Last Updated : 03 Sep, 2021 03:30 AM

1  

Published : 03 Sep 2021 03:30 AM
Last Updated : 03 Sep 2021 03:30 AM

மீரா 75 ஆண்டுகள்: தெற்கையும் வடக்கையும் இணைத்த குரல்!

சிவகங்கை ஏ.நாராயணன் சலனப்படக் காலத்திலேயே திரையுலகில் நுழைந்தவர். சென்னையின் வேப்பேரியில் அமைந்துள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ‘சவுண்ட் சிட்டி’ என்று அழைக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் பேசும்பட ஸ்டுடியோவான ‘சீனிவாசா சினிடோ’னை 1934-ல் நிர்மாணித்தவர். அங்கே, ஏ.நாராயணன் பக்திப் படங்களை எடுத்துக் குவித்தார். அந்த வரிசையில் 1938-ல் அவர் எடுத்த மூன்று படங்கள் ‘துளிசி பிருந்தா’, ‘விப்ர நாராயணா’, ‘மீரா பாய்’. அவற்றில் ‘மீரா பாய்’ படத்தில் சி.வி.வி. பந்துலு கிருஷ்ணாகவும் டி.வி.ராஜசுந்தரி ‘மீரா பாயா’கவும் நடித்தனர்.

அதே 1938-ல், ஒய்.வி.ராவ் சொந்தமாக சிந்தாமணி பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனத்தைத் தொடங்கி, ‘பக்த மீரா’வை தயாரித்து வெளியிட்டார். ஒய்.வி.ராவே கிருஷ்ணராகவும் ராஜா மான்சிங் ஆகவும் இரண்டு கதாபாத்திரங்களை ஏற்றார். மீராவாக வசுந்தரா தேவி நடித்தார். இந்த இரண்டு படங்களின் தோல்வியால், அதன்பிறகு பக்த சிரோன்மணி மீராவின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக்கும் துணிச்சல் யாருக்கும் வரவில்லை. ஆனால் அடுத்த 6 ஆண்டுகள் கழித்து ஒருவர் துணிந்தார். அவர் டி. சதாசிவம். விளம்பரத்துறை வித்தகர், பதிப்பாளர், படத் தயாரிப்பாளர் என பத்திரிகை துறைக்கும் படத் துறைக்கும் கச்சிதமாகப் பாலம் அமைத்தவர். மீரா பாயின் வாழ்க்கையைத் துணிந்து தயாரிக்கலாம் என்கிற துணிவை கொடுத்தவை, அவருடைய மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசையாளு மையும் தோற்றப் பொலிவும்.

ஏங்க வைத்த இசையரசி

பத்து வயதில், மதுரை, சேதுபதி உயர்நிலைப் பள்ளி மேடை, கிராமபோன் இசைத்தட்டுகள் எனத் தொடங்கியது எம்.எஸ்ஸின் இசைப் பயணம். அடுத்த பத்தாண்டுகளில் மியூசிக் அகாடமியில் முதல் கச்சேரி, திரையுலகில் அறிமுகம் என விரிந்தது. 1938-ல் ‘சேவாசதனம்’ படத்தில் அறிமுகமாகி, ‘சகுந்தலை’ (1940), ‘சாவித்திரி’ (1941) ஆகிய மூன்று படங்களில் மட்டுமே நடித்திருந்த நிலையில் தமிழ் சினிமாவில் நட்சத்திரமாகிப்போனார் எம்.எஸ். அவர் அடுத்து எப்போது நடிப்பார் என ரசிகர்கள் ஏங்கிக் கிடந்தார்கள். அதற்கு, அப்போது வெளியான ‘குண்டூசி’, ‘நாரதர்’, ‘சினிமா உலகம்’ உள்ளிட்ட சினிமா இதழ்களில் எம்.எஸ்ஸைப் பற்றி வாசகர்கள் சிலர் கேட்ட கேள்விகளையும் அவற்றுக்கு தரப்பட்ட பதில்களையும் சாட்சியாகக் கொள்ளலாம்.

கேள்வி: எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு தற்போது எத்தனை வயதிருக்கும்?

பதில்: முப்பது வயதிருக்கலாம்.

கேள்வி: தமிழ்நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகை யார் யார்?

பதில்: தியாகராஜ பாகவதரும் எம்.எஸ்.சுப்புலட்சுமியும்.

கேள்வி: எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிக்கும் ‘மீரா’ படம் தொடங்கப்பட்டு 3 வருடங்கள் முடியப்போகிறது. படம் எப்போதுதான் வெளியாகும்?

பதில்: இந்த வருட முடிவுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

பக்தியும் இசையும்

‘குண்டுசி’ ஆர் கோபால் வாசகரின் கேள்விக்கு பதிலளித்தது போலவே, 1945-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது படம். சென்னை பிரபாத் டாக்கீஸில் நவம்பர் 3-ம் தேதி மாலை ‘மீரா’ படத்தின் முதல் ‘ப்ரிமியர்’ காட்சி. அதற்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் மைசூர் சர்க்காரின் முதலமைச்சராக இருந்த ஓ.புல்லா ரெட்டி. ‘மீரா’ வெளியாகியிருந்த சாகர் திரையரங்கில், அக்கட்டிடத்தின் அழகான முகப்பை மேலும் பொலிவு பெறச் செய்யும் வகையில், படத்தின் கட் - அவுட்கள் எப்படி அமைய வேண்டும் என வடிவமைத்துக் கொடுத்தவர் டி.சதாசிவம். சாகர் திரையரங்கின் வாசலில் ரசிகர்கள் கூட்டமாக நிற்கும் அந்தப் புகைப்படத்தில், திரையரங்க கொண்டாட்டத்தின் தருணம், உயிருடன் உறைந்திருப்பதை இன்றைக்கும் காணமுடியும்.

‘மீரா’ வெளியீட்டுக்கு முன்னர், 28.10.1945 தேதியிட்ட கல்கியை, ‘மீரா’ சிறப்பிதழாக வெளியிட்டிருந்தனர். கல்கி ஆசிரியர் ரா.கிருஷ்ணமூர்த்தி ‘மீரா’ படத்துக்கு வசனம் எழுதியதுடன் இரண்டு பாடல்களையும் எழுதினார். அவற்றில் ஒன்றுதான், ‘ காற்றினிலே வரும் கீதம்! கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்! கல்லும் கனியும் கீதம்!’ பாடல். உண்மையாகவே பூமிப் பந்தின் காற்றில் கலந்திருக்கும் கீதமாகிப்போனது. தொடக்கத் தமிழ்த் திரையிசையின் மும்மூர்த்திகள் என்று வருணிக்கப்படும் மூவரில் முதலாமவர், எஸ்.வி.வெங்கட் ராமன். அவருடைய இசையில், கல்கி, பாபநாசம் சிவன் வரிகளில் உருவான பாடல்கள், எம்.எஸ்ஸின் அமரத்துவம் மிகுந்த இனிய குரலில் சாகா வரம்பெற்றன.

எஸ்.வி.வி, ‘மீரா’வுக்கு இசையமைத்த அனுபவம் குறித்துப் பேசும்போது, “ ‘மீரா’வுக்கு இசையமைத்தது எனது பாக்கியம்! எல்லா பாடல்களும் இனிமையானவை. மிகுந்த பக்தியுடன் அவற்றை கம்போஸ் செய்தேன். ஓர் உதாரணம்: பக்தை மீரா துவாரகையில் கிருஷ்ணன் கோயிலுக்கு ஓடிவந்து பார்க்கும்போது கதவுகள் மூடியிருக்கும். அப்போது, கண்ணன் மீது ‘ஜனார்த்தனா...ஜகன்னாதா’ என்று பாடும் முக்கியமான கிளைமாக்ஸ் பாடல். அதற்கான மெட்டு பிடிகொடுக்காமல் நழுவிக் கொண்டேயிருந்தது. அந்த சமயத்தில் திருப்பதிக்கு தரிசனத்துக்காகப் போயிருந்தேன். மணியோசையுடன் கோயில் கதவு திறந்தபோது எதிரே நின்றேன். அந்த நொடியில், ‘மீரா’ பூட்டிய கோயில் கதவுகளின் முன்னால் கண்ணன் தரிசனத்துக்காக நிற்கும் பாடல் காட்சிக்கான ட்யூன் உதயமாகிவிட்டது. ‘பிருந்தாவன சாரங்கா’ ராகத்தில் அமைந்த பாட்டு அது. திருப்பதியிலிருந்து திரும்பியதும் இசையமைத்தேன்.” என்று பரவசத்துடன் பதிவுசெய்திருக்கிறார்.

எஸ்.வி.வெங்கட் ராமன், ‘மீரா’ படத்துக்குச் செய்த சாதனைகள் பல. அவற்றில் ஒன்று, மேற்கத்திய ஆர்க்கெஸ்ட்ராவை தமிழ்த் திரையிசை வரலாற்றில் முதன் முதலாக இந்தப் படத்தின் பாடல் பதிவில் அவர் அறிமுகப்படுத்தியது. மற்றொன்று, நூறு பின்னணி வாத்தியங்களை இப்படத்தின் இசையில் பயன்படுத்தியது.

தெற்கையும் வடக்கையும் இணைத்தார்!

இரண்டாம் உலகப்போரின் அச்சத்திலிருந்தும் படச்சுருள் பற்றாக்குறையிலிருந்து தமிழ் சினிமா மீண்டிருந்த நேரம். தன் மனைவியின் இசையாளுமை டெல்லி வரை சென்று சேர வேண்டும் என்று விரும்பினார் சதாசிவம். அதற்காக வடக்கையும் தெற்கையும் ஒன்றுபோல் ஈர்க்கும் ஒரு கதையைத் தேடியபோது, மீரா பாயின் கதையை சரிவரப் படமாக்கத் தவறியதை, கல்கியின் ஆசிரியர் ரா.கிருஷ்ணமூர்த்தி எடுத்துச் சொல்ல, சதாசிவம் - எம்.எஸ்.தம்பதி அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.

பதினாறாம் நூற்றாண்டில், ராஜஸ்தானில் பிறந்து வளர்ந்த ராஜபுதன இளைவரசி மீரா. பால்யம் தொடங்கி கிருஷ்ண பக்தியில் தோய்ந்தவர். வளர வளர, வாழ்க்கை முழுமைக்குமான பக்தியாக அதில் கரைந்து நின்றார். மேவாரின் பட்டத்து இளவரசர் ராணாவை மணந்துகொண்டார். அரண்மனைச் சதிகளில் அல்லாடினார். கணவருடைய மரணத்துக்குப் பின் விஷம் கொடுத்து அவரைக் கொல்ல நடந்த சதியிலிருந்தும் தப்புகிறார். இறுதியில் அரண்மனையைவிட்டு வெளியேறி துவாரகையில் துறவியாக வாழத் தொடங்குகிறார். மீராவின் ஒப்புயர்வற்ற இந்த பக்தி வாழ்க்கையால், இந்தியா முழுமையும், இனம், மதம் கடந்த துறவியாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

‘சகுந்தலை’யில் தொடங்கிய நட்புடன் இருந்த அமெரிக்கரான இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் மீரா பாயின் கதையைக் கேட்டு மிரண்டுதான் போனார். அதற்குக் காரணம், மீரா பாயின் வாழ்க்கையில் நிறைந்திருந்த திருப்பங்கள், ஒரு வெற்றிகரமான சினிமாவுக்கான ‘நாடகத் தன்மை’யுடன் அவை அமைந்திருந்தது கண்டு துள்ளிக் குதித்தார் டங்கன். படத்துக்கான சினாரியோவை (திரைக்கதை) எழுதுவதற்காக ஊட்டியின் குன்னூரில் டங்கனைத் தங்க வைத்தார் தயாரிப்பாளர் சதாசிவம். ஒரு மாத காலம் தங்கி, ஆங்கிலத்தில் அவர் எழுதிய திரைக்கதையை தமிழ்ப்படுத்தியவர்கள் கல்கியும் சதாசிவமும். ‘மீரா’ படத்துக்காக, காட்சிகள், ஷாட்களாகப் பிரிக்கப்பட்ட ‘ஷூட்டிங் ஸ்கிரிப்ட்’ முறையை தனது ஒளிப்பதிவாளர் ஜிடன் பனார்ஜியுடன் இணைந்து பயன்படுத்திய முன்னோடி டங்கன். எம்.எஸ்ஸின் அழகான பெரிய கண்களை மிச்சிறந்த ஒளியமைப்பு மூலம் டங்கன் - ஜிடன் கூட்டணி படம் முழுவதும் துலங்கச் செய்தது.

தமிழ் ‘மீரா’வின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தி பதிப்புக்கான காட்சிகளை, துவாரகை, ஜெய்பூர், உதய்பூர் உட்பட, வரலாற்றில் மீரா பாய் வாழ்ந்த இடங்களில் படமாக்கிச் சாதனை படைத்தனர். கவிக்குயில் சரோஜினி, ஜவாஹர்லால் நேரு, மவுண்ட் பேட்டன் தம்பதி உட்பட இந்தியாவின் ஐக்கான்கள் எம்.எஸ்ஸின் ‘மீரா’ படத்தைப் பார்த்து, பாடல்களைக் கேட்டு உருகினார்கள். காந்திஜி ‘ஹரிதும்’ மீரா பஜன் பாடல்களை எம்.எஸின் குரலில் கேட்க விரும்பினார். விந்திய மலைக்கு அப்பால் சென்று தன் குரலால் தெற்கையும் வடக்கையும் இணைத்தார் எம்.எஸ். அதற்கு ‘மீரா’ அடித்தளமாக அமைந்தது.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x