Published : 30 Jul 2021 06:37 AM
Last Updated : 30 Jul 2021 06:37 AM

திரை வெளிச்சம்: பாட மறந்த சினிமா!

கடந்த நூறாண்டுகளில் திரையிசைப் பாடல்களின் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது பல ஆச்சர்யங்களைக் காண முடியும்! பேசாத சலனப் படங்களின் காலத்திலேயே, திரையின் அருகில் அமர்ந்தபடி, ஆர்மோனியமும் தாள வாத்தியங்களும் கொண்டு, நாட்டுப்புறக் கலைஞர்கள் இசைத்துப் பாடியதை சினிமா வரலாறு பதிவுசெய்திருக்கிறது. சினிமா பேசத் தொடங்கியபோது சர்வமும் சங்கீதம் ஆகிப்போனது. கதாபாத்திரங்களின் உரையாடலில் பெரும்பகுதியைப் பாடல்கள் எடுத்துகொண்டன. ‘60 பாட்டுகள் உள்ள படம்’, ‘நூற்றுக்கு நூறு பேசும், பாடும், ஆடும் படம்’ என்றெல்லாம் விளம்பர ‘நோட்டீஸ்’களிலும் பாட்டுப் புத்தகங்களிலும் பெருமையாக அச்சிட்டிருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு கதாபாத்திரங்களின் அனைத்து வகையான உணர்ச்சிகளையும் சித்தரிக்க பாடல்களையே பிரதானமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். 50 பாடல்கள் என்கிற எண்ணிக்கை மெல்ல மெல்லக் கரைந்து, 80-களில் 5 ஆகக் குறைந்தது. கடந்த 2000 வரையிலும்கூட ஒரு படத்தின் வெற்றியில் பாடல்களின் பங்கு மகத்தான ஒன்றாக இருந்தது. ஆனால், கடந்த இரு பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் பாடல்களுக்கான தேவை குறைந்துகொண்டு வந்திருப்பதை படங்களில் இடம்பெறும் பாடல்களின் எண்ணிக்கை சுட்டிக்காட்டுகிறது. பாடல்களே இல்லாமல் வெளியாகும் படங்களும் அதிகரித்திருக்கின்றன. இன்னொரு பக்கம், தனியிசைப் பாடல்கள் வெளியாகி மில்லியன்களில் பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. பாடல்களுக்கு உதடுகள் அசைப்பதை நடிகர்கள் கிட்டத்தட்ட மறந்துபோய்விட்டார்கள். உண்மையில், இன்றைய தமிழ் சினிமாவுக்கு பாடல்களின் தேவை இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி துறை சார்ந்த முன்னணிக் கலைஞர்கள் சிலரிடம் உரையாடினோம்.

ஒரு காலகட்டம் வரை, எத்தனை பாடல்கள் படத்தில் இடம்பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கும் இடத்தில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் இருந்தனர். இன்று படைப்பாக்கத்தில் குறுக்கிடாமல், கதைத் தேர்வு, ‘காஸ்ட் கண்ட்ரோல்’, விளம்பரம் செய்தல் ஆகியவற்றில் தயாரிப்பாளர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பிரபல தயாரிப்பாளரும் எழுத்தாளரும் சோனி லிவ் ஓடிடி தளத்தின் தமிழ் பிரிவுக்கான தலைவராகவும் பணிபுரிந்துவரும் கோ.தனஞ்ஜெயனிடம் இதுபற்றிக் கேட்டதும் பாடல்களின் தற்போதைய போக்கு பற்றி விவரித்தார்.

உதடுகள் இனி அசையாது!

“பாடல்கள் காலம் தோறும் குறைந்துகொண்டேதான் வந்திருக்கின்றன. அதற்கு முக்கியமான காரணம், மக்களின் மாறிக்கொண்டே வந்திருக்கும் ரசனை. திரையரங்கில் பாடல்களை ‘செலிபரேட்’ செய்த காலம் ஒன்று இருந்தது. அதை ‘லிப் சிங்க்’ பாடல்களின் காலம் என்று கூடச் சொல்லலாம். இன்று, கதையோட்டத்துக்கு அவசியமான பாடல்களாக இருந்தால், அவையும் கூட 'பேக்ரவுண்ட்'டில் ஒலிப்பதாக இருந்தால் மட்டும் ரசிக்கிறார்கள். இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டுகள் ‘கர்ணன்’, ‘சார்பட்டா பரம்பரை’ போன்ற திரைப்படங்கள். இதில், திரையரங்குக்கு ஒரு ரசனை, ஓடிடிக்கு ஒரு ரசனை என்றெல்லாம் எந்த பேதமும் பார்வையாளர்களிடம் இல்லை.

அதேநேரம், ஓடிடி தளம் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. அதாவது திரையரங்கில் படம் பார்க்கும்போது, ஒரு பாடல் ஈர்க்கவில்லை, அது ஹிட்டான பாடலாகவும் இல்லையென்றால் கையிலிருக்கும் போனை துருவுதல், எழுந்து கேண்டீன் பக்கம் போய் வருதல் என்று தவிர்க்க நினைப்பார்கள். அதுவே ஓடிடி என்றால் அதிலிருக்கும் ‘ஃபாஸ்ட் ஃபார்வர்டு’ வசதியைப் பயன்படுத்தி அந்தப் பாடலைத் தவிர்த்துவிட்டு படத்தைப் பார்க்கிறார்கள். இதனால் ஓடிடி படங்களுக்குப் பாடல்கள் தேவையில்லை என்கிற நிலை உருவாகிக்கொண்டு வருகிறது. இன்று நமக்குத் தேவை சிறந்த பின்னணி இசை. அத்துடன் படத்தின் மையமான ஒரு நெகிழ்வையோ, உணர்வையோ தூக்கிப்பிடிக்க பின்னணியில் ஒலிக்கும் ஒரு பாடல் இருந்தால் போதும். தமிழ் சினிமாவும் அதைநோக்கித்தான் பயணிக்கிறது என்று நினைக்கிறேன்” என்கிறார்.

இது பிரிக்க முடியாத பந்தம்!

தமிழ் சினிமாவில், ஒரு படத்தில் பாடல்களுக்கான தேவையை முடிவுசெய்வதில் முதலாம் இடத்தில் இருப்பவர் இயக்குநர். காதல் காட்சிகளுக்காகவும் காதல் பாடல்களை சிறப்பாகக் காட்சிப்படுத்துவதிலும் ரசனையாளர் எனப் பெயர்பெற்றிருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். அனுபவம் சார்ந்து தன்னுடைய அவதானிப்புகளைப் பகிர்ந்தார். “திரைக்கதையில் எந்த இடத்தில் பாடல் வழியாக கதையையும் கதாபாத்திரத்தின் சூழ்நிலையையும் சொன்னால் ஆடியன்ஸுக்குப் பிடிக்கும் என்று தோன்றுகிறதோ.. அந்த இடத்தில் பாடலைப் பயன்படுத்துவது பல காலமாகத் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு திரைப்படத்தில் கதைசொல்லும் ஊடகமாக பின்னணி இசையைப் பயன்படுத்துவதிலேயே அணுகுமுறைகள் மாறிக்கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், பின்னணி இசை இல்லாமல் படமெடுத்தால் அது எப்படி சோதனை முயற்சியாக அமைந்துவிடுமோ, அப்படித்தான் பாடல்களே இல்லாமல் படமெடுக்க நினைப்பதும். திரைக்கதையில் சில இடங்களில், அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கதை சொல்வதற்கு பாடல் வரிகள் பயன்படும். சில இடங்களில் வரிகளுடன் அந்தப் பாடலின் இசை இன்னும் அதிக தாக்கத்தைக் கொடுக்கும். அந்த இடத்தில் காட்சிமொழியைவிட இசை, வரிகளின் பங்களிப்பே பிரதானமாகிவிடுகிறது. அதனால், பாடல்களின் வலிமையை உணர்ந்த இயக்குநர்கள் இருக்கும்வரை தமிழ் சினிமாவிலிருந்து பாடல்களைப் பிய்த்துப் போட முடியாது. இது தொடர்வதால்தான், இன்று சின்னப்படம் என்றாலும் பெரிய படம் என்றாலும் யார் இசையமைப்பாளர், யார் பாடலாசிரியர் என்று கேட்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘வாழ்’ படத்தில் எத்தனை பாடல்கள் கதையை நகர்த்தத் தேவைப்பட்டிருக்கின்றன என்று எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்த்தாலே பாடல்கள் இல்லாமல் தமிழ் சினிமா இல்லை என்பது புரிந்துவிடும்” என்று அதிரடியாகக் கூறுகிறார்.

மாஸ் படங்களின் இசை!

மாஸ் கதாநாயகர்கள் நடிக்கும் படங்கள் உட்பட, எல்லா வகையான படங்களுக்கும் இசையமைத்து வரும் முன்னணி இசையப்பாளர் டி.இமான் என்ன நினைக்கிறார்? கள நிலவரத்தை அப்படியே நம்மிடம் பகிர்ந்தார். “தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, இன்று முன்னணி மாஸ் ஹீரோக்களாக இருக்கும் பலரில், 5 முதல் 6 ஹீரோக்களின் படங்களில் பாடல்களுக்கான இடம் அப்படியேதான் இருக்கிறது. அவர்களுடைய படங்களில் கதையை வெட்டிக்கொண்டு, அப்படியே வேறொரு லொக்கேஷனில் போய் ஆடிப் பாடினால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த ‘அக்ஸெப்டன்ஸ்’ லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள அந்த மாஸ் நடிகரின் ‘ஸ்டார்டம்’ என்பதிலிருந்து உருவான கொண்டாட்ட மனப்பான்மை அல்லது மாஸ் ரசனை எனலாம். இந்த ரசனை அத்தனை சீக்கிரம் மாறிவிடாது என்பது என் எண்ணம். அதேநேரம், மாஸ் படமாகவே இருந்தாலும் உரிய காரண, காரியங்களோடு, பாடல்களுக்கான சூழ்நிலை அமையும்போது அந்தப் பாடல்கள் பெரிய வெற்றியைப் பெறுகின்றன. இதில் நட்சத்திர ஈர்ப்பு முதன்மை அம்சமாக இருந்தாலும் பாடலின் இசைக்கும் வரிகளுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே..’ பாடலின் வெற்றியில் அந்தப் பாடலுக்கு அமைந்த சூழ்நிலை, அதற்கு அமைந்த இசை, வரிகள், பாடகரின் குரல் வீச்சு ஆகியவற்றின் பங்கை இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தப் போக்கு ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு போக்கு என்பது புதிய படைப்பாளிகளால், அவர்கள் முயன்றுபார்க்கும் புதிய கதைக் களன்கள், புதிய கதாபாத்திரங்கள், புதிய கதை சொல்லும் முறை ஆகியவற்றால் மாறியிருக்கிறது. இதுபோன்ற புதிய அலைப் படங்களில், திரைக்கதை கோரும் இடத்தில் மட்டும் கதை சொல்லும் பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இது ஒரு பாடலாகவோ ஒன்றுக்கு மேற்பட்ட பாடலாகவோ இருக்கலாம் என்பதை கதை சொல்லும் முறைதான் தீர்மானிக்கிறது. ‘டெடி’ படத்தின் தொடக்கத்தில், தனிமையைக் காதலிக்கும் கதாநாயகனின் குணத்தைச் சொல்லும் ‘என் இனிய தனிமையே..’ பெரும் வெற்றியைப் பெற்றது. அதற்குக் காரணம், பாடல், கதையின் ஒருபகுதி என்பது மட்டுமல்ல; பார்வையாளர்கள் அனைவருக்குமான சுய ஓப்பீடாகவும் பாடலின் உணர்வு இருந்ததும் ஒரு காரணம்.

60-கள் தொடங்கி 80-கள் வரையில் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டதோ.. அதைநோக்கித்தான் இன்று தமிழ் சினிமா திரும்பிக்கொண்டிருக்கிறது என்று பார்க்கிறேன். இந்த ஆரோக்கியமான போக்கால், பாடல்களின் எண்ணிக்கை மட்டுமல்ல; இன்று தேவையற்ற சண்டைக் காட்சிகள், நகைச்சுவை ட்ராக் என்பதும் இல்லாமல் போய்விட்டது. ஒட்டுமொத்தமாக நிகழும் இந்த மாற்றத்தில் திரையிசையின் பரிமாணம் மேலும் உயர்ந்த தரத்துக்கு நகர்ந்திருக்கிறது என்பதே எனது கருத்து. சினிமாவில் பாடல்கள் குறைந்திருப்பதால் அந்த இடத்தை தனியிசைப் பாடல்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதை நான் நம்பவில்லை. தனியிசை என்பது வளர்த்தெடுக்க வேண்டிய ஒரு தனித்துறை. கரோனாவால் மக்கள் திரையரங்கு செல்ல முடியாத நிலையில் தற்போது தனிப் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. திரையரங்குகள் திறக்கப்பட்டால் அது மாறிவிடலாம்.” என்கிறார்.

எழுத்தாளனின் குரல்

பாடல்களின் எண்ணிக்கைக் குறைந்திருப்பதால் பாடலாசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதா, அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? கபிலன் மனம் திறந்து பேசினார். “ கதை சொல்லும் பாடல், பின்னணியில் ஒலிக்கும் பாடல், மாஸ் கதாநாயகனுக்கான லிப் சிங்க்’ பாடல் என எந்த வகையாக இருந்தாலும் பாடலாசிரியர்தானே எழுதியாக வேண்டும். பாடல்களின் எண்ணிக்கை குறைந்துபோனதற்கு இன்றைய படங்களில் கதை குறைவாக இருப்பதும் ஒரு முக்கிய காரணம். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று கூறப்பட்ட காலத்தில் வெளியான படங்களின் கதையில் எத்தனை உறவுகள் இருப்பார்கள்! இன்று வரும் பல படங்களில் அம்மா, அப்பாவே கிடையாதே…! பிறகு தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமாவுக்கு எங்கே போவது? கேரக்டர்கள் அதிகம் இருந்தால்தான் பாடல்களுக்கான இடமே உருவாகும். எப்போதாவது ஒரு அம்மா பாட்டு, அப்பா பாட்டு என்று அபூர்வமாக வருவது இதனால்தான். பாடல்களின் என்ணிக்கை என்பது இயக்குநரைப் பொறுத்து மாறலாமே தவிர, தமிழ் சினிமாவிலிருந்து பாடல்கள் மறைந்துவிடும் என்று கூறுவது தவறான புரிதல்.” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x