Published : 16 Jul 2021 03:30 AM
Last Updated : 16 Jul 2021 03:30 AM
இயக்குநர்கள் மணிரத்னம், ஜெயேந்திரா இணைந்து தயாரித்திருக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’. இதில் இடம்பெற்றுள்ள ஒன்பது கதைகளை, ப்ரியதர்ஷன், வசந்த் சாய், கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், பெஜோய் நம்பியார், கார்த்திக் நரேன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜுன், அரவிந்த் சுவாமி ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், கிஷோர், பாபி சிம்ஹா, அதர்வா, பார்வதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, அரவிந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா, டெல்லி கணேஷ், ரோகிணி, அஞ்சலி, அதிதி பாலன் என நடிப்பில் அசத்தும் முன்னணி நடிகர்கள் நட்சத்திர மேளா நடத்தியிருக்கும் இந்தப் படம், ஆகஸ்ட் 6-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்த ஆந்தாலஜியில் இடம்பெற்றுள்ள ஒரு கதையில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடிகராகவும் மற்றொன்றை எழுதி இயக்கியும் இரட்டைப் பங்களிப்பைச் செய்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் இந்து டாக்கீஸுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் இது.
கடந்த ஒரு வருடத்தில் வெளியான பல ஆந்தாலஜி படங்கள், வெப் சீரிஸ் என உங்களுடைய பங்கு இருக்கிறது. ஆந்தாலஜி - ஓடிடி என்றால் அதில் கெளதம் மேனனும் கண்டிப்பாக இருப்பார் என்று ஓர் அடையாளம் வந்துவிட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நல்ல விஷயமாகவே பார்க்கிறேன். இது எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த ஊரடங்கில் பல திரைக்கதைகள் எழுதினேன். விரைவில் படம் ஒன்றைத் தொடங்கவுள்ளேன். அதற்கான தொடக்கக் கட்டப் பணிகளை மேற்கொண்டேன். அதேபோல் அதற்கான இசையமைக்கும் பணிகளைக் கவனித்தேன்.
உங்கள் ஆதர்ச இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'நவரசா'வில் நடிப்பு, இயக்கம் என ஜமாய்த்திருக்கிறீர்கள்! இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று நம்பினீர்களா?
இப்போதுகூட நம்பவில்லை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் ‘அமைதி’ என்கிற கதையில் பாபி சிம்ஹாதான் ஹீரோ. நான் என்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதை இப்போது வெளிப்படுத்துவது முறையல்ல. மணிரத்னம் சார் ‘இந்த மாதிரி ஒரு விஷயம் பண்ணப் போறேன்’ என்றவுடன் யாருமே யோசிக்காமல் உடனே ஒப்புக்கொண்டோம். சூர்யாவிடம் நான் இயக்கவிருக்கும் கதையைக் கூறி மணி சாருடைய முயற்சியையும் சொன்னேன். உடனே பண்ணலாம் என்று ஒப்புக்கொண்டார். அவர் ஒப்புக்கொண்டதால் இந்தக் கதைக்கு நல்ல கலர் கிடைத்தது. மணி சாருடைய தயாரிப்பில், நான் இயக்குநர் என்பது இன்னும் என்னால் நம்பமுடியாத விஷயமாகவே இருக்கிறது.
நீங்கள் இயக்கியிருக்கும் கதைக்கு 'கிடார் கம்பி மேலே நின்று' என்கிற தலைப்பு புதுமையாக இருக்கிறதே..!
கதைக்குப் பொருத்தமான தலைப்பு அதுதான். இந்தப் படத்துக்காக மதன் கார்க்கி எழுதிய ‘தூரிகா’ என்கிற பாடலில் வரும் வரிகளியிருந்து தலைப்பைத் தேர்ந்துகொண்டேன். முதலில் வேறொரு தலைப்பைப் பரிசீலித்தோம். ஆனால், அது வேண்டாம் எனச் சட்டென்று தோன்ற வைத்துவிட்டன இசையும் பாடலும் காட்சிகளும்.
'பிசாசு' படத்தின் நாயகி பிரயாகா மார்டினை கோலிவுட் மறந்துவிட்ட நிலையில், சூர்யாவுக்கு ஜோடியாக அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?
அவரது சில புகைப்படங்களைப் பார்த்தேன். சென்னைக்கு வரவழைத்து ஒரு ‘லுக் டெஸ்ட்’ செய்தேன். நேத்ரா என்கிற கதாபாத்திரத்தில் பிரமாதமாகப் பொருந்தி நடித்துள்ளார். படப்பிடிப்பில் அவருடைய நடிப்பை முன்வைத்தே இந்தக் கதாபாத்திரம் இப்படியே இருக்கட்டும் என முடிவுசெய்தேன். அவருடன் தொடர்ச்சியாக பணிபுரிய ஆசை.
'நவரசா' கதையை இளையராஜாவுடைய ஒரு பாடலை மையப்படுத்தி உருவாக்கியதாகச் சொல்லியிருந்தீர்களே... அது என்ன பாடல்?
திரைப்படங்களுக்கு என்று இல்லாமல், நிறைய பாடல்களை உருவாக்கி வைத்திருந்தோம். அப்படித்தான் இளையராஜா சாருடைய பாடலில் வரும் இசையை வைத்து ஒரு பாடலைத் தயார் செய்து வைத்திருந்தேன். ‘நவரசா’ ஆந்தாலஜியில் காதலை மையப்படுத்தி ஒரு படம் பண்ண வேண்டும் என முடிவானது. அப்போது, அந்தப் பாடலை நிறைய முறை கேட்டு, அதைச் சுற்றி ஒரு கதையை எழுதினேன். அது எந்தப் பாடல் என்பதை நீங்கள் ‘நவரசா’வைப் பார்த்தபின் தெரிந்துகொள்ளுங்கள். அந்த சஸ்பென்ஸ் அவசியம் வேண்டும்.
மணிரத்னம் உங்கள் நடிப்பை அதிகம் பாராட்டினாரா, இயக்கத்தையா?
நான் ஒரு நடிகர் என்று நினைத்ததில்லை. ஆகையால் நடிப்பு எப்போதுமே எனக்கு ஒரு புதிய அனுபவமாகத்தான் இருக்கிறது. இயக்குநர் சொல்வதைக் கொடுக்க வேண்டும் என்று அந்தச் சமயத்தில் மட்டும் மெனக்கெடுவேன்.. கார்த்திக் சுப்புராஜ் படத்தில் அவர் எனக்குக் கொடுத்த கதாபாத்திரம் கொஞ்சம் சவாலானது. கார்த்திக் சுப்புராஜை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் கூப்பிட்டவுடன் யோசிக்கவே இல்லை. அவர் எப்படிப் செய்கிறார் என்று பார்க்க ஆசை. அது நிறைவேறிவிட்டது. என் படத்தைப் பார்த்துவிட்டு மணி சார் ‘நல்லா பண்ணியிருக்கீங்க’ என்று பாராட்டினார்.
‘ஓடிடி இயக்குநர்’ என்று சமூக வலைதளங்களில் உங்களை முத்திரை குத்தும் சில பதிவுகளைக் கவனித்தீர்களா?
என்ன வேண்டுமானாலும் முத்திரை குத்திக்கொள்ளட்டும். அப்படிப் பதிவிடுகிறவர்கள் குறித்து எனக்கு எந்தப் புகாரும் இல்லை. அது அவர்களுடைய கருத்து. பல ஹாலிவுட் இயக்குநர்கள் ஓடிடிக்கு திரைப்படம், வெப் சீரிஸ் இயக்கி வருகிறார்கள். கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘நவரசா’ படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருப்பது நல்ல விஷயம்தானே.. அதில் வெட்கப்படுவதற்கு எந்த விஷயமும் இல்லையே..!
நீங்கள் 'நடுநிசி நாய்கள்' எடுத்துவந்த சமயத்தில், பார்த்திபன் நடிப்பில் ஒரு வெப் சீரிஸ் எடுப்பது பற்றி பேசியிருந்தீர்கள். அது ஏன் நடக்கவில்லை?
அது ஓடிடிக்கு என்று இல்லை. தொலைக்காட்சித் தொடராகப் பண்ண வேண்டும் என நினைத்தேன். அந்தச் சமயத்தில் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது. அது திட்டமிட்டது மாதிரி நடக்கவில்லை. ஏன் இவ்வளவு செலவு பண்ண வேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். மேலும், ‘ரசிகர்களுக்கு இப்படிச் செய்தால் பிடிக்கும்’ என்றெல்லாம் சொல்லி என்னைச் செய்யவிடவில்லை. சிறந்தது என மனம் நம்பும் எந்தவொரு ஐடியாவுமே வீணாகிவிடாது. கண்டிப்பாக எப்போதாவது அந்த ஐடியாவை திரையில் பயன்படுத்துவேன்.
'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' படங்களின் சூர்யாவுக்கும், 'கிட்டார் கம்பி மேலே நின்று' குறும்பட சூர்யாவுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
ஒரு நடிகராக 'காக்க காக்க' படத்துக்குள் வரும்போது 'நந்தா' படத்தை முடித்திருந்தார். ஒரு பயங்கரமான நடிப்புப் பயிற்சியை முடித்துதான் வந்தார். 'காக்க காக்க' படமே, இப்படியெல்லாம் பண்ணலாம் என்று கலந்து பேசி செய்ததுதான். அதை இன்னும் மெருகேற்றித்தான் 'வாரணம் ஆயிரம்' பண்ணினேன். சூர்யா ஒரு முழுமையான நடிகர். நமக்கு என்ன தேவையோ அதற்காக முயற்சி எடுத்துச் செய்து கொடுப்பார். சில சமயங்களில் முயற்சியே இல்லாமல் சாதாரணமாகச் செய்துவிடுவார். எனக்கு எப்போதுமே அவருடைய முதல் டேக் ரொம்ப பிடிக்கும்.
அப்போதும் இப்போதும் சூர்யாவிடம் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. அவருடைய படங்களின் தேர்விலேயே, அவர் எப்படிப்பட்ட நடிகர் என்பது தெரியும். முதலில் ஓர் இளமையான கதாபாத்திரம் என்றவுடன், அந்த வயது வேண்டாம் என்று சொன்னார். தன்னைப் பற்றிய புரிதலும் தேடலும் சூர்யாவிடம் உண்டு. நீங்கள் இன்னும் இளமையாக இருக்கிறீர்கள் என்பதை மட்டும் அவரிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன். 7 நாட்கள் படப்பிடிப்பில் எனக்கும் அவருக்கும் நல்லதொரு இணக்கம் இருந்தது என்று சொல்வேன்.
மீண்டும் சூர்யா - கெளதம் மேனன் கூட்டணியில் படம் எப்போது?
விரைவில் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். நிறைய பேசியிருக்கிறோம்.
(இந்தப் பேட்டியின் காணொலியை இந்து தமிழ் யூடியூப் தளத்திலும் காணலாம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT