Published : 26 Feb 2016 11:45 AM
Last Updated : 26 Feb 2016 11:45 AM

கை, கால்களைக் கட்டிக்கொண்டு நடித்தேன்! - நடிகர் நாகார்ஜுனா பேட்டி

‘பயணம்' படத்துக்குப் பிறகு ‘தோழா' படத்தின் மூலமாக மீண்டும் தமிழ்த் திரையுலகத்துக்கு வருகிறார் நாகார்ஜுனா. அவரால் தமிழில் பேச முடியுமா என்ற சந்தேகத்துடன் பேச ஆரம்பித்தால் அவரோ, ‘எப்படி இருக்கீங்க?' என்றுதான் பேச்சையே தொடங்கினார்.

‘தோழா' படத்தின் கதையில் உங்களை கவர்ந்த விஷயம் என்ன?

‘தோழா' ஒரு பிரெஞ்ச் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். 4 வருடங்களுக்கு முன்பே அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தியாவில் இப்படத்தை யாரும் எடுக்க மாட்டார்களா என்று ஏங்கியது உண்டு. அக்கதையின் உரிமையை வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கில் நீங்கள் பண்ண வேண்டும் என்று கேட்டபோது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

நட்பும் நம்பிக்கையும்தான் இப்படத்தின் திரைக்கதையின் மையம். கை, கால் அசைக்க முடியாத மாற்றுத் திறனாளியாக நடித்திருக்கிறேன். தன்னிடம் நிறைய பணம் இருந்தும் மாற்றுத் திறனாளி என்பதால் அவனுடைய வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே இருக்காது. என்னைப் பார்த்துக்கொள்பவராக என்னுடைய வாழ்க்கையில் கார்த்தி எப்படி நுழைகிறார்; எங்கள் இருவருக்கும் இடையில் எப்படி நட்பு உருவாகிறது; ஒருவருக்கு ஒருவர் எப்படி உதவிக்கொள்கிறோம் என்பதுதான் படம். இறுதியில் வாழ்க்கையில் பணம் எல்லாம் ஒன்றுமே இல்லை, நல்ல நண்பன் இருந்தால் போதும் என்று சொல்லியிருக்கிறோம். மனதைத் தொடும் வகையில் இதற்கு திரைக்கதை அமைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தது எப்படி இருந்தது?

எனக்காகவே ஒரு உதவி இயக்குநரை நியமித்திருந்தார்கள். அவருடைய பணி என்னவென்றால் நான் வீல் சேரில் இருக்கும்போது கை, கால்களை அசைக்கிறேனா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு நான் அசைத்துவிட்டால் உடனே அக்காட்சியை மீண்டும் படப்பிடிப்பு செய்வார்கள். எனது கை, கால்களை அசைக்காமல் வசனம் பேசி நடிப்பது என்பது சவாலாக இருந்தது. சோகமான காட்சிகளின்போது படக்குழுவிடம் எனது கை, கால்களைக் கட்டச் சொல்லிவிடுவேன்.

தமிழில் வசனங்களை எப்படிப் பேசினீர்கள்?

நான் தமிழ் வசனங்கள் பேசி நடித்து நீண்ட நாட்களாகிவிட்டது. கார்த்திதான் எனக்கு உதவினார். இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில்தான் கார்த்தியை முதலில் சந்தித்தேன். அதற்கு முன்பு கார்த்தியை நான் பார்த்ததில்லை. இப்போது அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமல்ல, நல்ல தம்பியும்கூட. பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். திறமையான நடிகர். படப்பிடிப்புத் தளத்தில் அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். தெலுங்கு வசனத்தை அவர் எளிதாகப் பேசி நடித்துவிடுவார்.

‘ரட்சகன்', ‘பயணம்', ‘தோழா' என தமிழில் மிகவும் குறைவாகவே படங்களை ஒப்புக்கொள்ளக் காரணம் என்ன?

நேரமில்லாதது முக்கியமான காரணம். தெலுங்கில் முன்னணி நாயகனாக நிறைய படங்கள் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அதுமட்டுமன்றித் தமிழில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை என்றபோது நான் என்ன பண்ண முடியும்? ‘தோழா' படத்தில் நடிக்க ஆரம்பித்தவுடன், இவர் தமிழிலும் நடிப்பார் என்று நிறைய தமிழ் வாய்ப்புகள் வருகின்றன. இரண்டு நாயகர்களை வைத்துப் பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பண்ணத் திட்டமிட்டிருக்கிறார்கள். நல்ல கதைகள் வரும்பட்சத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.

உங்களது மகன்கள் நடிக்க வந்துவிட்டார்கள். ஆனால், நீங்கள்தான் இன்னும் முன்னணியில் இருக்கிறீர்கள்.

நான் கிட்டதட்ட 100 படங்களை நெருங்கிவிட்டேன். எனக்குப் பின்னால் 100 படங்களின் உழைப்பு, நான் கற்றுக்கொண்ட பாடங்கள் என நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. முதலில் என்னோடு எனது மகன்களை ஒப்பிடுவது தவறு. அவர்கள் இப்போதுதான் நாயகர்களாக நுழைந்திருக்கிறார்கள். எனது மகன் நாக சைதன்யா, ‘ப்ரேமம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார்.

சினிமா பின்னணி கொண்ட வாரிசுகள் திரையுலகில் நுழைவது எளிதாக இருக்கிறது. இதைப் பற்றிய தங்களது கருத்து?

மிகவும் எளிது மட்டுமல்ல, மிகவும் கடினமானதும்கூட. நடிகர்களுடைய மகன்கள் நாயகர்களாக நுழைவது எளிது, ஆனால் நீடிப்பது ரொம்ப கடினம். என்ன படம் பண்ணினாலும் அப்பாவோடு ஒப்பிடுவார்கள். அதையெல்லாம் மீறி நடித்துத் தங்களுடைய திறமையின் மூலம் நிரூபிக்க வேண்டும். நடிகர்களின் மகன்கள் மற்ற நாயகர்களைவிடக் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். நாயகர்களின் மகன்கள் படங்கள் வெளியாகும்போது மக்களும் மிகவும் எதிர்பார்ப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x