Published : 19 Feb 2016 10:50 AM
Last Updated : 19 Feb 2016 10:50 AM
ஒளியும் ஒலியும் இரண்டறக் கலந்ததுதான் திரைப்படம். இருப்பினும் ஒளிப்பதிவாளர்களைத் தெரிகிற அளவுக்கு ஒலிப்பதிவாளர்கள் வெளியே தெரிவதில்லை. அவர்கள் இன்னமும் திரைமறைவுப் பிரதேசத்தில்தான் இருக்கிறார்கள். தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'விசாரணை' படத்தில் ஒளிப்பதிவைப் போலவே அதன் ஒலிப்பதிவும் பேசப்படுகிறது. அந்தப் படத்தின் ஒலி வடிவமைப்பாளராகவும் அதன் ஒலிப்பதிவுப் பொறியாளராகப் பணியாற்றியிருப்பவர் 'ஃபோர் பிரேம்ஸ்' உதயகுமார் . அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
உங்கள் முன்கதையைக் கொஞ்சம் சொல்லுங்களேன் ..
மிடில் கிளாஸ் குடும்பம். எனது அண்ணன் தும்பாராஜா ஏ.ஆர். ரகுமானிடம் ரிதம் பாக்ஸ் பிளேயர். இப்போதும் பிளேயராக இருக்கிறார். நான் ப்ளஸ்டூ முடித்துவிட்டு என்ன படிப்பது என்று யோசித்தபோது 'சவுண்ட் ரெக்கார்டிங் படி’ என்று அண்ணன்தான் வழிகாட்டினார். சென்னை திரைப்படக் கல்லூரியில் 1998-ல் ஒலிப்பதிவு முடித்தேன். பிறகு செயல்முறை பயிற்சி பெற தீபன் சட்டர்ஜியிடம் சேர்ந்தேன். ஏழு ஆண்டுகள் ஓடிப்போனது. உதவியாளராகத் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 300 படங்களில் அவருடன் பணியாற்றினேன்.
ஒலிப்பதிவுப் பணியின் தன்மை எப்படிப்பட்டது?
எடுக்கப்பட்ட படத்துக்கோ காட்சிகளுக்கோ ஒலி சேர்ப்பது முக்கியமான பணி. பாடல் ஒலிப்பதிவு, பின்னணி ஒலிப்பதிவு, டப்பிங் எனப்படும் வசனங்களுக்கான குரல்நடிப்பு ஒலிப்பதிவு, ஸ்பெஷல் எபெக்ட்ஸ் எனப்படும் சிறப்பு சத்தங்கள், இறுதியாக ஃபைனல் மிக்ஸிங் எனப்படும் ஒலிக் கலவை எல்லாவற்றையும் கலந்து இணைப்பது என ஒலிப்பதிவில் பல வகைகள் உண்டு. இவை அனைத்திலும் அனுபவம் கொண்டவர்தான் ஒரு படத்தின் ஒலிப்பதிவு இயக்குநர். அவர்தான் படத்தின் ஒலிகளுக்கு இறுதி வடிவமும் நேர்த்தியும் கொடுப்பவர்.
ஒலிப்பதிவாளர் ஒரு கிரியேட்டரா, இல்லை இயந்திரத்தனமாகச் செயல்படுபவரா?
ஒரு படத்தின் கதைக்கும் இயக்குநரின் பார்வைக்கும் தக்கபடி ஒளிப்பதிவு மட்டுமல்ல ஒலிப்பதிவும் இருக்கும். அந்த வகையில் ஒலிப்பதிவாளர் ஒரு கூட்டுப் படைப்பாளி. ஒலிப்பதிவாளரின் இந்தப் படைப்புத்திறன், படத்துக்குப் படம் வேறுபடும். கதையின் மையம், திரைக்கதையின் போக்கு, காட்சியின் மனநிலை ஆகியவற்றுக்கு ஏற்ப எங்கு எந்த அளவில் வசனம், ஒலிகள், இசை, கருவிகள் இசை வர வேண்டும் என்பது முடிவு செய்யப்படும். கூட்டியோ குறைத்தோ கலவை செய்யப்படும். காற்று வீசும் ஒலிக்குக்கூட கதையில் அர்த்தம் உண்டு. எனவே, ஒலிப்பதிவு செய்பவர் கதையை நன்றாக உள்வாங்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.
நீங்கள் பணியாற்றிய படங்கள், இயக்குநர்கள் பற்றி?
பொல்லாதவன், ஆடுகளம், அஞ்சாதே, மெட்ராஸ், மதயானைக் கூட்டம், எதிர் நீச்சல், வேதாளம், ரஜினி முருகன், விசாரணை,பெங்களூர் நாட்கள் என்று சுமார் 300 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இயக்குநர் இமயம் பாரதிராஜா தொடங்கி, புதுமுக இயக்குநர்கள் வரை பணிபுரிந்திருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு உலகம்தான்.
‘அழகர்சாமியின் குதிரை' படத்தில் இசைஞானியுடன் பணிபுரிந்தபோது அவர் மியூசிக் போட்டிருந்த சில இடங்களில் எல்லாம் ‘மியூட்’ செய்யச் சொன்னார். பொதுவாக இசையமைப்பவர்கள் தாங்கள் இசை அமைத்ததை நீக்கச் சொல்ல மாட்டார்கள். இசை அமைத்ததை அப்படியே வைக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், அவர் நீக்கச் சொன்னார். சில இடங்களில் மவுனம்தான் பொருத்தமான இசை என்பதை அவர் புரியவைத்தார்.
'விசாரணை'யில் பணிபுரிந்த அனுபவம்?
வெற்றி மாறனின் முதல் படமான 'பொல்லாதவன்' முதல் அவருடன் பணிபுரிகிறேன். முதல் படத்தில் டப்பிங் நீண்ட நாள் போனது. மிக்சிங்கை விரைவில் முடிக்கச் சொன்னார். ஏனென்றால் படத்தை தீபாவளிக்கு வெளியிடும் நெருக்கடி இருந்தது. வசனம் வந்தால் போதும் என்கிற நிலை இருந்தது. எங்களுக்கு வேலை செய்ய நிறைய விஷயம் படத்தில் இருந்தது. ஆனால், நேரம் தரவில்லை. அந்தக் குறை 'ஆடுகளம்' படத்தில் நீங்கியது. அவகாசம் கொடுத்தார்.
‘விசாரணை' இதற்குத் தலைகீழ் அனுபவம். முதலில் பட விழாக்களுக்கான வெர்ஷன் தயார் செய்யப்பட்டது. பிறகு திரையிட வேறொரு வெர்ஷன் தயார் ஆனது. ஒன்றரை வருடம் வேலை செய்தோம். அதற்கு ‘வெனிஸ்' விழாவில் விருது கிடைத்ததும் நாங்கள் பட்ட கஷ்டத்துக்குப் பலன் கிடைத்த உணர்வு. பிறகு மும்பை பட விழாவில் விருது பெற்றது. இப்படிப் பல விருதுகளைக் குவித்தது.
வெனிஸில் என் ஒலிப்பதிவும் கவனிக்கப்பட்டது, பேசப்பட்டது என்கிற செய்தியறிந்து மகிழ்ந்தேன். பெருமையாக இருந்தது. நம் உழைப்பு வீண் போகவில்லை என்று திருப்தியாக இருந்தது. உலகத் தரமான படத்தில் நாமும் இருக்கிறோம் என்கிற மகிழ்ச்சியில் எந்தக் கஷ்டமும் படலாம் எனத் தோன்றியது. படைப்பாளிகள் போதிய அவகாசம் தந்தால் உலகத் தரத்துக்கு எங்களால் அசத்த முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT