Published : 08 Oct 2021 05:11 AM
Last Updated : 08 Oct 2021 05:11 AM

சந்திப்பு: சிவகார்த்திகேயன் - ஊரடங்கில் கற்றதும் பெற்றதும்!

“கடந்த ஆகஸ்டில் ரிலீஸாகியிருக்க வேண்டிய படம். கரோனா இரண்டாம் அலை ஆறு மாதம் நீடிக்கும் என்று சொன்னதால் ஓடிடியில் வெளியிட்டு விடலாம் என்று தயாரிப்பாளர் கூறினார். இப்போ தொற்று கட்டுக்குள் வந்ததால் தியேட்டர்கள் திறந்தாச்சு.. ‘டாக்டர்’ தியேட்டரில் வெளியாவது எங்க எல்லாருக்குமே மகிழ்ச்சி” எனும் சிவகார்த்திகேயன் பேச்சில் அவ்வளவு உற்சாகம்.. படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி, வேறொரு சிவகார்த்திகேயனை எதிர்பார்க்க வைத்திருக்கும் இப்படம் குறித்தும் இன்னும் பல கேள்விகளுக்கும் தயக்கமின்றி பதிலளித்தார். ‘இந்து தமிழ் திசை’க்காக அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...

உங்களுடைய குருநாதர் நெல்சன் இயக்கத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

சினிமா பண்ண வேண்டும் என்கிற ஆசை தொடக்கத்திலிருந்தே எங்கள் இருவருக்கும் இருந்தது. ‘வேட்டை மன்னன்’ படத்தில் அவரிடம் உதவி இயக்குநராக இருந்தேன். உதவி இயக்குநர் என்றால் நாங்கள் இருவர் மட்டும்தான். வேறு யாரும் கிடையாது. 'கோலமாவு கோகிலா' படத்துக்குப் பிறகு ‘நாம் ஒரு படம் பண்ணுவோமா?’ என்று அவரிடம் கேட்டேன். அப்படி உருவானதுதான் ‘டாக்டர்’. இதில் எனது கதாபாத்திரம் வழக்கமானதாக இருக்காது. எனக்கு வசனங்கள் குறைவு. ஆனால், தேவையானதைப் பேசியிருக்கிறேன். வழக்கமான ‘கவுன்ட்டர்கள்’ படத்தில் இருக்காது. என்னை மிகவும் புத்திசாலியாகக் காட்டியிருக்கிறார் நெல்சன்.

மாநில அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துக்கான விளம்பரத்தில் தயக்கமில்லாமல் தோன்றினீர்களே...?

நம்முடைய புகழ் சமூகம் சார்ந்த விஷயங்களுக்குப் பயன்படுகிறதென்றால் அதை விடச் சந்தோஷம் வேறு இல்லை. கரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்த நேரத்தில், ‘மருத்துவமனைக்குச் செல்லவோ.. மருத்துவர்களைச் சென்று பார்க்கவோ அச்சப்பட்டு, கரோனா அல்லாத உடல்நலப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை தேவைப்படும் கோடிக்கணக்கான மக்கள் பரிதவித்தார்கள். அந்த நேரத்தில், அவர்களுடைய அச்சத்தைப் போக்கவும் துணை நோய்களுக்கான சிகிச்சை, மருந்து, மாத்திரை விநியோகச் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க, மற்ற நோயாளிகளின் வீடு தேடிச் சென்று பரிசோதிக்கும் திட்டம்’ என்பது மிகவும் நேர்மறையானதாக எனக்குப் பட்டது. எனது சகோதரியும் ஒரு மருத்துவர். அவரும் வலியுறுத்தினார். உடனே அந்த விளம்பரத்தில் நடித்தேன்.

‘அயலான்' அறிவியல் புனைவுப் படத்தின் பட்ஜெட் குறைக்கப்பட்டது என்று செய்தி வெளியானது. தவிர, நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்து வருவதற்கு ‘பான் இந்தியா பட’மாக உருவாவது ஒரு காரணமா?

அந்தக் கதை கோரும் பொருட்செலவில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாமல் தயாரித்து வருகிறோம். ‘அயலான்’ படத்தின் முதல் பாதி இசைப் பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் சார் செய்து கொண்டிருக்கிறார். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தின் டீஸர் தயாராக இருக்கிறது. தமிழ் பதிப்புக்கான டப்பிங் முடித்துவிட்டோம். மற்ற பணிகளையும் முடித்து இந்தி, தெலுங்கு எழுத்தாளர்களிடம் கொடுத்து விடுவோம். கரோனா முடக்கத்தால் கிராஃபிக்ஸ் நிறுவனங்கள் செயல்படாமல் இருந்தன. நிலமைச் சீரடைந்துள்ளதால் தற்போது தான் பணிகளைத் தொடங்க முடிந்தது. 'அயலான்' எனது படங்களில் முதல் ‘பான் இந்தியா’ படமாக இருக்கும். ‘பான் இந்தியா’ படம் என்பதைத் திட்டமிட்டு எடுக்க முடியாது. அதற்கான கதை திருப்தியாக இருக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரைப் பெரிய பட்ஜெட்டில் எடுத்துவிட்டால் மட்டுமே அது ‘பான் இந்தியா’ படம் கிடையாது. 'ரஜினி முருகன்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஆகிய படங்களை மற்ற மொழிகளில் ரிலேட் செய்து பார்ப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் 'அயலான்' படத்தை எந்த மொழியிலும் பார்க்கமுடியும். அதுவொரு யுனிவர்செல் படம்.

‘ரெமோ' மாதிரியான பரிசோதனை முயற்சிகளைத் தொடர்வீர்களா? ரீமேக் படங்களைச் சீண்டுவதில்லையே ஏன்?

நிச்சயமாக. அந்தப் படத்துக்கான ‘லுக்’ வரும் வரைக்கும் தான் அது பரிசோதனை முயற்சி. செய்வதைத் திருந்தச் செய்தால் ரசிப்பார்கள். இப்போதும் கூட ‘ரெமோ’ கேரக்டரை மட்டும் வைத்துக்கொண்டு வேறு கதை, வேறு களம் பண்ணலாமா என்று கேட்கிறார்கள். ரீமேக் படங்களில் இதுவரை நடித்ததில்லை. அதில் எனக்குத் தயக்கம் உள்ளது. 'அலா வைகுந்தபுரமுலோ' ரீமேக்கில் நடிக்கச் சொல்லி கேட்டார்கள். யார் அந்த மாதிரி நடனம் ஆடுவது!? ரீமேக் படமென்றால் குறைந்த நாட்களில் முடித்துவிடலாம். வெற்றிக்கும் உத்தரவாதம் உண்டு. ஆனால், புதிதாக முயற்சிக்க வேண்டும் என்பதுதான் எப்போதும் எனது எண்ணமாக இருக்கிறது.

கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கற்றதும் பெற்றதும் என்ன?

அத்தியாவசியம் எது, ஆடம்பரம் எது எனத் தெரிந்து கொண்டேன். வாழ்க்கை முறையே மாறிவிட்டது. உதாரணமாகச் சிறு வயது முதல் தினமும் அசைவம் சாப்பிடும் பழக்கம் உண்டு. அது இந்த ஊரடங்கில் மாறிப் போனது. கடைகள் இல்லாத நாட்களில் குடும்பமே சைவமாக மாறினோம். இதனால் உடலில் பல நல்ல மாற்றங்கள் தெரியத் தொடங்கின. உடற்பயிற்சிகள் எதுவும் செய்யாமலே உடல் எடை நன்றாகக் குறைந்தது. அதேபோல் குடும்பத்துடன் இருக்கும் நேரம் எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்து கொண்டேன். நாம் வேலைக்குச் சென்ற பிறகு அவர்களுக்கு எவ்வளவு வேலை இருக்கிறது என்பதை ‘லாக் டவுன்’ புரிய வைத்தது.

தனிப்பட்ட இழப்புகளும் ஏற்பட்டன. அது ஏற்படும்போதுதான், கூட இருக்கும் ஒவ்வொருவரையும் கொண்டாடிவிட வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்களுடைய சின்னச் சின்ன நல்ல விஷயங்களைக் கூட பாராட்டி விட வேண்டும். இதை உணர்த்தியது நண்பன் அருண்ராஜாவுடைய மனைவியின் மறைவு. அவர் அவ்வளவு நேர்மறையான ஒருவர். படப்பிடிப்பில் “சாப்பிட்டீங்களா அண்ணே.. வேறு எதாவது வேணுமா..?" என்று கேட்டு ஓடிக் கொண்டே இருப்பார். சாப்பிடாமல் ஒருவர் வேலைசெய்துகொண்டிருந்தாலும், அதைக் கவனித்து அவரைச் சாப்பிட வைப்பார். அருகில் ஒரு நாய் பசியோடு இருந்தால் அதற்கு யார் உணவு கொடுப்பார்கள் என்று யோசித்து அதற்கும் பசியாற்றுவார். அவரை நாங்கள் கொண்டாடாமல் இருந்துவிட்டோமே என்று இப்போது தோன்றுகிறது. கூட இருப்பவர்களைக் கொண்டாட வேண்டும் என்பது தான் அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனது.

உயிரியல் பூங்காவில் வாழும் யானை, புலி ஆகியவற்றைத் தத்தெடுத்தது ஏன்?

விலங்குகள் இருந்தால்தான் காடு இருக்கும். காடு இருந்தால்தான் நாம் இருப்போம் என்பதை அடுத்த தலைமுறைக்குச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக இதைப் பார்க்கிறேன். யானை என்பது காட்டுக்கு மிகவும் முக்கியமான விலங்கு. யானையால் தான் ஒரு காடே உருவாகிறது. அதேபோல் புலிகள் அழிந்து வருவதாகச் சொன்னார்கள். சிறுவயதில் சிங்கம், புலி வளர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அம்மா விலங்குகளை வைத்து ஒரு தாலாட்டுப் பாடல் பாடுவார். இப்போது இப்படியொரு வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x