Published : 12 Feb 2016 11:36 AM
Last Updated : 12 Feb 2016 11:36 AM
கடலையும் உப்பையும் எப்படிப் பிரிக்க முடியாதோ, அப்படித்தான் தமிழ் சினிமாவும் காதலும். ‘நாங்கள் கையாளும் கதை கசப்போ இனிப்போ, அதில் காதல் தேன் தடவித் தராவிட்டால் எங்களுக்கு தூக்கம் வராது!” என்பதே கோடம்பாக்க சினிமா கோட்பாடு. காவியக் காதல், கமர்ஷியல் காதல், யதார்த்தக் காதல் எனத் தமிழர்களின் மனதில் காலம் கடந்து நிற்கும் 10 காதல் திரைப்படங்களின் உத்தேச வரிசை இது:
10. தேவதாஸ்
காதல் தோன்றும் உணர்வை, அது தரும் புத்துணர்ச்சியை, பிரிவால் விளையும் வலியை, பெரும் போராட்டதுக்குப் பிறகு பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்தால் ஏற்படும் மகிழ்வை, நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தும் திறமை கொண்ட நடிகர்கள் கிடைக்காவிட்டால் எத்தனை சிறந்த காதல் கதையும் எடுபடாது. அந்த வகையில் தென்னிந்தியர்களுக்கு முதல் நம்பகமான காதலைக் காட்டிய படம் ‘தேவதாஸ்’ (1953). நாகேஸ்வர ராவ் தேவதாஸாகவும் நடிகையர் திலகம்’ சாவித்ரி பார்வதியாகவும் வாழ்ந்த இந்தப் படத்தின் தாக்கம் தலைமுறைகள் கடந்தும் தொடர்கிறது. இந்தப் படத்தின் பாதிப்பு ‘வசந்த மாளிகை’, ‘வாழ்வே மாயம்’ வரை தொடர்ந்தது.
9. நெஞ்சில் ஓர் ஆலயம்
காதலைப் புனித உணர்வாக சித்தரித்து வெற்றிகண்ட ஸ்ரீதரைத் தமிழ் சினிமாவின் தலைசிறந்த காதல் பட இயக்குநர் என்றே சொல்லிவிடலாம். காதலை விட்டுக்கொடுத்துத் தியாகம் செய்வதும் சிறந்த காதல்தான் என்று ‘கல்யாணப் பரிசு’ படத்தின் மூலம் சொன்ன அவர், அடுத்து காதலுக்கு செல்லுல்லாய்டில் எழுப்பிய கருவறைதான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. காதலர்களான கல்யாண்குமாரையும் தேவிகாவையும் சூழல் பிரித்துவிடுகிறது. மரணத்துடன் போராடும் கணவனைக் காதலரின் மருத்துவமனையிலேயே சேர்க்க வேண்டிய நிலையில் மீண்டும் சந்திக்கும் காதலர்களின் உணர்வுப் போராட்டம்தான் நெஞ்சில் ஓர் ஆலயம்.
8. ஒரு தலை ராகம்
அகநாநூறு காலம் தொடங்கி ஒருதலைக் காதலையும் அங்கீகரித்திருக்கிறது தமிழர் பண்பாடு. இருவர் காதலிப்பது மட்டுமல்ல, ஒருவர் காதலிப்பதும் காவியமாகும் என்பதைக் காட்டியது இந்தப் படம். எல்லோருக்குள்ளும் காலம் வரைந்து சென்றுவிடும் காதல் சுவடுதான் இந்தப் படத்தின் வெற்றிக்குத் தீப்பொறியாக அமைந்தது. இந்தப் படத்தின் நவீன காலப் பிரதியைப்போல வெளியான ‘இதயம்’ படத்தையும் இன்னொரு ‘ஒரு தலை ராகம்’ எனலாம்.
7. முதல் மரியாதை
எம்.ஜி.ஆரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் கதாநாயகிகள் நிறைந்த சினிமாக்களுக்கு மத்தியில், மோதலில் தொடங்கிக் காதலில் முடியும் ‘அன்பே வா’ அவருக்கு முத்திரையான காதல் படமாக அமைந்தது. அதுபோல் பல காதல் படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜிக்கு அவரது திரை வாழ்க்கையின் பிற்பகுதியில் அமைந்த முத்திரைப் படம் ‘முதல் மரியாதை’.
பஞ்சம் பிழைக்க சிவாஜியின் கிராமத்துக்கு வரும் ராதாவுக்கு அடைக்கலம்கொடுத்து தூய்மையான உள்ளத்தோடு பழகும் சிவாஜியைக் கொச்சைப்படுத்துகிறார் அவர் மனைவி. இல்லாத உறவை இட்டுக்கட்டி ஏசிய ஊருக்கும் உறவுக்கும் தங்கள் உறவின் மேன்மையை நிரூபிக்கும் கதை. சமூகத்தின் கருத்துக்குப் பயப்படாமல் மலரும் பெருந்திணைக் காதலைக் கண்ணியமாகச் சித்தரித்தார் பாரதிராஜா. ‘மலைச்சாமி’யாக நடித்த சிவாஜி எனும் பெரிய நடிப்பு மலையுடன் மோதும் ‘குயிலாக’ நடிப்பில் மிளிந்தார் ராதா.
6. மௌன ராகம்
கொண்டாட்டமும் துணிச்சலும் மிக்க நவயுகத்தின் காதலைக் காட்சிப்படுத்துவதில் கைதேர்ந்தவாரான மணி ரத்னம், கடைசியாக இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ வரை தனது முத்திரையை அழுத்தமாகப் பதிக்கத் தவறவில்லை. அப்படிப்பட்டவரின் ‘மௌன ராகம்’ படத்தின் பாதிப்பு தமிழ் சினிமாவில் இன்றும் தொடர்கிறது. முதலிரவில் தூக்கம் வருகிறது என்று சொல்லும் புதுமணப் பெண்ணைத் தூங்க அனுமதித்து அன்பாக, அனுசரணையாக நடந்துகொள்ளும் கணவனிடம் விவாகரத்து கேட்கிறாள் அவள். விருப்பமில்லாமல் திருமணம் செய்துகொண்ட அவளது ஒடிந்த இதயத்தின் பின்னால் ஆறாத காயமாய் முதல் காதல். அதை மதிக்கும் கணவனுடன் நீதிமன்ற உத்தரவை ஏற்று, ஓராண்டு ஒரே வீட்டில் அவள் வசிக்க நேர்ந்தால்? அந்த வீட்டில் அவர்களோடு அன்பும் காதலும் குடியேறுவதைக் காதலின் இயல்பாக, குடும்ப அமைப்பின் அழகியலாக மணி ரத்னம் வரைந்தெடுத்த காதல் காவியம்.
5. மூன்றாம் பிறை
பள்ளி ஆசிரியர் கமல், நிகழ்கால நினைவுகளை இழந்து ஏழு வயது சிறுமிக்குரிய மனநிலையில் இருக்கும் ஸ்ரீதேவியைப் பாலியல் விடுதியொன்றில் பார்க்கிறார். அவரை மீட்டுத் தனது வீட்டுக்கு அழைத்து வருகிறார். ஸ்ரீதேவிக்கு நினைவு திரும்பி முழு நிலவாய் மாற வேண்டும் என்று தன் வாழ்க்கையை அவருக்காக வாழ ஆரம்பிக்கிறார். கொஞ்சம் பிசகினாலும் பாதளத்தில் தள்ளிவிடும் இந்தக் காதல் கதையைத் துன்பியலாக நிறைவு செய்து காவியமாக்கினார் பாலுமகேந்திரா. திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, இயக்கம், நடிப்பு என அனைத்துத் தளங்களிலும் கொண்டாடப்பட்ட 'மூன்றாம் பிறை', காதல் மன்னன் கமலுக்கு கவுரவம் செய்த காதல் படங்களில் முதலிடத்தில் இருப்பது.
4. காதல் கோட்டை
காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டது. அது வெளித்தோற்றம் பார்த்து வருவதல்ல என்பதைத் தொலைபேசி, கடிதம் உதவியுடன் விறுவிறுப்பான திரைக்கதை வழியே சித்தரித்த படம்.
3. காதலுக்கு மரியாதை
காதலை கவுரவப்படுத்துவது எதில் அடங்கி யிருக்கிறது என்பதைப் பேசிய படம். பெற்றோர், உறவினர் மனம் நோக அவர்களது கனவுகளைச் சிதைத்துவீட்டுக் காதலில் இணைவதைவிடப் பிரிவதே மேல் என முடிவெடுக்கும் காதலர்களை கண் முன் நிறுத்திய படம்.
2. சேது
காதலால் பித்தனாகிப் போன ஒரு துறுதுறு இளைஞனின் கதை. ஒரு படத்துக்கு அதன் முடிவு எத்தனை முக்கியமானது என்பதைக் காட்டிய படம். கதாபாத்திரங்களை வார்த்த விதத்திலும், திரைக்கதை அமைத்த விதத்திலும் கவர்ந்த இந்தப் படத்தில் அர்ப்பணிப்பு மிக்க நடிப்பை வழங்கிய விக்ரம் அந்தப் படத்தின் கதாபாத்திரப் பெயரால் இன்றும் அழைக்கப்படுகிறார்.
1. காதல்
காதலின் இயல்பே அதன் பேதம் பாராமைதான். இயல்பாய்த் துளிக்கும் காதலைச் சாதியம் நசுக்கி எறிந்தாலும் மிச்சமிருக்கும் வேரிலிருந்து அது துளிர்த்துக் கொண்டே இருக்கும் என்பதை உலுக்கும் முடிவுடன் சொன்ன யாதர்த்தச் சித்திரம்.
(‘அம்பிகாபதி’, ‘மீண்ட சொர்க்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘காதல் ஓவியம்’, ‘பூ’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ என மேலும் மேலும் பல காதல் படங்கள் ஒவ்வொரு விதத்தில் முத்திரை பதித்திருக்கின்றன. இங்கே தரப்பட்டுள்ளது நினைவுகளை மீட்டிக்கொள்ள ஒரு மாதிரிப் பட்டியல் மட்டுமே.)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT