Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM
கன்னட ‘லூசியா’, தெலுங்கு ‘யு-டர்ன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களால் தென்னிந்திய ரசிகர்களை மொத்தமாக ஈர்த்தவர் இயக்குநர் பவன் குமார். இவரது இயக்கத்தில் ‘குடி யெடமைதே’ என்கிற தலைப்பில் தெலுங்கு மொழியில் வெளியாகியிருக்கிறது புதிய வலைத் தொடர். அறிவியல் புனைவு த்ரில்லர் வகைமையில் உருவாகியிருக்கும் இதன் முதல் சீஸன், ‘ஆஹா’ என்கிற ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
காலையில் கண் விழித்ததும், அக்கப்போர் நிறைந்த அன்றைய தினம், உண்மையில் ஏற்கனவே வாழ்ந்து கழித்த நாள் என்பது முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு உறைத்தால் எப்படி இருக்கும்?!. அறிவியல் புனைவின் சுவாரசியங்களில் ஒன்றான ‘டைம் லூப்’ எனப்படும் கால வளையத்தில் கதாபாத்திரங்கள் சிக்கிக்கொள்ளும் கதைக்களங்களின் வரிசையில் ‘குடி யெடமைதே’ சேர்ந்திருக்கிறது.
அன்றைய நள்ளிரவு, குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரான துர்கா (அமலா பால்), செயலி வழி உணவு விநியோக சிப்பந்தியான ஆதி (ராகுல் விஜய்) ஆகிய இருவரும் எதிரெதிர் வாகன விபத்தொன்றில் சிக்குகிறார்கள். காலையில் கண்விழிக்கும்போது அது அடுத்த தினமல்ல, குறிப்பிட்ட நாளின் வாழ்க்கையே, காலத்தின் கோலத்தால் ஒரு வளையச் சுழலாய் அவர்களுக்கு புலனாவதை குழம்பித் தெளிகிறார்கள். சொந்த வாழ்க்கை மட்டுமன்றி ஊரின் பெரும் பிரச்சினைகளும் பிற உயிர்கள் பிழைத்திருப்பதும் அன்றைய தினத்தில் அவர்களின் நகர்வுகளில் கண்ணி வெடிகள்போல் காத்திருக்கின்றன. இந்த இருவரையும் பீடித்த கால வளையம் விடுபட்டதா, இன்ன பிற குற்ற சம்பவங்களுக்கு விடிவு கிடைத்ததா.. என்பதை 8 அத்தியாயங்களில் பதைபதைப்புடன் விவரிக்கிறது ‘குடி யெடமைதே’.
நகரில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து ஆட்கடத்தலுக்கு ஆளாகிறார்கள். பணயத்தொகை படிந்தால் குழந்தைகள் விடுவிக்கப்படுவதும் மாறாக, காவல்துறையை நாடினாலோ, பணயத்தொகை தாமதமானோலோ குழந்தைகள் துள்ளத்துடிக்கக் கொல்லப்படுவதும் தொடர்கிறது. அந்தக் குற்ற வழக்குகளை விசாரித்துவரும் துர்காவுக்கு அது பெரும் தலைவலியாகிறது. ஏற்கனவே சொந்த அவலத்தை மறக்க குடியில் வடிகால் தேடும் அவரை, இந்த வழக்குகள் மேலும் சாய்க்கின்றன. உணவு விநியோக சிப்பந்தியான ஆதி, சினிமாவில் நடிகனாகும் கனவோடு அதற்கான ஆள் தேர்வுகளை சந்தித்து வருகிறான். ஒருதலைக் காதல் தவிப்பு, அறிந்த சகாவின் விபத்து, அறியாத பெண்ணின் மரணம் ஆகியவையும் அவனது அன்றைய நாளை ஆட்டிப்படைக்கின்றன.இந்த இருவரும் ஒரே விபத்தில் பலியாகி மீளும் கால வளையத்தில் அடுத்தடுத்து சிக்குகிறார்கள்.
அதே நாள், அதே சம்பவங்கள் என அயர்வில் ஆழ்த்திட வாய்ப்புள்ள காட்சிகளை, ராம் விக்னேஷின் கதையும், பவன்குமாரின் இயக்கமும் நேர்செய்கின்றன. காலத்தின் சூட்சுமம் உணர்ந்த பிரதான கதாபாத்திரங்களால் கால வளையத்தின் கண்ணிகள் வேறு வடிவெடுத்து விறுவிறுப்பூட்டுகின்றன. ஒரே காட்சியைத் துண்டிக்காது வேறுபட்ட கோணங்களில் பின்தொடரச் செய்யும் அத்வைதா குருமூர்த்தியின் ஒளிப்பதிவு, இதயத்துடிப்பை எகிற விடும் பூரணசந்த்ர தேஜஸ்வியின் பின்னணி இசை ஆகியன பவன்குமாரின் படைப்பாளுமைக்குத் தோள்கொடுத்துள்ளன.
நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்கு ‘தேவதாஸ்’ பாடல் வரியிலிருந்து உருவப்பட்ட வலைத்தொடருக்கான தலைப்பு, உணவு நிறுவனத்தின் பெயர் என ஒவ்வொரு அம்சத்திலும் கதையின் போக்கைப் பிரதிபலிக்கும் தொனி சுவாரசியமூட்டுவது. தலா அரைமணி நேரத்துக்கும் குறைவாக அத்தியாய நேரங்களைச் சுருக்கி இருப்பது சிறப்பு. ஆனபோதும் முதல் இரண்டு அத்தியாயங்கள் சுமார்; கடைசி இரண்டும் படுவேகம். இடைப்பட்ட நான்கில் இரண்டு அத்தியாயங்கள் நிரவல் காட்சிகளால் துவள்கின்றன.
கடந்த வருடம் மூன்றாவது சீஸனாக வெளியான நெட்ஃபிளிக்ஸின் ‘டார்க்’, நினைவிலாடுவதை தவிர்க்க முடியவில்லை. புதுமையான படைப்புகளை இதர மொழிகளிலும் காண வழி செய்திருக்கலாம். கால வளையக் குழப்பங்களைத் தவிர்க்க, ஒரே அமர்வில் பார்க்கக் கோரும் படைப்பு இது. பவன்குமார் போன்ற படைப்பாளிகளால் பிராந்திய ஓடிடி தளங்களின் எழுச்சிக்கு வாய்ப்பு அமைந்திருப்பது வரவேற்புக்குரிய மாற்றம்.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT