Published : 11 Mar 2016 10:49 AM
Last Updated : 11 Mar 2016 10:49 AM
மிஷ்கின்... உள்ளத்தில் உள்ளதை 'எடிட்' செய்யாமல் பேசும் அரிய படைப்பாளி. அவரது திரையுலக வாழ்க்கையை அவரது பார்வையிலேயே அணுகும் விதமாக, ஒரு மாலை நேரத்தில், இயல்பான வெளிச்சத்தில் தேநீர்க் கோப்பைகளுடன், நிகழ்த்திய விரிவான உரையாடலிலிருந்து...
மிஷ்கினை ஓரளவு நன்றாகவே தெரியும். சண்முகராஜா பற்றி சிறுகுறிப்பு சொல்லுங்களேன்.
"சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய முடியாத சூழ்நிலை. கடுமையான வறுமையில், அடுத்த வேளைக்கு எப்படிச் சாப்பிடுவது என்று யோசித்துக்கொண்டே அலைந்து திரிந்து கொண்டிருந்த மனிதன்தான் சண்முகராஜா. அந்த அலைச்சலில் இருந்து இப்போது வரைக்கும் தொடரும் ஒரே ஒரு பழக்கம், தினமும் ஐந்து மணி நேரம் புத்தகம் படிப்பது. மற்றபடி வாழ்க்கை ரொம்ப சூனியாமாகத்தான் இருந்தது.
ஏதாவது ஒரு பிடித்த வேலையை வாழ்க்கையில் பண்ணிப் பார்க்கலாம் என்று எண்ணினேன். காசு சம்பாதிக்கத்தான் எல்லா வேலையும் பண்றோம். ஆனால், காசு வருகிற எல்லா வேலையுமே நமக்குப் பிடித்துப்போவது இல்லை. அப்போதுதான் சினிமாவைத் தேர்ந்தெடுத்தேன். சினிமாவை தேர்ந்தெடுத்தது போல என் வாழ்க்கையில் நான் எடுத்த பெரிய ரிஸ்க் எதுவும் கிடையாது. இப்போதும் அந்த ரிஸ்க் அப்படியேத்தான் இருக்கிறது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பும் கஷ்டமாக இருந்தது, இப்போதும் கஷ்டமாக இருக்கிறது. இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று தெரிந்திருந்தால் சினிமாவுக்கு வந்திருக்கவே மாட்டேன்."
சினிமாவில் கதை சொல்வதற்கு உங்களை எப்படித் தயார்ப்படுத்தினீர்கள்?
"சின்ன வயதில் எனக்கு கதைச் சொல்வது ரொம்ப பிடிக்கும். இன்றைக்கு வரைக்கும் என் வாழ்நாளில் சுகமாக நினைப்பது கதை சொல்வதைத்தான். காசு வருமா என்பது தெரியாது, ஆனால் கதை சொல்வது ரொம்ப பிடிக்கும். அதற்கு பிறகு லேண்ட்மார்க் புத்தக கடையில் வேலை சேர்ந்து, சினிமாவைப் பற்றி படித்தேன். கதைச் சொல்ல தெரியும், ஆனால் சினிமாவில் கதை சொல்வது எப்படி, திரைக்கதை சொல்வது எப்படி என்று படித்தேன். ஒன்றரை வருடமாக திரைக்கதை என்றால் என்ன என்று ரொம்ப அக்கறையுடன் படித்தேன். அதற்கு பிறகு தான் உதவி இயக்குநரானேன். இயக்குநர் கதிர் என்னை அழைத்துச் சென்றார்.
'சித்திரம் பேசுதடி' வரைக்கும் என்னைப் போல் ஓர் உதவி இயக்குநர் உண்மையாக இருப்பாரா என்று ஆச்சர்யம் இப்போதும் உண்டு. இன்றைக்கு என்னிடம் இருக்கும் உதவி இயக்குநர்கள் உண்மையாக இருக்கிறார்கள். ஆனால், நான் சொல்லும் வியப்புக்கான அர்த்தமும் சூழலும் வேறு. நான் உதவி இயக்குநராக சேர்ந்த உடனே மொட்டை அடித்துக் கொண்டேன். நான்கு வருடங்களாக முடியே வளர்க்கக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டேன். அதை ஓர் இலக்காக வைத்து கொண்டேன். எந்த ஓர் இடத்திலும் எனது கவனம் சிதறக் கூடாது, சாலையில் போகும்போது கூட யாருமே என் பக்கத்தில் வரக்கூடாது என்று நினைத்தேன். என் வேலை, என் படிப்பு, என் சினிமா என்று இருந்தேன். அந்த நான்கு வருடக் காலங்களில், பாலைவனத்தில் தாகத்தில் தவிக்கும் ஒருவனுக்கு தண்ணீர் கிடைத்தால் எப்படிக் குடிப்பானோ அப்படித்தான் சினிமாவைக் குடித்தேன்.
இப்போதும் ஞாபகம் இருக்கிறது. 'தேவர் மகன்' படம் பார்த்து இடைவேளை முடிந்ததும், தியேட்டரிலே உட்கார்ந்து முதல் 40 காட்சிகளுக்கான ஒன்லைனை எழுதினேன். படம் முடிந்த பிறகு திரையரங்க வளாகத்திலேயே உட்கார்ந்து எஞ்சிய 35 காட்சிகளை ஒன்லைனை எழுதி முடித்தேன். ஒரு நல்ல படத்தை திரையரங்கில் பார்க்கும்போது இதே முறையைப் பின்பற்றுவேன். அப்படி நான் எழுதிய 150-க்கும் மேற்பட்ட ஒன்லைன்கள் என்னிடம் இன்னமும் இருக்கின்றன. சினிமாவை எப்படியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். கதைசொல்லியாக இருந்து சினிமாவில் கதைசொல்லியாக வளர்ந்தேன்.
'சித்திரம் பேசுதடி'யை எழுதத் தொடங்கியது முதல், அப்படம் வெளியான நாள் வரையில் எப்படி இருந்தீர்கள்?
'சித்திரம் பேசுதடி' எழுதி முடித்த பிறகு வாய்ப்பும் கிடைத்தது. என் நண்பர் ஸ்ரீகாந்த் மலேசியாவுக்கு அழைத்துச் சென்று கதை சொல்லச் சொன்னார். நான் அவருடைய முதலாளிக்கு கதை சொன்னேன். சினிமா துறை மீது விருப்பமில்லாதவருக்கு, நான் சொன்ன கதை மிகவும் பிடித்துவிட்டது. 'கதை எனக்கு பிடித்திருக்கிறது. இதை படமாக்க எவ்வளவு செலவாகும்?' என்று கேட்டார். அதற்கு 'எனக்கு தெரியாது சார்' என்று பதிலளித்தேன். அந்தக் கேள்விக்கான பதில் உண்மையிலேயே அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏனென்றால் நான் நூறு ரூபாய்க்கு மேல் அதிகம் பார்த்தது இல்லை. அடுத்து அவர் கேட்டார்... 'சரி. எவ்வளவு நஷ்டம் வரும்?' அதற்கும் "அதுவும் தெரியல சார். ஆனா, நிறையப் பேர் பேசிக் கேட்டிருக்கிறேன். ஒண்ணாரூபாயில் எடுக்கலாம் என்று பேசுவார்கள். அதில் எடுக்கலாம் சார்" என்று சொன்னேன்.
அவர் உடனடியாக எனது பெயரில் வங்கிக் கணக்கில் ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாய் போட்டார். அப்படித்தான் சித்திரம் பேசுதடி தொடங்கியது. என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தவர்களில் முக்கியமானவர்கள் நண்பர் ஸ்ரீகாந்த், எனது முதல் படத்தில் முதலீடு செய்தவர் எசிலன். எங்களுக்குள் பிறகு பிரிவு நேர்ந்துவிட்டாலும், நான் இன்னும் அவர்களை மறக்கவில்லை."
"ம்... படப்பிடிப்பு, ரிலீஸ், ரிசல்ட்?"
"சின்ன வயதில் இருந்தே எனக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதைத்தான் ரொம்ப உண்மையாக செய்வேன். நான் பார்த்த சினிமாவை நான் எடுக்கவில்லை. கதிர் சார், வின்சென்ட் செல்வா சார்கிட்ட இருந்தேன். அந்த சினிமாவை நான் எடுக்கவில்லை. நான் நினைத்த சினிமாவை எடுத்தேன். 'சித்திரம் பேசுதடி' முதல் நாள் படப்பிடிப்பு 'வாளை மீன்' பாடல் எடுத்தேன். ஐந்து நாள் எடுத்தேன். எனக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே பாட்டு பழகிக் கொண்டே இருக்கிறேன். பாடல்கள் மீது எனக்கு நேசம் அதிகம் என்பதால் இப்படித்தான் வேண்டும் என நினைப்பேன். 'வாளை மீன்' பாட்டை இப்படித்தான் எடுக்க வேண்டும் என்று நினைத்து தான் எடுத்தேன். அப்பாடலை ஷோபிதான் கோரியோகிராஃப் பண்ணினார். அவருக்கும் எனக்கும் நிறைய சண்டை எல்லாம் வந்திருக்கிறது. 'முதல் படம் பண்ணுகிறீர்கள் கொஞ்சம் தெரிந்துகொண்டு பண்ணலாமே, நீங்கள் சொல்வது தான் சரி என்று பண்ணுகிறீர்களே' என்றார்கள். பாட்டு எடுத்து முடித்தவுடன் காட்சி எடுக்க ஆரம்பித்தேன்.
ராஜீவ் மேனனிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவர் நரேன். அவரோடு 5 பேர் நிற்பது போல முதல் காட்சி வைக்கிறேன். ஆனால் எனக்கு காட்சிப்படுத்த தெரியவில்லை. 2 மணியில் இருந்து 4 மணி வரை ஆங்கிளை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டே இருக்கிறேன். இறுதிவரை எனக்கு ஷாட் வைக்கத் தெரியவில்லை என்பதை நரேன் கண்டுபிடித்துவிட்டார். அவர் எனக்கு நெருங்கிய நண்பர், என்னுடைய சினிமா தாகம் பற்றி எல்லாம் தெரியும். எனக்கு அந்தக் காட்சியை எப்படி வைப்பது என்று தெரியாததால் பேக்-அப் சொல்லிவிட்டு அறைக்கு வந்துவிட்டேன். எனக்கு சினிமா தெரியவில்லையா என்று யோசித்தேன். 'இல்லை... நமக்கு சினிமா தெரியும், சினிமாவை ரொம்ப உண்மையாக கற்றுக் கொண்டிருக்கிறோம் என்று உள்மனம் சொல்லியது. என்ன பிரச்சினை என்று சிந்தித்தேன். நான் யாரு மாதிரியோ ஷாட் வைக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். இப்படி வைத்தால் என்ன, அப்படி வைத்தால் என்ன என்று யோசித்திருக்கிறேன். எனக்கு தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களின் காட்சிகளை நினைவில் வைத்து யோசித்திருக்கிறேன். இந்தக் குழப்பங்களால் தான் எனக்கு அந்தக் காட்சியைப் படமாக்கத் திணறியிருக்கிறேன் என்பது தெரிந்தது. 'அய்யோ இது நம்ம சினிமா இல்லை' என்று உணர்ந்தேன். அடுத்த நாள் மிகத் தெளிவாகச் சென்று, ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியிடம் கேமராவை இங்கு வைங்க என்றேன். 'அங்க எப்படி சார், அது தப்பு' என்று சொன்னார். 'அங்க வைங்க. அதுதான் என் சினிமா' என்று சொல்லி ஆரம்பித்தேன். அப்போது தொடங்கியதுதான் யாரும் பார்க்காத கோணத்தில் காட்சிகளை அணுகும் உத்தி."
"அப்புறம், புதிதாக வேறென்னவெல்லாம் கற்றீர்கள்?"
"எனக்கு சினிமாவுக்கு கதை எழுதுவதற்கு முன்பே ஒரு இமேஜ் தேவைப்படுகிறது. எழுத்தாளர்களுக்கு ஒரு ஐடியா தோணலாம், ஒரு கதாபாத்திரம் தோணலாம், ஒரு வார்த்தை தோணலாம்... எனக்கு அப்படியில்லை. ஒரே காட்சி தெரியவேண்டும். நான் இமேஜாகத்தான் சினிமாவைப் பார்க்கிறேன். நான் படித்த காமிக்ஸ், விஷூவல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மூலமாக அதைக் கற்றுக் கொண்டேன். 'சித்திரம் பேசுதடி' படப்பிடிப்பு நாட்கள் ரொம்ப அழகானவை. அப்படத்தில் வரும் பெண் கதாபாத்திரம், நான் விரும்பும் பெண் எப்படியிருக்க வேண்டும் என்பதுதான். நாயகன் பாத்திரம் என்னுடைய பாத்திரம்தான். அதை உற்றுப் பார்த்தீர்கள் என்றால் அது என்னுடைய வாழ்க்கைதான்.
படம் எடுத்தவுடன், எனக்கு யாரிடம் எப்படி பேசி விற்க வேண்டும் என்பது எல்லாம் தெரியாது. ஒரு படம் பண்ணிக்கொண்டு இருக்கும்போது வெளியே செய்திகள் போகும். நிறையப் பேர் வந்து 'படம் போட்டுக் காட்டுங்கள்' என்றார்கள். நானோ 'காட்ட மாட்டேன்' என்று தெரிவித்துவிட்டேன். நாங்களே கஷ்டப்பட்டு வெளியிட்டோம். படம் தோல்வியடைந்தது. அந்தப் படத்தில் 'வாளை மீன்' என்று ஒரு பாடல் இருக்கிறது என்று செய்திகள் பரவியது. ஏதோ ஒரு விஷயம் அந்தப் படத்தை துரத்திக் கொண்டே இருந்தது. 7 நாட்கள் கழித்து கிரவுன் திரையரங்கில் ஒரே ஒரு காட்சி மட்டும் ஹவுஸ்ஃபுல்லாக ஒடிக் கொண்டிருந்தது. உடனே தேவி திரையரங்கில் படத்தை வாங்கிப் போட்டார்கள். தேவி தியேட்டரில் நான்கு காட்சிகளில் படம் ஹிட். படமும் இரண்டாவது முறை புதிதாக வெளியானது. அனைவரும் திருப்பி அனுப்பிய படப்பெட்டியை மறுபடியும் வாங்கினார்கள். ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கி வெளியிட்டு படம் பெரிய வெற்றி. ஆனால், என்னுடைய தயாரிப்பாளருக்கு அந்த நேரத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் நஷ்டம். இன்றைக்கு அவருக்கு கடன்பட்டிருக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 100 நாள் ஓடி படம் பெரிய வசூல். தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு பாட்டை பற்றி இந்த அளவுக்கு பேசியிருப்பார்களா என்று தெரியவில்லை. அந்தப் பாட்டு ஒரு வசியம் மாதிரியாகி அனைவரும் கையை ஆட்டி, மஞ்சள் சேலை கட்ட தொடங்கினார்கள். அந்தப் பாடல் தான் அப்படத்துக்கு ஓர் அடையாளம் போன்றது."
பிறகு, 'அஞ்சாதே'வுக்கு முன்னரே 'நந்தலாலா' கொடுக்கத்தானே விரும்பினீர்களே...
"'சித்திரம் பேசுதடி' வெற்றிக்குப் பிறகு ஏறத்தாழ 20 தயாரிப்பாளர்கள் வந்தார்கள். நானே என்னை கடவுள் போல் நினைத்துக்கொண்டேன். அந்தக் கடவுள் பரிசுத்தத்தில் இருந்து எழுதிய கதைதான் 'நந்தலாலா'. சொந்தக் கதை. 'கிகுஜிரோ' படத்தைப் பார்த்தவுடன் அதன் தாக்கத்தில் இக்கதையை பண்ணவேண்டும் என்று முடிவு செய்தேன். ஏனென்றால், அந்தக் கதாபாத்திரம் என் சொந்த அண்ணன். அவர் மனநல காப்பகத்தில் இருந்து இறந்துபோனவர். அந்தக் கதையை இங்குப் பண்ணலாம் என்று முடிவெடுத்தேன். அக்கதையை எழுதி முடித்து அனைத்து தயாரிப்பாளர்களிடமும் சென்றேன். 'எப்படியாவது தமிழ் சினிமாவை காப்பாற்றிவிட வேண்டும், கரைச் சேர்த்துவிட வேண்டும்' என்ற எண்ணத்தில் போனேன் (அவருக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை). யாருமே அப்படத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியே மூடிவைத்துவிட்டு, ஒரு போலீஸ் கதை எழுதினேன்.
ஒன்றரை வருஷமா படம் எடுக்கவில்லையே, கோபமா ஒரு படம் எடுக்கலாம் என்று எழுதிய கதைதான் 'அஞ்சாதே'. அப்படம் பெரிய வெற்றி. இரண்டாவது படமும் பெரிய வெற்றி. குப்பைத் தொட்டியில் கிடந்த 'நந்தலாலா'வை கிளறினேன். மறுபடியும் அக்கதையை வேண்டாம் என்கிறார்கள். ஆனால், அதைத்தான் செய்வது என்று உறுதியாக நின்றேன். ஏ.எம்.ரத்னத்துக்கு அக்கதை மிகவும் பிடித்துப் போய், அவருடைய பையனுக்கு 35 நாள் பயிற்சி எல்லாம் கொடுத்துத் தயார்ப்படுத்தி முதற்கட்ட பணிகள் நடந்துகொண்டிருந்தது.
படப்பிடிப்புக்கு 10 நாட்கள் இருக்கும்போது பணம் இல்லாததால் கைவிடப்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல், உதவியாளர்களும் வேறு ஒரு கதை பண்ணலாம் என்றார்கள். 'நந்தலாலா' கதையை படமாக்கியே தீரவேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அப்போது, நான் அணுகிய சில பெரிய நடிகர்கள், 'அதுபோன்ற கதை எல்லாம் வேண்டாம்' என்றார்கள். 'நான் ரொம்ப நேசித்த கதை. நானே செய்திடலாம்னு இருக்கேன்" என்று சொன்னவுடன் உதவியாளர்கள் சிரித்துவிட்டார்கள். பிறகு, '40 நாட்களில் உடலமைப்பை மாற்றி, ஒரு சின்ன படப்பிடிப்பு நடத்திக் காட்டலாம்' என்றேன். உடல் இளைத்தேன். கோபிசெட்டிபாளையாம் சென்று இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்தினேன். அதைப் பார்த்ததும் எல்லாருக்குமே பிடித்திருந்தது. ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. 'நான் இதைத்தான் பண்ணுவேன்' என்றேன். அவர்களும் சரி என்று சொல்லிவிட்டார்கள்."
'நந்தநாலா...' தொடங்கியதில் இருந்து வெளியானது வரையில் ஒருவித மனப் போராட்டம் பின்தொடர்ந்ததாக அறிய முடிந்தது...
" 'நந்தலாலா' படத்தை எடுத்து முடித்தவுடன், ரொம்ப திருப்தியான மனநிலை கிடைத்தது. இளையராஜாவின் இசையும் அற்புதமாக அமைந்தது. அப்படத்தைப் பற்றிய ஒரு பேச்சு வெளியே போனது. 'மனநிலை பாதிக்கப்பட்டவனுடைய கதை, கமர்ஷியலாக எப்படி போகும்?' என்று அனைவரும் பேச ஆரம்பித்தார்கள். இடையில் சில நண்பர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டினேன். என்னை அவர்கள் கட்டிப்பிடித்து பாராட்டினார்கள். ஆனால், அவர்களில் சில வெளியே போய் விநியோகஸ்தர்களிடம் 'இந்தப் படம் ஒடாது' என்று ஆருடம் சொன்னது எனக்கு பின்பு தெரிந்தது.
ஒன்றரை ஆண்டுகளாக படமே எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். 'நந்தலாலா' வெளியானது. க்ளைமாக்ஸ் 45 நிமிடக் காட்சியை கட் பண்ணச் சொன்னார்கள். தாயைக் காப்பாற்றுவதற்காக தாயின் கருவறைக்குள் போய் சண்டையிட்டு வருவது போல காட்சிப்படுத்தி இருந்தேன். அந்த 40 நிமிடக் காட்சியை 48 ஃப்ரேம்களில் படப்பிடிப்பு செய்திருந்தேன்,. ஒரு தாயின் கருவரைக்குள் குழந்தை மிதப்பது போல காட்சி இருக்க வேண்டும் என்று அப்படிச் செய்தேன். அந்தக் காட்சியை இறுதியில் நீக்கவிட்டேன். வெளியான படமும் தோல்வி. என் சினிமா வாழ்க்கையில் முதல் தோல்வி."
நீங்கள் 'கிகுஜிரோ' படத்தால் ஏற்பட்ட தாக்கம் என்று சொன்னீர்கள்... ஆனால், நந்தலாலா கடைசி வரை 'காப்பி' என்கிற ரீதியிலேயே பார்க்கப்பட்டதே. அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?
"இன்றைக்கு வரைக்கும் 'நந்தலாலா' ஒரு பெரிய காப்பிப் படம் என்று சொல்கிறார்கள். எந்த ஒரு சினிமா தெரிந்த ஆளையும் அழைத்து 'நந்தலாலா'வையும், 'கிகுஜிரோ'வையும் போட்டுக் காட்டுவோம். ஒரு பேப்பர் கொடுத்து, 'எந்த சீன் எந்த சீனில் இருந்து காப்பி அடித்தேன்?' என்று எழுதச் சொல்லலாம். முடிவில் நிச்சயமாக 'அது காப்பி இல்லை' என்று சொல்வார்கள். தாக்கத்துக்கும் காப்பிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் எல்லா படங்களுமே மற்றொரு படத்தின் தாக்கம்தானே? பிறகு, 'நந்தலாலா' படம் திரைப்பட விழாக்களில் வரும்போது முகம் சுளிப்பதுபோல் ஆகிவிட்டது. அதுபோன்ற விழாக்களில் பங்கேற்றதையே தப்பான முடிவு என நினைத்தேன். படம் மட்டும் நிறைய விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. நான் போகவில்லை."
அப்புறம்தான் பழைய மிஷ்கினை மீட்டெடுக்க 'யுத்தம் செய்'ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதா?
"நந்தலாலா"வுக்குப் பிறகு 'யுத்தம் செய்'. ஆம், அதில் யுத்தம்தான் செய்தேன். ஒரு நல்ல குடும்பத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டது என்றால், எப்படி மூர்க்கமாக மாறுகிறார்கள் என்று எழுதினேன். அந்தப் படம் பெரியளவில் போகவில்லை என்றாலும், எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.
அதற்குப் பிறகு 'மூகமுடி'. எப்படியோ ஆரம்பித்து எப்படியோ முடிந்த படம் அது. ஓர் இயக்குநர் அனைத்து நேரங்களிலும் ரொம்ப உன்னிப்பாக வேலை செய்ய முடியாது. அந்தப் படத்தின்போது எனக்கு ஒரு மிதப்புத் தன்மை வந்தது. அதுமட்டும் இல்லாமல், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பாதிப்புகள், பிரிவுகள், பிரச்சினைகள் எல்லாம் வந்தன. அவையெல்லாம் அந்தப் படத்தைப் பாதித்தது. ரொம்ப உணர்ச்சிகரமாக இருந்த நேரம் அது. ஆனால், நான் மனதில் நினைத்த நிறைய விஷயங்களை எடுத்தேன். ரசிகர்கள் பார்த்துவிட்டு 'இது மிஷ்கின் படம் மாதிரி இல்லையே' என்றார்கள்.
அப்படம் எடுத்து முடித்தவுடன், 'இன்னும் நல்லா பண்ணியிருக்கலாமே' என்று எனக்கு நிறைய வருத்தம். நான்கு படங்கள் தந்த இயக்குநரான நான், அப்போது பயங்கர வறுமையில் இருந்தேன். ரொம்ப உண்மையாக ஒரு படம் எடுக்க வேண்டுமே என்று நினைத்தேன். அப்போது எழுதிய கதை தான் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. 'நந்தலாலா'வுக்கு பிறகு என் மனதுக்கு ரொம்ப பிடித்த படம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'தான். வழக்கம் போல் இந்தக் கதையை நான் யாரிடமும் சொல்லவில்லை. ஏனென்றால் இந்தக் கதையை தயாரிக்க யாருமே முன்வரமாட்டார்கள் என்று தெரியும். நானே நடித்துத் தயாரித்தேன்."
திரையரங்கில் வெளியானபோது கண்டுகொள்ளப்படாமல், காலம் கடந்த பின்பு கொண்டாடித் தீர்க்கப்படும் படைப்புகள் பட்டியலில் உங்களது 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' சேர்ந்திருப்பதை கவனித்தீர்களா? அந்தப் படம்தானே உங்களுக்கு திரைத்துறையில் வணிக ரீதியில் பல புது அனுபவங்களைக் கொடுத்தது?
"உண்மையில் அந்தப் படம் எடுத்து முடித்த பிறகு, நல்ல வியாபாரம்கூட ஆனது. வியாபாரிகள் அட்வான்ஸ் தொகை கொடுத்தார்கள், அதற்குப் பிறகு எந்த ஒரு தொகையுமே கொடுக்கவில்லை. தங்களால் படத்தை விற்க முடியவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். அப்போது, இந்தப் படமே வெளியாக வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். விரக்தியில் இருந்த அப்படி ஒரு நேரத்தில்தான் பத்திரிகையாளர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மறுநாள் வெளியாக இருந்த படத்தை 'வேண்டாம் மூடிவிடலாம்' என்று கூறிவிட்டேன். வேண்டா வெறுப்பாக பத்திரிகையாளர் காட்சிக்கு சென்றேன். என்னால் நம்பவே முடியவில்லை... என்னைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினார்கள். 'படம் நன்றாக வந்திருக்கும்' தகவல் இரவோடு இரவாக பரவியது. படத்தை உடனே வெளியிடலாம் என்று வியாபாரிகள் சொன்னார்கள். நள்ளிரவுக்குப் பின் 2 மணிக்கு ஏதேதோ ஆவணங்களில் கையெழுத்திடச் சொன்னார்கள். நானும் காட்டிய இடங்களில் போட்டேன்.
மறுநாள் காலையில் 6 மணிக்கு எழுந்தபோது 'படம் வெளியாகாது' என்ற அதிர்ச்சித் தகவல். 'லேப்பில் 25 லட்ச ரூபாய் பாக்கி, அதை கட்டினால்தான் படம் வெளியாகும்' என்கிறார்கள். நான் லேப்புக்கு ஓடினேன். 'க்யூப்'-ஐ ரிலீஸ் செய்யச் சொல்லுங்கள், 25 லட்ச ரூபாயை நான் எப்படியாவது தயார் செய்து கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னேன். சினிமாக்காரனான எனக்கு, 25 லட்ச ரூபாயால் ஒரு படம் நிற்குமா? என்பது கூட அதுவரை தெரியாமல் இருந்தது. காசு வைத்தால்தான் படம் வெளியிட முடியும் என்று சொன்னார்கள். பணம் தயார் பண்ண 11 மணியாகும் என்றேன். எனது 35 லட்ச ரூபாய் கார் சாவியைக் கொடுத்துவிட்டு, 'பணம் தயார் பண்ணி வந்துவிடுவார்கள். அப்படி வரவில்லை என்றால் இந்தக் காரை வைத்துக் கொள்ளுங்கள்' என்றேன். அவர்கள் அதை எடுக்கவில்லை. அமெரிக்காவில் இருக்கும் எனது உதவி இயக்குநர் நண்பர் மூலமாக 25 லட்ச ரூபாய் டி.டி கிடைப்பது உறுதியானது. அதன்மூலம் கைக்கு பணம் வருவதற்கு 10:30 மணியாகும். 'காசோலை எடுக்கிறார்கள், க்யூபை ஓப்பன் பண்ணச் சொல்லுங்கள்' என்றேன். ஆனால் அவர்கள் அமைதி காத்தனர். காசு வைத்தால் சொல்வோம் என்றார்கள்.
'ஒரு படத்தின் முதல் காட்சி ஓடவில்லை என்றால், அந்தப் படம் தோல்வியடைந்துவிடும் சார்' என்றேன். அதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. எனது உதவி இயக்குநர் அவர் முன் முட்டிப் போட்டு "ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார் சார்... ஆறு படம் அவரோடு பணியாற்றி இருக்கிறோம் சார்... எங்களுக்காக உதவி பண்ணுங்க. காசு வருது சார். ஒரு வார்த்தை சொன்னீர்கள் என்றால் க்யூப் ஒப்பன் பண்ணிவிடுவார்கள்" என்று அழுதார். நான் நிலைகுலைந்துபோனேன். அவர் 'மாட்டேன்' என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
முதல் காட்சி வெளியாகவில்லை. உடனே 80 திரையரங்கில் இருந்து அப்படத்தை எடுத்துவிட்டார்கள். 20 திரையரங்கில் மட்டும் மாலையில் வெளியானதுயாருக்கும் எந்தத் தியேட்டரில் படம் ஓடுகிறது என்றே தெரியவில்லை. ஆக, படம் வெளியான முதல் நாளே தோல்வியடைந்தது. ரொம்ப கஷ்டமாகிவிட்டது. அந்தப் படம் அப்படியே நசுக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட படம். என்னிடம் காசே இல்லை. நண்பர்களிடம் காசு வாங்கிதான் அடுத்த 40 நாட்கள் சாப்பிட்டேன். ஒவ்வொரு நாளுக்கு ஒரு நண்பன் 500 ரூபாய் கொடுத்துவிட்டுப் போவார்கள்.
அப்போதுதான் அந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் பாலா அழைத்து 'எனக்கு ஒரு படம் பண்ணு' என்றார். 'பிசாசு' பண்ணினேன். படம் வெற்றியடைந்தது. இப்போது 'சவரக்கத்தி'யில் இருக்கிறேன். ஒரு படம் எழுதி முடித்து, அதை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லி முன்பணம் வாங்கித்தான் 'சவரக்கத்தி' ஆரம்பித்தேன்."
சர்வதேச திரைப்பட விழாவின் மூலமும் வர்த்தக பலனை அடைய முடியும் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், பட விழாக்களைப் பயன்படுத்த விரும்பாதது ஏன்?
"நான் நீண்ட நாள் யோசித்துதான் திரைப்பட விழாக்களுக்கு என் படங்களை அனுப்புவது இல்லை என்று முடிவெடுத்தேன். என் படங்கள் பற்றி நானே எடுத்துச் சொல்லி பிரபலப்படுத்தும் எண்ணம் இல்லை. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில், ஒரு படத்துக்கு வியாபாரம் ரொம்ப முக்கியம். தமிழ்நாட்டில் அந்த வியாபாரம் நிர்ணயிக்கப்படுகிறது. திரைப்பட விழாக்களில் ஒரு படம் வரவேற்பு பெறுகிறது என்பதாலேயே தமிழ்நாட்டில் அந்தப் படம் ஓடிவிடும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. பொழுதுப்போக்கையும் தாண்டி சினிமாவை ஒரு கலையாக அணுகுகிற ரசிகர்கள் எல்லாருக்குமே என் படங்கள் பிடிக்கும்."
உங்களை நேரடியாகப் போக வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. சர்வதேச திரைப்பட விழாக்கள் என்பது உலகம் தழுவிய தீவிர சினிமா ரசிகர்களுக்கும் நம் சினிமாவைப் பார்க்கும் வாய்ப்பைத் தரும் ஒரு களமாக நினைக்கலாமே...
"என் படைப்பு, என் காலத்தைத் தாண்டினால் அதுதான் ஒரு நல்ல படம். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் எனது இரண்டு படங்களைப் பாடமாக நடத்துகிறார்கள். வடஇந்தியாவில் உள்ள இயக்குநர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் 'உங்களுடைய படங்கள் பிடிக்கும்' என்கிறார்கள். என் படம் இங்கு வியாபாரம் ஆகிறது, சம்பளம் கிடைக்கிறது.
'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தை திரைப்பட விழா ஒன்றில் திரையிட கேட்டபோது, 'வேண்டாம்' என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால், 'வலி சார். ஒரு படம் கொல்லப்படுகிறது. வேண்டம் சார்' என்று கூறிவிட்டேன். ஆனால், வெளிநாடுகளில் அந்தந்த மொழிகளில் சப்-டைட்டில் போட்டு என் படத்தை வெளியிடும் எண்ணம் இருக்கிறது.
அதேநேரத்தில், என்னைச் சுற்றியுள்ளவர்கள் சர்வதேச விழாக்களில் கலந்துகொண்டு வரும்போதும், விருதுகளை அள்ளி வரும்போதும் முதலில் ஓடிச்சென்று பாராட்டுகிறேன். மிகுதியாக மகிழ்ச்சி அடைகிறேன். அந்தப் படைப்பு பற்றி கேமரா முன்பு பேசுகிறேன். மேடைகளில் பேசுகிறேன். அப்படி நான் முழு நிறைவுடன் கொண்டாடி, மக்களைப் பார்க்கச் சொன்ன படம் 'விசாரணை'. என் தனிப்பட்ட விருப்பங்கள் என்பது வேறு; என் நண்பர்களின் நம்பிக்கைக்கு துணை நிற்பது என்பது வேறு. இதில் உள்ள முரண்பாடுகளை நோண்டிப் பார்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
விருதுகள் மீது கூட ஒரு விதமான வெறுப்பைப் பார்க்க முடிகிறதே..?
"ஒன்றரை அடி சிலையை கையில் வைத்துக் கொண்டு உருகுவது, அதை வீட்டில் ஃப்ரேம் பண்ணி வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டே இருப்பது. அது துறுபிடித்து நிற்பது... இதெல்லாம் தேவையில்லை. என் அறை வெள்ளைச் சுவராக இருந்தால் போதும். என் படத்துக்கான எடிட்டிங் முடிந்துவிட்டால், அந்தப் படம் எனக்கு போரடிக்க ஆரம்பித்துவிடும். ஃபைனல் எடிட் முடிந்தவுடன் 'என்னடா இவ்வளவு கேவலமா படம் எடுத்திருக்கிறோம்?' என்று எழுந்து வெளியே போய்விடுவேன். என் படங்களே எனக்கு பிடிக்காது. நான் இன்னும் விருதுக்கு தகுதியான படங்கள் எடுக்கவில்லை என நினைக்கிறேன். இன்னும் 20 வருடங்கள் கழித்து நல்ல படம் எடுத்துவிடுவேன் என நினைக்கிறேன். இப்போதைக்கு எனக்கு விருதுகள் தேவையில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
திரைப்பட விழாக்கள் அல்ல; விருதுகள் அல்ல; பணமும் அல்ல... வேறு என்னதான் உங்களை சினிமாவில் தொடர்ந்து இயங்குவதற்கு ஊக்கம் தருகிறது?
"நான் ஒரு புத்தக கடைக்குச் சென்றால், ஒரு மணி நேரத்தில் பத்து பேர் என்னிடம் வந்து பேசுவார்கள். ரொம்ப உண்மையாக பேசுவார்கள். எனக்கென்று நல்ல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் போதும் என்று நினைக்கிறேன். அதிகப்படியான புரொமோஷன்கள் காரணமாக என் படங்கள் ஓடுகிறது என்றால், அது எனக்குத் தேவையில்லை. நல்ல படங்கள் எப்போதுமே ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. நாயகனை வழிபடுவது, காமெடி ட்ராக் வைப்பது எல்லாமே நாமே திணித்த வடிவங்கள்தான். அதுபோன்ற படங்களை என்னால் எடுக்க முடியாது. மக்கள் 150 ரூபாய் கொடுக்கும்போது, நல்ல சினிமா கொடுக்க வேண்டும் என்று மெனக்கிடுகிறேன். ஒரு நாள் இரவில் கதை எழுதி, தயாரிப்பாளரிடம் சென்று பேசுவது கிடையாது. ஆறு மாதம் வரை ஒரு கதை எழுதப் போராடுகிறேன். என்னுடைய படம் எனக்கு போராடிக்க கூடாது. எனக்கு ஒரு படம் பிடித்தால் மட்டுமே சகமனிதனுக்கும் பிடிக்கும்.
'யுத்தம் செய்' படம் வெளியானவுடன் ஒருநாள் நள்ளிரவில் நண்பர் சேரன் போன் செய்து, ஒரு போன் நம்பரைச் சொல்லி, 'இதில் இருந்து உனக்கு போன் வரும்' என்று சொன்னார். அந்த நம்பரில் இருந்து எனக்கு பேசியவர் சுமார் ஒரு மணி நேரம் அழுதார். 'என் குழந்தைக்கும் இந்த நிலைமைதான் சார் ஆச்சு. என்னால கொலை பண்ண முடியாம அழுதேன் சார். நல்லவேளையா உங்க கதாபாத்திரம் மூலமா என்னோட மனசு ஆறுதல் ஆச்சு சார். இனிமே எனக்கு கொலை செய்யும் புத்தி இருக்காது சார்' என்று அழுதார்.
'அஞ்சாதே' பார்த்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினர். பெற்றோர்கள் பலரும் என்னை போனில் அழைத்து நன்றி சொன்னார்கள். 'என் வீட்டில் பேய் பயம் இருந்துச்சு, ஆனா அந்தப் பேயை இப்போ பாக்கணும் போல இருக்கு'ன்னு பிசாசு படத்தைப் பார்த்தவர்கள் சொன்னார்கள்.
நானும் என் மகளும் வெளியே போயிருக்கும்போது ஒரு அம்மா என்னிடம் வந்து 'தயவு செய்து சம்பாதிக்காதீங்க சார்' என்றார்கள். எனது மகளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் எனக்கு புரிந்துவிட்டது. 'நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் நல்ல படம் எடுக்க மாட்டீர்கள் சார்' என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். அவர் சென்றவுடன் என் மகளிடம் 'இதை விட உன் அப்பாவுக்கு என்ன மரியாதை வேண்டும். நான் ஏழையாகவே இருந்துவிட்டு போறேன்' என்றேன். நல்ல படங்கள் பண்ண இதைவிட வேறென்ன தூண்டுதல் வேண்டும்?"
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT