Last Updated : 12 Feb, 2016 11:43 AM

 

Published : 12 Feb 2016 11:43 AM
Last Updated : 12 Feb 2016 11:43 AM

கலக்கல் ஹாலிவுட்: ஸூடோபியா - விலங்குகளுக்காக ஒரு மாநகரம்!

ஹாலிவுட்டின் அனிமேஷன் படங்கள் உலகெங்கும் வரவேற்பைப் பெற்றவை. அதிலும் வால்ட் டிஸ்னியின் தயாரிப்பு என்றால் கேட்கவே வேண்டாம். குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திழுக்க வல்ல அனிமேஷன் படங்களைத் தயாரிப்பதில் மன்னர்கள் அவர்கள். அந்த வரிசையில் வெளிவர இருப்பதுதான் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸின் பிரம்மாண்ட 3 டி அனிமேஷன் படமான ஸூடோபியா (Zootopia).

இந்தப் படத்தில் விலங்குகளான ஓர் நகரம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஸூடோபியா என்னும் இந்த நகரத்தைப் போன்ற ஒரு நகரத்தை நீங்கள் வேறெங்கும் பார்க்க முடியாது. குளு குளு என்ற இந்த நகரத்தில் எந்தச் சூழலிலிருந்து வரும் விலங்கும் தங்க இயலும். பெரிய விலங்கு சிறிய விலங்கு என்ற பேதமற்று அனைத்தும் ஒன்றாக வசிக்கும் சூழல் இங்கு உள்ளது. மனிதர்கள் வசிக்கும் நகரத்தைப் போன்றே இந்த நகரத்திலும் காவல்துறை துறை உண்டு. காவல்துறை துறை அதிகாரியான ஜுடி ஹாப்ஸ் என்னும் முயலுக்கு விலங்குகளைக் கட்டி மேய்ப்பது சாதாரண வேலையில்லை என்பது தெரிகிறது. ஒரு முக்கியமான வழக்கைத் துப்புதுலக்க வேண்டிய தேவையும் வருகிறது அவருக்கு. இப்படிப் போகிறது கதை.

ஜுடி ஹாப்ஸுக்குப் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் குட்வின் குரல் தந்திருக்கிறார். கான் ஆர்டிஸ்ட்டான நிக் வைல்ட் என்னும் நரிக்குப் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேஸன் பேட்மேன் குரல் கொடுத்திருக்கிறார். பைரோன் ஹவார்டு, ரிச் மோர் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். விலங்குகளின் சாகச விளையாட்டுகளைப் பார்க்கத் தயாரான வர்களுக்காக மார்ச் 3 அன்று 3டியிலும் திரைக்கு வருகிறது ஸூடோபியா.