தருகிறது. இந்தச் சமூக அக்கறையைச் சிறுவர்களும் உணர்கிறார்கள் என்பதைப் பெரியவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல்போகிறது. ஏனெனில் குழந்தைகளுக்கு என்ன தெரிந்துவிடப் போகிறது என்னும் அலட்சியம் பெரியவர்களிடம் புரையோடியுள்ளது. வழக்கமாக மாணவர்கள் தவறு செய்வார்கள் ஆசிரியர் ஒருவர் வண்டி வண்டியாய் வசனம் பேசி அவர்களை நல்வழிப்படுத்துவார். ஆனால் இப்படத்தில் நிலைமை தலைகீழ், ஆசிரியர் அருவருக்கத்தக்க காரியத்தில் ஈடுபடுகிறார்.
சலவைத் தொழிலாளியைக் கொன்று ஆறு பலிகொண்டுவிட்டது என்று ஊரையே நம்பவைக்கிறார்கள் தகாத காரியத்தில் ஈடுபட்ட பெரியவர்கள். ஆனால் சிறுவர்கள் அந்தக் குற்றத்தைக் குற்றமென நிரூபிக்கப் பாடுபடுகிறார்கள். பெரியவர்கள் மூட நம்பிக்கையின் பக்கம் நிற்கிறார்கள்; சிறுவர்கள் பகுத்தறிவுடன் செயல்படுகிறார்கள். இது வழக்கத்திற்கு மாறானது. ஒரு குறும்படத்தை நீட்டித்திருப்பது போன்ற சாயல் தென்படுவதால் சில இடங்கள் தொய்வடைந்துபோகின்றன; ஆனால் எந்த இடத்திலும் படம் தனது பாதையை மாற்றிக்கொள்ள வில்லை. கூடப் படிக்கும் சிறுமியின் மீது சிறுவர்களுக்குப் பிரியம் இருக்கிறது. அது தொடர்பான கனவு இருக்கிறது. இதை வயதுக்கு மீறிய செயல் என்பதைத் தாண்டி அது அந்த வயதுக்கே உரிய பிரியம் அவ்வளவுதான். குடிகாரத் தந்தை நடுரோட்டில் விழுந்து கிடக்கும் காட்சி கபில்தேவை அவமானத்துக்கு ஆளாக்குகிறது. அந்தப் பிஞ்சு மனம் வேதனையால் வெதும்பிப்போகிறது. நண்பர்கள் அவனைத் தேற்றுகிறார்கள். இதெல்லாம் பெரிய மனுஷத்தனம்தான். இதை உணரச் சிரமப்படுகிறார்கள் பெரியவர்கள்.
அமராவதி நதி பாயும் அழகிய கிராமம் கண்ணில் குளுமையாய்ப் பரவுகிறது. அந்தக் கொடூரம் நிகழும் அன்று பொழியும் மழை அவ்வளவு அழகு. நதியில் கலக்கும் மழைத் துளிகளில் தென்படும் யவ்வனத்தைச் சிறிதும் வீணாக்காமல் சிறைபிடித்துள்ளது மனோஜ் பரமஹம்சாவின் கேமரா. படம் முழுவதுமே ஒருவித மர்மமான மௌனம் உறைந்து கிடக்கிறது. இந்த மௌனத்தை அவசியப்படும் காட்சிகளில் ஒலிபெயர்த்துள்ளார் இசையமைப்பாளர் அருள் தேவ்.
பெண்கள் பருவமெய்தும் உடலியல் நிகழ்வைக் காலகாலமாகக் கொண்டாடி தீர்த்த முகங்களில் அழகாய்க் காறி உமிழ்ந்துள்ளார் ஷமீம். சிறுவன் பருவமெய்திய காட்சி படமாக்கப்பட்ட விதம் கோபத்தைச் சிரித்துக்கொண்டே வெளிப்படுத்தும் ரகம். வன்புணர்வுக் காட்சி உண்டு படத்தில், மதக் கலவரம் உண்டு; ஆனால் எந்தக் காட்சியிலும் வன்முறையின் கோரம் பதிவாகவில்லை. வன்முறையின் பாதிப்பை உணர்த்துகிறார்; அதையும் மிகச் சன்னமாக, மிக உள்ளொடுங்கிய தொனியில். வயது ஏற ஏற அறிவு வளர்கிறது என்ற நம்பிக்கையைக் குலைத்து, வயது ஏற ஏற அறிவு தேய்கிறது என்னும் உண்மையை வெளிப்படுத்த முனைந்துள்ளார் இயக்குநர் ஹலிதா ஷமீம். இந்தத் துணிச்சல் அவரைத் தனித்து அடையாளப்படுத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT